நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மே 02, 2017

மதுரைக்கு வாங்க.. 3

வாத்யாரே!..

வாங்க.. பசங்களா!..

நேத்திக்கு ஒரு காரியம் செஞ்சோம்.. என்னா...ன்னு கேளுங்களேன்!..

என்னடா... அது!?..

ரயிலடியில ஒரு கிழவர் படுத்துக்கிடப்பார்...ல்ல!..

ஆமா!..

அவருக்கு ஒரு தூக்கு வாளியும் ஒரு போர்வையும் புதுசா வாங்கிக் கொடுத்தோம்!..

அட!.. சரியான வேலை செஞ்சிருக்கீங்க!..  அந்தப் பக்கமா போற நேரத்தில நான் கூட நினைப்பேன்.... ஆனா, அந்தக் காரியம் உங்களுக்கு...ன்னு இருந்திருக்கு!..

யார் செஞ்சா என்ன வாத்யாரே!.. எங்களை இந்த மாதிரி செய்யச் சொன்னதே நீங்க தானே!.. உங்களுக்குத் தான் புண்ணியம்!...

வாயால சொன்னாலும் மனப்பூர்வமா செஞ்சீங்களே!.. நல்லாயிருங்க பசங்களா!...

சரி.. கதைக்கு வருவோமா?...

வருவோமே!..

ராஜா தண்டோரா போட்டதை தருமி கேட்டார்... அதுக்கப்புறம் சொல்லுங்க!..


தருமிக்கு ரொம்ப ஆசையா இருந்தது.. ராஜாவோட சந்தேகத்தை தீர்த்து வெச்சா நமக்கு பரிசு கிடைக்கும்.. பேரும் புகழும் வரும்.. நல்ல பொண்ணா கிடைக்கும்.. அப்படியெல்லாம் கணக்கு போட்டார்!..

ஆனா, ராஜாவோட சந்தேகத்தை எப்படித் தீர்க்கிறது.. கூந்தல்..ல இயற்கையா மணம் இருக்கா இல்லையா..ன்னு எப்படி ஆராய்ச்சி செய்றது?.. ஒரே குழப்பமா போச்சு... தருமிக்கு!..

தனக்கு தெரிஞ்ச ரெண்டு மூனு பொண்ணுங்க கிட்டே கேட்டுப் பார்த்தார்!..

சுத்தமான தேங்காய் எண்ணெய்யில வெட்டிவேர், நன்னாரி வேர், ஏலக்காய், செம்பருத்தி, வெந்தயம், மருதாணி இதெல்லாம் போட்டு,

நிழல்...ல வெச்சி தலையில பூசிக்கிட்டாவே கூந்தல் நல்ல வாசமா இருக்கும்.. பேன் பொடுகு வராது...

கண்ட கண்ட கண்றாவிப் பூவை எல்லாம் வைக்காம மல்லிகைப்பூ, செண்பகப்பூ, தாழம்பூ இதெல்லாம் வெச்சாலே தலைக்கு வர்ற நோய் நொடியெல்லாம் ஓடியே போய்டும்..

இன்னும் வெவரம் வேணும்..ன்னா சீக்கிரமா ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு ஆராய்ச்சி செய்ங்க ஐயரே!.. - அப்படின்னு சொல்லிட்டு சிரிச்சாங்க...

தருமிக்கு வெட்கமாகி விட்டது.. தனக்குத் தானே ஏதேதோ யோசனை செஞ்சு பார்த்தார்.. ஒன்னும் புரியலை..

அரசன்...கிட்ட போய் ஏதாவது உளறிக் கொட்டி - அவன் இன்னும் கடுப்பாகி -
தன் தலைக்கு தானே வேட்டு வைத்துக் கொண்டமாதிரி ஆகிடுமோ?.. - அப்படின்னும் பயமா இருந்திச்சு தருமிக்கு...

ஏன்.. வாத்யாரே.. உங்கள மாதிரி வாத்யாருங்க அந்த ராஜாவுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்திருப்பாங்க தானே!... அந்த அறிவை வெச்சி ராஜா கண்டு பிடிக்கலாமே!.. மத்தவங்கள ஏன் கடுப்பாக்குறான்!..

