நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜனவரி 16, 2015

வாழ்க ஆனினம்

தலை நிமிர்ந்து நின்ற தமிழர்களின் காரியங்கள் பலவும் தகைமையான தத்துவங்களை உள்ளடக்கியதாக விளங்குதற்கு சிறப்பானதொரு சான்று தான்-


தை மாதத்தின் இரண்டாம் நாளில் கொண்டாடப்படும் மாட்டுப் பொங்கல் எனும் திருநாள்.


உழவே தலையானதாகக் கொண்டு வாழ்ந்த போது - தமக்குப் பலவழிகளிலும் உற்ற துணையாக இருந்த கால்நடைச் செல்வங்களைப் போற்றி பாராட்டி மகிழ்ந்தனர் - நம் முன்னோர்

அந்த நன்றி உணர்வின் வெளிப்பாடே - மாட்டுப் பொங்கல்!..

விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட்டு உணர்வுக் கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன்நிற்குமே!.. (5/90)

இறைவனின் தன்மையைக் கூறும் போது - பாலுக்குள் நெய் மறைந்து இருப்பதைப் போல என்று - பாலை முன் வைத்து அப்பர் பெருமான் நமக்கு சுட்டிக் காட்டுகின்றார்.


பால் தரும் பசுக்களை - வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் என்று புகழ்பவள் - கோதை நாச்சியார்.

பசுக்களில் சிறந்தது - தெய்வத்தன்மை வாய்ந்தது என்று போற்றப்படுவது காமதேனு.


காமதேனு சிவவழிபாடு செய்ததாக நிறைய ஊர்களின் தலபுராணம் கூறும்.

அது அல்லாமல் - ஊர்க்காட்டில் மேய்ந்து திரிந்த பசு ஓடிச்சென்று மரத்தடியில் புற்றுக்குள் தானாகப் பால் சொரிந்தது - என்றெல்லாம் வழங்கப்படுகின்றது.

அப்படி பாலைப்பொழியும் போது மேய்ப்பவர் ஓடிச்சென்று மாட்டை அடித்தார். பசு பயந்து மிரண்டதால் போது குளம்பு பட்டு இரத்தம் பீறிட்டது. புற்றிலிருந்து தெய்வத் திருமேனி வெளிப்பட்டது என்றெல்லாம் புராணங்கள் உள்ளன.

திருப்பதியில் பெருமாள் வெளிப்பட்டதும் இப்படியொரு சம்பவத்தில் தான்.

பால் - மங்கலகரமான பொருள்களுள் ஒன்று.

பால் - தொடக்கமும் முடிவும் அதுவே!..

கண்கள் கொண்டு அறிய முடியாதபடிக்கு அதனுள் - தயிர் மோர், வெண்ணெய் நெய் - என மேலும் நான்கு பொருட்கள் ஒளிந்திருக்கின்றன.

பாலை நன்றாகக் காய்ச்சி - உறை ஊற்றிய பின்னரே தயிர்.

தயிரை மத்தினால் - முறுக வாங்கிக் கடைந்தால் - வெண்ணெயும் மோரும்.

வெண்ணெயை உருக்கினால் கிடைத்தது - நெய்.

நெய்யை உருக்கினால் - மிச்சம் என்று எதுவும் இன்றி - பரவெளியில் கலந்து விடுகின்றது.

பாலிலிருந்து நெய் வரைக்குமான இந்தப் பயணம் தேவாரம் முழுதும் பேசப்படுகின்றது.


இத்தகைய பாலைத் தரும் ஜீவன்களுள் முதலிடத்தில் இருப்பது - பசு.

எருமையின் பால் பயன் பாட்டில் இருந்தாலும் அது மந்தமான தன்மையைக் கொடுப்பதால் - மங்கல காரியங்களுக்குப் பயன்படுத்துவதில்லை.

ஆயினும், பொறுமையின் அருமையைக் குறிப்பது - எருமை!..

பசும்பாலை விடவும் அதிக கொழுப்பு உடையது எருமைப் பால்.

ஆகும் வரை உபயோகப்படுத்திக் கொண்டு - எருமையை சற்றே புறந்தள்ளி வைத்ததால் - அந்தக் காலத்திலேயே எருமைகளின் மீது அன்பு கொண்டாள் - கோதை நாச்சியார்.

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண் - என  எட்டாவது திருப்பாடலிலும்,

கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும்..

- என்று பன்னிரண்டாவது பாடலிலும் எருமையின் அருமையைப் பேசினாள்.


எனத்தோறூழி அடியாரேத்த இமையோர் பெருமானார்
நினைத்துத் தொழுவார் பாவந் தீர்க்கும் நிமலர் உறைகோயில்
கனைத்தமேதி காணாதுஆயன் கைம்மேற் குழலூத
அனைத்துஞ் சென்று திரளும்சாரல் அண்ணாமலையாரே!.. (1/69)

அங்கும் இங்கும் கனைத்தபடி மேய்ந்து கொண்டிருந்த எருமைகளைக் காண வில்லையே - எனக் கருதிய ஆயன் - தனது கையிலிருந்த குழலை ஊதவும் - திடுதிடு.. - என ஓடிவந்து அடிவாரத்தில் ஒன்று சேரும் சிறப்பினை உடையது அண்ணாமலை என்று திருஞானசம்பந்தர் பரவுகின்றார்.

மேலும் -

தென்னம்பழம் வீழ்ந்த சத்தத்தைக் கேட்டு அஞ்சிய இளங்கன்றாகிய எருமை - திடு.. திடு... எனப் பாய்ந்து செந்நெற்கதிர்கள் விளைந்திருக்கும் வயல்களின் வழியாக ஓடி - தாமரைத் தடாகத்தினுள் புகுந்து கலக்கியடிக்கும் அழகை -

திருஐயாற்றில் நமக்குக் காட்டுகின்றார் - ஞானசம்பந்தப்பெருமான்.

அஞ்சாதே கயிலாய மலையெடுத்த அரக்கர்கோன் தலைகள் பத்தும்
மஞ்சாடு தோள் நெரிய அடர்த்தவனுக்கு அருள் புரிந்த மைந்தர்கோயில்
இஞ்சாயல் இளங்தெங்கின் பழம் வீழ இளமேதி இரிந்தங்கோடிச்
செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல வயல் படியும் திருஐயாறே!.. (1/130)

இப்படி - இன்னும் பல அழகிய கோலங்கள் பழந்தமிழ் நூல்களில் காணக் கிடைக்கின்றன.


கோளறு திருப்பதிகத்தின் எட்டாவது திருப்பாடலில் -

வேள்பட விழி செய்தன்று விடைமேலிருந்து
மடவாள் தன்னோடும் உடனாய்..

- என்று கூறும் ஞானசம்பந்தப்பெருமான் - ஒன்பதாவது திருப்பாடலில்

பலபல வேடமாகும் பரன்நாரி பாகன்
பசுஏறும் எங்கள் பரமன்..

- என்று குறிக்கின்றார்.

ஈசன் எம்பெருமானுக்கு நந்தியே வாகனம்!..  ஆயினும்,

ஒளி நீறணிந்து உமையோடு வெள்ளை விடை மேல் வீற்றிருந்து பவனி வரும் எம்பெருமான் பசுவாகிய காமதேனுவையும் வாகனமாகக் கொள்கின்றான்!..

- என்றே ஆன்றோர் சுட்டிக் காட்டுவர்.

பசு என்பது ஜீவாத்மா!.. அது செந்நெறியாகிய சிவநெறியில் செல்லும் போது சிவபெருமான் ஆரோகணிக்கும் விடை வாகனமாகின்றது.

இதைத்தான் - மனமே முருகனின் மயில் வாகனம்!..  - என்றார் கவியரசர்.


சிவபெருமானின் வாகனமாகிய காளை மிகப்பெரிய பெருமைகளை உடையது.

காளையை அறத்தின் மறுவடிவம் என்பர் - சான்றோர்.

மாடு என நாம் குறிக்கும் சொல் - செல்வம் எனும் பொருளையும் தருகின்றது.

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றையவை. (400)

என்பது ஐயன் திருவள்ளுவரின் அருள்வாக்கு.

அந்த காலத்தில் ஒரு அரசன் - தன்னுடைய பகையாளியுடன் பொருதும் முன் அவனது ஆநிரைகளைக் கவர்ந்து வந்ததும் - போர்ப் பறை முழங்கும்.

மகா பாரதத்திலும் - விராட நாட்டில் மறைந்திருக்கும் பஞ்ச பாண்டவர்களை வெளிக்கொணர - துரியோதனாதிகள் - அந்நாட்டின் பசுக்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.


ஸ்ரீ கிருஷ்ணனின் இளம் பருவம் மாட்டு மந்தையிலேயே கழிந்தது.

இத்தகைய மாடு காலை மடக்கிப் படுத்திருக்கும்போது - அதன் தோற்றம்

 '' ங '' -  என விளங்குவதாக அப்பர் பெருமான் குறித்து அருள்கின்றார்.


 '' ங '' - எனும் எழுத்தை காளை வாகனமாகப் பாவித்து - காளையைக் கொடியில் உடைய பெருமான் என, அப்பர் சுவாமிகள் புகழ்ந்துரைக்கின்றார்.

ஙகர வெல்கொடியா னொடு நன்நெஞ்சே
நுகரநீ உனைக் கொண்டுயப் போக்குறில்
மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்
புகரில் சேவடியே புகலாகுமே!..(5/97)

அப்பர் பெருமானின் - திருக்குறுந்தொகைத் திருப்பாடல் அது!..

மகர கொடியினை உடையவன் மன்மதன்.
அவனைத் தண்டித்தவன் - ஈசன் எம்பெருமான்.

ஈசன் - காளையைக் கொடியாகக் கொண்டு அற்றார்க்கு அருளி நிற்பவன்.

அவன் திருவடியில் கிடக்கும் காளையும் -
அவ்வண்ணமே அருங்குணத்தினை உடையது.

அறத்தின் வடிவாகிய காளையும் அதன் வம்சமும் அற்றார்க்கு உதவி நிற்பன. தம்மை ஆதரிப்பவரை வாழ வைக்கும் தன்மை உடையன.

அதனால் தான் -

தன்னையே தருவதில் வாழைக்கு ஈடு..
சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசுமாடு!..

- என்று கவிஞர் மருதகாசி அவர்கள் பாடல் இயற்றினார்.

இத்தகைய ஆனினங்களிடம் இருந்து பாலைக் கறப்பதுடன் தோலையும் உரித்துக் கொள்கின்றோம். 

உழைப்பை உறிஞ்சிக் கொள்வதும் உதிரச் சேற்றில் தள்ளி - அவற்றின் இறைச்சியையும் உடைமையாக்கிக் கொள்கின்றோம்.



காளை வடிவாகத் திகழும் - '' ங '' - எனும் எழுத்தைக் கொண்டு நல்ல அறிவுரை  வழங்குபவர் ஔவையார்.

ஆத்திசூடியைக் கொண்டே நாம் - நம் குழந்தைகளுக்கு தமிழைக் கற்பித்தோம்.

ஆத்திசூடி, கொன்றை வேந்தன் - வழியாக தமிழைப் பயின்ற ஒரு குழந்தை எக்காலத்திலும் தவறு செய்வதே இல்லை!..

அத்தகைய ஆத்திசூடியில் - '' ஙப் போல் வளை '' - என்று  கூறுகின்றார்.


தமிழ் மொழியில் உயிரெழுத்துக்கள் - 12.  மெய் எழுத்துக்கள் - 18.  உயிர்மெய் எழுத்துக்கள் - 216. ஆய்த எழுத்து - 1 - ஆகக் கூடிய எழுத்துக்கள் 247.

இவற்றுள் -
மெய்யெழுத்தாகிய - ங் ,
உயிர்மெய் எழுத்தாகிய - ங ,
இவை தவிர ங - கர வர்க்கத்தில் வேறு எந்த எழுத்துக்களும் பயன்பாட்டில் இல்லை.

ஆயினும் , ங - கர வர்க்கத்தில் உள்ள மற்ற எழுத்துக்கள் அரிச்சுவடியில் இருப்பதற்குக் காரணமே - இந்த இரண்டு எழுத்துக்கள் தான்!..

இந்த - ங - கரத்தைப் போல மக்களும் இன்னார் - இனியார் எனக் கருதாமல் தம்முடைய சுற்றம் தழுவி வாழ்தல் வேண்டும் என்பதே ஔவையாரின் பேராவல்.

எனவேதான், '' ஙப் போல் வளை '' - என்று ஔவையார் அறிவுறுத்துகின்றார்.

இப்பூவுலகின் எந்த மூலையில் குழந்தை பிறந்தாலும் -
அது எழுப்பும் முதல் ஒலி,  '' ங் '' - என்பதாகும்!..  

இப்படி - '' ங் '' - எனும் ஒலிக் குறிப்பு '' ங '' - என்றாகி காளை எனும் அறத்தின் வடிவினை நினைவூட்டுவதை சிந்தித்தால் - தேனூறும் நம் நெஞ்சிற்குள்!..

இப்பொழுதும் கடும் உழைப்பாளியைச் சொல்லும்போது,
மாடாக உழைக்கின்றான்!.. - என்பதே!..

இதுவே, அவன் வீட்டுக்குத் தலைமகனாக இருந்து விட்டால் -

மாடாக உழைத்து குடும்ப பாரத்தை இழுக்கின்றான்!..

ஆனால், அந்த நிலையில் மாடாக இருந்தாலும் மனிதனாக இருந்தாலும் கடைசிப் புகலிடம் அடிமாடு எனும் வேதனைக்குரிய நிலையே!..


சைவ நெறிகளில் நந்தி எனும் நிலை போற்றுதலுக்குரியது.

அதிகார நந்தி என்பது உயரிய திருக்கோலம்.

அம்பிகைக்கு எப்போதெல்லாம் ஈசன் - ஞான விளக்கம் அளிக்கின்றாரோ - அப்போதெல்லாம் அருகிருக்கும் சிறப்பினை உடையவர் நந்தியம்பெருமான்.

சைவத்தில் - அவரே முதற்குரு!..

நந்தியம்பெருமானின் அனுமதியுடன் தான் சிவ தரிசனம் என்பது ஐதீகம்.

ஊழிக் காலத்தில் - அம்பிகை உட்பட - சகலமும் ஈசன் திருமேனியில் ஒன்றி விடும் போது - ஈசனுடன் தனித்திருப்பவர் நந்தியம்பெருமான் மட்டுமே.

நந்தியம்பெருமானின் இரு கொம்புகளுக்கு இடையே சிவபெருமான் நர்த்தனம் ஆடி ஊழி சங்காரத்தை நிறைவு செய்வதாக ஞான நூல்கள் பேசுகின்றன.

இருபது ஆண்டுகள் - பசுக்களுடன் வாழ்ந்தோம் - நாங்கள்!..

பசுக் கொட்டிலில் - படிப்பு, சாப்பாடு, தூக்கம் என்று வாழ்ந்திருக்கின்றேன்.

இனி அப்படியொரு காலம் வராதா! .. - என்று ஏங்குகின்றது மனம்.


மாட்டுப் பொங்கலன்று அதிகாலையில் மாடு கன்றுகளைக் குளிப்பாட்டி மஞ்சள் பூசி குங்குமம் இட்டு - அருகம்புல், வேப்பிலை, பூளை,  மாந்தளிர், செவ்வந்திப் பூக்கள் கொண்டு கட்டப்பட்ட மாலையுடன் நெட்டி மாலையும் சேர்த்து அணிவிப்போம்.

திருகு கள்ளியை முறித்து வந்து திருஷ்டி கழித்து தொழுவத்தில் கட்டி வைத்து மாலையில் தனியாக பொங்கல் வைத்து காப்பரிசி செய்து தூப தீபாரதனை காட்டி - பசுக்களுக்கும் கன்றுகளுக்கும் திருநீறு பூசி -

கால்நடைச் செல்வங்களின் கால்களில் விழுந்து வணங்குவார் என் தந்தை.

நாங்களும் பசுக்களின் கால்களில் விழுந்து வணங்கி எழுவோம்.

அதற்குள்ளாக பசுக்கள் எல்லாம் - பொங்கல் , காப்பரிசி, பழங்கள், கரும்பு - இவற்றைக் கேட்டு குதித்துக் கொண்டிருக்கும்.

வீட்டிலுள்ள அனைவரும் பசுக்களுக்கும் கன்றுகளுக்கும் ஊட்டி மகிழ்வோம்.

அதன்பிறகு மாடுகளை அவிழ்த்துக் கொண்டு தெருவில் சற்று தூரம் காலாற வலம் வந்த பிறகு - வீட்டு வாசலில் திட்டிக் குழி, உலக்கை இவற்றைத் தாண்டி - வீட்டுக்குள் ஏறியதும் ஆரத்தி எடுக்கப்படும்.

தொழுவத்தில் கட்டி விட்டு - பசுக்களின் முதுகில் தட்டும் போது -
அடுத்த மாட்டுப் பொங்கல் எப்போது என்றிருக்கும்!..

ஹரப்பாவில் கிடைத்த காளை சின்னம்

ஆதி மனிதனோடு நாய்களுக்கு அடுத்ததாக இணங்கியவை ஆநிரைகள்!.

மதுரையில் ஞானசம்பந்தப் பெருமான் சைவத்தை மீட்டெடுக்கும் வேளையில் புனல்வாதத்தின் போது பாடியருளிய திருப்பதிகம் - திருப்பாசுரம் எனப்படுவது.

அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுகலான்!.. (030)

- என்று திருவள்ளுவர் குறித்தாற்போல,

அறவோரை அந்தணராகக் கொண்டு திருப்பதிகம் பாடும்போது -
வாழ்க ஆனினம்!.. - என்று வாழ்த்துகின்றார் - ஞானசம்பந்தப் பெருமான்..

ஆநிரைகள் வாழ்ந்தால் அதனை அண்டியுள்ள மக்களும் நலமுடன் வாழ்வர் என்பது திண்ணம்.

ஆன்றோர்கள் காட்டிய வழியில்
ஆநிரைகளைக் காத்து நிற்போமாக!..

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே!.. (3/54)
திருஞானசம்பந்தர்

சிவாய திருச்சிற்றம்பலம்.
* * *

17 கருத்துகள்:

  1. இன்றைய தினத்திற்கு ஏற்ற அருமையான பதிவு. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      இனிய வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. மிக சுவாரஸ்யமாக இருந்தது வாசிக்க..நானும் 10 வயது வரை மாடுகள் உடன் வளர்ந்தேன் ..
    வாழ்த்துக்கள் அய்யா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அருமையான ஆழமான கருத்துகளுடன் கூடிய விடயங்கள் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      அடுத்த வருடம் தைப் பொங்கல் ஊரில் தான்!..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பாலும் ஆன்மிகத்தத்துவமும்.....நல்ல விளக்கம்.

    மாட்டுப்பொங்கள் அன்று இப்பதிவு ....மகா பொருத்தம்.

    ஆதிமனிதனோடு நாய்களுக்கு அடுத்ததாளிணங்கியவை ஆநிறைகள் //...உண்மைதான் ஐயா. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. ஒவ்வொரு விளக்கமும் அருமை... அற்புதம்... வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. ஒவ்வொரு நாளும் அருமையாய் பதிவு
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. எத்தனை எத்தனை சிறப்பான பதிவுகள். அதுவும் இந்த ஙப்போல் வளைக்கு பல வலைத்தளங்கள் கொடுத்து தாங்களும் மிக அருமையான விளக்கம்....விளக்கங்கள் அனைத்தும் அருமை! இன்னும் ஒருமுறை படிக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      அன்பின் வருகை கண்டு மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கு மிக்க நன்றி..

      நீக்கு
  8. அருமையான பதிவு. திருவிளக்கு வழி பாட்டில் ”பட்டி நிறைய பால் பசுவை தாரும் அம்மா” என்று வரும் வீட்டில் பசு மாடுகள் இருந்தால் செல்வம்.
    ஆநிரைகள் செழித்து வளரட்டும்.
    வயதான மாடுகளை காக்கும் இடங்கள் நிறைய இப்போது வந்து கொண்டு இருக்கிறது.
    வாழ்த்துக்கள் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      திருவிளக்கு வழிபாட்டில் - பட்டி நிறைய பால் பசுவைத் தாரும் அம்மா!.. - என்ற வேண்டுதலை நினைவு கூர்ந்தமைக்கு மகிழ்ச்சி..

      தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு
  9. அன்பின் நம்பி..

    வலைச்சரத்தில் அறிமுக செய்தியினை அளித்த தங்களுக்கும்,

    அறிமுகம் செய்த அன்பின் சகோதரி உமையாள் காயத்ரி அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..