நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மே 26, 2015

சதுரகிரி

சிவகிரி எனவும் சித்தர்களின் கிரி எனவும் புகழப்படுவது -

சதுரகிரி !..

பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ள திருத்தலம்.

மனிதர்களின் சிற்றறிவுக்கு எட்டாத ஆயிரக்கணக்கான ரகசியங்கள் சதுரகிரி மலைக்காட்டினுள் பொதிந்து கிடக்கின்றன.

மனிதனின் காலடித் தடம் பதியாத வனப்பகுதிகள் இன்னும் அங்கே உயிர்ப்புடன் விளங்குகின்றன.


யாரொருவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காத மனத்தினராய் - 
வேற்று மனிதர்களிடமிருந்து தம்மை ஒளித்துக் கொண்டு -
ஏதோ ஒரு நோக்கத்துடன் எவ்வுயிர்க்கும் இன்னல் விளைவிக்காத தன்மையராக - அங்கே பற்பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

சதுரகிரியின் அடர் வனத்தின் இருள் முடுக்குகளிலும் நெடிய மலைக் குகையின் இடுக்குகளிலும் - தம்மை இன்னும் மேல்நிலைக்கு உயர்த்திக் கொள்ளத் தவமிருக்கின்றனர்

இவர்களைத் தான் - சித்தர்கள் என்று குறிப்பிடுகின்றனர்.

துணிச்சலுடன் - அடர்ந்த மலைப்பகுதிக்குள் புகுவோருள் சிலர் - அத்தகைய சித்த புருஷர்களைத் தரிசித்திருக்கின்றனர்.

அவர்களுள்ளும் - சித்தர்களால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் சிலர்..

சித்தர்களால் எச்சரித்து அனுப்பப்பட்டவர்கள் பலர்..

சித்தர் பெருமக்கள் - கடைவிழியால் நம்மைப் பார்க்க மாட்டார்களா!.. 
வாழ்வின் சுக சௌபாக்கியங்கள் எல்லாம் நமக்கு வழங்க மாட்டார்களா!..

சித்தர்களால் வழிபடப்படும் சிவலிங்கத் திருமேனிகளைத் தரிசித்தால் - நம்முடைய பாவ மூட்டைகள் தொலையாதா!..

நாளும் பொழுதும் நோய்நொடி இன்றி - வாட்டும் வறுமை இன்றிக் கழியாதா!..  

- என்ற ஆசைகளுடன் மக்கள் நாளுக்கு நாள் மலையேறுகின்றனர்.


முப்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் - அமாவாசை பௌர்ணமியில் மட்டுமே மலையேறினர்.. 

அதிலும் குறிப்பாக ஆடி மற்றும் தை அமாவாசை தினங்கள் பிரசித்தமானவை.

ஆனால் இப்போதோ ஒவ்வொரு நாளும் சதுரகிரி மலைக்காட்டுக்குள் நிம்மதி தேடி ஜனங்கள் அலை பாய்கின்றனர். 

பொருள் பொதிந்த புனித மலை -
கடந்த பத்தாண்டுகளில் பொழுதுபோக்கு மலையாக மாறியிருக்கின்றது.

கடந்த வைகாசி அமாவாசை (17/5 ) தினத்தன்று சதுரகிரி மலையில் பெய்த கடும் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் - எட்டு பேர் உயிரிழந்தது வேதனையான ஒன்று..

சதுரகிரி மலைப்பயணம் ஆபத்தான ஒன்று என்பது மலையேறிச் செல்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

அன்றைய தினம் மழை பெய்து கொண்டிருந்த சூழ்நிலையில் ஐந்தாயிரம் பேருக்கு மேல் மலையேறியிருக்கின்றனர்.

பகல் ஒரு மணியளவில் சதுரகிரி மலை உச்சியில் பெய்த கடும் மழையால் மலைச் சரிவுகளில் நீர்ப் பெருக்கு ஏற்பட்டு சிற்றோடைகள் அனைத்திலும்  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது..

மலையில் பலாவடி கருப்பசாமி கோயில் அத்தியூத்து எனப்படும் சங்கிலிப் பாறை மற்றும் அடிவாரமாகிய தாணிப்பாறை பகுதிகளின் வழிநடை ஓடைகள் வெள்ளக்காடாகின.

இங்கே குளித்துக் கொண்டிருந்தவர்கள் நீரின் வேகத்தால் இழுத்துச் செல்லப்பட்டனர்.

இயற்கையை எதிர்கொள்ள இயலாது என்றாலும் -
அறிவிக்கப்பட்ட எச்சரிக்கையை - மக்கள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

ஆனாலும் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறைகள் எடுக்காததே - இத்தகைய உயிரிழப்புகளுக்குக் காரணம் என்கின்றார்கள்..

அடர்ந்த வனத்தினுள் அகலம் குறைந்த தடத்தில் பயணிக்கும் ஆயிரக் கணக்கான மக்களுக்கும் அரசு தான் பாதுகாப்பு தரவேண்டும் என்பது செய்தி!..

மலையடிவாரத்திலிருந்து கோயில் வரைக்கும் உள்ள உத்தேசமான ஒன்பது கி.மீ., தூரம் முழுதும் - குறுகலான வழித் தடமே!..

இத்தடம் ஆங்காங்கே குறுகலாகவும் சில இடங்களில் மிகக் குறுகலாகவும் உள்ளது என்கின்றனர்.

பள்ளத்தாக்கினை ஒட்டியுள்ள மலைச்சரிவுகளில் வெட்டுப் பாறைகளும் வழித்தடமே!..

இந்தப் பாதையை பாதுகாப்புள்ளதாக மாற்றுவதற்கு அறநிலையத்துறையும் வனத்துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை என்கின்றது ஒரு நாளிதழ்!..

வெட்டவெளியில் கொட்டும் மழையில் - ஏறவும் முடியாமல் இறங்கவும் முடியாமல் நனைந்து கொண்டே நிற்கின்றார்கள் என்றும்,

நீர் வழிந்தோடும் ஓடைகளைக் கடக்க முடியாமல் தவிக்கின்றார்கள் என்றும்,

செய்தியறிந்த பின் தீயணைப்புத் துறையினர் வந்து மீட்கின்றார்கள் என்றும் - அந்த நாளிதழில் செய்தி!..

மக்களை எச்சரித்துக் கட்டுப்படுத்துவதற்கு போதுமான அளவில் காவல் துறையினர் அங்கிருப்பதில்லை. பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்றும்,

சிற்றோடைகளின் குறுக்காக பாலங்களும் மலைப்பாதைகளின் ஊடாக கொட்டகைகளும் வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன.


மழைக் காலத்தில் - ஏற்படும் சோக நிகழ்வுகள் புதிதல்ல என்றாலும் - கைக் குழந்தைகளுடன் பெண்களும் ஆண்களும் ஆபத்தான மலைச்சரிவில் ஏன் ஏறிச் செல்லவேண்டும்!?..

கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல் 
ஒவ்வொரு முறையும் தமக்கு சேதி சொல்ல வேண்டும் என்கின்றனர்..

மலையேறுபவர்கள் - ஆர்வக் கோளாறால் செய்யும் வேலைகளை - பாபநாசம் மலையிலும் குற்றால மலையிலும் சபரிமலையிலும் கண்ணாரக்  கண்டிருக்கின்றேன்.

மழை நேரத்தில் இடுக்கான அருவிகளில் தன்னிச்சையாகக் குளிக்க முற்படும் மக்களை என்ன என்று சொல்வது!?.



சாதாரண நாட்களில் வழித்தடம்..  மழைக்காலங்களில் அதுவே சிற்றோடை..

சபரிமலைப் பயணத்தில் பெருவழிப் பாதையும் இப்படியே!.. பம்பையிலிருந்து சந்நிதானம் செல்லும் வழியும் இப்படியே!..

என்ன ஒரு வித்தியாசம் என்றால் - சபரிமலையில் அருவிகள் கிடையாது.

ஆனாலும் - மலைச்சரிவுகளில் இறங்கி சுனைகளைக் கண்டறிந்து தண்ணீர் கொண்டு வருபவர்களும் உண்டு. 

ஆபத்தானது அழுதா நதிப் பள்ளம் மட்டுமே.. 

எந்த நேரத்தில் காட்டாற்று வெள்ளம் வரும் என யாருக்கும் தெரியாது!..

மலைப் பாதை முழுதும் களிமண் பரப்பியதைப் போலிருக்கும். 

காலமல்லாத காலத்தில் மழை என்றால் - கொட்டும் மழையில் நனைந்தபடி அப்படியே நிற்க வேண்டும். அதுவே பாதுகாப்பு!..

மழை நின்ற பிறகும் உடனடியாக மலை ஏறமுடியாது. 

வழுக்கியடித்தால் - ஒரு ஆளோடு அல்லாமல் பலரும் நிலை குலைந்து சரிவுகளில் விழ வேண்டியிருக்கும்.

அழுதா நதிக்கரையிலிருந்து பம்பை ஆறு வரையிலான பெருவழி எனும் பெரிய பாதை முழுதும் ஆபத்தானது.

அங்கெல்லாம் -  கொட்டகை போடு என்றோ, 
மண்டபம் கட்டு என்றோ - யாரும் கேட்கவில்லை..

பலாவடி ஸ்ரீகருப்பசாமி திருக்கோயில்
சதுரகிரியில் பலாவடி கருப்பசாமி கோயில் சிற்றோடையினுள்ளே தான் அமைந்திருக்கின்றது. நீரில் நின்றபடிதான் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

திடீரென மழை பெய்தால் - தெய்வம் மட்டுமே துணை!..

இத்தகைய சிற்றோடைகள் மீது பாலங்கள் வேண்டும் என்பது சரி... 

ஆங்காங்கே தடையாக இருக்கும் பெரும் பாறைகளைத் தகர்க்க வேண்டும் எனவும் கேட்கின்றார்கள்..


மலையின் ஊடாக வழித்தடத்தில் உள்ளது - படிவெட்டிப் பாறை!..

ஒருபுறம் மிகவும் குறுகலான படிவெட்டிப் பாறையின் மறுபுறம் ஆபத்தான சரிவு.. அபாயகரமான பள்ளத்தாக்கு!..

சாதாரண நாட்களிலேயே மக்கள் விழுந்து அடிபடும் இடம் - படிவெட்டிப் பாறை..

இந்தப் பாறை - மழை பெய்யும் போது எப்படியிருக்கும்!?..

மழைநேரத்தில் ஆற்றுக்குள் வழுக்கி விழுந்து மேலே ஏறமுடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றார்கள் - இவ்விடத்தில்!..

இந்த படிவெட்டிப் பாறையை உடைத்து சமப்படுத்தி - மக்கள் பள்ளத்தாக்கில் விழுந்து விடாமல் இருக்க கம்பித் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும் என்பதும் கோரிக்கைகளுள் ஒன்று..

மூச்சுத் திணறல், ரத்தக் கொதிப்பு, நெஞ்சு வலி - போன்ற உபாதைகளை உடையவர்களுக்கு ஏற்றதல்ல - சதுரகிரி மலைப்பயணம் என்றாலும் - 

மூலிகைக் காற்றை நம்பி வந்து ஆபத்தில் சிக்கிக் கொள்பவர்களும் உண்டு..

இப்படியும் சில உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கின்றன என்கின்றார்கள்..

திருவிழா நாட்கள் அல்லாத சமயங்களில் - இங்கு சுற்றுலா வருகின்றவர்கள் அருவிக் கரைகளில் குடித்து விட்டு அத்து மீறுவதாக கூடுதல் செய்தி!..

இதன்படி - அடிவாரத்திலும் வழித்தடத்திலும் உச்சியிலும், 

அவசர சிகிச்சைக்கு மருத்துவ மையங்கள் தேவையாகின்றன.

மூலிகை வனத்தில் அலைய முற்படும் குடிகாரர்களை அடித்து விரட்ட புறக்காவல் நிலையம் அவசியமே!..  

ஆயினும் -  

மலையேறும் பக்தர்களுக்கு அடிவாரத்திலேயே பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அறிவுரை வழங்குவதாக வனத்துறையிரும் கூறுகின்றனர்.


சதுரகிரி - மருத்துவ மலை. வினைகளும் வியாதிகளும் தீர்கின்றன என்கின்றனர்.

மலை நெடுக மூலிகை வனம். சிற்றோடை எல்லாம் தீர்த்தம் எனும் சூழ்நிலையில் - 

மலையேறுபவர்கள் பலரும் காலணிகளுடன்!.. 

இது தான் - மருத்துவ மலைக்கு மக்கள் தரும் மரியாதையா!?..

பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் பக்தர்கள் கூடியது - 
அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் மட்டுமே!..

ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது.

சனி ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்கள் என்றால் -

கட்டு மூட்டையை!.. புறப்படு சதுரகிரிக்கு!.. - என்று ஆயிரக்கணக்கில் கூட்டம் திரள்கின்றது..

இத்தனை ஜனங்கள் கூடும் சதுரகிரியின் மலைப் பாதைகளில் - பாதுகாப்பான கழிவறை வசதிகள் ஏதும் இல்லை.


இந்த வருடம் ஜனவரியில் - சதுரகிரி மேம்பாட்டுப் பணிக்கு என வெளியான அரசாணையில் - 

மலைப் பாறைகளைத் தகர்த்து விட்டு படிக்கட்டுகள் அமைக்கவும் நீரோடும் ஓடைகளின் குறுக்கே பாலங்கள் கட்டவும் கழிப்பறைகள் குளியலறைகள் அமைக்கவும் பலருக்கும் பயன்படும் விதமாக விடுதிகள் எழுப்பவும் - திட்ட வரைவுகள் உள்ளன என்கின்றார்கள்.

பதிவில் இடம் பெற்றுள்ள படங்கள் இணையத்திலிருந்து பெற்றவை.

எளியேனுக்கு சதுரகிரியைத் தரிசிக்கும் வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை.
ஆயினும், சில தினங்களாக - சதுரகிரியை ஆத்மார்த்தமாக தரிசித்திருந்தேன்.


சித்தர்களின் துணை கொண்டு மன்னர்கள் எழுப்பிய திருக்கோயில்களும்
சித்தர்களே எழுப்பிய திருக்கோயில்களும் - எத்தனை எத்தனையோ தமிழகத்தில்!..

ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு நியதிகள்!..

கடல் கொஞ்சும் ராமேஸ்வரத் தீவுக்குள் ஒரு பெருங்கோயில்!..
மருத நிலமாகிய தஞ்சையம்பதியில் மலையென ஒரு பெருங்கோயில்!..

மலைகளைக் குடைந்து திருப்பரங்குன்றம் முதலான பெருங்கோயில்கள்!..
மலைகளின் உச்சியில் பழனி திருப்பதி முதலான பெருங்கோயில்கள்!..

இவையெல்லாவற்றையும் எழுப்பியவர்கள் தமிழ்த் திருநாட்டைக் கட்டி ஆண்ட மாமன்னர்கள்!..

அவர்கள் அறிந்திருக்க மாட்டார்களா - சதுரகிரி மலையைப் பற்றி!?..
அவர்கள் அறிந்திருக்க மாட்டார்களா - சந்தன மகாலிங்கத்தைப் பற்றி!?..

அந்த மாமலையிலிருந்து ஒரு புல்லை அகற்றுவதற்கும் அஞ்சினர்..
அதனால்தான் - 
அங்கே ஒரு புள்ளியையும் பொறிக்காமல் போற்றி நின்றனர்.

ஆனால் - நாம்!?..

மலைப்பாறைகளைத் தகர்க்கவும் மரங்களைப் பெயர்க்கவும் முயல்கின்றோம்!..


சிவகிரியாகத் திகழ்வது - சதுரகிரி!.. 
இதன் மகத்துவத்தினை முழுமையாக அறிந்தவர் எவருமேயில்லை!..

மக்களை வழிப்படுத்துவதில் மகரிஷிகளின் தன்மை வேறு!..
சித்த புருஷர்களின் தன்மை வேறு!..

சித்தர்களுள் தலையானவர்களாகக் கருதப்படும் அகத்தியர், போகர், காலாங்கி நாதர், கோரக்கர், கொங்கணர், கருவூரார் போன்ற புண்ணியர்கள் மக்களுக்காக வடித்துக்கொடுத்த தெய்வத்திருமேனிகள் திருக்கோயில்களில் திகழ்ந்திருக்க, 

சித்தர் சிவவாக்கியரின் திருப்பாடல்கள் சிந்திக்கத்தக்கன. 

இந்தவூரில் இல்லையென்று எங்குநாடி ஓடுறீர்..
அந்தவூரில் ஈசனும் அமர்ந்து வாழ்வதெங்ஙனே?..

- என்று கேள்வி கேட்கும் சிவவாக்கியர் - சிவபெருமானையும் இராம பிரானையும் புகழ்ந்து பாடியவர்.

