குறளமுதம்
வடுவூர் ஸ்ரீராமன் |
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.(095)
பணிவு இன்சொல் இவையே ஒருவனுடைய உண்மையான
அணிகலன்கள். மற்றவை அணிகலன்கள் அல்ல!..
ஸ்ரீராமா!.. உன் திருமார்பிலும் இவைதானே
அணிகலன்களாகத் திகழ்கின்றன!..
* * *
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை 09
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூமம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமன் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்!..
ஓம் ஹரி ஓம்
* * *
ஆலய தரிசனம்
வடுவூர்.
ஸ்ரீ கோதண்டராமர் மூலவராக விளங்கும் திருக்கோயில்.
ஆதியில் இந்தக் கோயில் ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபாலன் விளங்கிய திருக்கோயில்.
மராட்டிய மன்னர் சரபோஜி அவர்களின் காலத்தில் நிகழ்ந்தது ஒரு அற்புதம்.
அதன் விளைவாக - ஸ்ரீபுஷ்பக விமானத்தின் கீழ் - ஸ்ரீசீதா ஸ்ரீ லக்ஷ்மணன் ஸ்ரீ ஆஞ்சநேயர் உடனுறைய ஸ்ரீ கோதண்டராமன் குடிகொண்டான்.
புஷ்பக விமானத்தின் கீழே மட்டும் ஸ்ரீராமன் குடி கொள்ளவில்லை.
பல்லாயிரம், பல்லாயிரம் அன்பர்களின் நெஞ்சங்களிலும் குடி கொண்டான்.
அந்தப் புன்னகை தவழும் திருமுகம் -
எப்பேர்ப்பட்ட கல்நெஞ்சத்தையும் உருக வைக்கும்.
அன்பினில் அப்படியே உறைய வைக்கும்!.
இருநூறு ஆண்டுகளுக்கு முன் ஒருநாள்..
தஞ்சை அரண்மனை. மன்னரின் சயன அறை.
தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்தார் மன்னர் சரபோஜி. உடலெல்லாம் வியர்த்திருந்தது.
இத்தனைக்கும் உப்பரிகையின் சாளரங்கள் திறந்தே இருந்தன.
ஆங்காங்கே - தூங்காமணி சுடர் விளக்குகள்!..
உப்பரிகையின் அருகில் வந்தார். இன்னும் சற்று நேரத்தில் விடியல் என்பதாக இளஞ்சிவப்பு கீழ்வானில் பரவிக் கொண்டிருந்தது.
ராஜகோபால பீரங்கி மேட்டில் பெரிதான தீவட்டி வெளிச்சம்.
அதற்கடுத்து நேர் கிழக்காக - புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலுக்குச் செல்லும் வீதி நெடுகிலும் மின்மினிப் பூச்சிகளாக ஒளி சிந்தும் தீவட்டிகள் கண்களுக்குப் புலப்பட்டன.
அதற்கும் அப்பால் - சமுத்ர ஏரியின் அலைகள் கரையில் மோதி சலசலத்துக் கொண்டிருந்தன.
இதோ - பொழுதும் நன்றாக விடிந்து விட்டது.
நித்யானுஷ்டானங்களின் படி அரண்மனையின் உள்ளேயே ஸ்ரீ சந்த்ர மௌலீஸ்வர பூஜையை முடித்தார். மாதா பவானியின் திருவடிகளைத் தொட்டு வணங்கினார்.
அமைச்சர் எதிர் வந்து வாழ்த்துரைக்க - தன் கண்ட கனவை அவரிடம் விவரித்தார்.
அருத்த சில மணி நேரத்தில் திறமையான ஆட்களுடன் - அதே கிழக்கு நோக்கிப் புறப்பட்டார் - தலைஞாயிறு எனும் கிராமத்தை நோக்கி!..
சுறுசுறுப்பான பயணம். மிக விரைவிலேயே இலக்கினை நெருங்கி விட்டனர்.
மன்னர் வருகையை அறிந்து ஊர் முழுதும் திரண்டு நின்று வரவேற்றது.
அவர் கண்கள் தேடின.. அதோ.. அதோ.. அந்த ஆலமரம் தான்!..
அங்கே தோண்டுங்கள்!.. - அமைச்சரிடமிருந்து ஆணை பிறந்தது.
