குறளமுதம்
உள்ளத்தாற் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன் (294)
தன் உளம் அறியப் பொய் இல்லமல் நடப்பானே ஆயின்
அவன் உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் உள்ளவன் ஆவான்.
பொய் கூறிய குற்றத்தினால் அல்லவோ
நான்முகனுக்கு சந்நிதி இல்லாமற்போனது!..
நான்முக பிரம்மனுக்கே அந்த நிலை எனில்
நமக்கு!?...
* * *
சூடிக் கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை - 08
கீழ்வானம் வெள்ளென்று எருமைச் சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்!..
ஓம் ஹரி ஓம்
* * *
ஆலய தரிசனம்
தஞ்சை புன்னை நல்லூர்
புன்னைநல்லூர் ஸ்ரீ கோதண்டராமர் |
மூல மூர்த்தியாக ஸ்ரீராமசந்திரன்.
வைதேகியும் இளைய பெருமாளும் ஆஞ்சநேயரும் அருகிருக்க சௌந்தர்ய விமானத்தின் கீழ் கிழக்கு முகமாக நின்ற திருக்கோலம்.
தென்னகத்தில் ஸ்ரீ ராமனுக்கு எனத் திகழும் திருக்கோயில்கள் - அநேகம்!..
சிறப்புற்று விளங்கும் அவற்றுள்,
தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீகோதண்டராமர் திருக்கோயிலும் ஒன்றாகும்.
திருமூலஸ்தானத்தில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீராமபிரான், லக்ஷ்மணன், சீதா, அனுமன் - திருமேனிகள் சாளக்ராமத்தினால் வடிக்கப்பட்டவை.
சாளக்ராமம் என்பது ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அம்சம்.
ஐந்தரை அடி உயரம் கொண்டு கன கம்பீரமாகத் திகழும் ஸ்ரீ ராமபிரானின் திருமுக மண்டல தரிசனம் அதி அற்புதமானது.
வலப்புறம் வைதேகியும் இடப்புறம் இளைய பெருமாளும் அருகே மாருதியும் திகழ்கின்றனர்.
இராமபிரானுடன் இருப்பவர் சுக்ரீவன் என்றும் சொல்கின்றனர்.
இந்த சாளக்ராமம் தஞ்சைக்கு வந்தது எப்படி!?..
தஞ்சை மராட்டிய மன்னர் குடும்பத்திற்கு ஒரு திருமண பந்தம் - நேபாள ராஜ குடும்பத்துடன் நிகழ்ந்தது. அங்கே பெண் எடுத்தனர்.
அந்தத் திருமணத்தின் போது, மாப்பிள்ளை வீட்டுக்கு - நேபாளத்தில் இருந்து சீதனமாக வந்தவை -
சாளக்ராமங்களும் துளசிமாடமும் !..
தஞ்சை அரண்மனை பொக்கிஷ அறையில் பல காலம் இருந்த சாளக்ராமம் - தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டிய நேரமும் வந்தது.
தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னன் பிரதாபசிம்மன் (1739 - 1763) தனக்கொரு வாரிசு வேண்டி வரங்கேட்டு நின்றபோது - இறை திருப்பணி இன்னலைப் போக்கும் என்று அறியப்பட்டது.
அப்போது, விலைமதிப்பில்லாத சாளக்ராமங்கள் - அரண்மனையில் இருப்பதை உணர்ந்த மன்னன் - அதில் தெய்வத் திருமேனிகளை வடித்து திருக்கோயிலை எழுப்பினார்.
பிரதாப சிம்மன் காலத்தில் ஸ்ரீராம பிரானுக்கு என்று இன்னொரு கோயிலும் எழுப்பப்பட்டது. அது நீடாமங்கலம் ஸ்ரீசந்தான ராமர் திருக்கோயில்!..
கண்டகி நதிக்கரையில் முக்திநாத் எனும் புண்ணிய ஸ்தலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட சாளக்ராமம் ஆனதால் - ஸ்ரீகோதண்ட ராமன் பிறவிப் பெருங்கடலில் இருந்து கரையேற்றி முக்தி நலம் அருள்கின்றான் - என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
ஸ்ரீ ஜயவீர ஆஞ்சநேயர். அபய ஹஸ்த்துடன் இடக்கரத்தில் தாமரை மலரினை ஏந்தியிருக்கின்றார். இது சர்வமங்கலங்களையும் அருளும் திருத்தோற்றம்.
இவருடைய சந்நிதியின் முன் மண்டபத்தில் - தரையிலும் மேல் விதானத்திலுமாக ராசி மண்டலம் பதிக்கப்பட்டுள்ளது.
ஜாதகத்தின் ராசிக் கட்டம் போலவே பன்னிரு ராசிக் குறியீடுகளும் கீழேயும் - நேர் மேலேயும் பதிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கட்டத்தில் நாம் - நமக்கு உரிய ராசியில் நின்று ஆஞ்சநேயரைப் பணிந்து வணங்கினால் சகல தோஷங்களும் விலகி நன்மைகள் சேர்கின்றன என்கின்றனர்.
சற்று உயரமாக படிக்கட்டுகளுடன் விளங்கும் ராஜகோபுரம்.
எழிலாக விளங்கும் திருக்கோயில்.
திருச்சுற்றின் தென்புறம் வடக்கு முகமாக ஸ்ரீ சுதர்சனர் சந்நிதி.
வட புறத்தில் தல விருட்சம் புன்னை தழைத்திருக்கின்றது.
அதன் நிழலில் ஸ்ரீராம பாதம் திகழ்கின்றது.
அருகில் ஸ்ரீ ஜயவீரஆஞ்சநேயர் சந்நிதி. விசாலமான மண்டபத்துடன் தனிக்கோயிலாகவே திகழ்கின்றது.
திருக்கோயிலின் வெளியே - எதிர்ப்புறத்தில் தேர்நிலை. தற்போது தேர் இல்லை.
பிரம்மாண்டமாகத் திகழும் தேர் நிலையில் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.
பங்குனி மாதத்தில் பத்து நாள் விழாவாக ஸ்ரீராமநவமி கொண்டாடப்படுகிறது.
நேற்று ஆஞ்சநேய ஜயந்தியை முன்னிட்டு ஸ்ரீஜயவீர அஞ்சநேயருக்கு மங்கள திரவியங்களால் திருமஞ்சனமும் சிறப்பு அலங்காரமும் நிகழ்ந்துள்ளது.
சில வருடங்களுக்கு முன் மிகப்பெரிய அளவில் திருப்பணிகள் நடைபெற்று மார்ச் 17/ 2011 அன்று மஹா சம்ப்ரோக்ஷணம் நிகழ்ந்தது.
நித்ய பூஜைகள் பகவத் பிரார்த்தனைகளுடன் சிறப்பாக நடைபெறுகின்றன.
தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு சிறப்பான பேருந்து வசதிகள் உள்ளன.
மாரியம்மன் கோயிலுக்குப் பின்புறம் சற்று தூரத்தில் ஸ்ரீ கோதண்ட ராமர் திருக்கோயில் உள்ளது.
சமீபத்தில் எழுப்பப்பட்ட திருக்கோயில். சாந்நித்யம் நிறைந்து திகழ்கின்றது.
ஆழ்வார்கள் கொண்டாடி மகிழ்ந்த கோலாகலத்தை நாம் உணரலாம்.
மன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே
தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர்
கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் கண்மணியே
என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ!.. (719)
குலசேகர ஆழ்வார்.
வெய்யஆழி சங்குதண்டு வில்லும்வாளும் ஏந்துசீர்க்
கையசெய்ய போதில்மாது சேருமார்ப நாதனே
ஐயிலாய ஆக்கைநோய றுத்து வந்து நின்னடைந்து
உய்வதோர் உபாயம்நீ எனக்குநல்க வேண்டுமே!.. (848)
திருமழிசைப் பிரான்.
* * *
சிவ தரிசனம்
மாணிக்கவாசகப் பெருமான் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல் 07
அன்னே இவையு ஞ்சிலவோ பலஅமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகு ஒப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுது என்றெல்லாம்
சொன்னோம் கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்!..
* * *
திருக்கோயில்
ஹரித்வாரமங்கலம்
இறைவன் - பாதாளேஸ்வரர்
அம்பிகை - அலங்காரவல்லி
தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம்
தலவிருட்சம் - வன்னி
தலப்பெருமை
நான்முகனும் நாரணனும் வணங்கி வழிபட்ட திருத்தலம்.
நம்முள் யார் பெரியவர் என்ற விவாதம் நான்முகனுக்கும் நாரணனுக்கும்!..
அவர்களுக்கு நடுவே - மகாஜோதி ஒன்று மூண்டெழுந்து நின்றது.
அந்த ஜோதியின் அடி, முடி கண்டு வருபவர் எவரோ - அவரே பெரியவர்!.. - என அசரீரி ஒலித்தது.
அதன்படி, நான்முகன் அன்ன வடிவு கொண்டு ஜோதியின் திருமுடியைக் காணச் சென்றார்.
நாரணனோ - வராஹ ரூபமாகி - திருவடியைத் தேடி - பூமியைக் குடைந்து பாதாளம் புகுந்தார்.
அந்த வைபவம் நிகழ்ந்தது இந்தத் திருத்தலத்தில்!..
திருமுடியைத் தேடிச் சென்ற நான்முகன் - கையில் கிடைத்த தாழம்பூவுடன் - திருமுடியினைக் கண்டதாக பொய்யுரைத்து - தலைமைத்துவத்தை இழந்து நின்றார்.
அந்தப் பாவம் நீங்க தீர்த்தம் கொண்டு சிவபூஜை நிகழ்த்தி பாவம் நீங்கப் பெற்ற திருத்தலம் - ஹரித்வார மங்கலம்.
த்வாரம் - எனில் துளை, வாசல் - என்றெல்லாம் பொருள் உண்டு.
வராஹ ரூபங்கொண்டு ஹரி துளைத்த த்வாரம் - எனவே ஹரித்வாரமங்கலம்.
இன்றைக்கு அரித்துவாரமங்கலம் என்று சொல்கின்றனர்.
ஆனால் - தேவாரத்தில் இத்திருத்தலம் அரதைப்பெரும்பாழி எனப்படுகின்றது.
பின்னும் - பூமியைத் துளைத்துச் சென்ற உக்ரம் தணியாதவராக ஸ்ரீ வராஹ மூர்த்தி திகழ்ந்த போது -
ஸ்ரீ வராக மூர்த்தியின் - மருப்பு - கொம்பினை சிவபெருமான் நீக்கி அதனைத் தன் மார்பில் அணிந்து கொண்டார் என்பது ஐதீகம்.
திருஞான சம்பந்தப் பெருமான், அம்பிகையின் ஞானப்பாலுண்டு - பாடிய முதற் பதிகத்திலேயே -
முற்றலாமை இளநாகமோடு ஏன முளைகொம்பு அவை பூண்டு - என்று இந்த சம்பவத்தினைக் குறித்தருள்கின்றார்.
ஏனம் என்றால் பன்றி. ஸ்ரீ வராகம்!..
தேவாரத்தில் பல திருப்பாடல்களில் பயின்று வரும் இந்த சம்பவம் - கோளறு பதிகத்திலும் -
என்பொடு கொம்பொடாமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே.. - என குறிக்கப்படுகின்றது.
பாற்கடலில் அரவணையில் அனந்தபத்மநாபன் எந்நேரமும் சிவ சிந்தனை கொண்டு திகழ,
திருக்கயிலை மாமலையில் தேவியுடன் வீற்றிருக்கும் போதும் ஸ்ரீ மஹா விஷ்ணுவின் ஸ்பரிசத்துடன் ஈஸ்வரன் விளங்குகின்றனன் என்பது ஐதீகம்.
அரியல்லால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே!.. - என்பது அப்பர் பெருமானின் திருவாக்கு.
மூலஸ்தானத்தில் - சிவலிங்கத்தின் எதிரில் பெரும் பள்ளம் ஒன்று கற்களால் மூடப்பட்டுள்ளது.
அம்பிகை அலங்காரவல்லி!.
மூலஸ்தானத்தின் வலப்புறமாக கிழக்கு நோக்கிய சந்நிதி.
கருணைக் கண் கொண்டு நோக்கி இளங்கன்னியரின் திருமணத் தடைகளை நீக்கியருள்கின்றனள்.
சப்த விநாயக திருக்கோலங்கள் - விளங்குகின்றன.
திருச்சுற்றில் - நால்வர்க்கருளும் தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர்.
சிறப்புடன் - விநாயகர், வேலவன் சந்நிதிகள்.
திருச்சுற்றில் சப்த கன்னியர் விளங்குகின்றனர்
நடன சபையில் பதஞ்சலி வியாக்ரபாதர் கண்டு மகிழ ஆடற் திருக்கோலத்தில் ஐயன் நடராஜப் பெருமான். அருகில் அன்னை சிவகாம சுந்தரி!..
சந்திர சேகரர், பைரவர் திருமேனிகளுடன் - சூரிய சந்திரர்.
குருமார்களாகிய சமயக் குரவர்கள் நால்வரும் திகழ்கின்றனர்.
மும்மூர்த்திகளும் விளங்கும் இத்திருத்தலத்தில் நவக்ரக மண்டலம் இல்லை.
பிற்காலத்தில் சனைச்சரர் மட்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.
திருக்கருகாவூர் முல்லை வனம்.
அவளிவநல்லூர் பாதிரி வனம்.
ஹரித்வாரமங்கலம் வன்னி வனம் என விளங்குகின்றது.
திருஞான சம்பந்தப் பெருமான் பாடிப் பரவிய திருத்தலம்.
காவிரியின் தென்கரைத் தலங்களுள் தொண்ணூற்று ஒன்பதாவது திருத்தலம்.
தஞ்சை பழைய பேருந்து நிலயத்திலிருந்து ஹரித்வாரமங்கலத்திற்கு நகரப் பேருந்துகள் இயங்குகின்றன. கும்பகோணத்திலிருந்தும் பேருந்து வசதி உள்ளது.
புற்றரவம் புலித்தோலரைக் கோவணந்
தற்றிர வில்நட மாடுவர் தாழ்தரு
சுற்றமர் பாரிடந் தொல்கொடி யின்மிசைப்
பெற்றர்கோ யில் அரதைப் பெரும்பாழியே!.. (3/30)
திருஞானசம்பந்தர்.
திருச்சிற்றம்பலம்
* * *
கோயிலுக்குச் சென்று வந்த நினைவுகள் மீண்டும் மலர்கின்றன ஐயா
பதிலளிநீக்குநன்றி
அன்புடையீர்..
நீக்குதங்களின் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
கோயிலின் சிறப்புகள் இன்று முழுமையாக அறிந்து கொண்டேன் ஐயா... நன்றி...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குதங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
வணக்கம் ஐயா!
பதிலளிநீக்குதிருப்பாவை, திருவெம்பாவையொடு அற்புதமான கோயில்களின் தரிசனமும் வரலாறுகளும் கண்டோம்!
அத்தனை சிறப்புகளையும் மனத்துள் பதித்துக் கொள்கின்றேன்!
அருமை! நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!
அன்பின் சகோதரி..
நீக்குதங்களின் இனிய வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
மார்கழி கோலங்கள் மிக அருமையாக போகிறது. திருபாவை, திருவெம்பாவை பாடல்கள், கோவில்கள், தலவரலாறு எல்லாம் சிறப்பாக இருக்கிறது பதிவு. படங்கள் எல்லாம் அழகு.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.
அன்புடையீர்..
நீக்குஎல்லாம் தங்களுடைய ஆசிகள்!..
தங்களின் இனிய வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
திருப்பம் தரும் திருத்தலங்கள்
பதிலளிநீக்குவிருப்பமுடன் படித்தறிந்தேன்!
ஆன்மீக ஒளி விளக்கை
ஏற்றி விட்டீர்!
அருள் ஓளித் தேடி
அலைந்தயெனக்கு!
நன்றியுடன்,
புதுவை வேலு
அன்புடையீர்..
நீக்குதங்கள் இனிய வருகையும் கருத்துரையும் சிறப்பு. மகிழ்ச்சி.. நன்றி..