நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி!..


செவ்வாய், ஜனவரி 12, 2016

மார்கழித் தென்றல் - 27

குறளமுதம் 


இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.. (0081)  
***

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
திருப்பாடல் - 27 

திவ்ய தேசங்களிலும்
இறையன்பர்களின் இல்லங்களிலும்
கூடாரவல்லி எனும் வைபவம் - இன்று..

மார்கழித் திங்களில்
நோன்பு ஏற்ற - சுடர்க்கொடியாள்
தான் எண்ணியவற்றை எண்ணியவாறு எய்தியபடியால் 
தன் தோழியரோடு மங்கல அணிகலன்களைப் பூண்டவளாக
நெய்வழியும் பால் பொங்கலை நிவேதனம் செய்து
கூடியிருந்து குதுகலித்து 
உள்ளம் குளிர்கின்றாள்..
***

திவ்ய தேசம் -  திருபுள்ளம்பூதங்குடி
- புள்ளபூதங்குடி - எம்பெருமான் - ஸ்ரீ வல்வில்ராமன்  
தாயார் - ஹேமாம்புஜவல்லி (ஸ்ரீ பூமாதேவி)
பொற்றாமரையாள் 
உற்சவர் - ஸ்ரீராமன்
ஸ்ரீ சோபன விமானம்

சங்கு சக்ரத்துடன்
ஆதிசேஷன் மீது சயனத் திருக்கோலம்
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்


இராவணனிடமிருந்து அன்னை ஜானகியை 
மீட்கப் போராடி - குற்றுயிராக வீழ்ந்தான் ஜடாயு..

ஜானகியைத் தேடி வந்த ஸ்ரீராமன் - 
ஜடாயுவுக்கு நேர்ந்த கதியறிந்து கலங்குகின்றான்..

ஸ்ரீராமனிடம் விவரங்களைக் கூறிவிட்டு 
உயிர் துறக்கின்றான் ஜடாயு..

ஜடாயுவை விண்ணுக்கு ஏற்றி - 
நீர்க் கடன்களைச் செய்யும் பொழுது, 
அருகில் வைதேகி இல்லையே - என, 
மனம் கலங்கிய வேளையில் 

ஸ்ரீ பூமாதேவி எழுந்தருளி - 
நீர்க்கடன் நிறைவேற்ற உறுதுணையாக இருந்தாள்..

அந்த அளவில், ஐயன் ஸ்ரீ ராமன் - 
சற்றே ஓய்வு கொண்டருளிய திருத்தலம்..வைகுந்த ஏகாதசி - திருவீதி எழுந்தருளல்
கும்பகோணத்திலிருந்து 11கி.மீ தொலைவிலுள்ளது - 
புள்ளபூதங்குடி.

சுவாமிமலை வழியாக திருவைகாவூர் செல்லும் சாலையில், 
ஆதனூர் கிராமத்தை அடுத்து புள்ளபூதங்குடி.

ஸ்ரீ ரங்கநாயகி உடனாகிய ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் 
குடிகொண்டிருக்கும் 
ஆதனூரும் திருமங்கையாழ்வாரால் 
மங்களாசாசனம் செய்யப்பெற்ற
திவ்ய தேசமே..

இங்கே புஜங்க சயனத்தில் 
நெல் அளக்கும் மரக்காலை தலைக்கு வைத்துக் கொண்டு 
இடது திருக்கரத்தில் ஏடும் எழுத்தாணியும் தாங்கியவனாக
சேவை சாதிக்கின்றனன் - 
  ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன்..

 ஆதனூரில் இருந்து ஒரு கி.மீ தொலைவில்  - 
புள்ளபூதங்குடி ஸ்ரீவல்வில் ராமன் திருக்கோயில் உள்ளது. 

மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார்..


மையார் தடங்கண் கருங்கூந்தல் ஆய்ச்சி மறைய வைத்த தயிர் 
நெய்யார் பாலோடமுது செய்த நேமி அங்கை மாயன் இடம் 
செய்யார் ஆரல் இரை கருதிச் செங்கால் நாரை சென்றணையும்
பொய்யாநாவில் மறையாளர் புள்ளம் பூதங்குடிதானே!..( 1352)
- திருமங்கை ஆழ்வார் -
***


கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தனைப் 
பாடிப் பறை கொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்
ஆடைஉடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய்பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்
திருத்தலம் - பாபநாசம்
108 சிவாலயம்
தஞ்சை மாவட்டம் இறைவன் - ஸ்ரீ ராமலிங்க ஸ்வாமி 
அம்பிகை - ஸ்ரீ பர்வதவர்த்தனி
தீர்த்தம் - சூரிய தீர்த்தம்
தலவிருட்சம் - வில்வம்

அறிந்தும் அறியாமலும் செய்த
பாவங்கள் நாசம் ஆகும் திருத்தலம் என்பதால்
பாபநாசம்..