நட்டகல்லைச் சுற்றியே நாலுபுஷ்பஞ் சாற்றியே
சுற்றிவந்து மொணமொணென்று சொல்லும் மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ!..

- என்று தெய்வ தத்துவத்தை விளக்கிய சிவவாக்கியர் -

படைத்தும் காத்தும் அழித்தும் விளங்கும் பரம்பொருளைக் கல்லிலே காண முயற்சிக்காமல் - உள்ளிருக்கும் உணர்வினில் காண முயலுங்கள்!..

- என, உண்மையான சிவ தரிசனத்தை நமக்கு அறிவுறுத்துகின்றார்.

''தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்!..'' - என்பது திருமூலர் திருவாக்கு. 

''மனத்தகத்தான் தலைமேலான் வாக்கினுள்ளான்!..'' 

- என்று உருகிப் போற்றும் அப்பர் பெருமான் - 

கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென்
கொங்கு தண்குமரித் துறை ஆடிலென்
ஓங்கு மாகடல் ஓதநீர் ஆடிலென்
எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே!..

- என்றும் தெளிவு படுத்துகின்றார்.

தொண்டு செய்து நீங்களும் சூழவோடி மாள்கிறீர்
உண்டுழன்று நும்முளே உற்றுணர்ந்து பார்க்கிலீர்
வண்டுலாவு சோலைசூழ் வாழும் எங்கள் நாதனும்
பண்டுபோல நம்முளே பகுத்திருப்பன் ஈசனே!..
-: சிவவாக்கியர் :-

உண்மையை உணர்ந்து உய்வடைவோமாக!..
எல்லாம் வல்ல சிவப்பரம்பொருள் அந்நிலையை அருள்வதாக!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்  
* * *

25 கருத்துகள்:

  1. சில கருத்துக்கள் ஒன்றானாலும் சொல்பவர் வேறானால் மதிப்பீடு கிடைப்பதில்லை. சிலர் மலை ஏறுவது ஒரு த்ரில்லுக்காக-ஆர்வக் கோளாறால், சிலர் ஏறுவது நம்பிக்கையால் உந்தப் பட்டு.. அங்கு கோவிலும் தங்க இடமும் கட்டியோரை பற்றியும் எத்தனை இடையூறுகளை சந்தித்து இருப்பார்கள் என்பது பற்றியும் எண்ணம் எழுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      பெரும் சிரமத்துடனும் தளராத மனத்துடனும் - வழுக்குப் பாறைகளில் ஏறி - அங்கே கோயிலை எழுப்பியவர்களுக்கு என்றும் நமது வணக்கங்கள் உரியன!..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. யாரொவரிடமிருந்து எதையும் எதிர்பார்க்காத மனத்தினராய்,
    எவ்வுயிர்க்கும் இன்னல் விளைவிக்காத தன்மையினராய்
    ஆம் இவர்கள் தான் தெய்வங்கள்.
    அரிய புகைப்படங்கள். அருமை.நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. சதுரகிரி மலை பற்றியும் சபரிமலை சில ஆபத்தான இடங்கள் பற்றியும் மக்களின் மனோபாவம்..பற்றியும் அழகாய் எடுத்துரைத்திருக்கிறீர்கள் ஐயா.நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      அவர்கள் பக்தர்களாக ஆகிவிட்டால் மனோபாவமும் எளிதில் மாறிவிடும்..

      ஆனால் - இன்னும் மக்களாகவே இருக்கின்றார்கள்.. சமயங்களில் மாக்களாக ஆகி விபத்துகளுக்கு வழிவகுப்பதும் அவர்களே!..

      சபரிமலையில் - இவர்கள் செய்வதைப் பற்றி தனிப் பதிவே எழுதலாம்!..

      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. சதுரகிரியைப் பற்றிய நிறைய அதிசயிக்கும் விடயங்கள் அருமை நண்பரே...
    பக்தி என்ற வட்டத்துக்குள் வரும்போது மற்றவைகள் கண்ணுக்கு தெரிவதில்லைதான் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      பக்தி எனும் வட்டத்திற்குள் வந்து விட்டால் - இன்பம், துன்பம்- நன்மை தீமை - என எல்லாமும் கண்ணுக்குத் தெரியும்.. தெரிய வேண்டும்!..

