நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, டிசம்பர் 27, 2014

மார்கழிக் கோலம் 12

குறளமுதம்

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும். (388)

நீதி முறையால் நெறி தவறாது மக்களைக் காப்பாற்றும் மன்னவன் - மக்களுக்குத் தலைவன் என்பதைக் கடந்து காக்கும் 
கடவுள் எனும் நிலையில் வைத்து போற்றப்படுவான்.
* * *

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை 12


கனைத்துகற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்துஇல்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்
* * *

ஆலய தரிசனம்
திருவாறன் விளை - ஆரண்முளா

மூலவர் - ஸ்ரீபார்த்தசாரதி - திருக்குறளப்பன்
தாயார் - பத்மாஸநி
தீர்த்தம் - பம்பை
தலவிருட்சம் - வன்னி


குருக்ஷேத்திரம்.

அங்கே - உலகம் அதுவரையில் கண்டிராத பெரும்போர் பதினாறு நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

பதினேழாம் நாள்!..

கௌரவர்களின் படை முகப்பில் கர்ணன்.
பாண்டவர்களின் அணி முகத்தில் அர்ச்சுனன்.

தமது கோபத்தையெல்லாம் ஒன்றாகத் திரட்டிக் கொள்ள -  ஒவ்வொருவர் வில்லிலிருந்தும் கொடிய சரங்கள் அங்கும் இங்குமாகப் பாய்ந்து கொண்டிருக்கின்றன.
  
சல்லியன் தேரோட்டியாக - கர்ணன் நாகாஸ்திரத்தைத் தொடுக்கின்றான்.

சல்லியன் மாத்ரா எனும் தேசத்தின் அரசன். இவனது தங்கையே மாதுரி. திருதராஷ்டிரனின் தம்பியான பாண்டுவின் இரண்டாவது மனைவி.

அந்த வகையில் நகுலன் சகாதேவனுக்குத் தாய் மாமன்.

துரியோதனின் சூழ்ச்சியான விருந்து உபசரிப்பின் காரணமாக -  அவனது வலையில் விழுந்தவன் சல்லியன்.

மகாபாரதத்தில் படிப்பினையூட்டும் கதை மாந்தர்களுள் சல்லியனும் ஒருவன்!..

சோறு போட்டார்கள் என்று சாப்பிட்டு விட்டு, அதற்குமேல் அதிகமாக - இந்த உணவிற்காக எதையும் செய்வேன்!.. -  என்று வாக்குரைத்தான்.

அந்த வார்த்தைக்குப் பின் திரை மறைவிலிருந்து எதிரில் வந்து நின்றவன் துரியோதனன்!..

ஆய்ந்தறியாமல் தின்ற சோறு தொண்டைக் குழிக்குள் நின்றது. 

ஏனெனில் சல்லியன் படை திரட்டிக் கொண்டு வந்தது - தனது மருமகன்களான பாண்டுவின் புத்திரர்களுக்கு உதவுவதற்காக!..

நாக்கு தவறினாலும் வாக்கு தவறாதவன் சல்லியன்!.. 

தான் வாக்களித்தபடியே தனது சேனைகளுடன் பாண்டவர்களுக்கு எதிராக நின்றான் - சல்லியன்.

பதினைந்தாம் நாள் துரோணர் வீழ்ந்ததும் அங்கத நாட்டின் அரசனும் மாவீரனும் வள்ளல் பெருந்தகையுமான கர்ணன் சேனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டான்.

கர்ணனுக்குத் தேர் ஓடுமாறு துரியோதனன் கேட்டுக் கொண்டதும் வெறுப்பின் உச்சத்திற்கே சென்று விட்டான் சல்லியன்.

ஆய்ந்தறியாது பிழை செய்தவன். ஆனாலும் ஆணவத்திற்குக் குறைவில்லை.

தேரோட்டி மகனுக்கு நான் தேரோட்டுவதா?.. - எனக் கொந்தளித்தான்.

