குறளமுதம்
இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல் (517)
இந்தக் காரியத்தினை - இவன் இத்தன்மையாக வெற்றியுடன் நிறைவேற்றி வருவான் என ஆய்ந்து அறிந்து அந்தக் காரியத்தினை அவனிடம்
ஒப்படைத்தல் வேண்டும்.
இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல் (517)
இந்தக் காரியத்தினை - இவன் இத்தன்மையாக வெற்றியுடன் நிறைவேற்றி வருவான் என ஆய்ந்து அறிந்து அந்தக் காரியத்தினை அவனிடம்
ஒப்படைத்தல் வேண்டும்.
* * *
சூடிக் கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை - 06
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச்சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!..
ஓம் ஹரி ஓம்
* * *
ஆலய தரிசனம்
தஞ்சை ஸ்ரீ மூலை அனுமார்
சொல்லின் செல்வனுக்குப் பிறந்த நாள் விழா!..
ஸ்ரீமத் இராமாயணத்தைக் கொண்டாடும் எவரையும் கொண்டாடுபவர் -
ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி!..
இன்று நாம் - நம் பதிவில் அவரைக் கொண்டாடுவோம்!..
தஞ்சை மாநகரில் யாரைக் கேட்டாலும் வழி சொல்லுவார்கள். அந்த அளவுக்குப் பிரசித்தம் .
மூலை அனுமார் - மிகுந்த வரப்பிரசாதி.
மூலை அனுமார் - மிகுந்த வரப்பிரசாதி.
மாதந்தோறும் அமாவாசை மற்றும் மூல நட்சத்திர நாட்களில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் ஸ்ரீ மூலை அனுமாரைத் தரிசிக்கக் கூடுகின்றனர்.
அதென்ன - மூலை அனுமார்!?..
இன்றைக்கு நாம் தஞ்சை மாநகரத்தின் வடிவமைப்பு - பிற்காலத்தில் நிர்மாணிக்கப்பட்டதே..
விஜயாலய சோழன் தொட்டு ராஜேந்திர சோழன் வரை - கடல் கடந்து பரந்து விளங்கிய சோழப்பேரரசின் தலைநகரமாக விளங்கிய பெருநகர் - தஞ்சை!..
பிற்கால சோழர்களின் வீழ்ச்சியின் போது இந்நகரை முற்றாகத் தரை மட்டமாக்கி தீக்கிரையாக்கினான் - சுந்தர பாண்டியன்!..
கழுதை கட்டி உழுது, பேய்க்கடுகை விதைத்ததாகக் கூறுகின்றனர்.
அதன் பிறகு நாயக்கர்களின் ஆளுகைக்கு உட்படும் வரை கேட்பாரற்று மண்மேடாகக் கிடந்த நகரில் மனம் போனபடிக்கு வீதி அமைப்புகள் உருவாயின.
பகற் கொள்ளை இரவுக் கொள்ளை என தொடர்ந்த தாக்குதல்களிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள - குறுகிய இடத்துக்குள் நெருக்கியடித்துக் கொண்டு சந்து பொந்து எனற அமைப்புக்குள் வாழத் தலைப்பட்டனர் - மக்கள்.
நாயக்க மன்னர்களுக்குள்ளும் ஒற்றுமை இல்லை. விஜயராகவ நாயக்கர் காலத்தில் விளைந்த குடும்பச் சண்டையால் - தஞ்சை அரண்மனையும் தெருக்களும் மீண்டும் - மதுரை நாயக்கர்களால் தீக்கிரையானது.
மராட்டியர் தலையெடுத்தனர். சிலகாலம் அமைதியாகச் சென்றது வாழ்க்கை.
ஐரோப்பிய ஆங்கிலேய வந்தேறிகளால் மீண்டும் நாடெங்கும் பிரச்னை..
வணிகம் எனும் போர்வைக்குள் ஒளிந்து வந்த நயவஞ்சகர்களுக்குத் துணையாக ஆற்காடு நவாப் கும்பல்!..
பாரதத்தின் தொன்மையான திருநகரங்களுள் ஒன்றான காஞ்சிபுரத்தில் பெரும்பதற்றம் நிலவியது. திருக்கோயில்கள் கொள்ளையிடப்பட்டன.
