நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், அக்டோபர் 05, 2016

புரட்டாசி தரிசனம் 3

புரட்டாசி மாதத்தின் முதலிரு வாரங்களிலும் -

திருவேங்கடம் மற்றும் திருமாலிருஞ்சோலை ஆகிய திவ்ய தேசங்களைத் தரிசித்தோம்..

இந்த வாரத்தில் திருவிண்ணகரம்..

அருள்தரும் ஒப்பிலியப்பன் என, ஸ்ரீ ஹரிபரந்தாமன் உறையும் திவ்யதேசம்..

கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது ஒப்பிலியப்பன் கோயில்..

இந்நாளில் இத்திருக்கோயில் -
திருநாகேஸ்வரம் எனும் திருத்தலத்தின் ஒருபகுதியாக விளங்குகின்றது....


ஸ்வாமி - ஸ்ரீ ஒப்பிலியப்பன்
தாயார் - ஸ்ரீ பூமாதேவி
உற்சவர் - ஸ்ரீஸ்ரீநிவாஸன்

விமானம் - சுத்தானந்த விமானம்
நின்ற திருக்கோலம்..
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்

ப்ரத்யட்சம் - மார்க்கண்டேயர், காவேரி.,
தீர்த்தம் - பகலிராப் பொய்கை 

மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார்

இத்தலத்தில் மார்க்கண்டேய மகரிஷியின் திருமகளாக ஸ்ரீ பூமாதேவி அவதரித்தாள்..

காலம் கனிந்த வேளையில் ஸ்ரீ ஹரிபரந்தாமன் - மார்க்கண்டேய மகரிஷிக்கு தரிசனம் அளித்து ஸ்ரீ பூமாதேவியின் திருக்கரம் பற்றினான்..

புகழ்மிகும் இத்திருக்கோயிலில் கடந்த  (அக்டோபர் 3) திங்களன்று 
புரட்டாசிப் பெருவிழா திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது..

தொடர்ந்து அன்றிரவு இந்திர விமானத்தில் ஸ்வாமி எழுந்தருளினார்..

அக்டோபர் 12 வரை நிகழும் புரட்டாசிப் பெருந்திருவிழாவில்
ஒவ்வொரு நாளும் காலையில் பல்லக்கில் ஸ்வாமி எழுந்தருள வீதியுலா நிகழ்கின்றது..

அவ்வண்ணமே -
இரவில் சூரியப் பிரபை, சந்திரப் பிரபை, சேஷ வாகனம், கருட வாகனம், யானை வாகனம் மற்றும் ஆஞ்சநேய வாகனம் என சிறப்புடன் திருவிழா நிகழ்விருக்கின்றது..

அக்டோபர் 12 அன்று கோரதத்தில் ஸ்வாமி எழுந்தருள்கின்றார்..

கொடியேற்ற வைபவத்தின் சில காட்சிகள் இன்றைய பதிவில்!..
வலையேற்றம் செய்த நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி..



போதார் தாமரை யாள்புல விக்குல வானவர்தம்
கோதா கோதில்செங் கோல்குடை மன்ன ரிடைநடந்த
தூதா தூமொழியாய் சுடர்போலென் மனத்திருந்த
வேதா நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே.. (1466)
-: திருமங்கையாழ்வார் :-






மையொண் கருங்கடலும் நிலனு மணிவரையும்
செய்ய சுடரிரண்டும் இவையாய நின்னை நெஞ்சில்
உய்யும் வகையுணர்ந்தே உண்மையால் இனியாது மற்றோர்
தெய்வம் பிறீதறீயேன் திருவிண் ணகரானே.. (1473)
-: திருமங்கையாழ்வார் :-
***



பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டங் குறைவார்க்குக் கோயில்போல் வண்டு
வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை
இளங்குமரன் தன்விண் ணகர்.. (2342)
-: பேயாழ்வார் :-

கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து ஒப்பிலியப்பன் கோயிலுக்கு அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன..

