நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜனவரி 07, 2017

மார்கழிப் பூக்கள் 23

தமிழமுதம்

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற் கொள்வது..(262) 
***
சமணத் துறவியர் அருளிய
நாலடியார்

- கல்வி -
  கல்வி கரையில கற்பவர் நாள்சில
மெல்ல நினைக்கின் பிணிபல தெள்ளியதன்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து..(135)
***
அருளமுதம்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை 
திருப்பாடல் - 23


மாரிமலை முழைஞ்சில் மன்னிக்கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன்
கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்!..
***

ஸ்ரீ பூதத்தாழ்வார் அருளிய
திருப்பாசுரம்
கல் கருடன் - நாச்சியார் கோயில்
பொருளால் அவ்வுலகம் புக்கியலல் ஆகாது
அருளால் அறமருளும் அன்றே அருளாலே
மாமறையோர்க்கு ஈந்த மணிவண்ணன் பாதமே
நீமறவேல் நெஞ்சே நினை..(2222)

நாச்சியார்கோயிலில் ஜனவரி 4 அன்று 
கல் கருடன் எழுந்தருளிய திருக்காட்சி..

காணொளி வழங்கிய
சிவ சிவம், மீனாட்சி தாசன் 
ஆகியோருக்கு நன்றி..



ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்
சப்த விடங்கத் திருத்தலங்கள்

ஐந்தாவது திருத்தலம்
விசுக்தி

திருக்கோளிலி

கோள்களின் கொடுவினைகள் 
இல்லாத திருத்தலம்..


இறைவன் - ஸ்ரீ பிரம்மபுரீசர், கோளிலி நாதர்
அம்பிகை - ஸ்ரீ வண்டமர் பூங்குழலாள்
தீர்த்தம் - மணிகர்ணிகை, அகத்திய தீர்த்தம்
தலவிருட்சம் - தேற்றா மரம்

அவனி விடங்கர் - பிருங்க நடனம்
வண்டு போல ஆடுவது..

நான்முகப் பிரம்மன் எம்பெருமானை வணங்கி
படைப்புத் தொழிலை மேற்கொண்ட தலம் என்பர்...

வெண்மணலால் ஆகிய சிவலிங்கம்...
எனவே அபிஷேகங்கள் குவளை சாத்தி நடைபெறுகின்றது..
அமாவாசை தோறும் சிவலிங்கத் திருமேனியில்
சாம்பிராணித் தைலம் சாற்றப்படுகின்றது..


படைப்புத் தொழில் மேற்கொள்ளப்பட்டதால்
நவக்கிரக தோஷங்கள் கிடையாது..

இத்திருக்கோயிலில்
நவக்கிரக மண்டலமும் கிடையாது..

திருஆரூரில் போன்று
நவக்கிரகங்கள் நேராக விளங்குகின்றனர்..

நாளாய போகாமே நஞ்சணியும் கண்டனுக்கே
ஆளாய அன்பு செய்வோம் மடநெஞ்சே அரன்நாமம்
கேளாய் நங்கிளை கிளைக்கும் கேடுபடாத் திறமருளிக்
கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமானே!..(1/62)

எந்த ஒருநாளையும் வீணாக்காமல்
ஈசனுக்கு ஆளாகி அன்புடன் அவனது 
திருப்பெயரைக் காதாரக் கேட்டாலும் போதும்..
நமது சந்ததி தழைக்கும்.. கேடு ஏதும் வாராத வாழ்வு கிடைக்கும்..
கோள்களின் கெடுபலன்களும் அகலும்!..

- என்று அருளுரை வழங்குகின்றார் - ஞானசம்பந்தப்பெருமான்..

இதற்கு மேல் வேறு என்ன வேண்டும் சொல்லுங்கள்!..


திருக்கோளிலிக்கு அருகே உள்ள கிராமம் குண்டையூர்..
இவ்வூரைச் சேர்ந்த குண்டையூர்க் கிழார் என்பவர்
சுந்தரர் மீது அன்பு கொண்டவர்..