பூமிபூஜை செய்து விட்டு வெறுங்கைகளாலேயே - மண்ணைக் கிளறி அள்ளி எடுத்தனர் - பணியாட்கள்..
வேடிக்கை பார்த்த மக்களுக்கோ ஏதும் புரியவில்லை.. சிறு பொழுதில் -
மண்ணைக் கிளறிக் கொண்டிருந்தவர்களின் முகத்தில் பிரகாசம்.
சரபோஜி மன்னர் ஆனந்தப் பரவசத்தில் இருந்தார்.
ஆயத்தமாக இருந்த மங்கலத் திரவியங்களைக் கொண்டு நீராட்ட - ஒவ்வொரு விக்ரகமாக வெளிப்பட்டது.
மக்கள் ஆரவாரித்தனர். தாரை தாரையாக ஆனந்தக் கண்ணீர் வழிய மண்ணில் விழுந்து புரண்டனர்..
என்ன புண்ணியம் செய்தனை மனமே!.. - என அரற்றி மலைந்தனர்.
ஹிரண்ய கர்ப்பமாக இருந்து வெளிப்பட்ட தெய்வத் திருமேனிகள் - ஸ்ரீராமர், சீதா, லக்ஷ்மணன், ஆஞ்சநேயர்!..
ஸ்ரீராமபிரானுக்காக தந்தப் பல்லக்கு தயாரானது!..
மக்கள் விரும்பி நின்றார்கள்.. ராமன் இங்கேயே இருக்கட்டும் என்று!..
வேறு திருமேனிகளைக் கொண்டு புதிய ஆலயம் எழுப்ப ஏற்பாடுகள் செய்து விட்டு மன்னர் புறப்பட்டார். நீண்டதூரப் பயணம்.
மன்னார்குடியைக் கடந்தாயிற்று. வழியில் தங்க வேண்டிய அவசியம்.
இதோ வடுவூர்!..
ஊர் மக்கள் சந்தோஷத்துடன் வரவேற்று வசதிகளைச் செய்து கொடுத்தனர். சாமி சிலைகள் வருகின்றன என்று ஏரிக்கரையில் இருந்த பெருமாள் கோயிலைத் திறந்து விட்டனர்.
வேணுகோபாலன் குடிகொண்டிருந்த கோயில் மண்டபத்தில் கொலுவிருந்தன விக்ரகங்கள். உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பேரழகைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு தெரியாது - அவ்வண்ணமே - கோகுலத்துக் கள்வன் கோபால கிருஷ்ணனும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பது!..
மறுநாள் பொழுதும் விடிந்தது. புறப்படவேண்டியதுதான்!..
ராமன் வடுவூர் எல்லையைக் கடந்தான் என்றால் - நாங்களும் எங்கள் உயிர்களைக் கடந்தவர்களாவோம்!..
மக்களின் அன்பினில் மனம் நெகிழ்ந்தார் மன்னர்.
வேணுகோபாலன் தன் இருப்பிடத்தை விட்டுக் கொடுத்தான். புதிய சிலா ரூபங்கள் வடிக்கப்பட்டு பிரதிஷ்டை ஆகின. உற்சவ மூர்த்திகளாக ஸ்ரீராமனும் சீதாதேவியும் இளைய பெருமானும் ஆஞ்சநேயரும்!..
ராவணன் வீழ்ந்த பிறகு சீதையை மீட்டுக் கொண்டு ஸ்ரீராமன் அயோத்திக்குப் புறப்பட்ட வேளையில் - வனவாசத்தின் போது ஸ்ரீராமனுடன் மகிழ்ந்திருந்த முனிவர்கள் ராமனைப் பிரிவதை எண்ணித் தவித்தனர்.
அவர்களின் தவிப்பினை உணர்ந்த ஸ்ரீராமன் - தன்னைத் தானே உகந்து இந்த திருமேனியைத் தந்தான். ராமனின் திருமேனி அழகில் மயங்கிய முனிவர்கள் நாளும் ஆராதித்து மகிழ்ந்தனர்.
காலவெள்ளத்தில் பூமாதேவியின் மடியில் ஐக்கியமாகின சிலைகள்..
