நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி!..


ஞாயிறு, ஜனவரி 03, 2016

மார்கழித் தென்றல் - 18

குறளமுதம்

பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.. (0975)  
***

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
திருப்பாடல் - 18திவ்ய தேசம் - திருவேங்கடம்
திருப்பதி - திருமலை

கீழ்த்திருப்பதி 
எம்பெருமான் - ஸ்ரீ கோவிந்தராஜன்
தாயார் - புண்டரீகவல்லி

ஆதிசேஷன் மீது சயனத் திருக்கோலம்
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்திருச்சானூர் 
தாயார் - அலர்மேல்மங்கை, பத்மாவதி
இருந்தருளும் திருக்கோலம்


கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்திருமலை 
எம்பெருமான் - ஸ்ரீ வேங்கடேசன், ஸ்ரீநிவாசன்
உற்சவர் - ஸ்ரீ மலையப்பன்
ஸ்ரீ ஆனந்த விமானம்

நின்றருளும் திருக்கோலம்
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்

விருஷபாத்ரி, நீலாத்ரி, அஞ்சனாத்ரி,
சேஷாத்ரி, கருடாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி
என்பன ஏழு மலைகள்.

இவற்றுள்
வேங்கடாத்ரியின் மீது
எழுந்தருளியிருக்கின்றான்
கலியுக வரதன்.மங்களாசாசனம் 
பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகராழ்வார், 
திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், திருப்பாணாழ்வார்,
பேயாழ்வார், பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார்,
நம்மாழ்வார்..  
***

இத்துணைக் காலம் கழிந்த நிலையில்
 2015 நவம்பர் 21 சனிக்கிழமை அன்று தான்
எம்பெருமானைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தேன்..

நினைக்கும் போதெல்லாம்
அன்றிருந்த உணர்வு பொங்கி எழுந்து
நெஞ்சமெல்லாம் ஆனந்தத் தேன் பாய்கின்றது..


ஸ்ரீ வேங்கடேச தரிசனம்
மீண்டும் காண மனம் தவிக்கின்றது..  செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே!.. (685) 

- என்று குலசேகராழ்வார் உருகின்றார்..

நமக்கும் அப்படித்தான் தோன்றுகின்றது..

செல்வத் திருமலையின் மீது
ஏதேனும் ஒன்றாகி இங்கேயே
கிடந்து விட மாட்டோமா!..
என்று மனம் ஏங்குகின்றது..
***


உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலிஉன் மைத்துனன் பேர்பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளைஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!.. 

ஓம் ஹரி ஓம்
***

சிவதரிசனம்
திருத்தலம் - திருக்காளத்தி இறைவன் - ஸ்ரீ திருக்காளத்திநாதர்
அம்பிகை - ஸ்ரீ ஞானப்பூங்கோதை

தீர்த்தம் - பொன்முகலி நதி
தலவிருட்சம் - மகிழம்

பஞ்ச பூதங்களுள்
வாயு திருத்தலமாகத் திகழ்கின்றது..மூலத்தானத்திலுள்ள திருவிளக்குகளின் சுடர்கள் 
எப்போதும் அசைந்து கொண்டேயிருக்கின்றன..

சிலந்தியும் யானையும் பாம்பும்
வணங்கி உய்வடைந்த திருத்தலம்..

வேடம் புனைந்து கொண்டு அமுதம் அருந்தி 
தண்டிக்கப்பட்டதால் புதிதாக உருவம் எடுத்த
ராகுவும் கேதுவும்
திருக்காளத்தியப்பவைப் பணிந்து
வணங்கி நின்றதால்
நிழல் கிரகங்கள் எனும் பதவி அடைந்தனர்..

திண்ணப்பன் எனும் வேடுவர்
நாளாறில் கண்ணிடந்து அப்பி
இறைவனால்
கண்ணப்பர் என அழைக்கப்பட்டனர்..


ஸ்ரீ கண்ணப்பர் செய்த அருஞ்செயலை
சமயக்குரவர்கள் நால்வரும்
பட்டினத்தடிகளும் மற்றும் பலரும்
புகழ்ந்துரைக்கின்றனர் எனின்
அவர் பெற்ற பேறுதான் என்னே!..

திருக்கோயிலில்
ஸ்ரீ பாதாள கணபதி சந்நிதி விளங்குகின்றது.

ஏறத்தாழ 50 அடி பள்ளத்தினுள்
விநாயகப் பெருமான் சந்நிதி கொண்டுள்ளார்..

