நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜனவரி 15, 2017

வள்ளல் பெரும் பசுக்கள்..

நிறைந்த பால்!. நிறைந்த காசு!.. 

இப்படியான ஆசை வார்த்தைகள் தான் -
கிராமங்களில் நாட்டு மாடுகளின் அழிவுக்குக் காரணமாகின..


கோயில் காளைகள்!..

பசுக்களின் இனவிருத்திக்கென்றே ஆதரிக்கப்பட்டவை..

அவைகளுக்கு - அதைத் தவிர வேறு வேலை ஏதும் இல்லை..

விசேஷ நாட்களில் கோயில்காளைகளுக்கு முதல் மரியாதை கிட்டும்..

கோயில் காளை இல்லாத ஊர்களில் -
பொலி காளைகளை ஊட்டமுடன் வளர்த்திருப்பார்கள்..

கருத்தரிக்கக் காத்திருக்கும் பசுவிற்கு
சூரிய உதயத்திற்கு முன்னதாகவே -
காளையுடன் இணை சேரும் பேறு கிட்டும்..

ஆனால், இன்று கிராமங்களில் கூட -

கோயில் காளைகள் இல்லாமல் போயின..
ஆண்மை பொங்கும் பொலி காளைகளும் வளர்க்கப்படுவதில்லை..

செயற்கை முறை சினையூட்டலின் விளைவாக
பொலி காளைகள் அறுகிப் போயின..

தொடர்ந்து வந்த மாற்றங்கள் -
மீதமாக இருந்த உழவுக் காளைகளுக்கும் 
எருமைக் கடாக்களுக்கும் வேட்டு வைத்தன..

கிடேறிகளைத் தவிர்த்த ஏனைய காளைகள்
கொலைக் களத்துக்கு அனுப்பப்பட்டன..

மனித வாழ்வின் எல்லா நிலைகளிலும் பயணப்பட்ட
காளைகள் - கதறக் கதறக் கொல்லப்பட்டன..

உழவனின் தோளுக்குத் தோள் கொடுத்த காளைகள்
தோல் நீக்கம் செய்யப்பட்டு எலும்பும் சதையுமாகத் தொங்குவதற்கு -

யார் காரணம்?..


உழவர்களுக்குக் காளைகள் பாரமாகிப் போனதற்கு
சுற்றியிருந்த சமுதாயச் சூழலே காரணம்!..

வேளாண் பணிக்கு வேறு பணிகள் நன்று!.. - எனக் கொண்டு
வேறு பலவற்றில் மக்கள் தம்மை இணைத்துக் கொண்டதும் -

உழவு இயந்திரங்கள் - வயல்வெளிகளை ஆக்ரமித்துக் கொண்டன..

வாழ்விற்கும் வளத்திற்கும் ஆதாரமாக இருந்த காளைகளை
விரோதமாகப் பார்க்கும் மன நிலைக்குத் தள்ளப்பட்டான் - விவசாயி..

விளைவு!.. -

மாடு வதைக் கூடங்கள் (Slaughter House) பல்கிப் பெருகின..

கால்நடைகளைச் செல்வங்களாகக் கொண்டாடிய நம்நாடு
இறைச்சி ஏற்றுமதியில் முதலிடத்தைப் பெற்றிருக்கின்றது!..

பாரம்பர்யமான காளைகளை ஒழித்து விட்டு -
செயற்கைக் கருவூட்டலின் மூலமாக -
பாரதத்தின் கலாச்சாரத்தை அழிக்கும் வேலை முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது என்கின்றனர் ஒருசாரார்..

செயற்கை கருவூட்டலின் மூலமாக பெறப்படும் பால் மற்றும் பால் பொருட்களில் இருந்து பற்பல கேடுகள் விளைகின்றன என்றும் சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன..

இதைப் போலவே - கோழிகள்..

கிராமங்களில் கூட - பாரம்பர்ய கோழியினங்கள் காணக்கிடைப்பதில்லை..

எங்கெங்கும் பிராய்லர் கோழிகள் முட்டைகள்!..

பிராய்லர் கோழிகளின் முட்டைகள் - சேவல் சேராதவை..

ஹார்மோன் ஊசிகளின் மூலம் கோழிகளிடமிருந்து பெறப்படுபவை..

அவற்றை வாங்கி நாட்டுக் கோழியுடன் அடை வைத்தால் அத்தனையும் கூமுட்டைகளாகி விடும்...

