நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜனவரி 09, 2015

மார்கழிக் கோலம் 25

குறளமுதம் 

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மையுடையார் சொலின். (195) 

நற்பண்புகளுடன் மேல்நிலையில் இருப்பவர் 
பயனற்ற சொற்களைச் சொல்லுவாராயின்
அவருடைய பீடும் பெருமையும் 
அவரை விட்டு நீங்கி விடும்.
* * *

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை 25


ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம். 
* * *

ஆலய தரிசனம்
திருக்கண்டியூர்


மூலவர் - ஹரசாபவிமோசனப் பெருமாள்
உற்சவர் - கமலநாதன்
தாயார் - கமலவல்லி
தீர்த்தம் - கபால தீர்த்தம், குடமுருட்டி
தல விருட்சம் - பலா

ப்ரத்யட்சம்
அகத்திய மகரிஷி 

கமலாக்ருதி விமானத்தின் கீழ் நின்ற திருக்கோலம். 
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். 

சிவபெருமான் - நான்முகனின் ஐந்தாவது தலையைக் கிள்ளி எடுத்ததும் அது அவரது கரத்திலேயே ஒட்டிக் கொள்கின்றது. அப்படி ஒட்டிக் கொண்ட சாபத்தை - பெருமாள் இத்தலத்தில் விமோசனம் செய்ததாக தலவரலாறு.

ஹரனின் சாபத்தைத் தீர்த்ததால் - ஹரசாப விமோசனப் பெருமாள்.

கமலவல்லி தனி சந்நிதி கொண்டு திகழ்கின்றாள்.

நவராத்திரியின் போது ஸ்ரீகமலவல்லி தாயாருக்கு மட்டும் சிறப்பாக பத்து நாட்கள் திவ்யோத்ஸவம் நிகழ்கின்றது


பஞ்ச கமல க்ஷேத்ரம் எனப்படும் திவ்யதேசம்.

க்ஷேத்ரம் - கமலம். புஷ்கரணி - கமலம். விமானம் - கமலம்.
இவற்றுடன் கமலவல்லி. உடனுறையும் கமலநாதன்.


ஐப்பசியில் பவித்ரோத்சவம். மார்கழியில் வைகுந்த ஏகாதசியும் பங்குனியில்  பிரம்மோற்சவமும் வெகு சிறப்பாக நடைபெறுகின்றது.

தஞ்சையிலிருந்து எட்டு கி.மீ., தொலைவிலுள்ளது கண்டியூர்.

தஞ்சையிலிருந்து - திருஐயாறு, திருக்காட்டுப்பள்ளி செல்லும் பேருந்துகள் அனைத்தும் கண்டியூர் வழியாகவே செல்கின்றன.

திருக்கோயிலின் அருகிலேயே பேருந்து நிறுத்தம்.

ஸ்ரீஹரசாப விமோசனப் பெருமாள் கோயிலுக்கு அருகிலேயே
மேற்கு நோக்கியதாக ஸ்ரீ பிரம்ம சிரக்கண்டேஸ்வரர் திருக்கோயில்.
  
மங்களாசாசனம் - திருமங்கையாழ்வார். 

பிண்டியார் மண்டைஏந்திப் பிறர்மனை திரிதந்துண்ணும்
உண்டியான் சாபம்தீர்த்த ஒருவனூர் உலகமேத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சிப்பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல்அல்லால் மற்றையார்க் குய்யலாமே!..
திருமங்கையாழ்வார் அருளிய திருப்பாசுரம் (2050)
* * *

சிவ தரிசனம்

மாணிக்கவாசகப் பெருமான் அருளிய
திருஅம்மானை



செங்கண் நெடுமாலுஞ் சென்றிடந்துங் காண்பரிய
பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொண்டு
தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான்
அங்கணன் அந்தணனாய் அறைகூவி வீடருளும்
அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய்!.. (1) 
* * *

திருக்கோயில்
திருக்கண்டியூர் வீரட்டம்


இறைவன் - பிரம்ம சிரக்கண்டீசர்
அம்பிகை - மங்கலநாயகி
தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம், குடமுருட்டி
தலவிருட்சம் - வில்வம்

தலப்பெருமை
அட்ட வீரட்ட தலங்களுள் முதன்மையான 
வீரச்செயல் நிகழ்ந்த திருத்தலம். 

நானே முதற்பொருள் என்று உரைத்து - மஹாவிஷ்ணுவுடன் நான்முகன் பிணங்கி நின்றபோது  நடுநாயகனாய் வந்தருளினர் வைரவமூர்த்தி. 