இறங்கிச் சென்று தரிசிக்க ஏதுவாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன..திருஞான சம்பந்தர் இங்கிருந்தே
வட நாட்டு சிவ தலங்களைத் தரிசித்தார்..

அப்பர் பெருமான் இங்கிருந்துதான் 
திருக்கயிலாய யாத்திரையைத் 
தொடங்கினார்..

பின்னாளில்
சுந்தரரும் இங்கிருந்தே
வட நாட்டு சிவ தலங்களைத் தரிசித்தார்.

திருப்பதிகம் அருளியோர்
திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர்,
சுந்தரர்..
***

ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிச்செய்த
திருக்கடைக்காப்பு


சந்தமார் அகிலொடு சாதிதேக் கம்மரம்
உந்துமா முகலியின் கரையினில் உமையொடும்
மந்தமார் பொழில்வளர் மல்குவண் காளத்தி
எந்தையார் இணையடி என்மனத்து உள்ளவே!.. (3/36)

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிச்செய்த
தேவாரம்

நாரணன்காண் நான்முகன்காண் நால்வேதன் காண்
ஞானப் பெருங்கடற்கோர் நாவாய் அன்ன
பூரணன்காண் புண்ணியன்காண் புராணன்தான் காண்
புரிசடைமேற் புனலேற்ற புனிதந்தான் காண்
சாரணன்காண் சந்திரன்காண் கதிரோன்தான் காண்
தன்மைக்கண் தானேகாண் தக்கோர்க்கு எல்லாங்
காரணன்காண் காளத்தி காணப்பட்ட
கணநாதன் காண் அவன்என் கண்ணுளானே!.. (6/8)

ஸ்ரீ சுந்தரர் அருளிச்செய்த
திருப்பாட்டு

செண்டாடும் விடையாய் சிவனேயென் செழுஞ்சுடரே
வண்டாருங் குழலாள் உமைபாகம் மகிழ்ந்தவனே
கண்டார் காதலிக்குங் கணநாதனென் காளத்தியாய்
அண்டா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே!.. (7/26)

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த
திருவாசகம்

திருஅம்மானை
திருப்பாடல் 15 - 16சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன்றன் வேள்வியினில்
இந்திரனை நெரித்திட்டு எச்சன் தலையரிந்து
அந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்துச்
சிந்தித் திசைதிசையே தேவர்களை ஓட்டுகந்த
செந்தார்ப் பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
மந்தார மாலையே பாடுதுங்காண் அம்மானாய்!..

ஊனாய் உயிராய் உணர்வாய் என்னுட்கலந்து
தேனாய் அமுதமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய்
வானோரறியா வழிஎமக்குத் தந்தருளுந்
தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார் சீரொளிசேர்
ஆனா அறிவாய் அளவிறந்த பல்லுயிர்க்கும்
கோனாகி நின்றவா கூறுதுங்காண் அம்மானாய்!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்  
***

14 கருத்துகள்:

 1. அழகான படங்கள். கோவில்கள் பற்றிய தகவல்கள், பாடல்கள் என சிறப்பாக அமைந்த பதிவு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. வணக்கம் சகோ !
  ஆஹா! என்ன அருமையான இனிமையான பாடல்கள் இவை. இதுவரை நான் அறிந்தது இல்லை.பாடி மகிழ்ந்தேன்.மீண்டும் வருவேன் பாட. படங்களும் அவ் வண்ணமே கோவில் சிறப்புகளும் அருமை சகோ!
  பதிவுக்கு நன்றி ! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும் ...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்களுக்கும் அன்பின் இனிய நல்வாழ்த்துகள்..

   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..
   இனிய கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 3. இந்த திருத்தலங்களுக்குப் போய் இருக்கிறோம் அண்மையில் காளத்தியில்தானே கோபுரம் வீழ்ந்தது.?பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   காளத்தி கோபுரம் விழுந்து சிலவருடங்கள் ஆகின்றன..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. அன்பின் ஜி மார்கழித் தென்றலின் 18 ஆம் நாள் விடயங்கள் நன்று தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. படங்களுடன் மார்கழித் திங்கள் பகிர்வும் அருமை ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. திருப்பதியும், திருகாளத்தியும் பார்த்து பலவருடங்கள் ஆகி விட்டது இன்று உங்கள் பதிவில் தரிசனம் செய்தேன்.
  நன்றி, வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. திருமலை அருமை, அவரின் பாடல் படி ஏதேனும் ஒன்றாய் மலையில் இருக்க உங்கள் ஆசை,,,

  அருமை, அருமை தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு