நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜனவரி 04, 2016

மார்கழித் தென்றல் - 19

குறளமுதம்

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
எந்நோற்றன்கொல் எனும் சொல்.. (0070)  
***

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
திருப்பாடல் - 19

திவ்ய தேசம் - திருப்புல்லாணி



எம்பெருமான் - ஸ்ரீ ஆதிஜகந்நாதப் பெருமாள்
தாயார் - ஸ்ரீ கல்யாணவல்லி, பத்மாஸநி
(இரு சந்நிதிகள்)
உற்சவர் - ஸ்ரீ கல்யாண ஜகந்நாதன்

ஸ்ரீ கல்யாண விமானம்
நின்றருளும் திருக்கோலம்
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்




ஸ்ரீ ராமபிரான் தர்ப்ப சயனத் திருக்கோலத்தில்
சேவை சாதிக்கின்றார்..

எனவே, திருப்புல்லணை என்பது
காலப்போக்கில் திருப்புல்லாணி என ஆயிற்று..

ஸ்ரீ கல்யாண ஜகந்நாதன்
தசரதர் புத்திர பாக்கியம் வேண்டி
வழிபட்ட திருத்தலம்..

பின்னும், சீதையைத் தேடி வந்த
ஸ்ரீராமபிரானும் வழிபட்ட திருத்தலம்..

கடலின் மீது அணை கட்ட வேண்டி
கடலரசனை நினைந்து
ஸ்ரீ ராமபிரான் ஏழு நாட்கள்
தர்ப்ப சயனத்தில் கிடந்த திருத்தலம்..



திருப்புல்லாணியின் வெகு அருகிலேயே
கல்வியும் செல்வமும் தானேயாகித் திகழும்
எம்பெருமான் - 
தனக்குத் தானே விதித்துக் கொண்டபடி
வானர சேனையின் துணை கொண்டு
வங்கக் கடலை ஊடறுத்து அமைத்த
ஆதிசேது திகழ்கின்றது.

இதனை எழுப்புதற்கென்று -
எந்தப் பல்கலைக்கும் சென்று
பயில வேண்டிய அவசியமில்லை
 பரம்பொருளாகிய ஸ்ரீ ராமனுக்கு..

அந்த ஆதிமூலத்தினிடம் இருந்து தான்
பாருலகிற்கு அத்யாவசியமாகிய
நற்பண்புகள் துலங்கிய
பல்கலைகளும் வெளிப்பட்டு விளங்கின..

ஆயினும்,
உலகத்தார் உணரும் பொருட்டு
வசிஷ்ட மகரிஷியிடமும்
விஸ்வாமித்ர மகரிஷியிடமும்
அகத்திய மாமுனிவரிடமும்
தானொரு மாணாக்கனாக
தாழ்ந்து பணிந்து நின்றான்
தற்பரன் ஸ்ரீ ராமபிரான்!..

ஸ்ரீ ராமபிரான் தர்ப்பை விரிப்பில் கிடந்த போது
இளைய பெருமாள் - தன்னுரு கொண்டு -
ஆதிசேஷ வடிவமாகி பெருமாளைத்
தாங்கிக் கொண்டதாக தலபுராணம்..



பின்னும்,
வைதேகியை மீட்டருளிய வள்ளல் பெருமான்
அயோத்திக்குத் திரும்பும் வழியில்
இத்தலத்தில் வழிபட்டதாகவும் ஐதீகம்..

பிள்ளை வரம் அருளும்
திருத்தலங்களுள் திருப்புல்லாணியும் ஒன்று..

மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார்..
***

குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை
எத்த்னை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்
***

சிவதரிசனம்
திருத்தலம் - இராமேஸ்வரம்



இறைவன் - ஸ்ரீ ராமலிங்கம், ஸ்ரீ ராமேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ பர்வதவர்த்தனி 
தீர்த்தம் - அக்னி தீர்த்தம் எனும் வங்கக் கடல்
மேலும் 22 தீர்த்தங்கள்
தலவிருட்சம் - வில்வம்

ஸ்ரீ ராமபிரான் தனது கோதண்டத்தின் நுனி கொண்டு
கீறி உருவாக்கியது - தனுஷ்கோடி தீர்த்தம்..


இலங்கைக்கு அதிபதியான இராவணனை வீழ்த்தி 
ஸ்ரீ சீதா தேவியை மீட்ட பின்னர்
ஸ்ரீ ராமபிரான் சிவபூஜை நிகழ்த்திய திருத்தலம்..

சிவலிங்கம் கொணரும் பொருட்டு
காசியம்பதிக்குச் சென்ற அனுமன்
திரும்புதற்குத் தாமதம் ஆகியது..


அந்நிலையில், 
ஸ்ரீ வைதேகி தனது கரங்களால் வடித்த 
சிவலிங்கத்தை ஸ்ரீராமன் வழிபட்டார்..

அதுவே ஸ்ரீ இராமலிங்கம்..

சிவபூஜை நிறைவுற்ற வேளையில்
அனுமன் கொணர்ந்த சிவலிங்கம்
ஸ்ரீ விஸ்வலிங்கம்..

நித்ய பூஜைகளில் அனுமன் கொணர்ந்த 
ஸ்ரீ விஸ்வலிங்கத்திற்கே முதல் வழிபாடு..



பன்னிரு ஜோதி லிங்க திருத்தலங்களுள்
இராமேஸ்வரமும் ஒன்றாகும்.. 

திருப்பதிகம் அருளியோர்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்  
***

ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிச்செய்த
திருக்கடைக்காப்பு


தேவியை வவ்விய தென்னிலங்கைத் தசமாமுகன்
பூவியலும்முடி பொன்றுவித்த பழி போயற
ஏவியலுஞ் சிலையண்ணல் செய்த இராமேச்சுரம்
மேவிய சிந்தையினார்கள் தம்மேல் வினைவீடுமே!.. (3/10)  

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிச்செய்த
தேவாரம்

கோடிமா தவங்கள் செய்து குன்றினார் தம்மையெல்லாம்
வீடவே சக்கரத்தால் எறிந்துபின் அன்பு கொண்டு
தேடிமால் செய்த கோயில் திருஇராமேச்சுரத்தை
நாடிவாழ் நெஞ்சமேநீ நன்னெறி யாகுமன்றே!..
***
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த
திருவாசகம்

திருஅம்மானை
திருப்பாடல் 17 - 18




சூடுவேன் பூங்கொன்றை சூடிச்சிவன் திரள்தோள்
கூடுவேன் கூடிமுயங்கி மயங்கி நின்று
ஊடுவேன் செவ்வாய்க்கு உருகுவேன் உள்ளுருகித்
தேடுவேன் தேடிச் சிவன்கழலே சிந்திப்பேன்
வாடுவேன் பேர்த்து மலர்வேன் அனலேந்தி
ஆடுவான் சேவடியே பாடுதுங்காண் அம்மானாய்!..

கிளிவந்த மென்மொழியாள் கேழ்கிளரும் பாதியனை
வெளிவந்த மாலயனுங் காண்பரிய வித்தகனைத்
தெளிவந்த தேறலைச் சீரார் பெருந்துறையில்
எளிவந் திருந்திரங்கி எண்ணரிய இன்னருளால்
ஒளிவந்தென் உள்ளத்தின் உள்ளே ஒளிதிகழ
அளிவந்த அந்தணனைப் பாடுதுங்காண் அம்மானாய்!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

15 கருத்துகள்:

  1. குறளமுதம் பருகிறேன் நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  2. மகன் பற்றிக் கூறிய வள்ளுவர் மகள் பற்றி ஒன்றும் கூறவில்லையே. இம்மாதம் மூன்றாவது வாரம் ராமேஸ்வரம் திருப்புல்லாணி ஆகிய இடங்களுக்கு மீண்டும் செல்ல இருக்கிறோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      பெண்களுக்கு என்று பொதுவாகத் தான் கூறியிருக்கின்றார் - வள்ளுவர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அன்பின் ஜி மார்கழித் தென்றலின் 19 ஆம் நாள் குறளமுதம் நன்று திருப்புல்லாணியின் முந்தைய பெயர் அறிந்தேன் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. திருபுல்லாணி இன்னும் பார்க்கவில்லை . உங்கள் பதிவில் ராமபிரானை தரிசனம் செய்து விட்டேன்.படங்கள் , பாடல்கள் எல்லாம் அருமை. குறளமுதம் அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. உங்கள் பதிவு மூலம் திருப்புல்லாணி காணும் பேறு கிடைத்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. குறளமுதம் தொடங்கி ஆண்டாளின் அன்மீக அருளமுதம் வரை பருகியதே பாக்யம்
    நன்றி நல்லமுது படைத்தமைக்கு.

    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நம்பி..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. தாங்கள் குறிப்பிட்ட இரு ஊர்களுக்கும் நான் தங்கள் பதிவின் வழியே தான் சென்று வந்தேன். புகைப்படங்கள் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. ராமேஸ்வரம் சென்றிருக்கிறேன்... பலமுறை.
    திருப்புல்லானி இன்னும் செல்லவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      திருப்புல்லாணி செல்லும் வாய்ப்பு விரைவில் கிடைக்கும்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..