நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஆகஸ்ட் 16, 2017

அற்றைத் திங்கள் 2

தொடர்புடைய முதல் பதிவிற்கான இணைப்பு -

அற்றைத் திங்கள் 1

ஸ்ரீராஜேந்திர சோழ மாமன்னன் எழுப்பிய
ஸ்ரீகயிலாசமுடையார் திருக்கோயிலைத் தரிசிப்பதற்காக
கடந்த  புதன் கிழமை  (09/ ஆகஸ்ட்) மானம்பாடிக்குச் சென்றிருந்தேன்..

விடியற்காலையில் தஞ்சையிலிருந்து புறப்பட்ட நான்
ஏழரை மணியளவில் மானம்பாடி கோயிலில் இருந்தேன்...

அங்கே நடந்தவைகளும் நான் கண்ட காட்சிகளும் அடுத்த பதிவில்..

அதற்கு முன்பாக -
மானம்பாடி சிவாலயத்தின் இன்றைய நிலையைக் காணும் முன்பாக -
இன்றைய பதிவிலுள்ள படங்களைக் கண்ணாரக் கண்டு கொள்ளுங்கள்..

இனி ஒருக்காலும் இத்தகைய அழகு கிடைக்காது என்றே தோன்றுகின்றது..


இந்தப் பதிவிலுள்ள படங்கள் அனைத்தும்
தலைசிறந்த வரலாற்று ஆய்வாளர்களுள் ஒருவரான
முனைவர் திருமிகு குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களுடைய
தளத்திலிருந்து பெறப்பட்டவை..



திருமிகு குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்!..

பிக்ஷாடனர்
லிங்கோத்பவர்
பராந்தக சோழர் (907 - 950) இவர் தான் ராஜராஜ சோழனின் தாத்தாவாகிய அரிஞ்சய சோழரின் தந்தை.. 

இவர்தான் தில்லையம்பலத்திற்குப் பொன் தகடு வேய்ந்தார்..

இவர் தான் -
வீரநாராயணபுர ஏரி - என, பெரிய ஏரியை வெட்டுவித்தார்.. 
அந்த ஏரிக்குச் செல்லும் பெருஞ்சாலையையும் அமைத்தார்..

அந்த வீரநாராயணபுர ஏரிதான் இன்றைக்கு வீராணம் ஏரி..

பராந்தக சோழர்  அமைத்த பெருஞ்சாலைதான் - 
மானம்பாடி நாகநாதர் கோயிலின் வடபுறமாக கோயிலை ஒட்டிவாறு செல்லும் சென்னை நெடுஞ்சாலை!..

பராந்தக சோழரின் காலத்திலேயே இவ்வூர் பெருஞ்சிறப்புற்று விளங்கிற்று..

இன்றைய மானம்பாடியின் ஐயனார் கோயில் வளாகத்தில் பெரிய அளவில் புத்தர் சிலையை அமைத்திருக்கின்றார்கள் - சோழர்கள்..

கிழக்காசிய பௌத்தர்கள் வருகை தந்த ஊர்களுள் இன்றைய மானம்பாடியும் ஒன்று..



மாமன்னன் ராஜேந்திர சோழனையும் அவனது தேவியரையும்
ஆடவல்லானாகிய நடராஜ மூர்த்திக்கு வலப்புறமும்

மன்னனது ராஜகுருவையும் அரசு அலுவலர்களையும் நடராஜ மூர்த்திக்கு இடப்புறமும் காணலாம்..

இந்த சிற்பங்கள் வேறெங்கும் காணக்கிடைக்காதவை..


கோயிலின் அஸ்திவாரத்திலிருந்து மேல்தளம் வரை கருங்கல் கட்டுமானம்..

அதற்கு மேலுள்ள விமானம் செங்கற்கட்டுமானம்..

கோயிலின் தென்புற கோட்டத்தில் பிக்ஷாடனர், நடராஜர், விநாயகர், தக்ஷிணாமூர்த்தி - திருமேனிகள்..