அங்கே அர்ச்சுனனுக்குக் கிருஷ்ணன் தேரோட்டுகின்றான். அவனுக்கு நிகராக இங்கே கர்ணனுக்குத் தேரோட்டுவது உமக்குப் பெருமைதானே! - என்றதும்  தற்பெருமை தலைக்கு மேல் ஏறிக் கொண்டது.

மனதளவில் பெருமை கொண்டு தேரோட்டினாலும் அவ்வப்போது கர்ணனுக்கு யோசனைகள் சொல்லி - கர்ணனுக்கு இயற்கையாகவே இருந்த இறுமாப்பை இன்னும் அதிகப்படுத்தி அவனது இலக்குகளைக் கெடுத்தான்.

கர்ணனின் கரத்தில் நாகாஸ்திரம்!.. அதன் கூரிய முனை - 

எதிர்த்திசையில் அர்ச்சுனனின் தலையைக் குறித்திருந்தது.

சல்லியன் சொன்னான் - மார்புக்குக் குறி வை!.. - என்று..

தன் வீரத்தில் நம்பிக்கைக் கொண்டிருந்தவன் கர்ணன். 

எதிரில் நிற்பவன் தன்னுடன் பிறந்த தம்பி என்று தெரிந்திருந்தும் - கணை தொடுத்திருந்த கர்ணன் அதைக் கேட்கவில்லை.

நாகாஸ்திரத்தின் இலக்கினைப் புரிந்து கொண்ட ஸ்ரீகிருஷ்ணன் ரதத்தைக்  கீழே அழுத்தினான். சீறிவந்த நாகாஸ்திரத்தின் குறி தவறியது.

கர்ணனைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளைப் பற்றி ஏதும் அறியாதவனாக -
மீண்டும் ஒரு முறை நாகாஸ்திரப் பிரயோகம் செய்!.. - என்றான் சல்லியன்.

கொந்தளித்துக் கொண்டிருந்த கர்ணன் - நீ உன் வேலையை மட்டும் செய்!.. - என கர்ஜித்தான்.

வார்த்தைகளால் மோதிக் கொண்டனர் - கர்ணனும் சல்லியனும்.

களத்தில் கவனமில்லாததால் குதிரைகள் அங்குமிங்குமாக ஓடின. ரதம் நிலை குலைந்து ரத்தச் சகதியில் சிக்கிக் கொண்டது.

தேரைத் தூக்கி நிறுத்து!..  -  மகாரதனாகிய கர்ணன் கட்டளையிட்டான்.

ஆனால், அது என் வேலையல்ல!.. - என்று பதிலுரைத்த சல்லியன் - நடுக்களத்தில் தேரை விட்டிறங்கிப் போனான்.

மிகப் பெரிய சங்கடம் கர்ணனுக்கு விளைந்தது.

தேரை நிலைப்படுத்துவதற்காக நிராயுதபாணியாகக் கீழே குதித்தான்.

அந்த நிலையில் - அர்ச்சுனன் கணைகளால் தாக்கினான்.

அர்ச்சுனா.. நிராயுதபாணியைத் தாக்குகின்றாயே.. நியாயமா!..

அன்றைக்கு நிராயுதபாணியாக நின்றிருந்த அபிமன்யுவை வீழ்த்தும் போது உன்னுடைய நியாயம் எங்கேயடா போயிருந்தது!?..

வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்த வேளையில் - தன்னுரு காட்டி - கர்ணனின் புண்ய பலன்களை எல்லாம் தானமாகப் பெற்றுக் கொண்டான் ஸ்ரீகிருஷ்ணன்.

பெறற்கரிய பேறு பெற்ற களிப்பில் - அர்ச்சுனனின் கணைக்குப் பலியாகி இன்னுயிர் துறந்தான் கர்ணன்.

அதன் பின் என்னவெல்லாமோ நடந்து முடிந்து விட்டது.

யுதிஷ்ட்டிரன் மணிமுடி தாங்கிவிட்டான். நாடெங்கும் அமைதி!..

ஆனால் - அர்ச்சுனனின் மனதில் அமைதியில்லை.

அதுவும் போர்த் தந்திரம் என்றாலும் கர்ணனை வீழ்த்திய விதம் அவன் மனதை அறுத்துக் கொண்டு இருந்தது.

நிராயுதபாணியை வீழ்த்தியதற்காக அவனது காண்டீபம் வெட்கப்பட்டது.

அமைதி வேண்டி பரசுராம க்ஷேத்திரத்தின் அடர்ந்த வனங்களில் தவம் மேற்கொண்டான்.

அர்ச்சுனனின் தவத்துக்கு இரங்கிய ஸ்ரீஹரி பரந்தாமன் அவன் முன்னே வந்து
தோன்றினான். ஆறுதலும் தேறுதலும் வழங்கினான்.

அர்ச்சுனனின் வேண்டுகோளின்படி - அங்கேயே கோயில் கொண்டான்.

ஆரண்முளா திருக்கோயில்
இந்தத் திருத்தலமே - இன்றைக்கு ஆரண்முளா எனப்படுகின்றது.

இந்த திவ்ய தேசத்தின் தொன்மைத் திருப்பெயர் - திருவாறன்விளை!..
நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்த திருத்தலம்.

பம்பை ஆற்றின் வட கரையில் உள்ளது திருக்கோயில்.
மூலவர் ஸ்ரீவாமன விமானத்தின் கீழ் - கிழக்கு நோக்கிய திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

தை மாத திருவோணத்தில் ஆராட்டு உற்சவம் விமரிசையாக நடக்கின்றது. குருவாயூர் போல இங்கும் துலாபாரம் வெகு பிரசித்தம்.

சபரிமலையில் இன்று மண்டல பூஜை.

தங்க அங்கி ஊர்வலம்

மண்டல பூஜையின் போது ஸ்ரீஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக திருவிதாங்கூர் மன்னர் வழங்கிய தங்க அங்கி ஆரண்முளா ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமான் திருக்கோயில் பாதுகாப்பில் தான் உள்ளது.
இங்கிருந்தே தங்கஅங்கி ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை மண்டல பூஜைக்காக எடுத்து செல்லப்படுகின்றது.
23/12 அன்று காலை ஆறு மணிக்கு புறப்பட்ட தங்க அங்கி ஊர்வலம்  அன்றைய தினம் ஓமல்லூர் பகவதி கோயிலிலும் 
24/12 அன்று கோநி முருங்கமங்கலம் கோயிலிலும் 
25/12 அன்று பெருநாடு சாஸ்தா கோயிலிலும் தங்கியிருந்த பின் 
26/12 அன்று மதியம் பம்பை கணபதி சந்நிதிக்கு வந்து சேர்கின்றது. 
அங்கு மதியம் 3 மணி வரையிலும் பக்தர்களின் தரிசனத்திற்காக இருந்த பின் தலைச்சுமையாக ஐயப்பனின் சந்நிதானத்திற்குப் புறப்படுகின்றது. 
மாலை ஆறு மணி அளவில் சந்நிதானைத்தை வந்தடையும் தங்க அங்கிப் பேழையை வரவேற்று - மாலை 6.30 மணியளவில் சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு தீப ஆராதனையுடன் தரிசனம் நிகழும். 
இன்றுடன் (27/12) 41 நாள் மண்டல பூஜை காலம் நிறைவடையும். 
மீண்டும் (14/1/15) மகரவிளக்குப் பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை 30/12 அன்று மாலை திறக்கப்படும். 
   

சபரிமலை சென்று திரும்பும் வழியில் செங்கணூர் ஆரண்முளா என கேரளத்தின் திருத்தலங்களைத் தரிசிப்பது வழக்கம். 
ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமான் அனைவருக்கும் சர்வமங்கலம் அருள்வாராக!.. 


இன்பம்பயக்க எழில்மலர் மாதரும்தானும் இவ்வேழுலகை
இன்பம்பயக்க இனிதுடன் வீற்றிருந்தாள்கின்ற எங்கள்பிரான்
அன்புற்றமர்ந் துறைகின்றான் அணிபொழில்சூழ்திருவாறன் விளை
அன்புற்றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களும் ஆகுங்கொலோ!..
நம்மாழ்வார் திருமொழி(ஏழாம் பத்து/பத்தாம் திருமொழி/3660) 
* * *
சிவ தரிசனம்

மாணிக்கவாசகப் பெருமான் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல் 11


மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்!..
* * *

திருக்கோயில்
சபரிமலை


இறைவன் - ஸ்ரீ தர்மசாஸ்தா, ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமி, ஸ்ரீ மணிகண்டன் 
யோக பட்டம் அணிந்து பிரம்மச்சர்ய திருக்கோலம்.
தீர்த்தம் - பம்பை நதி, திருவேணி சங்கமம், உரற்குழி
தலவிருட்சம் - அரசு 

தலப்பெருமை
ஆதிசேஷனாலும் கூற இயலாதபடி அளவிடற்கரியது.


ஹரிஹர சங்கமத்தில் திரு அவதாரமாகிய திருக்குமரன்.

கலியுக வரதனாகிய ஸ்ரீதர்மசாஸ்தா சத்திய மூர்த்தியாக திருக்கோயில் கொண்டுள்ளான்.

தான் சுவைத்த பழங்கொடுத்து ஸ்ரீராமசந்த்ர மூர்த்தியையும் இளைய பெருமாளையும் உபசரித்த சபரி அம்மைக்கு முக்தி நலம் கொடுத்தவன். 

சமூகத்தின் ஏற்ற தாழ்வுகளை அகற்றுவதற்காக திருஅவதாரம் செய்த பெருமான் - தவ மூதாட்டியாகிய சபரியின் திருப்பெயரையே தனது பீடத்திற்கு சூட்டி மகிழ்ந்தான்.

பம்பை நதிக்கரையிலிருந்து ஏழு கி.மீ., பம்பா கணபதியையும் ஸ்ரீராமனையும் ஆஞ்சநேயரையும் வணங்கிய பின் மலையேற்றம். 

அதற்கு முன்பாக -  அடிவாரத்தில் சிறு மடத்தில் பந்தளராஜ வம்சத்தினர். 

சரிவான நீலி மலையில் ஏறினால் 7. கி.மீ தொலைவில் சபரிமலை.   

வழியில் அப்பாச்சி மேடும் இப்பாச்சிக் குழியும். 


அங்கே மாவு உருண்டைகளையும் பொரி உருண்டைகளையும் வீசுவது வழக்கம். இதனால் - அங்கே மணிகண்டனால் நிலைப்படுத்தப்பட்ட பூதகணங்களும் வன தேவதைகளும் மகிழ்ச்சியடைகின்றன. 

நீலி மலை ஏற்றம் மிகக் கடினம். சிவபாலனாகிய ஐயப்பனே துணைக்கு வந்து அழைத்துச் செல்வதாக ஐதீகம். 

நீலிமலையில் முன்பு கருங்கல் படிக்கட்டுகள் இருந்தன. இப்போது பல இடங்களில் சரிவான தளம் போல செய்து விட்டார்கள். 

நீலிமலையின் உச்சியில் சபரி பீடம். சபரி வாழ்ந்த இடம். ஸ்ரீராமபிரான் வந்து இருந்து சபரியின் திருக்கரத்தால் கனிவகைகளை உண்டு மகிழ்ந்த தலம்.

இங்கே சிதறு காய் அடித்து கற்பூரம் ஏற்றி வழிபடுகின்றனர். சபரி பீடத்தை அடுத்து சற்றே சமதளம். மலையேற்றம் யானை பாதை எனவும் சரங்குத்தி பாதை எனவும் பிரிகின்றது.

சரங்குத்தி பாதையில் பிரம்மாண்டமாக சரங்குத்தி ஆல். கன்னி ஐயப்ப சுவாமிகள் தாங்கள் எரிமேலியில் இருந்து கொணர்ந்த சரத்தினை இங்கே குத்தி வைக்கின்றனர். 

ஆனால் பெருங்கூட்டத்தில் - அது எல்லோராலும் முடியாது. மரத்தின் அருகில் வந்ததும் மரத்தை நோக்கி வீச வேண்டியது தான்.

சரங்குத்தி ஆலினைக் கடந்த சிறிது தூரத்திலேயே - ஐயனின் சந்நிதானம். கொழுந்து விட்டெரியும் கற்பூர ஆழி கண்ணில் தென்படும்.

ஆனந்தக் கண்ணீர் ஆறாகப் பெருகி அடியவர்களின் மேனி நனையும் இடம்!.. 

இதுவரைக்கும் வந்த பாதை சரிவாகச் சென்று பிரம்மாண்டமான கொட்டகையில் நிறைவடையும் . அங்கே இரும்பு தடுப்புகளின் ஊடாகச் சென்றால் நேராக சந்நிதானம். 


சந்நிதானத்தின் வலப்புறம் கற்பூர ஆழி. இடப்புறம் அரச மரம். 
அதனருகில் வாபரின் பீடம். வாபரின் வாள்கள் அங்கே வைக்கப்பட்டுள்ளன.

நேராக கண்களில் நிறைபவை - தகதக.. என மின்னும் பொற்படிகள்!.. 

இதனைக் குறித்துத்தானே இத்தனை நாளும் பாட்டும் பஜனையும்!..

பதினெட்டாம் படியின் வலப்புறம் ஸ்ரீ பெரிய கடுத்தஸ்வாமி!..
இடப்புறம் கருப்பாயி அம்மனுடன் ஸ்ரீ கருப்பஸ்வாமி!..

சாமியே.. சரணம் ஐயப்பா!.. - எனப் பெருங்குரல்கள் எங்கெங்கும்!.. 

அடுத்திருக்கும் சுவர்களில் சடசட என சூறைத் தேங்காய்கள் மோதி உடைந்து கொண்டேயிருக்கின்றன. 

சந்நிதானம் - பழைய படம்
பொற்படிகளுக்கு முன்பாக சிலுசிலு என தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கின்றது. 

கால் நனைந்ததோடு கண்ணீரால் உடல் மறுபடியும் நனைகின்றது. 

கண்ணீர் பெருக்கெடுத்து பார்வையை மறைக்கின்றது.  

முடிந்தவரை அனைவரும் முதற்படியை தொட்டு வணங்கி விடுகின்றனர். அதற்கடுத்துள்ள படிகளில் மின்னல் வேகத்தில் கடத்தப்படுகின்றனர்.  

கேரள காவல் துறையின் சுறுசுறுப்பான பணி!.. 

பதினெட்டுப் படிகளைக் கடந்ததும் ஸ்வாமியின் திருமுற்றம்.
நெடிதுயர்ந்த கொடிமரம். 

கன்னி மூலையில் கணபதியின் சந்நிதி. 
சற்று பக்கத்தில் முருகனின் அம்சமாக ஸ்ரீ நாகராஜர் சந்நிதி. 


அப்படியே வலம் வந்தால் ஐயன் ஐயப்பனின் சந்நிதி!..
கண்குளிரத் தரிசனம் செய்தபடியே நின்று விட மனம் துடிக்கும்!..

மதியம் - நடை அடைக்கும் வரை நெய்யபிஷேக தரிசனம் தான். 

மாலையில் நடைதிறந்ததும் விதவிதமான அலங்காரங்களில் திவ்யதரிசனம்.


மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு தவிர்த்த காலங்களில் வெகு சிறப்பாக படிபூஜை நிகழ்கின்றது. 

தற்போது பதினெட்டுப் படிகளிலும் உள்ள தங்கத் தகடுகளை புனர் நிர்மாணம் செய்வதற்கு உத்தேசித்துள்ளனர்.

சந்நிதானத்தின் வடக்குப் புறமாக மாளிகைப்புறத்தம்மன் சந்நிதி!..

தான் இன்னும் திருமணம் கொள்ளாவிட்டாலும் - நாடி வரும் பக்தர்களின் கோரிக்கைகளை ஏற்று திருமணத் தடைகளை நீக்கி வைப்பவள்..