அப்பெருமானை யாரென்று உணராத நான்முகன் -  வா.. என் மகனே!.. என்று செருக்குடன் அழைக்க - வெகுண்டெழுந்த வைரவமூர்த்தி, நான்முகனின் அகங்காரத்திற்குக் காரணமான ஐந்தாவது தலையைத் தன் கை விரலால் கிள்ளித் துணித்தார் என்பது புராணம்.

இப்படியான -  வீரட்டச் செயலை, 
பண்டு அங்கு அறுத்ததோர் கையுடையான் படைத்தான் தலையை -  என்று,  அப்பர் பெருமான் திருப்பதிகத்தில் குறிப்பிட்டு போற்றுகின்றார்.

தலை அறுபட்டதும் நான்முகனின் அகங்காரம் நீங்கியது.

தன்பிழைக்கு மனம் வருந்தியவராக வில்வவனத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு - சிவதரிசனம் வேண்டி அங்கேயே தவம் இருந்தார்.

தன் நாயகனின் தவத்திற்குத் துணையாக சரஸ்வதியும் அருகே அமர்ந்தாள்.
நான்முகனின் தவத்திற்கு இரங்கிய - பெருமான் அவருக்கு காட்சியளித்து - மீண்டும் சர்வ ஜீவராசிகளையும் சிருஷ்டிக்கும் பணியையும் வழங்கினார்.


திருக்கோயிலில் நான்முகனுக்குத் தனி சந்நிதி உள்ளது.  

அருகினில் கலைமகள் திகழ - செருக்கு அடங்கி ஞானம் விளைந்த சிந்தையராகத் திகழும்  நான்முகனின் திருமேனி மிக்க வனப்புடையது. திருக்கரங்களில் தாமரை மலரும் ஜபமாலையும் கொண்டு திகழ்கின்றார்.


இத் தலத்தில் நான்முகனையும் கலைமகளையும் வேண்டித் தொழுவோர் - கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர் என்பது நம்பிக்கை.

தேர்வு நேரங்களில் மாணவச் செல்வங்கள் திரளாக வந்து - கலைமகளையும் நான்முகனையும் வணங்கிச் செல்கின்றனர். மேலும் -

பெரும் பிழைகளைச் செய்து  - சட்டப்படி தண்டனை பெற்றாலும் - செய்த பிழைக்காக மனம் வருந்துவோர் - இங்கே வந்து தொழுதால் ஆறுதலும் தேறுதலும் பாவ விமோசனமும் கிடைக்கின்றது என்கின்றனர்.
  
இங்கே அழகே உருவானவளாகத் திகழும் ஸ்ரீ துர்க்கை - பிரயோக சக்கரத்துடன் விளங்குகின்றனள். 

அம்பிகை ஸ்ரீமங்கலநாயகி மாங்கல்ய பாக்யம் அருள்பவள்.
தெற்கு முகமாக தனியே கோயில் கொண்டு அருளாட்சி புரிகின்றனள். 

இவளே கலைவாணியின் அன்பினை ஏற்று, நான்முகனின் மீது -  பெருமான்  கொண்டிருந்த கோபத்தினைத் தணித்தவள்.

தவறிழைக்கும் கணவன் திருந்தவேண்டும் - எனவேண்டி நிற்கும் பெண்களின் கண்ணீரைத் துடைத்து - அவர்தம் வாழ்வினில் ஒளியேற்றுபவள் - என்பது நிதர்சனம்.


காணக் கிடைக்காத கவின்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலத்தினைத் திருச்சுற்றில்,  தரிசிக்கலாம்.  

வெளிப் பிரகாரத்தில் ஸ்ரீபத்ரகாளி சந்நிதி கொண்டு அருள்கின்றனள்.

மேற்கு நோக்கிய திருக்கோயில்.


சூரியன் வணங்கி வழிபட்டு மகிழும் திருத்தலங்களுள் கண்டியூரும் ஒன்று. 

சூரிய வழிபாடு ஒவ்வொரு வருடமும், மாசி மாதத்தில் -   13, 14, 15 ஆகிய மூன்று நாட்கள் நிகழும். இந்த மூன்று நாட்களிலும் சூரியனின் கதிர்கள் மாலை 5.45 முதல் 6.10 வரை சிவசந்நிதியில் படர்ந்து சிவலிங்கத்துடன் ஐக்கியமாவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

சித்திரை மாதத்தில் - திருவையாற்றில் நிகழும் சப்த ஸ்தான திருவிழாத் தலங்களுள் கண்டியூர் ஐந்தாவது தலமாகும். 

சப்த ஸ்தானத் திருவிழாவில் ஐயாறப்பர் - அறம் வளர்த்த நாயகியும் நந்தியம் பெருமான் - சுயசாதேவியும் திருவேதிக்குடியிலிருந்து இங்கு வந்து தங்கி, சற்று இளைப்பாறுவர். 


இளைப்பாறிய பின் கண்டியூரிலிருந்து புறப்பட்டுச் செல்லும் போது சதாதப முனிவர் - நந்தியம்பெருமானின் தந்தையான சிலாத முனிவரின் சகோதரர் என்னும் முறை கொண்டு,   கட்டுச் சோறு கட்டித் தரும் ஐதீகமாக -

தயிர்சாதம், புளியோதரை - என சித்ரான்னங்களுடன் தெய்வத் தம்பதியினரை திருப்பூந்துருத்திக்கு அனுப்பி வைப்பது மரபாக இருந்து வருகின்றது. 

சதாதப முனிவர் ஒவ்வொரு நாளும் நித்ய பிரதோஷ வேளையில் - காளஹஸ்தி சென்று திருக்காளத்தி நாதனைப் பணிந்து வணங்கும் வழக்கம் உடையவர். 
  
ஒருநாள் இவரால் செல்ல முடியாத சூழ்நிலையில், தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்தார்.  இவர் பொருட்டு - 

திருக்கண்டியூர் - ஸ்ரீகாளஹஸ்தியாகக் காணக் கிடைத்தது என்பது ஐதீகம். சதாதப முனிவருடைய சிலாரூபம்  திருக்கோயிலில் விளங்குகின்றது.



கண்டியூர் வீரட்டத் திருக்கோயிலுக்கு சற்று அருகிலேயே - 
ஸ்ரீ ஹரசாப விமோசனப் பெருமாள் திருக்கோயில் உள்ளது.

கண்டியூர் - காவிரியின் தென்கரையிலுள்ள திருத்தலம்.

வைகாசியில் பெருந்திருவிழா நடைபெறுவதுடன் அனைத்து வைபவங்களும் சிறப்பாக நிகழ்கின்றன.

ஞானசம்பந்தப் பெருமானும் அப்பர் சுவாமிகளும் பாடிப் பரவிய திருத்தலம். 

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து - திருவையாறு, திருமானூர், திங்களூர், திருக்காட்டுப்பள்ளி - செல்லும்  நகரப் பேருந்துகள் கண்டியூர் வழியாகச் செல்கின்றன.  திருக்கோயிலின் அருகேயே பேருந்து நிறுத்தம். 

சிந்தையும் செயலும் சீர் பெற்று விளங்க
கண்டியூர் எம்பெருமானைக் கை தொழுவோம்!..

பண்டங் கறுத்ததோர் கையுடை யான்படைத்தான் தலையை
உண்டங் கறுத்ததும் ஊரொடு நாடவை தானறியுங்
கண்டங் கறுத்த மிடறுடை யான்கண்டி யூரிருந்த
தொண்டர் பிரானைக்கண்டீர் அண்ட வாணர் தொழுகின்றதே!.
(4/93) 
திருநாவுக்கரசர்.

திருச்சிற்றம்பலம்.  
* * *

11 கருத்துகள்:

  1. புதிய தகவல்கள் சில அறிந்துகொண்டோம் ஐயா! குறளமுதமும் இன்றைய மார்கழிப் பாடல்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. கண்டியூர் கோயில் சென்று வந்த நினைவலைகள் நெஞ்கில் எழுகின்றன ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அறியாத கோயில்களின் சிறப்புகள் அனைத்தும் அருமை ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  4. சிறப்பான பகிர்வு...
    அருமையான தளங்கள் குறித்து படங்களுடன் அறியத் தருகிறீர்கள் ஐயா...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. அட்டவீரட்டத்தலங்களில் ஒன்றான கண்டியூர் அழைத்துச்சென்றமைக்கு நன்றி. இக்கோயிலுக்குப் பல முறை சென்றுள்ளேன். பல்லக்குத் திருவிழா புகைப்படமும் இணைத்துள்ளமை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. திருக்கண்டியூர் தரிசனத்திற்கு நன்றி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் இனிய வருகை கண்டு மகிழ்ச்சி.. வாழ்க நலம்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..