ரொம்பப் படிக்கிறதனால தான் இந்த மாதிரி சந்தேகம் எல்லாம் வரும்... முட்டாள் மூடன்... அப்படின்னா அவனுக்கு என்ன புரியப் போகுது?.. அழகை ரசிக்க ஆரம்பித்து விட்டாலே அவனவனுக்கு ஆயிரம் பிரச்னை.. சின்ன பசங்களுக்கு இதெல்லாம் புரியாது!..

நேரா மீனாட்சியம்மன் கோயிலுக்குப் போனார்...
காசு பணம் கொடுத்து சீட்டு வாங்குற பழக்கம் எல்லாம் அப்போ இல்லை..

அதனாலே ஈஸ்வரனையும் அம்பாளையும் அருகே நின்னு தரிசனம் செய்தார்.. சந்நிதியை சுத்தி வந்து விழுந்து கும்பிட்டார்..

எனக்கு ஒரு நல்ல வழி காட்டக்கூடாதா..ன்னு கேட்டார்...

அம்பாளும் ஈஸ்வரனும் ஒரு பதிலும் சொல்லலை... அப்படியே அங்கேயிருந்த மண்டபத்தில உட்கார்ந்தார்.. கொஞ்ச நேரத்தில தூங்கிட்டார்...

அங்கே அம்பாள் ஈஸ்வரனைப் பார்த்துக் கேட்டா - ஏங்க.. பாவம் இந்த தருமி.. இவனுக்கு எதாவது உதவி செய்யக் கூடாதா!.. அப்படின்னு...

ஏன்.. வாத்யாரே... பக்கத்தில இருந்து கேட்ட மாதிரி சொல்றீங்க!..

டேய்.. சும்மா இருடா.. கதை...ன்னா அப்படித்தான் இருக்கும்!...

பசங்களா.. உண்மையில அப்பாவுக்கு செய்ற மனசு இருந்தாலும் அம்மா தூண்டி விட்டாத் தான் அப்பாவுக்கு உற்சாகமா இருக்கும்... அதுக்கு அப்புறம் தான் அப்பா அடிச்சு ஆடுவார்!.. உங்க வீட்லயும் இப்படித் தானே!..

பசங்கள் உற்சாகமாகக் கையைத் தட்டினார்கள்...

அதுக்கப்புறம் சாதாரண ஆளு மாதிரி ஈஸ்வரன் உருமாறி வந்தார்..
தருமியை எழுப்பி - என்னா விவரம்?...ன்னு கேட்டார்...

கேக்கிறவங்க கேட்டதும் தருமிக்கு மனசு நெகிழ்ந்து போச்சு..
இருக்கிற பிரச்னை எல்லாத்தையும் சொன்னார்...

சரி.. ராஜாவோட சந்தேகம் தீர்ற மாதிரி இந்த ஓலை... ல விஷயம் எழுதி இருக்கேன்.. இதைக் கொண்டு போய் அரண்மனையில கொடுத்தா உன்னோட பிரச்னை எல்லாம் தீர்ந்துடும் ..ன்னு சொன்னார்.. - ஈஸ்வரன்...

நான் எதுக்குக் கொடுக்கணும்?.. இதை நீங்களே கொடுத்துட்டு விஷயத்தைச் சொல்லலாமே!.. - ந்னு. தருமி திருப்பிக் கேட்டார்..

இப்போ உனக்குத் தானே பிரச்னை.. அதுவுமில்லாம நான் இந்தப் பாண்டிய ராஜா வீட்டுக்கு மருமகன்... போட்டி நடத்துறவங்களே போட்டியில கலந்து கொள்ளக் கூடாது...

விஷயம் வெளிய தெரிஞ்சா பாட்டு எழுதிக் கொடுத்து பரிசு வாங்கணுமா... ன்னு கேலி பேசுவாங்க!.. அதனாலே, நீயே இந்த ஓலையைக் கொண்டு போய்க் கொடு!.. - அப்படி... ன்னார் ஈஸ்வரன்...


சரி.. இதுல என்ன எழுதியிருக்கு?..

மங்கையரின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு... ந்னு எழுதியிருக்கிறேன்...

ஏன்.. நீங்க என்ன வைத்தியரா?.. ஆராய்ச்சி எல்லாம் செஞ்சிருக்கீங்க!..

நான் வைத்தியர்க்கெல்லாம் வைத்தியன்.. மகா வைத்தியன்!..

சரி.. அதை வாயாலே சொன்னால் போதாதா!.. ஓலை எதுக்கு?..

எதையும் வாயால் சொல்வதை விட கையால் எழுதிக் கொடுத்து விட்டால் விஷயம் சாசனம் மாதிரி ஆகிவிடும்!..

ஏங்க.. அடுத்தவங்க எழுதுனதை எடுத்து நான் எழுதுனது...ன்னு சொல்றது தப்பில்லையா?... வெளியே தெரிஞ்சா சிரிப்பாங்களே!.. யாரும் பொண்ணு கொடுக்க மாட்டானுங்களே!..

இன்னைக்கு நான் செய்தா நாளைக்கு ரொம்ப பேரு செய்வானுங்களே!.. ஈசன் தலத்தில இருந்து இன்னைக்கு நீங்க சொல்றீங்க!... நாளைக்கு இணைய தளத்தில இருந்து இந்த மாதிரி செய்வானுங்களே!.. தப்பு.. தப்பு தானுங்களே!..

அவனையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்.. இப்போ ராஜா வர்ற நேரமாச்சு.. முதல் ஆளாப் போ... ஓடு.. சீக்கிரம்!..

சரி.. நடக்கிறது நடக்கட்டும்... தலை தப்பிக்க வேணும்.. தாயே!..

மறுபடியும் ஒருதரம் கும்பிட்டுட்டு அரண்மனைக்கு ஓடினார் தருமி...

ஆனா,  தருமியோட விதி அவருக்கு முன்னாலே ஓடிப்போய் அங்கே நின்றது...

வாத்யார் இதற்கு மேல் நாளைக்குத் தான் சொல்வார் - என்று,
பசங்கள் மந்தகாசமாகப் புன்னகைத்தனர்...

சரி.. நம்ம குணா, ஸ்டாலின், அருண் எல்லாரும் திருவிழா படங்களை அனுப்பியிருக்காங்க.. அதையெல்லாம் பார்க்கலாமா!..

ஓ... பார்க்கலாமே!.. - என்று குஷியானார்கள் பசங்கள்...

30/4 ஞாயிற்றுக்கிழமை
மூன்றாம் திருநாள்
-: பகல் :-
தங்கச் சப்பரத்தில் எழுந்தருளினர்..


30/4 ஞாயிற்றுக்கிழமை
மூன்றாம் திருநாள்
-: இரவு :-


சுந்தரேசர் கயிலாய வாகனத்திலும்
மரகதவல்லி காமதேனு வாகனத்திலும்
திருவீதி எழுந்தருளினர்..








1/5 திங்கட்க்கிழமை
நான்காம் திருநாள்
-: பகல் :-

தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி
வில்லாபுரம் பாவக்காய் மண்டபத்தில்
சேவை சாதித்து
இரவு திருக்கோயிலுக்குத் திரும்பினர் 









வேதியா வேத கீதா விண்ணவர் அண்ணா என்றென்று
ஓதியே மலர்கள் தூவி ஒருங்கிநின் கழல்கள் காணப்
பாதியோர் பெண்ணை வைத்தாய் படர்சடை மதியஞ் சூடும்
ஆதியே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே!.. (4/62)
-: திருநாவுக்கரசர் :-

மீனாட்சி சுந்தரேசர் திருவடிகள் போற்றி..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

7 கருத்துகள்:

  1. அன்பின் ஜி பசங்களோடு நல்ல ஜாலியாக போகிறது கதை தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  2. விவரங்களையும் படங்களையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. படங்கள் அனைத்தும் அழகு.... நேரே பார்க்க ஆசை இருக்கிறது. பார்க்கலாம் செல்ல முடியுமா என....

    பதிலளிநீக்கு
  4. தருமியின் படமும் மற்ற விழாப் படங்கள் அனைத்தும் அருமை.

    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
  5. படங்கள் அனைத்தும்அழகோ அழகு
    அருமை

    பதிலளிநீக்கு
  6. வெளிநாட்டில் இருந்தாலும் நேரில் பார்த்தது போல் அழகாய் பதிவில் செய்திகள் படங்கள் அழகு. மதுரையில் இருந்தாலும் எல்லா திருவிழாக்களையும் பார்க்க முடியவில்லை. இரண்டாவது நாள், அப்புறம் ஐந்தாம் நாள் பார்த்தேன். மற்றவைகளை உங்கள் பதிவில் அழகாய் பார்த்து விட்டேன்.
    நன்றி, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. படங்களும் அழகு. சொல்லியிருப்பதும் அழகு!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..