தகுந்த காலத்தில் வெளிப்பட்டு தானே விரும்பி ஸ்ரீராமன் இன்று மகிழ வனம் எனப்பட்ட வடுவூரில் விரும்பி கோயில் கொண்டான்!.. - என தேவஆரூடம் சொல்லிற்று.
இன்று வடுவூர் ஸ்ரீ கோதண்டராமனுக்கு உலகெங்கும் பக்தர்கள்..
மங்களாசாசனம் பெற்ற திவ்ய தேசத்திற்கு இணையாக கோலாகலங்கள்..
திருமார்பில் மஹாலக்ஷ்மி பதக்கத்துடன் சாளக்ராம மாலையணிந்து சேவை சாதிக்கின்றான்.
அக்ஷய திருதியை அன்று கருட வாகனத்தில் ஸ்ரீராமன் எழுந்தருள்கின்றான்.
தக்ஷிண அயோத்தி எனப்படுகின்ற க்ஷேத்ரத்தில் ஸ்ரீராமநவமியை ஒட்டி பிரம்மோற்சவம் நிகழ்கின்றது.
புனர்பூசத்தன்று திருமஞ்சனம். சீதாதேவியுடன் திருவீதிஉலா.
திருக்கல்யாண வைபவம் |
ஐந்தாம் நாள் ஆண்டாள் திருக்கோலம். ஏழாம் நாளில் திருக்கல்யாண வைபவம். ஒன்பதாம் நாள் திருத்தேரோட்டம்.
ஸ்ரீராமனுக்கு மாசி மகத்தன்று மங்கல நீராட்டு.
திருக்கோயிலின் திருச்சுற்றில் ஹயக்ரீவர் சந்நிதி. புரட்டாசியில் இவருக்கு காயத்ரி ஹோமமும் லட்சார்ச்சனையும் சிறப்பாக நிகழ்கின்றது.
ஆண்டாள், ஆழ்வாராதிகள் சந்நிதிகளும் திகழ்கின்றன.
சரயு தீர்த்தம். மகிழ மரம் தலவிருட்சம்.
மன்னர் செய்தளித்த பெருந்தேர் இன்றும் விளங்குகின்றது.
தஞ்சையிலிருந்து 20 கி.,மீ. தொலைவில் மன்னார்குடி செல்லும் சாலையில் உள்ளது வடுவூர்.
புகழ்பெற்ற பறவைகளின் சரணாலயமான வடுவூர் ஏரியை ஊருக்கு முன்பாகக் காணலாம்.
வடுவூர் ஏரி பறந்து திரியும் பறவைகளுக்குச் சரணாலயம்!..
வள்ளல் ஸ்ரீராமனின் பாதம் வருந்துகின்ற உயிர்களுக்குச் சரணாலயம்!..
தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வடுவூருக்கு நகர பேருந்துகள் இயங்குகின்றன. மேலும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மன்னார்குடி செல்லும் அனைத்து புறநகர் பேருந்துகளும் வடுவூரில் நின்று செல்கின்றன.
தஞ்சையிலிருந்து 20 கி.,மீ. தொலைவில் மன்னார்குடி செல்லும் சாலையில் உள்ளது வடுவூர்.
புகழ்பெற்ற பறவைகளின் சரணாலயமான வடுவூர் ஏரியை ஊருக்கு முன்பாகக் காணலாம்.
வடுவூர் ஏரி பறந்து திரியும் பறவைகளுக்குச் சரணாலயம்!..
வள்ளல் ஸ்ரீராமனின் பாதம் வருந்துகின்ற உயிர்களுக்குச் சரணாலயம்!..
தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வடுவூருக்கு நகர பேருந்துகள் இயங்குகின்றன. மேலும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மன்னார்குடி செல்லும் அனைத்து புறநகர் பேருந்துகளும் வடுவூரில் நின்று செல்கின்றன.
கந்தரனுபூதியில் - நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருக - என்று அருணகிரிநாதர் சொல்வார்.
மருகனுக்கும் மாமனுக்கும் அது பொருந்தும்!..
நெஞ்சம் எனும் கல் நெகிழ்ந்துருக வேண்டுமாயின்
வடுவூருக்கு வாருங்கள்!..
வடிவழகைப் பாருங்கள்!..
கொங்குமலி கருங்குழலாள் கௌசலைதன் குலமதலாய்
தங்குபெரும் புகழ்ச்சனகன் திருமருகா தாசரதீ
கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென் கருமணியே
எங்கள் குலத்தின்னமுதே இராகவனே தாலேலோ!..(721)
தாமரைமே லயனவனைப் படைத்தவனே தசரதன்றன்
மாமதலாய் மைதிலிதன் மணவாளா வண்டினங்கள்
காமரங்கள் இசைபாடும் கணபுரத்தென் கண்மணியே
ஏமருவும் சிலைவலவா இராகவனே தாலேலோ!..(722)
குலசேகராழ்வார்.
* * *
சிவ தரிசனம்
மாணிக்கவாசகப் பெருமான் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல் 08
கோழி சிலம்புச் சிலம்பும் குருகுஎங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்குஎங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறூம் இவ்வாறோ
ஊழிமு தல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைப் பங்காளனையே பாடேலோர் எம்பாவாய்!..
* * *
திருக்கோயில்
அவளிவநல்லூர்
இறைவன் - சாட்சிநாதர்
அம்பிகை - சௌந்தரவல்லி
தீர்த்தம் - சந்திர புஷ்கரணி
தலவிருட்சம் - பாதிரி
தலப்பெருமை
நான்முகனும் நாரணனும் வணங்கி வழிபட்ட திருத்தலம்.
நம்முள் யார் பெரியவர் என்ற விவாதம் நான்முகனுக்கும் நாரணனுக்கும்!..
அவர்களுக்கு நடுவே - மகாஜோதி ஒன்று மூண்டெழுந்து நின்றது.
அந்த ஜோதியின் அடி, முடி கண்டு வருபவர் எவரோ - அவரே பெரியவர்!.. - என அசரீரி ஒலித்தது.
அதன்படி, நான்முகன் அன்ன வடிவு கொண்டு ஜோதியின் திருமுடியைக் காணச் சென்றார்.
நாரணனோ - வராஹ ரூபமாகி - திருவடியைத் தேடி - பூமியைக் குடைந்து பாதாளம் புகுந்தார்.
ஸ்ரீஹரி - வராஹ ரூபங்கொண்டு துளைத்த த்வாரம் - ஹரித்வாரமங்கலம்!..
திருமுடியைத் தேடிச் சென்ற நான்முகன் - கையில் கிடைத்த தாழம்பூவுடன் - திருமுடியினைக் கண்டதாக பொய்யுரைத்து - தலைமைத்துவத்தை இழந்து நின்றார்.
அந்தப் பாவம் நீங்க தீர்த்தம் கொண்டு சிவபூஜை நிகழ்த்தி, பாவம் நீங்கப் பெற்ற திருத்தலம் - அவளிவநல்லூர்.
பின்னும் - பூமியைத் துளைத்துச் சென்ற உக்ரம் தணியாதவராக ஸ்ரீ வராஹ மூர்த்தி திகழ்ந்த போது -
ஸ்ரீ வராக மூர்த்தியின் - மருப்பு - கொம்பினை சிவபெருமான் நீக்கி அதனைத் தன் மார்பில் அணிந்து கொண்டார் என்பது ஐதீகம்.
திருஞான சம்பந்தப் பெருமான், அம்பிகையின் ஞானப்பாலுண்டு - பாடிய முதற் பதிகத்திலேயே -
முற்றலாமை இளநாகமோடு ஏன முளைகொம்பு அவை பூண்டு - என்று இந்த சம்பவத்தினைக் குறித்தருள்கின்றார்.
ஏனம் என்றால் பன்றி. ஸ்ரீ வராகம்!..
தேவாரத்தில் பல திருப்பாடல்களில் பயின்று வரும் இந்த சம்பவம் - கோளறு பதிகத்திலும் -
என்பொடு கொம்பொடாமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே.. - என குறிக்கப்படுகின்றது.
பாற்கடலில் அரவணையில் அனந்தபத்மநாபன் எந்நேரமும் சிவ சிந்தனை கொண்டு திகழ,
திருக்கயிலை மாமலையில் தேவியுடன் வீற்றிருக்கும் போதும் ஸ்ரீ மஹா விஷ்ணுவின் ஸ்பரிசத்துடன் ஈஸ்வரன் விளங்குகின்றனன் என்பது ஐதீகம்.