ஆண்டு தோறும் சுந்தரரின் இல்லத்திற்கு 
நெல் அளக்கும் வழக்கமுடையவர்

ஒருமுறை மழை குறைவினால்
விளைச்சல் குறைவுற்றது..

அதனால் மிக வருத்தம் கொண்டு தவித்தார்..

அவருடைய வாட்டத்தைப் போக்கிட எண்ணிய இறைவன்
குண்டையூர்க் கிழாரின் மனம் போல நெல்லைக் குவித்தான்..

கொடுப்பவர் கொடுத்த கொடையல்லவா!..
குன்றென வளர்ந்தது கொடை..


இறைவன் திருவருளைக் கண்டு கண்டு வியந்தார் 
குண்டையூர்க் கிழார்..


வளர்ந்து நின்ற நெற்குன்றத்தை
சுந்தரருக்கு வழங்கினார் ..



வண்டமருங் குழலாள் உமைநங்கை ஓர்பங்குடையாய்
விண்டவர் தம்புரமூன்று எரிசெய்த எம்வேதியனே
தெண்டிரை நீர்வயல்சூழ் திருக்கோளிலி எம்பெருமான்
அண்டமதாயவனே அவை அட்டித்தரப் பணியே!..(7/20)

இந்த நெல்மலையை நான் எப்படி ஆரூருக்கு எடுத்துச் செல்வது?.. 
எனவே - எம்பெருமான் ஆட்களை அனுப்பித் தர வேண்டும்!.. 
என, விண்ணப்பித்துக் கொண்டார்..

அதற்கு இசைந்த எம்பெருமான் - 
பூதகணங்களை அனுப்பி வைத்தார்..

அந்த பூத கணங்களைக் கொண்டு
சுந்தரர் - தான் பெற்ற நெல் மலையை 
திருஆரூரில் உள்ள அனைத்து இல்லங்களிலும்
நிறையும்படிக்குச் செய்தார் என்பது திருக்குறிப்பு..

இன்றளவும் மாசி மகத்தன்று
பூத கணங்கள் நெற்கோட்டை வழங்கும் 
திருவிழா திருஆரூரில் 
நடைபெறுவது குறிப்பிடத்தக்கது

இன்றைய நாளில் திருக்குவளை 
என்று வழங்கப்படும் இத்தலம்
திருவாரூர் - எட்டுக்குடி வழித்தடத்தில் உள்ளது..
  திருக்காறாயில், கச்சனம், திருநெல்லிக்கா, திருவாய்மூர்
ஆகிய தலங்கள் இவ்வூருக்கு அருகே அமைந்துள்ளன..

- திருப்பதிகம் அருளியோர் - 
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,
சுந்தரர்

ஸ்ரீ திருநாவுக்கரசர் 
அருளிய தேவாரம்

முத்தினை முதலாய மூர்த்தியை
வித்தினை விளைவாய விகிர்தனைக்
கொத்தலர் பொழில்சூழ்தரு கோளிலி
அத்தனைத் தொழ நீங்கும்நம் அல்லலே!..(5/56) 
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை
(11 - 12)


மொய்யார் தடங்கண் புக்கு முகேர் என்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
செய்யா வெண்ணீறாடீ செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்!..

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்ப அரவஞ்செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்!.. 
***

தேவி தரிசனம்
ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி - திருஐயாறு


தனம்தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனம்தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே!.. (69)
- அபிராமிபட்டர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்  
***

7 கருத்துகள்:

  1. திருக்கோளிலி திருத்தலத்தின் சிறப்புகளை அறிந்தேன்...

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான தகவல்கள்... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நாச்சியார் கோவிலுக்குச் சென்றிருக்கிறேன் ஒரு பதிவும் எழுதி இருந்தேன் சுந்தரருக்கு நெல் அளந்தகதை படித்த நினைவு மீண்டும் வந்தது தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
  4. திருக்கோளிலியா?

    பெயரே உங்கள் பதிவின் மூலமாகத்தான் அறிகிறேன்...
    அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
  5. படங்களுடன் பதிவு அருமை நண்பரே...!!!



    வண்ணம் இழந்த வானவில்... http://ajaisunilkarjoseph.blogspot.com/2017/01/blog-post_8.html

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..