இறைச்சிக் கடைகளில், முண்டமாக - பிண்டமாகத் தொங்கும் பிராய்லர் கோழிகளின் வாழ்வு ஏறக்குறைய 48 நாட்கள் தான்...

அவை - தம் வாழ்வில் ஒரு முறையேனும் சேவலைக் கண்டதேயில்லை..

பிராய்லர் கோழிகள் ஆரோக்கிய வாழ்வுக்கு உகந்தவை அல்ல!.. - என்று பலரும் உணர்ந்திருக்கின்றனர்..

வாழ்வின் எல்லா நிலைகளிலும் உடன் வந்த பால் - ஒழித்துக் கட்டப்பட்டு வெகு நாளாகி விட்டது..

இன்றைக்கு நாம் பயன்படுத்தும் பால் - பால் அல்ல!..

இன்று புழக்கத்தில் உள்ள பால் - பல பிரச்னைகளுக்குக் காரணமாகின்றது.

முன்பெல்லாம் புலால் உண்போர்க்கு கையருகில் கிடைத்தது - கோழி..

இன்றைக்கு - கோழியும் முட்டையும் நிறைவுறு வாழ்வைக் கெடுப்பவையாகி விட்டன..

நம்மைச் சுற்றியுள்ள உணவுப் பொருட்கள் பலவும்
நமக்குப் பகையாக ஆக்கப்பட்டு விட்டன..

இதிலிருந்து மீள்வதற்கு ஒரே வழி -
பாராம்பர்யத்தை மீட்டெடுப்பதுதான்!...

- 2016 -

தஞ்சை பெரிய கோயிலில் மாட்டுப் பொங்கல் (2016)
தலை நிமிர்ந்து நின்ற தமிழர்களின் காரியங்கள் பலவும் தகைமையான தத்துவங்களை உள்ளடக்கியதாக விளங்கின..

அதற்கு சிறப்பானதொரு சான்று தான் - தை மாதத்தின் இரண்டாம் நாளில் கொண்டாடப்படும் மாட்டுப் பொங்கல் எனும் திருநாள்.


உழவே தலையானதாகக் கொண்டு வாழ்ந்த போது - தமக்குப் பலவழிகளிலும் உற்ற துணையாக இருந்த கால்நடைச் செல்வங்களைப் போற்றி பாராட்டி மகிழ்ந்தனர் - நம் முன்னோர்

அந்த நன்றி உணர்வின் வெளிப்பாடே - மாட்டுப் பொங்கல்!..

இறைவனின் தன்மையைக் கூறும் போது - பாலுக்குள் நெய் மறைந்து இருப்பதைப் போல என்று - பாலை முன் வைத்து அப்பர் பெருமான் நமக்கு சுட்டிக் காட்டுகின்றார்.

இன்றைக்கு நமக்கு பொங்கல் வைக்கின்றான்!..
என்றைக்கு நம்மைப் பொங்க வைப்பானோ?..
பால் தரும் பசுக்களை -
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்!..
- என்று புகழ்பவள் - கோதை நாச்சியார்..

பசுக்களே வள்ளல் தன்மையுடன் திகழ்கின்றன என்றால்
காளைகளின் தன்மை எத்தகையது?..

அந்தக் காளைகளுக்கு நம்மவர்கள் செய்த கைமாறு தான் என்ன?..

அவற்றைக் கொலைக் களத்துக்கு அனுப்பி வைத்த ஒன்றைத் தவிர!..

வேளாண் பணிகள் மட்டுமின்றி -
வர்த்தகப் பணிகளிலும் காளைகளின் பங்கு சிறப்பானது..

பார வண்டிகள் தவிர்த்து செக்கு,  கரும்பு ஆலை - என,
அன்றைய இயந்திரங்களுடன் சுற்றிச் சுழன்றவை காளைகள்..

மாடுகளை வைதால் பாவம்.. அடித்தால் பெரும்பாவம்!..

என்ற மனோதர்மம் இருந்தது - ஒரு காலத்தில்!..

அத்தகைய காலங்கள் எல்லாம் மலையேறிப் போயின..

மாட்டிறைச்சி உண்ணுவது பிறப்புரிமை!.. 
- என்னும் குரல்களும் இப்போது ஓங்கி ஒலிக்கக் கேட்கின்றோம்.. 