காஞ்சியில் இருந்த ஸ்ரீகாமாட்சியம்மனின் ஸ்வர்ண விக்ரகம் குறி வைக்கப்பட்டது. இறையன்பர்கள் அந்த விக்ரகத்தை எடுத்துக் கொண்டு உடையார் பாளையம் திருவாரூர் - என பாதுகாப்பு தேடி அலைந்தனர்.
அம்பிகை புன்னகைத்தாள்..
தஞ்சை மராட்டிய அரசருக்கும் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த துறவியர்க்கும் ஒருசேர உணர்த்தினாள் - தான் விரும்பும் இடத்தை!..
அது - தஞ்சை மாநகர்!..
மராட்டிய மன்னர் துளஜா ராஜா காலத்தில் தஞ்சை மேல ராஜவீதியில் திருக்கோயில் கொண்டாள் - ஸ்ரீ பங்காரு காமாக்ஷி!..
பின்னாளில் மன்னர் சரபோஜி காலத்தில் ராஜகோபுரம் உருவாயிற்று.
இப்படி தஞ்சைக்கு வந்த பங்காரு காமாட்சியம்மனுக்கு மெய்க்காவல் - ஸ்ரீஆஞ்சநேயர்.
பிற்காலத்தில் தஞ்சை மாநகரின் மத்தியில் அரண்மனையும் சுற்றிலும் சதுரமாக நான்கு சாலைகளும் அமையப் பெற்றபோது எண் திசைகளும் குறிக்கப்பட்டு காவல் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டனர்.
அந்த வகையில் கிழக்கு மேற்கான வடக்கு ராஜவீதியும் தெற்கு வடக்கான மேல ராஜவீதியும் சந்தித்துக் கொள்ளும் வடமேற்கு மூலை வாயு மூலை எனப்பட்டது!..
இந்த வடமேற்கு மூலைக்கு அதிபதி வாயு தேவன் .
வாயுவின் மைந்தனாக விளங்குபவர் - ஸ்ரீ ஆஞ்சநேயர்!..
ஆக - தந்தையின் இடத்தில் - தனயன் இருந்து வழிநடத்துகின்றார்.
எனவே - தஞ்சை நகரத்தில் - வடமேற்கு மூலையான வாயு மூலையில் திருக்கோயில் கொண்டதனால் - மூலை அனுமான்!.. - என்று மக்களால் பிரியம் கொள்ளப்பட்டார்.
ஆனாலும் - இவரது திருப்பெயர் வீர ஆஞ்சநேயர் என்பதாகும்!..
மராட்டிய மன்னர்களுள் ஒருவரான பிரதாப சிம்ம மகாராஜா - ஆஞ்சநேய பக்தராக இருந்து இறைத் தொண்டு செய்து - ஆஞ்சநேயருடனேயே ஐக்கியமானதால் -
கொடும் வனக் கொள்ளையர் கூட்டத்தை - கட்டுப்படுத்த இயலாத ஒரு சந்தர்ப்பத்தில் மன்னன் இங்கே வேண்டி நின்றான். அப்போது - பெரும் வானரக் கூட்டம் தோன்றி முரட்டுக் கூட்டத்தை விரட்டியடித்ததாக செவி வழிச்செய்தியும் உண்டு.
இன்றளவும் தஞ்சை மக்களில் இதயத்தில் நீங்காத இடம் பெற்றவர் மூலை அனுமார். ஆபத்பாந்தவனாக அவர் நிகழ்த்தும் அற்புதங்கள் அநேகம்!..
கொடிமரத்துடன் கூடிய திருக்கோயில். திருச்சுற்றில் வேம்பு தல விருட்சம் எனத் திகழ்கின்றது.
சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான ஸ்ரீதியாகராஜர் தஞ்சையில் இருந்த காலத்தில் இத்திருக்கோயிலில் நாளும் வழிபட்டதாக வரலாறு.
இங்கே தாய் அஞ்சனாதேவியின் மடியில் குழந்தையாய்த் தவழும் சிற்பம் புகழ் பெற்றது. அதே போல இராவணனின் எதிரில் வால் கோட்டையில் ஆஞ்சநேயர் வீற்றிருக்கும் சிற்பமும் தியானத் திருக்கோலமும் அற்புதமானவை.