ஸ்ரீராமபிரானுக்கு ஏற்பட்ட தோஷம் நீங்கிய தலம்..

வைதேகியுடனும் இளையபெருமாளுடனும்
ஸ்ரீ ராமபிரான் சிவபூஜை செய்ததாக தலபுராணம்..

மேற்கு நோக்கிய திருக்கோயில்..

108 சிவலிங்கங்களுடன் திகழ்கின்றது

திருமூலத்தானத்தினுள் ஸ்ரீ ராமலிங்கம்
திருக்கோயிலின் தென்புறமாக ஸ்ரீ ஆஞ்சநேய லிங்கம்.ஏனைய 106 லிங்கங்களும்
திருக்கோயிலினுள் வடக்கு திருச்சுற்றில் விளங்குகின்றன..

நடுநாயகமாக ஸ்ரீ மஹாலிங்கம்
மூன்று வரிசைகளில் (35 x 3) 105 லிங்கங்கள்..

சிறப்புக் கட்டணம் செலுத்தி சிவலிங்க மண்டபத்தினுள் சென்று
நாமே மலர்களைச் சூட்டி வணங்கி மகிழலாம்..

சிவாச்சார்யார்களைக் கொண்டு
அபிஷேக ஆராதனைகளும் நிகழ்கின்றன..

பிரதோஷ நாட்கள் வெகு சிறப்பாக நிகழ்கின்றன..

தஞ்சை கும்பகோணம் நெடுஞ்சாலையில்
பாபநாசம் நகருக்கு சற்று முன்பாகவே
திருக்கோயில் அமைந்துள்ளது..

நகரப்பேருந்துகள் அனைத்தும்
கோயிலின் அருகில் நின்று செல்கின்றன..

பழைமையான திருக்கோயில் எனினும்
திருப்பதிகங்கள் ஏதும் 
கிடைக்கப் பெறவில்லை..
***

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிச்செய்த 
தேவாரம்

நாயினுங் கடைப்பட்டேனை நன்னெறி காட்டியாண்டாய்
ஆயிரம் அரவம் ஆர்த்த அமுதனே அமுதம் ஒத்து
நீயும் எந்நெஞ்சுள்ளே நிலாவினாய் நிலாவி நிற்க
நோயவை சாரும் ஆகின் நோக்கிநீ அருள் செய்வாயே!.. (4/76) 
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச்செய்த
திருவாசகம்

திருப்பொன்னூசல்
ஏழாம் திருப்பாடல்
உன்னற் கரியதிரு உத்தர கோசமங்கை
மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன் புகழே
பன்னொப் பணிந்திறைஞ்ச பாவங்கள் பற்றறுப்பான்
அன்னத்தின் மேலேறி ஆடும்அணி மயில்போல்
என்னத்தன் என்னையும்ஆட் கொண்டான் எழில்பாடிப்
பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ!..
***

ஸ்வாமி விவேகானந்தர்
பிறந்த தினம் - இன்று..ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

10 கருத்துகள்:

 1. இரு கோயில்களுக்கும் சென்றுள்ளேன். தங்கள் தயவால் இன்றும் சென்றேன். திருப்பாவை, திருவெம்பாவை படித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. நான் இவ்விரு கோவில்களுக்கும் சென்றது இல்லை..ஆனால் என்ன..? இப்போது சென்று பார்த்து விட்டேனே உங்கள் தயவில்....புகைப்படம் மிக அருமையாக இருக்கிறது.நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. 108 சிவலிங்கம் சென்றுள்ளேன். அருமையான புகைப்படங்கள்,, வாழ்த்துக்கள், தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. அன்பின் ஜி மார்கழித் தென்றலின் 27 ஆம் நாள் பகிர்வு நன்று புகைப்படங்கள் அருமை ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. அழகு ஐயா...
  அருமை...
  மார்கழித் திங்களில் திருப்பாவை, குறளமுதம் என அருமையான தொகுப்பாய் வரும் இத்தொடரை மின்னூலாகவாவது மாற்றுங்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..
   தங்களது விருப்பம் நன்று..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு