நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மே 12, 2015

அப்பர் பெருமான்

வழிநடையில் சோலை வனமாக நிழல்தரும் மரங்கள் பல இருந்தும் -  வெம்மை குறையவில்லை..

அது - சித்திரை மாதம்..

பறந்து திரிவதற்கு அஞ்சிய பறவைகள் - கூட்டில் அடைந்தவாறு பழைய கதைகளைப் பேசிக் கொண்டிருந்தன.

ஆனாலும், அந்தக் கொடும் வெயிலில் - குளிர் நிழல்தனைக் கண்டு ஒதுங்கி இளைப்பாறாமல் - ஒரு புண்ணிய ஆத்மா அந்த வழியில் வந்து கொண்டிருந்தது..


அது - சிவனே என்று வந்தாலும் - சிவனே என்று வராமல் -

வழிநடையில் போவோர் வருவோர்க்கு இடையூறாக  இருமருங்கிலும் முளைத்து தழைத்திருந்த - காரை, கற்றாழை, நாயுருவி, நெருஞ்சி போன்ற முட்செடிகளை தன் கையிலிருந்த உழவாரத்தினால் அப்புறப்படுத்திக் கொண்டு வந்தது.

அந்தப் புண்ணியர் - திருநாவுக்கரசர்.

வழித்தடத்தில் முட்செடிகள் பரவிக் கிடந்தால் - வழி நடப்பதற்கு அஞ்சுவரே மக்கள்.. மூலிகைச் செடிகளாக இருந்தாலும் அவை பெருகி காடாகக் கிடப்பின் - விஷமுடைய உயிரினங்களுக்கு அவை புகலிடமாகி விடுமே!. அங்ஙனம் ஆயின் அது பலருக்கும் அல்லலாக அமையுமே!..

- என்று ஆருயிர்களின் மீது கொண்ட அன்பு தான் இந்த அருஞ்செயலுக்கு அடிப்படை.

தள்ளாத வயதிலும் - தளராத உள்ளத்துடன் - தவப்பணி செய்து கொண்டு வந்த திருநாவுக்கரசரைக் கண்டதும் - மரங்களின் ஊடாக அமர்ந்திருந்த புள்ளினங்கள் பேச்சற்றுப் போயின.

பெருமானே!.. எம்மை ஆளுடைய ஐயனே!.. அருந்தொண்டாற்றி வரும் இந்த அடியவரின் அல்லலைக் களைந்தருள்வீராக!..

சற்று தொலைவில் திருக்கோயில் கொண்டிருந்த - வாழை வன நாதனை மனமுருகி வேண்டிக் கொண்டன..

ஆதவனின் அருங்கிரணங்களால் தடம் தகித்தது. அடியவரின் அடி சுட்டது.

பகலவனின் வெங்கதிர்களால் உடம்பு வியர்த்து.
மேனியிலிருந்த வெண்ணீறு கரைந்து பாலாக வழிந்தது.

அதற்கு மேலும் அவரால் தாள முடியவில்லை.

அருகிருந்த விருட்சத்தினை நோக்கி நடந்தார். கால்கள் சோர்ந்தன.

திருக்கயிலை நோக்கி நடந்த நாட்கள் அவரது நினைவில் வந்தன!..

பசியும் தாகமும் மேலிட்டது..

உமையொரு பாகனை உளங்கொண்டு வணங்கினார்.
அன்றொரு நாள் - கடம்பூரில் தொடுத்த பாமாலை நினைவுக்கு வந்தது.

அதிலிருந்து ஒரு பாவினை - தனது திருநாவினால் - மீண்டும் மொழிந்தார்.

நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்கடன் அடியேனையுந் தாங்குதல்
என்கடன் பணி செய்து கிடப்பதே!..

அருகே தாமரைத் தடாகம் தென்பட்டது.
ஆயினும் அருகே செல்ல இயலவில்லை..

கண்கள் இரண்டும் மயங்கின.
கையொடு கால்களும் தளர்ந்தன.

அதற்கு மேல் இயலாமல் மயக்கமுற்று வீழ்ந்தார்..

திருநாவுக்கரசரின் திருமேனி நோகாமல் பூமகள் தாங்கிக் கொண்டாள்..

இந்தப் புண்ணியரைத் தாங்கிட என்ன புண்ணியம் செய்தனமோ!..

எல்லாம் வல்ல சிவம் - உம்மைக் கொண்டு ஒரு திருவிளையாடலை நிகழ்த்த இருக்கின்றதே.. பெரியீர்!.. தாம் செய்த அறச் செயல்கள் போல் வேறு எதுவும் உளவோ!.

தாய் தந்தையரை இழந்த வேளையில் - ஆதரவற்று மனம் தளர்ந்திருந்தாலும் நீரும் உமது தமக்கையும் இயற்றிய அறப்பணிகள் அளவிடற்கரியன. இல்லத்தில் நிறைந்திருந்த பொன்னையும் பொருளையும் வறியவர்க்கென வாரி வாரி வழங்கினீர்..

எல்லாவற்றிலும் மேலானது கோடையில் நீர்ப்பந்தல் அமைத்து வருவோர் தமக்கு சோறும் நீரும் அளித்த அருங்கொடை.. 

செய்தார்க்கு செய்த நலம் அல்லவோ!.. சற்றே இங்கு இளைப்பாறும்!..

- என்று பூமகள் புன்னகையுடன் கருணை கொண்டாள்..

சில விநாடிகளுக்கெல்லாம் பன்னீர் சாரல் பொழிந்தது.
நல்ல மலர்களின் நறுமணம் அங்கு கமழ்ந்தது.

உணர்வு வரப்பெற்ற திருநாவுக்கரசர் - மெல்ல கண்விழித்தார்.

எதிரில் - ஞான சூரியனைப் போல அந்தணர் ஒருவர்.

அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டு ஒழுகலான்..

- என்று வள்ளுவப் பெருந்தகை வரையறுத்ததைப் போல - அருள் தோற்றம்..

அவரது தோளில் ஒரு மூட்டை. கையில் நீர் நிறைந்த சுரைக்குடுக்கை.

ஐயா.. எழுந்திரும்!..

அன்புக் கட்டளை..

தள்ளாத வயதில் எதன் பொருட்டு இந்த கொடும் வெயிலில் வழிப்பயணம்!?..

புன்னகையுடன் வினா ஒன்று வெளிப்பட்டது..

தன்னையும் நாடி வந்து ஒருவர் கேட்கின்றாரே..
அவரை ஆற்றுப்படுத்துவோம்!..  - என எண்ணிய வண்ணம் - கைகளை ஊன்றி எழ முயன்றார் - திருநாவுக்கரசர்.

இரும்.. இரும்!.. இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் இன்புற்று இரும்!.. இருந்தவாறே விளம்பும்!..

அன்பு வழிந்தது - அந்தணரின் பேச்சில்!..

காண்டற்கரிய கடவுள் கண்டாய்!..
கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய்!..
- என,  காசினியில் உள்ளோருக்கெல்லாம் கயிலாய நாதனை - காட்டிச் செல்கின்றேன்.. காட்டச் செல்கின்றேன்..

அங்ஙனமாயின் நீர் கண்டதுண்டோ கயிலாய நாதனை!..

கண்டேன்.. அவர் திருப்பாதம்!.. கண்டறியாதன கண்டேன்!..

நீர் கண்டதை எமக்கும் காட்ட இயலுமோ!?..

மனத்தகத்தான் தலைமேலான் வாக்கினுள்ளான்
வாயாரத் தன்னடியே பாடுந் தொண்டர்
இனத்தகத்தான் இமையவர்தம் சிரத்தின் மேலான்
ஏழண்டத் தப்பாலான் இப்பாற் செம்பொன்
புனத்தகத்தான் நறுங்கொன்றைப் போதினுள்ளான்
பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றினுள்ளான்
கனத்தகத்தான் கயிலாயத்து உச்சியுள்ளான்
காளத்தியான் அவன் என் கண்ணுளானே!..

அடேங்கப்பா!.. பெரிதினும் பெரிதாய் விளக்கம் காட்டுகின்றீர். ஆயினும் அங்கெல்லாம் போய்த் தேடுவது எங்ஙனம்?.. ஆகவே அருகில் உள்ளதாய் காட்டுக!..

பராய்த்துறையான் பழனம் பைஞ்ஞீலியான் காண்..
கடித்தார் கமழ்கொன்றைக் கண்ணியான் காண்!..

இங்கெல்லாம் கண்டிருக்கின்றீரோ!..

கண்டிருக்கின்றேன் ஐயா.. மலையான் மடமங்கை மகிழ்ந்து உடன் இருக்க பழனஞ்சேர் அப்பனைக் கண்டிருக்கின்றேன்.. சீர்வளர் செல்வி ஏலவார் குழலியுடன் பராய்த்துறை மேவிய செல்வனைக் கண்டிருக்கின்றேன்!..

அதுசரி.. பைஞ்ஞீலியானை!..

அவனைத் தான் - தேடிச் சென்று கொண்டிருக்கின்றேன்!..

தேடல் முடிந்திடுமா!..

தேடலும் முடிந்திடுமோ!?.. அதுவும் எம்பெருமானின் சித்தம்!..

பைஞ்ஞீலியை அறிவீரோ - நீர்!..

அறியேனே!.. இவ்வழியே செல்லும்.. பைஞ்ஞீலியை அடைவீர்!.. -  என்று ஆங்கொருவர் அடையாளங் காட்டினார்.. அவ்வழியில் அடியேன் தொடர்ந்து வருகின்றேன்.. ஆகட்டும் ஐயா.. இவ்வளவும் கேட்கின்றீரே.. தாம் யார்?.. தம்மைப் பற்றியும் கூறுகவே!..

யான் என்னைப் பற்றிக் கூறுவது இருக்கட்டும்.. முதலில் நீர் இருந்து பசியாறும். நீர் அருந்திக் களைப்பாறும். மிகுந்த சோர்வுடன் இருக்கின்றீர்...

அல்லலுற்ற ஆருயிர்களின் பசிப்பிணி நீக்குதல் - இதுவோ நும் பணி!..

ஆம்.. இவ்வழிச் செல்லும் அனைத்துயிர்களுக்கும்!.. அது மனிதர் என்னும் நல்லுயிர் தொட்டு பூத்துக் கிடக்கும் புல்லுயிர் வரைக்கும்!..

ஓ!.. இவ்வழி என்பது எங்கே செல்கின்றது?.. - திருநாவுக்கரசர் வினவினார்.

இவ்வழி சென்று முடிவதை இதுவரைக்கும் யாரும் அறிந்திலர். ஆயினும்,
இவ்வழி என்பது செவ்வழி!.. அறிந்திடுக - இதில் செல்வது யார்க்கும் எளிதல்ல!..

அதனால் தான் -  ஆங்காங்கே - முளைத்திருக்கும் முள்ளையும் கல்லையும் நீக்கிச் செல்கின்றேன்!..

செவ்வழி என்பது சிவன் வழி!.. - அந்தணர் புன்னகையுடன் உரைத்தார்.

அப்படியும் ஒரு பொருள் உளதோ!.. அருஞ்சொல் கூறி அருஞ்செயல் ஆற்றுகின்றீர்.. அன்னம் பாலிக்கும் ஐயன் தில்லைச் சிற்றம்பலவனைப் போல!.. நீவிர் வாழ்க!.. நின் மனையாள் வாழ்க!.. மக்கள் சுற்றம் மாடு மனை மங்கலங்கள் யாவும் வாழ்க.. வாழ்க!..


தலைவாழையிலையில் பாலிக்கப்பட்ட தயிர் சோற்றைக் கையிலெடுத்து வணங்கி முகமன் கூறியவாறு உண்டார் பெரியவர்..

அவர் உண்பதைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் அந்தணர்.

தாமரைத் தடாகத்தில் சேந்திய குளிர்ந்த நீர்.. அருந்தி மகிழும்!..

ஆகட்டும் ஐயனே!..

இதோ செங்கீரை.. உப்பிலிட்ட மாவடு!..

ஆகா.. அமிர்தம்.. அமிர்தம்.. இந்த அன்னத்தை ஆக்கிக் கொடுத்தனளே - உம் இல்லக்கிழத்தி!.. அவள் நித்ய சுமங்கலி - வடு வகிர்கண்ணியாக வாழ வேணும்!..

இன்னும் உண்ணும்.. உவப்புடன் உண்ணும்!..

ஐயா.. தாம் யாரோ.. எவரோ.. உண்ணீர்.. உண்ணீர் என உவந்து ஊட்டுகின்றீர். இன்முகங்காட்டி உப்பிடுகின்றீர்!.. உலகில் உப்பை முதலில் அறிந்தவன் தமிழன்!.. கடலைக் கட்டி ஆண்டவன் தமிழன்!.. உப்பிட்டவரை உள்ளளவும் நினை - என்று மொழிந்தவன் தமிழன்!.. யான் உம்மை உள்ளளவும் மறவேன்!..

அதனால்தான், எம்மை - 
ஆரியன் கண்டாய்!.. தமிழன் கண்டாய்!.. 
முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்!.. 
- என்று திருமறைக்காட்டில் அடையாளங் காட்டினீரோ!..

ஆ!.. அது உமக்கு எப்படித் தெரியும்?.. அங்ஙனமாயின்.. நீர்!?..  - திகைத்தார்.

கையில் எடுத்த கவளம் அப்படியே நின்றது.. பசியுந்தாகமும் பறந்து போயின.

புன்னகை பூத்த திருமுகத்துடன் பொலிந்த அந்தணர் தன்னுரு கரந்தார்..

தேவ துந்துபிகள் முழங்கின.. வானிலிருந்து பூமாரி பொழிந்தது..
எட்டுத் திக்கிலும் சிவகண வாத்தியங்கள் அதிர்ந்தன..

திருநாவுக்கரசரின் வினாவுக்கு விடை - விடை வாகனத்தின் மீது பொலிந்தது..


அம்மையும் அப்பனும்!.. அருகே ஐங்கரனும் கந்தக் கடம்பனும் திகழ்ந்தனர்.

வெள்ளியங்கிரியைப் போல் ஒளிர்ந்த ஆனந்த நந்தி -
கழுத்து மணிகள் குலுங்க அப்படியும் இப்படியுமாக நடம் பயின்றது..

திருநாவுக்கரசரே!.. நிலைத்த புகழுடன் நீடூழி வாழ்க!...

எல்லாஞ் சிவன் என நின்ற எம்பெருமானே!.. என்னை ஆளுடைய கோவே!.. என் பொருட்டு சோறும் நீரும் தாங்கி வந்தனையே!.. எளிமையை என்ன என்று சொல்லுவேன்!.. வண்டார்குழலி ஒரு பாகமாக வந்து வாடிய வாட்டம் தவிர்த்த வள்ளலே!.. நின்னையும் மறந்து உய்வனோ!..

தண்டனிட்டு வணங்கினார்- திருநாவுக்கரசர்..

மாதர்பிறைக் கண்ணியானை - மலையான் மகளொடும் கண்ட ஆனந்தம் அவருக்குள் பொங்கியது.

மனம் ஆறாது - கண்ணீர் வழிந்தது.. வலஞ்செய்து வணங்கினார்.

வடிவேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும்
வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றும்..

ஆணாகிப் பெண்ணாய வடிவு தோன்றும்
அடியவர்கட்கு ஆரமுதம் ஆகித் தோன்றும்..

படைமலிந்த மழுவாளும் மானுந்தோன்றும்
பன்னிரண்டு கண்ணுடைய பிள்ளை தோன்றும்..

ஆரொருவர் உள்குவார் உள்ளத் துள்ளே
அவ்வுருவாய் நிற்கின்ற அருளுந் தோன்றும்..

வாருருவப் பூண்முலைநன் மங்கைதன்னை
மகிழ்தொருபால் வைத்துகந்த வடிவுந்தோன்றும்..

- என்று, பரமனையும் பரமேஸ்வரியையும் ஐங்கரனையும் ஆறுமுகனையும் பலவாறு பரவித் தொழுது போற்றினார்.

வான் நின்ற வள்ளல் - வழித்துணையாகி - வாஞ்சையுடன் சோறும் நீரும் கொடுத்து வாட்டம் தீர்த்தருளிய திருவிளையாடலை எண்ணி - கசிந்து உருகினார்..

கண்ணெதிரில் பேரொளிப் பிழம்பாகத் திகழ்ந்த - திருப்பைஞ்ஞீலி திருக்கோயிலினுள் புகுந்து அம்மையப்பனைப் போற்றி வணங்கி இன்புற்றார்.


திருத்தலம் - திருப்பைஞ்ஞீலி

இறைவன் - வாழைவன நாதன் 
இறைவி - விசாலாட்சி


தலவிருட்சம் - வாழை (ஞீலி)
தீர்த்தம் - அப்பர் தீர்த்தம்.

காருலா மலர்க் கொன்றையந் தாரினன்
வாருலா முலை மங்கையோர் பங்கினன்
தேருலாம் பொழில் சூழ்ந்த பைஞ்ஞீயெம்
ஆர்கிலா அமுதை அடைந்து உய்ம்மினே!.. (5/41)
-: அப்பர் பெருமான் :-

திருப்பைஞ்ஞீலியில் - அப்பர் பெருமானுக்கு சோறும் நீரும் அளித்த வைபவம் - சித்திரை மாதம் அவிட்ட நட்சத்திரத்தன்று நிகழ்கின்றது.

அப்பர் பெருமானின் பெருமை அளவிடற்கரியது.

உழவாரப் படை கொண்டு திருப்பணி செய்தவர் அவர்.

புறச்சமயம் சென்று திரும்பியவர். அதனால் விளைந்த இன்னல்களைப் பொறுமையுடன் ஏற்றுக் கொண்டவர்.

ஆருயிர்களிடத்து அன்பில்லாத ஆன்மீகத்தை - ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இடித்துரைத்த உத்தமர்.

மக்கட்தொண்டு இயற்றிய புண்ணியர். 
தமது திருவாக்கினால் - மக்களை நெறிப்படுத்தியவர்.

திருக்கயிலாயக் காட்சியினை - திருஐயாற்றில் கண்டவர்.


திருப்பூந்துருத்தி, திருக்கடவூர், திருவீழிமிழலை, திருஆரூர், திருமறைக்காடு - எனும் தலங்களில் திருஞானசம்பந்தப் பெருமானுடன் இணைந்து வழிபட்டவர். 

பஞ்சமுற்ற காலத்தில் மக்களின் பசித் துயர் நீக்கியவர்.
மக்கள் பணியே மகேசன் பணி!.. - என்பதை மண்ணுலகிற்கு உணர்த்தியவர்.

திருநாவுக்கரசர் - சித்திரைச் சதய நாளில் 
திருப்புகலூரில் சிவபெருமானோடு இரண்டறக் கலந்தார்.

இன்று சித்திரை சதயம். திருநாவுக்கரசர் குருபூஜை.

அப்பர் பெருமான் காட்டியருளிய வழியில் நின்று 
இயன்ற மட்டும் ஆருயிர்களிடத்து அன்பு காட்டி
சிவநெறி பேணுவோம்!..

அப்பர் பெருமான் திருவடிகள் போற்றி..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
திருச்சிற்றம்பலம்
* * *

12 கருத்துகள்:

  1. அப்பர் பெருமான் குறித்து அறியத்தந்தீர்கள் ஐயா நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  2. அப்பர் பற்றிய விரிவான விளக்கவுரைக்கு நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  3. அப்பர் காட்டிய வழியில் அன்பு காட்டுவோம்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. திருநாவுக்கரசர் அனைத்திற்கும் அரசர்...! சிறப்பான பகிர்வு ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  5. இறைவன் மனித உருவில் எனும் போது, அது அப்பர் தானே அவர் காட்டிய அன்பு வழியில் நடப்போம்.அருமையான பகிர்வு. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சியும் நன்றியும்..

      நீக்கு
  6. அப்பர் நாவுக்கரசரைப் பற்றி ஏற்கனவெ படித்திருந்தாலும் தங்கல் மொழி நடையில் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..