மேல்புற கோட்டத்தில் அண்ணாமலையாராகிய லிங்கோத்பவர்..

வடபுறத்தில் பிரமன், துர்கை, உமாதேவியுடன் கங்காதரர்..

மகர தோரணங்களில் கண்ணப்ப நாயனார் மற்றும் சிவலிங்கத்திற்கு பூஜை செய்யும் யானை.. அதனருகே கவரியுடன் சாமரம் வீசும் கன்னி..

இந்த சிற்ப அமைவு காவிரியாள் என்று குறிக்கப்படுகின்றது..

கோயிலின் சுற்றுச் சுவர்கள் முழுதும் கல்வெட்டுகள்..

அவற்றுள் -

வீரநாராயணபுர இலச்சிக்குடி எனப்பட்ட மானம்பாடியின் வணிகர்கள் தங்களது மன்னனாகிய ராஜேந்திரன் பெயரில் திருக்கோயில் நந்தவனம் அமைத்த செய்தி..

சோழனின் அரண்மனைக் கோயிலில் தேவாரம் பாடிய நாயகன் மறைக்காடன் பதஞ்சலி பிடாரன் - மூன்று நந்தாவிளக்குகளுக்காக அளித்த கொடை..

குலோத்துங்க சோழன் (1088) காலத்தில் கோயிலில் தமிழ்க்கூத்து நிகழ்த்துவதற்காக திருமுதுகுன்றன் என்பவன் நிவந்தம் அளித்த குறிப்பு..

- ஆகியன முக்கியமானவையாகக் கொள்ளப்படுகின்றது..

மேலும் பல கல்வெட்டுகள்கோயிலின் நிர்வாகம் மற்றும்
வழிபாட்டு முறைகளைத் தெரிவிக்கின்றன..

மானம்பாடி கோயிலைப் பற்றிய
மேற்கண்ட சிறுகுறிப்புகள்
திருமிகு குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களது
கட்டுரையில் இருந்து பெறப்பட்டவை...


திருமிகு குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்!..
***

கூர்வாள் கொண்டு கொடும் பகை முடித்த
கொற்றவை
பல்வேறு சிறப்புகளுடன் விளங்கிய கோயில் நாளடைவில் பழுதுற்றது...

இந்தக் கோயிலின் பெருஞ்செல்வங்கள் எங்கே போயினவோ?..

தெரியவில்லை..

நந்தாவிளக்குகள் சுடர் விட்டுப் பிரகாசித்ததெல்லாம் பழங்கதையானது..

கயிலாயமுடையார் திருக்கோயிலில் நித்ய வழிபாட்டு முறைகளும் சிரமத்துக்குள்ளாயின..

சில ஆண்டுகளுக்கு முன்பாக நெடுஞ்சாலைப்  பணிகளுக்காக கோயிலை அகற்ற முற்பட்டபோது தான் இந்தக் கோயில் வெளியுலகிற்கு அறிமுகமானது...

பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்ததைக் கண்ட
தேசிய நெடுஞ்சாலைத்துறை தனது முடிவினைக் கைவிட்டது..

அத்தோடு இந்தக் கோயிலைப் பற்றி அனைவரும் மறந்து விட்டனர்..

அதற்கடுத்து -
இக்கோயிலைப் புதுப்பிப்பதாக எழுந்தது தமிழக அரசின் அறநிலையத்துறை...

பாலாலயம் செய்து விட்டு கோயிலைப் பிரித்தனர்..

அதையடுத்து சில பிரச்னைகள்..

வழக்கம் போல அவைகளும் காற்றில் கரைந்து போயின..

அதற்குப் பின் -
சென்ற வாரத்தில் யுனஸ்கோவின் அறிக்கையால்
மீண்டும் மானம்பாடி கோயில்  பேசப்படும் பொருளாகி இருக்கின்றது..

ஆறாத மனதுடன் நாகநாதர் கோயிலைத்  தரிசிப்பதற்கென்றே தஞ்சையிலிருந்து மானம்பாடிக்குச் சென்றேன்..

அங்கே நடந்தவைகளும் 
நான் கண்ட காட்சிகளும் அடுத்த பதிவில்...

காலமகள் காப்பாற்றிக் கொடுத்த
கலைச் செல்வங்களை
இப்படியும் காண நேர்ந்ததே!..
மனம் பதறித் துடித்தது..
* * *

14 கருத்துகள்:

  1. எவ்வளவு அழகாக இருக்கிறது கோயில்! அதன் சிற்பங்கள்! ஆனால் அழியும் நிலையில் இருக்கிறது வேதனைதான்.
    துளசி, கீதா
    நீங்கள் என்ன காட்சி கண்டிருப்பீர்கள் என்பதைச் சற்று ஊகிக்க முடிகிறது என்றாலும் உங்களின் அடுத்த பதிவில் அறிய ஆவலுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..

      சென்ற வருடம் குறுகிய விடுமுறையில் வந்ததால் என்னால் மானம்பாடிக்குச் செல்ல முடியவில்லை.. வேதனை தான் மிச்சம்..

      தங்கள் வருகைக்கு நன்றி..

      நீக்கு
  2. அன்பின் ஜி
    எவ்வளவு வரலாற்று நிகழ்வுகள் இனிமேல் காண இயலாத விடயம் நெஞ்சம் பதைக்கும் செய்தி

    என்ன செய்வது இதையாவது நாம் கண்டோம் நமது சந்ததிகளுக்கு நாளை ???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      நாம் இதையாவது பார்த்து விட்டோம்..
      நாளைய சந்ததிகளுக்கு?... சந்தேகம் தான்!..

      வேதனை தான் மிச்சம்..
      தங்கள் வருகைக்கு நன்றி..

      நீக்கு
  3. எத்துனை அழகான சிற்பங்கள்...

    நாம் இதுபோல் உருவாக்க வில்லை என்றாலும்...இருப்பதையாவது பாதுகாக்கலாம்...

    என்ன செய்வது ....பொக்கிஷங்களின் அருமை உணரா உலகம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      இருப்பதையாவது பாதுகாக்கலாம்.. இது நம்முடைய ஆதங்கம்..

      ஆனால் அரசுக்கு இதைவிடவும் வேறு வேலைகள் உள்ளனவே!..
      தங்கள் வருகைக்கு நன்றி..

      நீக்கு
  4. ராஜேந்திர சோழன் என்று படித்ததும் கங்கை கொண்ட சோழபுரம் கோவில்தான் நினைவுக்கு வந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      ராஜேந்திரன் எழுப்பிய கோயில்கள் நிறைய ஊர்களில் உள்ளன..

      தங்கள் வருகைக்கு நன்றி..

      நீக்கு
  5. கொற்றவை மிக அழகு.
    சிற்பங்கள் மிக அழகு.
    கலைச்செல்வங்களை பாதுகாக்க வேண்டும்.
    இறைவன் அருளால் மீண்டும் பழைய நிலையை அடைய வேண்டும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      >>> கலைச் செல்வங்களைப் பாதுகாக்க வேண்டும் <<<

      ஆனால் அதற்கான முன்னெடுப்பு ஏதும் இல்லை.. வேதனை தான் மிச்சம்..
      தங்கள் வருகைக்கு நன்றி..

      நீக்கு
  6. சிற்பங்களின் படங்கள் மிகவும் கவர்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      அழகிய சிற்பங்கள் தான்.. ஆனால் இன்றைய நிலை!?..
      வேதனை தான் மிச்சம்..
      தங்கள் வருகைக்கு நன்றி..

      நீக்கு
  7. இன்று முதன் முதலாக தங்கள் வலை ப் பதிவை பார்க்க நேர்ந்தது. இது நாள் வரை பார்க்க முடியவில்லை யே என்ற கவலை. தங்கள் பணிக்கு வாழ்த்துக்கள். தங்கள் தமிழ் நயம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களுக்கு நல்வரவு..
      தொடர்ந்து வருகை தர வேண்டுகின்றேன்..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..