அரியல்லால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே!.. - என்பது அப்பர் பெருமானின் திருவாக்கு.
உக்ரமாகத் திகழ்ந்த ஸ்ரீவராஹர் சிவபெருமானின் ஸ்பரிசத்தால் - சாந்தம் அடைகின்றார்.
உக்ரமாகத் திகழ்ந்த ஸ்ரீவராஹர் சிவபெருமானின் ஸ்பரிசத்தால் - சாந்தம் அடைகின்றார்.
அதன் பின் - ஸ்ரீஹரிபரந்தாமன் சிவபூஜை செய்த தலம் எனக் குறிக்கப்படுவது
அவளிவநல்லூர்.
பின்னும் அகத்தியர், காசியபர், கண்வமகரிஷி, சூரியன், சந்திரன் ஆகியோரும் வணங்கிய திருத்தலம்.
இத்தலத்தில் சிவாச்சார்யார் ஒருவர் இரு பெண்மக்களுடன் சிவனருளைச் சிந்தித்து வந்தித்து வாழ்ந்து வந்தார்.
இறையருளால் அவர்களுள் மூத்தவளுக்கு மங்கல நிகழ்வாக திருமணம் நடந்தது. மணமக்கள் - இன்புற்று வாழ்ந்தனர்.
மாதங்கள் சில கழிந்த நிலையில் - அன்பிற்சிறந்த மனைவியைப் பிரிந்து கணவன் பொருள் தேடியும் இறையருள் தேடியும் வடதிசை நோக்கிப் புறப்பட்டான்.
மனையாளும் தன் மனதைக் கல்லாக்கிக் கொண்டு விடை கொடுத்தனள்..
ஆண்டுகளும் ஒன்று இரண்டெனக் கழிந்தன..
ஒருநாள் வைகறைப் பொழுதில் - அருள் தேடச்சென்ற மணாளன் பெரும் பொருளுடன் மீண்டும் வந்தான்..
ஊரும் உறவும் அவனை அடையாளங்கண்டு கொண்டு கூடி நின்று வரவேற்று மகிழ்ந்தனர்.
தான் கொணர்ந்த பொருள்களுடன் மாமன் மனைக்கு ஏகியவனின் கண்கள் ஆவலினால் அங்குமிங்கும் அலைந்தன!..
அவனது உள்ளக்கிடக்கையை உணர்ந்து கொண்டோர் - வீட்டினுள் சென்று அவனது மனையாளை அழைத்து வந்தனர்.
அன்புடன் - தன் மனையாளின் முகத்தினை நோக்கியவன் அதிர்ச்சியினால் மயங்கிச் சாய்ந்தான்.
அவனுக்கு மயக்கம் தெளிவித்தனர் ஆங்கிருந்தோர்.
மயக்கம் தீர்ந்தவன் கேட்ட கேள்வி - யாரிவள்?..
இவள் உன் மனையாள்!..
இல்லை.. இல்லை.. இவள் யாரோ!.. அதோ.. அவள் தான் என் மனையாள்!..
இப்போது உறவினர் மயங்கி விழாத குறை.
காரணம் அவன் சுட்டிய திசையில் - அவன் மனைவியின் தங்கை!..
என்ன இது புதிர்!?.. பார்வையற்ற குரூபியான இவளா என் மனையாள்?.. என் மனையாள் அழகுச்சிலை போலிருப்பாள். அவளல்ல இவள்!..
ஊரார் நடந்ததைக் கூறினர்.
நீ சொல்வது உண்மைதான். அழகுச்சிலை போலிருந்த உன் மனையாள் பெரியம்மை நோயினால் அழகை இழந்ததோடு கண்களையும் இழந்தாள்..
அங்கே நிற்பவள் உன் கொழுந்தியாள்.. உன் மாமனுக்கோ வயதாகி விட்டது. பார்வையற்ற இவளை யார் பராமரிப்பது?.. எனவே - தனது வாழ்க்கையையும் மனதில் நினையாது - அவளே இவளைத் தாங்கி வருகின்றாள்..
இதுநாள் வரையிலும் உன் வரவினை எண்ணி அல்லும் பகலும் அனவரதமும் இறை சிந்தனையில் நின்றிருந்தனர் இருவரும்!..
இனி நீ - உன் மனைவியாகிய இவளை ஏற்றுக் கொள்ள வேண்டும். உன் மனையாளின் தங்கையை மங்கல வாழ்வு கொள்ளுமாறு - அவளை நீ விடுக்க வேண்டும்!.. இதுவே உன் தகுதிக்கு அழகு!..
- என்று ஊரார் முன் நின்று மொழிந்தனர்.
ஆனால் - இவனோ மனம் ஒப்பவில்லை.. இளையவள் தான் என் மனைவி என்று சாதித்தான்.
பார்வை பறிபோனதோடு என் வாழ்வும் பறிபோனதே!. என்னைக் கரம் பிடித்து பொருந்தியவரே - என்னைப் புறந்தள்ளுகின்றாரே!.. - என அழுதாள் மூத்தவள்.
இளையவளோ - என் தமக்கையின் வாழ்வுக்கு நானே தடைக்கல் ஆனேனே!.. - எனக் கதறினாள்..
ஏந்திழையின் குரல் கேட்டு இரங்கினான் எம்பெருமான்..
அங்கே எழுந்திருந்த வினாவிற்கு விடையாக -
விடை வாகனத்தில் அம்பிகையோடு எழுந்தருளினான்.
சௌந்தர்யவல்லி |
அவளே இவள்!.. - என, அவனது மனைவியை அவனுக்கு அடையாளம் காட்டினான் ஈசன்.
உடனிருந்த அம்பிகையோ - ஒரு தாமரைத் தடாகத்தை உருவாக்கி,
மகளே.. இதில் மூழ்கி எழுவாய்!.. - என்று பணித்தாள்..
ஆனந்தமும் ஆச்சர்யமும் மேலிட - அந்தத் தாமரைத் தடாகத்தினில் மூழ்கினாள்..
முன்னைப்பேரழகுடன் இருவிழிகளிலும் ஒளி நிறையப் பெற்று முழுநிலவாக எழுந்தாள் - மூத்தவள்..
வழக்கு முடிந்த மகிழ்ச்சியில் மக்கள் ஆரவாரித்தனர்.
பிழைக்கு வருந்திய மணவாளன் மன்னிப்பு வேண்டித் தொழுதான்.
அத்தோடு இளைய நங்கைக்கும் நல்லவிதமாக மனைமங்கலம் செய்வித்தான்.
தன் மனையாளுடன் - அன்பு கொண்டு வாழ்ந்து செல்வத்துடன் செல்வமாக மேலும் பல செல்வங்களைப் பெற்று அறவழியில் நின்று நிலைத்தான்.
இப்படியொரு மங்கலகரமான சம்பவம் நிகழ்ந்தது - இந்த திருத்தலத்தில்!..
ஈசனே முன் நின்று - அவளே இவள்!.. - என்றதனால் அவளிவநல்லூர்!..
சாட்சியாக சான்று உரைத்ததால் ஈசனின் திருப்பெயர் - சாட்சிநாதர்.
அம்பிகை - அருள் கொண்டு அபலைக்கு வாழ்வளித்ததால் சௌந்தர்யவல்லி!..
மூலஸ்தானத்தினுள் - சிவலிங்கத்தினோடு ரிஷப வாகனராக அம்மையப்பன் எழுந்தருளியுள்ளனர்.
மீனாட்சி அம்மனாக தாமரை ஏந்திய திருக்கோலத்துடன் அம்பிகை ஐயனுடன் காட்சி அளிக்கின்றனள்.
சௌந்தர்யவல்லியின் பேரழகை எடுத்துரைக்க வார்த்தைகளே இல்லை!..
வலம்புரி இடம்புரி என இரு கோலத்தில் விநாயகர் காட்சியளிக்கின்றார்.
திருக்கோயிலில் சப்த கன்னியர் திகழ்கின்றனர்.
அழகு கொஞ்சும் திருக்கோயில்.
கண்பார்வைக் குறைபாடு உள்ளவர்களும் தோல் நோய் உள்ளவர்களும் இங்கு வந்து தீர்த்தமாடி ஈசனையும் அம்பிகையையும் வழிபட்டு நலம்பெறுகின்றனர்.
காவிரித் தென்கரையின் பஞ்ச ஆரண்ய தலங்களுள் இது இரண்டாவது தலம்.
திருக்கருகாவூர் - முல்லை வனம் - உஷத் கால தரிசனம்.
அவளிவ நல்லூர் - பாதிரி வனம் - காலை சந்தி தரிசனம்.
ஹரித்வாரமங்கலம் - வன்னி வனம் - உச்சி கால தரிசனம்.
காவிரித் தென்கரைத் தலமாகிய அவளிவநல்லூர் வெட்டாற்றின் கரையில் உள்ளது.
தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயங்குகின்றன.
கொம்பிரிய வண்டுலவு கொன்றைபுரி நூலொடு குலாவித்
தம்பரிசி னோடுசுடு நீறுதட வந்திடமேறிக்
கம்பரிய செம்பொனொடு மாடமதில் கல்வரை விலாக
அம்பெரிய எய்தபெரு மானுறைவ தவளிவ நல்லூரே!.. (3/82)
திருஞானசம்பந்தர்.
ஏனமாய் இடந்த மாலும் எழில்தருமுளரியானும்
ஞானந்தான் உடையராகி நன்மையை அறியமாட்டார்
சேனந்தான் இலாஅரக்கன் செழுவரை எடுக்கஊன்றி
ஆனந்த அருள்கள் செய்தார் அவளிவநல்லூராரே!.. (4/59)
திருநாவுக்கரசர்.
திருச்சிற்றம்பலம்
* * *
ஒவ்வொரு ஆலயத்தின் சிறப்புகள் உங்களின் பகிவுகளின் மூலம் தான் முழுவதுமாக அறியப் பெறுகிறேன் ஐயா... நன்றி...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
அடடா..! எத்தனை எத்த்னை ஊர்கள்!.. அங்கெல்லாம்
பதிலளிநீக்குஎம் பெருமானாரின் அற்புதங்களோ எண்ணிலடங்கா..!
அருமை ஐயா! இத்தனை சிறப்புக்களையும் எப்படிச் சேகரிக்கின்றீர்கள்?..
பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!
அன்பின் சகோதரி..
நீக்குஎல்லாருக்கும் இந்த சிறப்புகள் சென்றடைய வேண்டும் என்ற ஆவல் தான்!...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி..
ஆலய தரிசனம் அருமை ஐயா
பதிலளிநீக்குஇவ்வடுவூர் சென்றதில்லை
அன்புடையீர்..
நீக்குஒருமுறை சென்று வாருங்கள்!..
தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
வணக்கம்
பதிலளிநீக்குஐயா.
காலைப்பொழுதில் ஆலய தரிசனம் செய்தது போல ஒரு உணர்வு பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்பின் ரூபன்..
நீக்குதங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: அன்பை புரிந்து வெளியேவா:
பதிலளிநீக்குஅன்பின் ரூபன்..
நீக்குதங்கள் தளத்தில் அன்பைப் புரிந்து கொண்டேன்.. மகிழ்ச்சி..
"ஆலய தரிசனம்"
பதிலளிநீக்குமனதில் ஆனந்தத்தை அருளியது.
திவ்விய தேசம் சென்று வந்த திருப்தி தந்தீர்!
வாழ்க! அய்யா! வணங்குகிறேன்.
நன்றியுடன்,
புதுவை வேலு
அன்புடையீர்..
நீக்குதங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி..
இனிய கருத்துரைக்கு நன்றி..
வணக்கம்!
பதிலளிநீக்குஅனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்துக்கள்
நட்புடன்,
புதுவை வேலு,
www.kuzhalinnisai.blogspot.fr
(இயக்குனர் சிகரம் கே.பி அவர்களுக்கு கவிதாஞ்சலி!
பங்கு பெற வாருங்கள்
குழலின்னிசை வலைப் பூ பக்கமாய்!)
நன்றி!
அன்புடையீர்
நீக்குதங்களுக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்..
முன்பு இந்த இரு கோவில்களும் போய் இருக்கிறேன்.
பதிலளிநீக்குஇன்றும் மீண்டும் உங்கள் தளத்தில் தரிசனம் கிடைத்து விட்டது.
படங்கள் செய்திகள் தினம் இவ்வளவு விரிவாக தருவதற்கு வாழ்த்துக்கள்.
அன்புடையீர்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
தங்களின் வாழ்த்துரைக்கு நன்றி..