திருநாகேஸ்வரத்தில் ஒப்பிலியப்பன் திருக்கோயிலின் வடக்குப்புறம் மிக அருகாமையில் ஸ்ரீ நாகேஸ்வரர் திருக்கோயில்..

ஒப்பிலியப்பன் திருக்கோயிலின் தென்புறம் ஒன்றரை கி,மீ தொலைவில் ஐயாவாடி கிராமம்..

இங்குதான் ஸ்ரீமஹாப்ரத்தியங்கிரா தேவி குடிகொண்டிருக்கின்றாள்..
***

புரட்டாசி மாதம் முழுதும் இயன்ற அளவுக்கு நாம் செய்யும் தான தர்மங்கள் ஏழேழு தலைமுறைகளைக் காக்கும் என்பது ஆன்றோர் வாக்கு...

நாம் செய்யும் தான தர்மங்கள் ஏழேழு தலைமுறைகளைக் காக்கும் என்பது ஒருபுறம் இருந்தாலும் -

வாழும் நாளிலேயே -
நோய்நொடியின்றி நல்லபடியாக வாழ்வதை - நாம் உணரமுடியும்..

இன்றைய கால கட்டத்தில்
நோய்நொடியின்றி வாழ்வதே மிகப்பெரிய வரம்..

உண்ணும் போது ஒரு கைப்பிடி!.. - என்றார் திருமூலர்...

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.. (0221)

வறியவர்களாகிய எளியவர்க்கு அளிப்பதே ஈகை..
அதை விடுத்த மற்றதெல்லாம்
ஏதேனும் ஒரு நோக்கத்தை உடையவைகளே..
என்பது திருக்குறிப்பு..

வாய்ப்பும் வசதியும் இருப்பின்
அற்றார் அழிபசி தீர்த்தல் நல்லது..

வளமும் நலமும் நம்மைத் தேடி வரும்..

வாழ்க வளம் வளர்க நலம்!..
***

10 கருத்துகள்:

  1. ஒப்பிலியப்பன் கோயிலைப்பற்றிய அரிய விடயம் தந்தமைக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. ஒப்பிலியப்பன் கோவில் பற்றிய விவரங்களுடன் படங்களும் அழகு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. ஒப்பிலி யப்பன் கோவில் சென்றிருக்கிறேன் புரட்டாசி மாதம் சென்னையிலிருந்து திருமலைக்குக் குடைகள் ஏந்திச் செல்வார்களாமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      சென்னையிலிருந்து திருமலைக்கு குடைகள் எடுத்துச் செல்கின்றனர்..
      அந்த விழாவினை நான் கண்டதில்லை..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. ஒப்பிலியப்பன் பற்றி நல்ல தகவல்களுடன் கூடிய படங்கள். ஒப்பிலி என்பது பேக்சுவழக்கில் உப்பிலியப்பன் என்று ஆகி அங்கு உப்பில்லாமல் பிரசாதம் என்பதால் என்று கூட முதலில் எண்ணியதுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..

      மார்க்கண்டேயரிடம் - உமது மகள் உப்பிலாமல் சமைத்தாலும் பரவாயில்லை.. நான் மணம் செய்து கொள்கின்றேன்!.. - என்று பெருமாள் சொல்லியதாக ஐதீகம்..

      அதனால் - இந்தத் திவ்ய தேசத்தில் மட்டும் உப்பில்லாத நிவேதனம் செய்யப்படுகின்றது..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. ஒப்பில்லா அப்பன் ஒப்பிலியப்பன் - சிறுவயதில் இங்கே சென்றதுண்டு. நினைவு தெரிந்து சென்றதில்லை. கும்பகோணம்/தஞ்சாவூர் கோவில்களைக் காண்பதற்கென்றே ஒரு முறையாவது தமிழகம் வரவேண்டும்.......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      இனிய தரிசனம் காண்பதற்கு அவசியம் வாருங்கள்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..