நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜனவரி 11, 2016

மார்கழித் தென்றல் - 26

குறளமுதம் 

வறியார்க்கொன்று ஈவதே ஈகை மற்றெல்லாம்
குறியெதிர்ப்பை நீரதுடைத்து.. (0221)  
***

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
திருப்பாடல் - 26

திவ்ய தேசம் - திருநறையூர்
- நாச்சியார்கோயில் - 


எம்பெருமான் - ஸ்ரீ வாசுதேவன் 
தாயார் - ஸ்ரீ வஞ்சுளவல்லி  

உற்சவர் - ஸ்ரீ ஸ்ரீநிவாஸன்
ஸ்ரீ ஹேம விமானம்.


நின்றருளும் திருக்கோலம்
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்..

ஸ்ரீ நீளாதேவிக்கு 
முன்னுரிமை வழங்கிய திவ்ய தேசம்

திருமூலஸ்தானத்தினுள் பெருமாளுடன் 
நாச்சியாரும் நின்றருள்கின்றனள்..



மகரிஷி ஒருவரின் அன்பினுக்கு ஆட்பட்டு
ஸ்ரீ நீளாதேவி மகளாகத் தோன்றியருளினள்..
    நம்பெருமான் - நாச்சியாரைத் திருமணங்கொண்டு 
சேவை சாதித்தருளிய திருத்தலம்..



மகரிஷியின் வேண்டுகோளுக்கிணங்கி 
இத்தலத்தில் நாச்சியாருக்கே முன்னுரிமை அளித்தருளினன்..

ஆதலின், அனைத்து உற்சவங்களிலும்
தாயார் முன் செல்ல
பெருமாள் பின் தொடர்கின்றனன்..



இத்திருத்தலத்தில்
கல் கருடன் சிறப்பு பெற்றது..




சந்நிதியிலிருந்து கருடனை
உற்சவ காலங்களில் நால்வர் தூக்கி வர - தொடர்ந்து 
8, 16, 32, 64 என - ஸ்ரீ பாதந்தாங்கிகள்
அதிகரிப்பது அதிசயம்..

கும்பகோணத்திலிருந்து 3 கி.மீ., 
தொலைவிலுள்ளது..

உறியார் வெண்ணைய் உண்டு உரலோடும் கட்டுண்டு
வெறியார் கூந்தல் பின்னை பொருட்டு ஆன்வென்றானூர்
பொறியார் மஞ்ஞை பூம்பொழில் தோறும் நடமாட
நறுநாண் மலர்மேல் வண்டிசை பாடும் நறையூரே.. (1492) 
- திருமங்கையாழ்வார் -

மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார்
(110 திருப்பாசுரங்கள்) 
***


மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப்பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்
திருத்தலம் - திருவீழிமிழலை 


இறைவன் - அருள்திரு வீழிநாதன் 
அம்பிகை - ஸ்ரீ சுந்தரகுஜாம்பிகை 
தீர்த்தம் - விஷ்ணு தீர்த்தம் 
தலவிருட்சம் - வீழிச் செடி..



அம்பிகை திருமணக்கோலங்கொண்ட திருத்தலங்களுள்
முதன்மையானது மதுரையம்பதி..

அவ்வண்ணம் சிறப்புற்ற திருத்தலம்
திருவீழிமிழலை..



காத்யாயன முனிவரின் திருமகளாகத் தோன்றியருளிய
அம்பிகையை மணங்கொண்டு 
ஈசன் திருக்கல்யாணத் திருக்காட்சி நல்கினான்..

ஈசனுக்கு இங்கே மாப்பிள்ளை ஸ்வாமி 
என்றே திருப்பெயர்..
***

சலந்தராசுரனை வீழ்த்திய சக்கரத்தினை வேண்டி
ஸ்ரீ ஹரிபரந்தாமன் இத்தலத்தில் சிவபூஜை நிகழ்த்தினன்..

நாளும் ஆயிரம் தாமரை மலர்களால்
வழிபாடு செய்த வேளையில் 
ஒரு நாள் தாமரை மலர் ஒன்று குறைவுபட்டது..



அதனை உணர்ந்த - ஸ்ரீ ஹரிபரந்தாமன்
சற்றும் தயக்கமின்றி
தனது விழியினைத் தாமரை மலராகக் கொண்டு
சிவ வழிபாட்டில் சமர்ப்பித்தனன்..

அது கண்டு நெகிழ்ந்த ஈசன் 
ஆரத் தழுவி மகிழ்ந்ததுடன் 
சக்கரத்தையும் வழங்கினன்..

அதுவே
ஸ்ரீ சுதர்சனம்..
***

திருநாவுக்கரசரும் ஞானசம்பந்தப் பெருமானும் 
திருமடம் அமைத்துத் தங்கியிருந்த திருத்தலம்.. 

அவர்கள் தங்கியிருந்த காலத்தில் பெரும் பஞ்சம் வந்துற்றது..
அது கண்டு இரங்கி - மக்கள் துயர் தீர்த்தனர்.

 மக்கள் துயர் தீர்வதற்காக ஈசனிடம் வேண்டி நின்றனர்..
அதன் பொருட்டு,
திருஞானசம்பந்தருக்கும் அப்பர் சுவாமிகளுக்கும் 
நாளும் ஒருபொற்காசு அருளினன்..



அதைக் கொண்டு அருளாளர் இருவரும்
அல்லலுற்ற மக்களுக்கும் ஏனைய உயிர்களுக்கும்
அன்னம் பாலித்து ஆதரித்து நின்றனர்.. 
அத்தகைய பெருமைக்கு உரியது
திருவீழிமிழலை..

திருவீழிமிழலையில் அருளப்பெற்ற
திருப்பதிகங்கள் 
வாழ்வின் வறுமையைத் தீர்ப்பன 
என்பது ஆன்றோர் திருவாக்கு..

திருப்பதிகம் அருளியோர்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,
சுந்தரர்..
***

வாசி தீரவே காசு நல்குவீர்
மாசில் மிழலையீர் ஏசல் இல்லையே..(1) 

இறைவர் ஆயினீர் மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை முறைமை நல்குவீர்.. (1/92/2) 
- திருஞானசம்பந்தர் -

நீற்றினை நிறையப்பூசி நித்தல் ஆயிரம் பூக்கொண்டு
ஏற்றுழி ஒருநாளொன்று குறையக் கண் நிறையவிட்ட
ஆற்றலுக்கு ஆழிநல்கி அவன் கொணர்ந்து இழிச்சுங்கோயில்
வீற்றிருந்து அளிப்பர் வீழிமிழலையுள் விகிர்தனாரே!.. (4/64) 
- திருநாவுக்கரசர் -

பரந்தபாரிடம் ஊரிடைப்பலி பற்றிப் 
பார்த்துணும் சுற்றமாயினீர்
தெரிந்த நான்மறை யோர்க்கிடம்
ஆகிய திருமிழலை
இருந்து நீர்தமிழோடு இசைகேட்கும் 
இச்சையால் காசு நித்தல் நல்கினீர்
அருந்தண் வீழி கொண்டீர்
அடியேற்கும் அருளிதிரே.. (7/88)
- சுந்தரர் -  
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச்செய்த
திருவாசகம்

திருப்பொன்னூசல்
ஆறாம் திருப்பாடல்


மாதாடு பாகத்தன் உத்தர கோசமங்கைத்
தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள்
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவித்
தீதோடா வண்ணந் திகழப் பிறப்பறுப்பான்
காதாடு குண்டலங்கள் பாடிக்கசிந்து அன்பால்
போதாடு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

10 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அன்பின் ஜி மார்கழித் தென்றலின் 26 ஆம் நாள் பகிர்வு அழகிய புகைப்படங்களுடன் பிரமாண்டமான விடயங்களும் நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. சலந்தரன் கதை அறிந்தேன். பாவைப்பாடல்கள் தொகுப்பும் அருமை. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. படங்கள்தான் உங்கள் பகிர்வுகளின் பிளஸ் ஐயா...
    இப்படி அழகான படங்களை தேடி எடுப்பதே மிகவும் கடினமானது...
    அருமை... அழகு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..

      அழகிய படங்களை வலையேற்றிய நண்பர்களுக்குத்தான் முதல் நன்றி..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அன்பினும் இனிய நண்பரே
    தங்களுக்கும், தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும்
    இணையில்லாத இன்பத் திருநாளாம்
    "தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நம்பி..

      தங்களுக்கும் அன்பின் நல்வாழ்த்துகள்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..