மஞ்சமாதா என அன்புடன் அழைக்கப்படும் - இவள் சந்நிதி எங்கும் மஞ்சள் வாசம் தான்!.. 

மஞ்சமாதா சந்நிதிக்கு அந்தப் பக்கமாக அடங்கி ஒடுங்கி நவக்கிரங்கள். 

ஐயன் தனது பரிவார தேவதைகளுடன் கூடியிருந்து ஆலோசிக்கும் மணிமண்டபம். 

வெளிப்புற மேடையில் விதவிதமான நாக ரூபங்கள்.. 

கேரளத்தின் பழங்குடியினர் - தோஷ நிவர்த்திக்காக - நாக தேவதைகளை ஆராதித்து கொடுகொட்டி எனும் இசைக் கருவியுடன் பாடுகின்றனர். 

நமக்கு விருப்பம் இருந்தால் காணிக்கை கொடுத்து - சர்ப்ப சாந்தி செய்து  கொள்ளலாம். அந்த நாக பீடங்களில் இருந்து எடுக்கும் மஞ்சள் தூளை வீட்டில் வைத்திருந்தால் வீட்டை சுற்றி பாம்பு முதலான விஷ ஜந்துகளின் நடமாட்டம் அறவே இருக்காது. 

ஐயப்ப ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட நெய் - மருந்தாகின்றது.

அதற்கு சாட்சியானவற்றுள் - எங்கள் குடும்பமும் ஒன்று!..

அபிஷேக விபூதி திருவிழாக் காலங்களில் கிடைப்பது அரிது. ஆயினும் சிறு கட்டணம் செலுத்தி மேல் சாந்தியை நேரில் தரிசித்து அவரது கையால் விபூதிப் பிரசாதம் வாங்கிக் கொள்ளலாம்.

ஜன்ம ஜன்மாந்திரமாக தொடரும் பந்தம் தான் - ஐயப்ப பக்தி!..

ஐயப்பனை - சாத்தன் - எனப் பழந்தமிழ் நூல்கள் குறிக்கின்றன!..

சாத்தன் வழிபாடு மிகத் தொன்மையானது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஐயப்ப வரலாற்றினை - தமது தேவாரத்தில் அப்பர் சுவாமிகள் காட்டுகின்றார்.

அரியல்லால் தேவி இல்லை!.. ஐயன் ஐயாறனார்க்கே!.. - என்று போற்றும் திருநாவுக்கரசர், 

சிவபெருமானின் திருமகன் - சாத்தன்!.. - என தெளிவுபடக் கூறுகின்றார். 

பின்னாளில் கந்த புராணத்தில் கச்சியப்ப சிவாச்சார்யாரும் ஐயப்ப வரலாற்றினை விரிவாகக் கூறுகின்றார்.

பூத நாத சதானந்த 
சர்வ பூத தயாபர 
ரக்ஷ ரக்ஷ மஹாபாஹோ
சாஸ்த்ரே துப்யம் நமோ நம:

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!..

பார்த்தனுக்கு அருளும் வைத்தார் பாம்பரை ஆடவைத்தார்
சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாமவேதங்
கூத்தொடும் பாட வைத்தார் கோளரா மதியம் நல்ல
தீர்த்தமுஞ் சடைமேல் வைத்தார் திருப்பயற் றூரனாரே!.. (4/32)
அப்பர் ஸ்வாமிகள். 

திருச்சிற்றம்பலம்
* * *

10 கருத்துகள்:

  1. ஆரண்முளா கோயிலுக்குச் சென்றதில்லை ஐயா
    ஐயப்பன் சந்நிதானத்தின் படம் வியக்கவைக்கின்றது ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  3. பதிவு அருமை.
    குருஷேத்திரம் பார்த்து இருக்கிறேன்.
    ஆரண்முளா பார்த்தது இல்லை.
    ஐயப்பன் படிபூஜை படம், ஐயப்பன் கோவில் படம் எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  4. தல புராணத்தோடு ஆலய தரிசனம் கண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  5. நிறைய விடயங்கள் தெரிந்து கொண்டேன் நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..