அதற்கெல்லாம் ஒன்றும் சொல்வதற்கில்லை...

இன்றைய கால கட்டத்தில் -
கலப்பினப் பசுக்களின் பாலும் பால் பொருட்களும்
பல்வேறு நோய்களுக்குக் காரணமாகின்றன என்று சொல்கின்றார்கள்..

மேலை நாடுகளில் 20 வருடங்களுக்கு முன் இறைச்சி வகையிலிருந்து பெறப்பட்ட உயர்நிலை புரோட்டீன்களை பண்ணைப் பசுக்களுக்குக் கொடுத்ததையும் -

அதனால் Mad Cow எனும் நோய் பரவியதையும் யாரும் மறப்பதற்கில்லை...

நமது நாட்டிற்கே உரிய தனித்தன்மையான பசுக்களும் காளைகளும்
நோய் எதிர்ப்பு சக்தி நிரம்பப் பெற்றவை..



ஆந்திராவின் புகழ் பெற்ற காளையினம் ஓங்கோல்!..

ஓங்கோல் காளைகளை கோமாரி முதலான நோய்கள் தாக்குவதில்லை...

அதேபோல் தமிழகத்தில் சிறப்புடைய இனங்கள் -

தஞ்சையின் தங்கம் எனப்படும் உம்பளச்சேரி காளைகள்!..

கொங்கு மண்டலத்தின் மாணிக்கம் - காங்கேயம் காளைகள்!..

உலகில் குள்ளமானவை எனும் புகழ்மிகு புங்கனூர் (சித்தூர்) பசுக்கள்!..

எல்லாவற்றுக்கும் மேலாக -
மணப்பாறை மாடுகளை மறக்கத்தான் இயலுமா!..மறுக்கத்தான் முடியுமா?..

தஞ்சையின் தங்கம் உம்பளச்சேரி காளை
கம்பீரத்தின் மறுபெயர் - காங்கேயங்காளை


புங்கனூர் கட்டைக் காளை
மணப்பாறை
இந்தக் காளையினங்கள் உழைப்பை மட்டும் கொடுக்கவில்லை..
வளர்த்தவனுக்கு உழைப்பை மட்டுமல்லாது உயிரையும் கொடுத்தன..

இந்தப் பசுவினங்கள் பாலை மட்டும் சுரக்கவில்லை..

பாசத்தையும் நேசத்தையும் சுரந்து குடிகாத்து நின்றன!..

நாம் தான் வீண் மாயையில் மதி மயங்கி நன்றி மறந்தோம்..

வீட்டுக்கு வீடு பசுக்கள் என்ற நிலை மாறி
வீதிக்கு ஒரு சில - என்ற நிலைக்கு வந்த பிறகும்
அவற்றின் மீதான தாக்குதலை மட்டும் நிறுத்தவில்லை..

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்..

நாம் இழந்த வளங்களைப் பெற வேண்டுமாயின்
மீண்டும் பாரம்பர்ய வாழ்க்கை முறைக்குத் திரும்புதலே நலம்..

அது ஒன்று தான் அதிகபட்ச ஆரோக்கியத்தைத் தரவல்லது..


கீழுள்ள காணொளியில் -
நூறாண்டுகளுக்கு முன் நடந்த தமிழகத்தின் பாரம்பர்ய காளை விளையாட்டு..


ஆதி மனிதனோடு நாய்களுக்கு அடுத்ததாக இணங்கியவை ஆநிரைகள்!.
ஆநிரைகள் என்றென்றும் இல்லறத்தானுக்கு உரியவை..

மனிதன் பலவேளைகளில் காட்டு விலங்காகின்றான்.. 
ஆனால், ஆநிரைகள் ஒருபோதும் காட்டு விலங்குகளாவதில்லை..

ஆநிரைகள் இல்லறத்தார்க்குக் கிடைத்த செல்வங்கள்!..
அவற்றுக்குக் குறையேதும் நேராமல் பார்த்துக் கொள்வது நமது கடமை!..


கோதனம் வழிபடக் குலவு நான்மறை
வேதியர் தொழுதெழு விசயமங்கையே!.. (3/17)

என்று பசுக்களைச் செல்வமாகப் புகழ்ந்துரைக்கின்றார் திருஞானசம்பந்தர்..

அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுகலான்!.. (030)

- என்று திருவள்ளுவர் குறித்தாற்போல,

அறவோரை அந்தணராகக் கொண்டு திருப்பதிகம் பாடும்போது -
வாழ்க ஆனினம்!.. - என்றும் வாழ்த்துகின்றார் - ஞானசம்பந்தப் பெருமான்..

ஆநிரைகளை வாழ வைப்போம்..
அதுவே உண்மையான 
மாட்டுப் பொங்கல்!..

ஆநிரைகள் வாழ்ந்தால் 
அதனை அண்டியுள்ள மக்களும் 
நலமுடன் வாழ்வர் என்பது திண்ணம்..

ஆன்றோர்கள் காட்டிய வழியில்
ஆநிரைகளைக் காத்து நிற்போமாக!..
ஆநிரைகளின் நல்வாழ்வினுக்கு
வேண்டிக் கொள்வோமாக!..

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே!.. (3/54)
- திருஞானசம்பந்தர் -

வாழ்க நலம்.. வளர்க வளம்!.
* * *

10 கருத்துகள்:

  1. இதை விட சாட்டையடி பதிவு எதுவும் இல்லை... அருமையான கருத்துள்ள பதிவு...

    நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. நான் சிறுவனாக இருந்தபோது தாரமங்கலத்தில் என் தாத்தாவுக்கு விவசாயம். இருபது முப்பது ஏக்கர் இருக்கும். நூறு தென்னை மரங்கள். நிறைய பசுக்கள். விடுமுறைக்கு நாங்கள் போகும்போதெல்லாம் ஏதாவதொரு கன்றுக்குட்டி புதிதாகப் பிறந்திருக்கும். அதனுடன் கொஞ்சி விளையாடுவதில் நேரமே தெரியாது.
    ஒரு பொலிகாளை அடிக்கடி வரும். அதை என் தாத்தா விசேஷமாக கவனிப்பார். அவரால் கோயிலுக்குக் கொடுக்கப்பட்ட காளையாம் அது. தைமாதம் பிறக்கும் கன்று, ஆணாக இருந்தால் அதைக் கோயிலுக்குக் கொடுப்பது அந்த ஊர் வழக்கமாம். முரட்டுக் காளையாக இருக்கும்., ஆனால் எங்களை ஒன்றும் செய்யாது. அதன் கூரான கொம்புகளைத் தடவினாலும் லேசாகத் தலையை அசைத்துவிட்டு விலகிவிடும். திருடர்கள் வராமல் வயக்காட்டைக் காவல் காக்குமாம் அது. மாட்டுப்பொங்கல் அன்று ஊர் மக்கள் அதற்கு போட்டி போட்டுக்கொண்டு அலங்காரம் செய்வார்கள்.....
    அதெல்லாம் இன்றைய குழந்தைகளுக்கு சொன்னால் புரியுமா?
    நாம் இழந்தது கொஞ்ச நஞ்சமல்ல. உங்கள் கட்டுரை கண்ணீரைத்தான் வரவழைக்கிறது. எஞ்சியிருக்கும் மாடுகளையாவது காப்பாற்றி அவற்றின் தரத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லவேண்டும். இதை விவசாயிகள் அல்லவா செய்யவேண்டும்? அவர்கள்தாம் ஒருவர்பின் ஒருவராகத் தற்கொலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்களே! அரசுக்கும் வேறு வேலைகள் இருக்கின்றனவே.. - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

    பதிலளிநீக்கு
  4. மிக மிக அருமையான வெகுச்சிறப்பான பதிவு ஐயா!! ஆநிரைகளைக் காப்பது பற்றி தெள்ளிய அழகு தமிழில் ஆஹா...வெகுவாக ரசித்தோம். ஜல்லிக்கட்டு காணொளியும் அழகு! கறுப்பு வெள்ளையில்! கிராமத்து நினைவுகள் நிழலாடுகின்றது....மனதை நிறைத்த பதிவு!

    பதிலளிநீக்கு
  5. உண்மை நிலையை அருமையாக எடுத்து உரைத்தீர்கள்...சிந்தக்க வேண்டிய செய்திகள்..

    தஞ்சை பெரிய கோவில் மகர சங்கராந்தி படங்கள் அழகு...

    பதிலளிநீக்கு
  6. ஒரு நீண்ட பெருமூச்சுதான் வருகிறதுநினைத்து அசைபோட பல விஷயங்கள்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..