      தங்கள் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. "சதுர கிரி" சத்திய செய்திகளை சத்தமிட்டு சொன்னமைக்கு
    உமது பதிவை முத்தமிட்டு பாராட்டுகிறோம் அருள்நெறி அய்யா அவர்களே!
    சித்தர்களின் வாழ்வியல் தத்துவம் அறிதலே அருளாகும்!
    அதை அள்ளித் தந்தமைக்கு,
    அன்பு நன்றிகள்!
    அவை அடக்கத்துடன்!
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நம்பி..
      சித்தர்களின் வாழ்க்கைத் தத்துவத்தை அறிதலே - உயர்நெறி..
      தங்கள் வருகைக்கும் கவிமயமான கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  6. அறியாச் செய்திகள் பலவற்றை பகிர்ந்துள்ளீர்கள் ஐயா
    சதுரகிரி மலையை மாசுபடுத்திவிடுவார்கள் போலிருக்கிறதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      பக்தி - இயற்கை வளத்தை காப்பாற்றுவதற்கே.. மாசுபடுத்துவது அல்ல!.. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. வனங்களில் இருக்கும் திருத்தலங்களை தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை மிகத் தெளிவாக கூறியுள்ளீர்கள். நானும் சதுரகிரி சென்று வந்தேன். அதைப் பற்றி ஒரு பதிவும் எழுதியுள்ளேன். தங்களுக்கு நேரம் இருந்தால் படிக்கவும்.

    http://senthilmsp.blogspot.com/2015/01/blog-post.html


    தங்கள் தளத்தில் இணைய பலமுறை முயற்சித்தும் என்னால் முடியவில்லை. ஏதோ தொழில்நுட்ப குறை என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் செந்தில்..
      தங்களுக்கு நல்வரவு..
      முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..

      தளத்தில் இணைக எனும் கட்டத்துக்கு அருகில் சிறு சதுரங்கள் இருக்கின்றதல்லவா - அதனைத் திறந்து முயற்சி செய்து பாருங்கள்..

      தங்கள் தளத்திற்கு நாளை வருகின்றேன்.. நன்றி..

      நீக்கு
  8. பல அறியாத (சிரமமான) தகவல்களை அறிந்தேன் ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. நான் பார்க்க விரும்பும், இதுவரை செல்லாத இடங்களில் இதுவும் ஒன்று. அங்கு செல்லும் வாய்ப்பிற்காகக் காத்திருக்கிறேன். தங்கள் பதிவு அந்த ஆர்வத்தை மிகைப்படுத்திவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      சதுரகிரியை தரிசனம் செய்யவேண்டும் - என, எனக்கும் ஆர்வம் உண்டு.. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  10. தங்கள் ஆதங்கம் சரியானதே. மனிதர்கள் எளிதில் சென்று வருமளவுக்கு சதுரகிரி எளிமைப்படுத்தப்பட்டு விடுமானால், நிச்சயம் அதன் புனிதத்தன்மை களங்கப்படும். இந்த ஆன்மிக உண்மையை மக்கள் அங்கீகரிக்கவேண்டுவது மிகவும் அவசியம். - இராந செல்லப்பா

    பதிலளிநீக்கு
  11. தங்கள் ஆதங்கம் சரியானதே. மனிதர்கள் எளிதில் சென்று வருமளவுக்கு சதுரகிரி எளிமைப்படுத்தப்பட்டு விடுமானால், நிச்சயம் அதன் புனிதத்தன்மை களங்கப்படும். இந்த ஆன்மிக உண்மையை மக்கள் அங்கீகரிக்கவேண்டுவது மிகவும் அவசியம். - இராந செல்லப்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு நன்றி..
      மனதில் நிற்கின்றது கருத்துரை.. மகிழ்ச்சி..

      நீக்கு
  12. சதுரகிரி சென்றதுண்டு. ஆனால் எளிமைப்படுத்திவிட்டால் அவ்வள்வுதான் ஐயா! அதன் புனிதமும், இயற்கையும் அழிந்துவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் மேலான கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  13. சதுரகிரி மகாலிங்கம் கோவில் மதுரை மாவட்டம் சாப்டுரை சேர்ந்த திரு.இராஜா என்ற பெரியசாமி அவர்களின் பரம்பரைக்கு சொந்தமானது.இவர்களின் முன்னோர்ககளின் சமாதி தம்பிபட்டியில் உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களுக்கு நல்வரவு..

      தங்கள் வருகையும் மேலதிக செய்தியும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..