ஆஞ்சநேயர் திருக்கோயிலுக்குத் தென்புறமாக ஸ்ரீ நவநீதக் கிருஷ்ணன் திருக்கோயில்.
அதற்கடுத்ததாகத் திகழ்வது ஸ்ரீ பங்காரு காமாக்ஷி அம்மன் திருக்கோயில்!..
ஆஞ்சநேயரிடம் கஷ்டங்களை முறையிட்டு நாளும் பதினெட்டு முறை வலம் செய்து வணங்குகின்றனர் பக்தர்கள்!..
இங்கே பதினெட்டு எனத் தொடங்கி 10,008 - லட்சத்தெட்டு என்பது வரை வேண்டுதல் வைக்கின்றனர்.
மூலஸ்தானத்தில் பாலபிஷேகம் |
கார்த்திகையில் நட்சத்திர தீப வழிபாடு சிறப்பு. காலையில் திருமஞ்சனம். தேங்காய்ப் பூ கொண்டு அபிஷேகிக்கின்றனர்.
மாலையில் - வெட்டிவேர், ஏலக்காய், கிராம்பு என நறுமண திரவியங்களால் - அலங்கார தரிசனம்.
ஆயிரத்தெட்டு எலுமிச்சம்பழங்களால் ஆன மாலை அணிவிக்கப்பட்டு மகா தீப ஆராதனை நிகழும்.
இந்த மார்கழி மாதம் முழுதும் கோயிலில் இருந்து ஸ்ரீ ராம நாமம் எழுதும் அன்பர்களைக் காணலாம்.
ஒவ்வொரு அமாவாசை நாளிலும் ஒவ்வொருவிதமாக அலங்காரம் செய்து மகிழ்கின்றனர்.
இவர் திருவீதி எழுந்தருள்வதற்கென தேர் அமைத்துக் கொடுத்தனர் மராட்டிய மன்னர்கள். ஆனால் - இன்றைக்குத் தேர் சென்ற இடம் தெரியவில்லை. கோயிலின் எதிரே இருக்கும் தேர் மண்டபமும் ஆக்ரமிப்பில் உள்ளது.
ஆனாலும் -
இவர் திருவீதி எழுந்தருள்வதற்கென தேர் அமைத்துக் கொடுத்தனர் மராட்டிய மன்னர்கள். ஆனால் - இன்றைக்குத் தேர் சென்ற இடம் தெரியவில்லை. கோயிலின் எதிரே இருக்கும் தேர் மண்டபமும் ஆக்ரமிப்பில் உள்ளது.
ஆனாலும் -
தோளுக்குத் துணையாக நின்று - துயருற்ற மக்களின் துன்பத்தைத் துடைக்கின்றார் - ஆஞ்சநேயர்.
எத்தனை எத்தனை குறைகள்!.. கஷ்டங்கள்!.. அத்தனையும் அனல் பட்ட மெழுகாக ஆகின்றன.
தஞ்சை நகருக்குள் பதினெட்டுக்கும் மேற்பட்ட ஆஞ்சநேயர் கோயில்கள் தனித்துவமாகத் திகழ்கின்றன.
இருப்பினும், ஸ்ரீ மூலை அனுமார் என்றால் - தனி மகத்துவம் தான்!..
தோழமை, தொண்டு - இவற்றுக்கான பரிபூரண எடுத்துக்காட்டு - ஆஞ்சநேயர். மதிநுட்பம் மிக்கவர்.
அதனால் தானே, ஸ்ரீராமசந்திரன் ஆஞ்சநேயரை - சொல்லின் செல்வன்!.. எனப் புகழ்ந்தார்.
இன்றைய வந்தனம் ஸ்ரீ அஞ்சனாதேவியின் புத்ரனான ஸ்ரீ ஆஞ்சயருக்கு!..
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாகி ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்!..
கம்ப நாட்டாழ்வார்.
* * *
சிவ தரிசனம்
மாணிக்க வாசகப்பெருமான் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல் 05
மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடை திறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மை ஆட்கொண் டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேஎன்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்!..
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடை திறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மை ஆட்கொண் டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேஎன்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்!..
* * *
திருக்கோயில்
கோவிலூர் - முத்துப்பேட்டை
இறைவன் - மந்த்ரபுரீஸ்வரர், சூதவனேஸ்வரர்
அம்பிகை - பெரியநாயகி, பிரஹந்நாயகி
தீர்த்தம் - மார்க்கண்டேய தீர்த்தம், அனும தீர்த்தம்.
தல விருட்சம் - மா.
தலப்பெருமை
சிவபெருமானிடம் - ஸ்ரீ ராமசந்த்ர மூர்த்தி மந்த்ரோபதேசம் பெற்ற திருத்தலம்.
ஸ்ரீராமபிரான் - இளையபெருமாள், ஜாம்பவான், சுக்ரீவன், அனுமன் - ஆகியோருடன் சிவபூஜை செய்த திருத்தலம்.
ஸ்ரீராமபிரான் - ஜானகியை மீட்பதற்காக கடல் கடந்து செல்லவேண்டிய சூழ்நிலையில் - அதற்குண்டான வழிவகைகளை இறைவனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டதால் - இத்தலத்தில் ஆதி திருப்பெயர் - திரு உசாத்தானம்!..
உசாவுதல் எனில் கேட்டுத் தெரிந்து கொள்ளுதல் என்பது பொருள்!..
தில்லைக் கூத்தன் - விஸ்வாமித்ரருக்காக - இங்கே எழுந்தருளி ஆனந்த திருநடனம் காட்டியருளியதால் கோயிலூர் என்பதும் திருப்பெயர்.
இன்றைக்கு இத்தலம் - கோவிலூர் என்றே வழங்கப்படுகின்றது.
யமதர்மராஜன் பாசக்கயிற்றை வீசி இழுத்த போது உண்டான காயங்கள் தீர்வதற்காக மார்க்கண்டேயர் இங்கே வழிபட்டு நலம்பெற்றார் என்பது ஐதீகம்.
ஆதிசேஷன் வணங்கிய திருத்தலங்களுள் - திரு உசாத்தானமும் ஒன்று.
தென் திசையிலிருந்து அமிர்த கலசத்துடன் கருடன் பறந்து வந்தபோது நிறை கலசம் சற்றே ததும்பியது.
அமிர்தத் துளிகள் பூமியில் சூத வனம் எனப்பட்ட மா மரநிழலில் சுயம்பு லிங்கமாகத் திகழ்ந்த ஈசனின் மீது விழுந்தன.
அபசாரத்திற்கு வருந்திய கருடன் அஞ்சி நடுங்கியவனாக - ஈசனைப் பணிந்து தொழுதான். கருடனைத் தேற்றிய சிவபெருமான் - அவனது செயல்களில் வெற்றி உண்டாகட்டும்!.. - என வரம் அருளினார்.
அமிர்தம் சிந்தியதால் எம்பெருமான் அமிர்த லிங்கமாகத் திகழ்கின்றார்.
நன்றி - சைவம்., பன்னிரு திருமுறை தொகுப்பு. |
அருகிலேயே அம்பிகை பிரஹந்நாயகியின் சந்நிதி..
கடைக்கண் நோக்கில் அனைத்து நலன்களையும் அருள்பவள்.
கவலைகளைத் தீர்த்து வைக்க கருணையே வடிவாக விளங்குகின்றனள்.
மகாமண்டபத்தில் இருபுறமும் சங்கநிதி, பத்மநிதி - விளங்குகின்றனர்.
ஸ்ரீராமனுக்கு மந்த்ர உபதேசம் செய்த நிலை என்கின்றனர் ஆன்றோர்.
மாமரங்கள் நிறைந்த வனத்தில் ஈசனுடன் விநாயகரும் எழுந்தருளியதால் - இங்கே அவருக்கு சூதவன விநாயகர் என்பது திருப்பெயர்.
விநாயகப்பெருமான் - துதிக்கையில் மாங்கனியுடனும் திருக்கரத்தினில் மாந்தளிர்களுடனும் திருக்கோலம் கொண்டுள்ளார்.
நடன சபையில் ஆடவல்லானுடன் - அம்பிகை சிவகாமசுந்தரி.
உற்சவ மூர்த்திகளாக - வலம்புரி விநாயகர், சிவசுப்ரமண்யன், சந்திரசேகரர், அஸ்திர தேவர், மாரியம்மன், சூல பிடாரி அம்மன், பதஞ்சலி , ஆதிசேஷன் - என திருமேனிகள் விளங்குகின்றன.
திருச்சுற்றில் ஸ்ரீராமபிரான் வழிபட்ட ஆதிலிங்கம் உள்ளது.
வள்ளி தேவயானையுடன் அழகே உருவான திருமுருகன் திகழ்கின்றனன்.
மேலும் வருணன் வழிபட்ட லிங்கம் மார்க்கண்டேயர் வழிபட்ட லிங்கம்,
விஸ்வாமித்ரர் வழிபட்ட லிங்கம் ஆகியனவும் விளங்குகின்றன.
ஸ்ரீதுர்காம்பிகை - மகிஷத்தின் தலை மேல் அல்லாமல் கமல பீடத்தில் நின்றருள்கின்றனள். மண்டபத்தில் நவகன்னியர் விளங்குகின்றனர்.
ஆதிசேஷன் வணங்கியதால் - ஆதிசேஷனின் சிலாரூபமும் விளங்குகின்றது.
சித்ரா பௌர்ணமியை அனுசரித்து பெருந்திருவிழா நிகழும் இத்திருக் கோயிலில் அனைத்து வைபவங்களும் சிறப்பாக நிகழ்கின்றன.
கும்பகோணம் - மன்னார்குடி - முத்துப்பேட்டை.
நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி - முத்துப்பேட்டை.
- என சிறப்பான வழித்தடங்கள்.
முத்துப்பேட்டை - மன்னார்குடி சாலையில் இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது கோவிலூர்.
கோயிலுக்குச் செல்லும் வழி |
சாலையில் இருந்து மேற்கு முகமாக அரை கி.மீ., தூரம் நடந்தால் மாமரங்கள் சூழ்ந்திருக்கும் திருக்குளத்தைக் காணலாம். திருக்குளத்தின் எதிரே கிழக்கு நோக்கியதாக திருக்கோயில்.
திருக்கோயில் ஐந்து நிலைகளுடன் கூடிய எழிலான ராஜகோபுரத்துடன் விளங்குகின்றது.
இயற்கை எழில் கொஞ்சும் கிராம சூழ்நிலையில் திருக்கோயில் திகழ்கின்றது.
உபதேசத் திருத்தலம் என்பதால் - மாணவ மாணவியர் வந்து வணங்கி நலம் பெறுகின்றனர்.
மேலும் திருக்கோயிலின் சார்பாக முத்துப்பேட்டையில் பெரியநாயகி அம்பாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீராமபிரான் உபதேசம் பெற்ற இத்திருத்தலத்தில் நவக்கிரகங்கள் இல்லை!..
நவக்ரக தோஷம் நீங்கும் திருத்தலம்!..
சிவகதி எய்திய என் தந்தைக்கு நீர்க்கடன்கள் செய்யப்பட்டது - இங்கே தான்!..
இங்கே குவைத்தில், நண்பர் ஒருவருக்காக - நள்ளிரவு பூஜை செய்தபோது - கூடியிருந்த அனைவரும் வியக்கும் வண்ணம் பிரசன்னமாகி - பூஜையை நடத்திக் கொடுத்தவர் ஸ்ரீ ஆஞ்சநேயப்பெருமான்!..
ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியின் அன்பினில் தோய்ந்து,
ஸ்ரீஆஞ்சநேய ஜயந்தியாகிய இந்த நன்னாளில் -
ஸ்ரீஅனுமன் சிவவழிபாடு செய்த திருத்தலப் பதிவு அவருக்கே காணிக்கை!..
காசியிலிருந்து ஸ்ரீராமனுக்காக - சிவலிங்கம் கொணர்ந்தவர் - ஸ்ரீஅனுமன்.
அனுமன் ஈசனை வணங்கிய தலங்களுள் பிரதானமாக விளங்கும் - இராமேஸ்வரத்திற்கு முந்தையதாக விளங்குவது -
திரு உசாத்தானம் எனும் கோயிலூர்.
ஸ்ரீராமசந்த்ர மூர்த்தியுடன் -
ஆதிசேஷ அம்சமாகிய இளையபெருமாளும்
பெரிய திருவடியாகிய கருடனும்
சிறிய திருவடியாகிய ஆஞ்சநேயனும்
- வணங்கிய அற்புதத் திருத்தலம் -
திரு உசாத்தானம் எனும் கோயிலூர்.
திருஞானசம்பந்தப் பெருமான் தமது திருப்பதிகத்தில் இவ்வரலாற்றினைக் குறிப்பிடுவதோடு,
தில்லையான் உறைவிடம் திரு உசாத்தானமே!.. - என்றும் புகழ்கின்றார்.
நீரிடைத் துயின்றவன் தம்பி நீள் சாம்புவான்
பேருடைச் சுக்ரீவன் அனுமன் தொழக்
காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்தஎம்
சீருடைச் சேடர்வாழ் திருஉசாத் தானமே!.. (3/33)
திருஞானசம்பந்தர்.
திருச்சிற்றம்பலம்.
* * *
very great information's.. Thanks for sharing.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
மூல அனுமார் கோயில் பல முறை சென்றுள்ளேன். தற்போதைய தங்களின் பதிவுமூலமாக கூடுதல் செய்திகளை அறிந்தேன். எனது ஆய்வின்போது சைவ சித்தாந்த அறிஞர் முனைவர் வீ.ஜெயபால் அவர்கள் தந்த தகவலின் அடிப்படையில் பல ஆண்டுகளுக்கு முன்பாக இக்கோயிலின் பின்புறம் அமர்ந்த நிலையிலுள்ள மகாவீரர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
கூடுதல் தகவல்களை அளித்தமைக்கு மிக்க நன்றி..
தஞ்சை மூல அனுமார் கோயில் பற்றி அறியாத பல செய்திகளைத்
பதிலளிநீக்குதங்களால் இன்று அறிந்தேன்
நன்றி ஐயா
அன்புடையீர்..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
சிறப்பான குறளுடன் ஆரம்பித்து, புதிய ஆலயத்தின் சிறப்பை அறிந்தேன்... நன்றி ஐயா...
பதிலளிநீக்குஅன்பின் தபாலன்..
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..
காலையில் கண்
பதிலளிநீக்குகண்டது ஆஞ்சயேயம்...
கருதும் மனதும் நிறைந்தது...
மூலை ஆஞ்சநேயர்...என்
மூளையில் நிறைந்து விட்டார்...
அறியாத கோவில்களை அறியத்தந்தமைக்கு நன்றி.
ஆஞ்சநேயர் பிறந்தநாளில் இப்பதிவு...நன்று ஐயா
அன்புடையீர்..
நீக்குதங்கள் அன்பின் வருகை கண்டு மகிழ்ச்சி..
கருத்துரைக் கவிதை நன்று.. அருமை..
வாழ்க நலம்..
நானும் தஞ்சை மூலை ஆஞ்சநேயர் பற்றி கேள்வி பட்டு இருக்கிறேன். தெரிந்தவர் அந்த கோவிலுக்கு வரும் படி அழைத்துக் கொண்டே இருப்பார். ஒரு முறை பார்க்கும் ஆவலை உங்கள் பதிவு ஏற்படுத்தி விட்டது.
பதிலளிநீக்குமார்கழி 6ம் நாள் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பகிர்வும் கோவில்கள் தரிசனமும் அருமை.
வாழ்த்துக்கள்.
அன்புடையீர்..
நீக்குஅவசியம் வாருங்கள்!.. அனுமனைத் தரிசித்து அருள் பெறுங்கள்!..
தங்கள் இனிய வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..
தஞ்சை சென்றிருந்தாலும் இக்கோவிலுக்குச் சென்றதில்லை. அருமையான தகவல்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குஅன்பின் வெங்கட்
நீக்குஅவசியம் தஞ்சை அனுமனைத் தரிசியுங்கள்!..
தங்கள் இனிய வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..