நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், டிசம்பர் 18, 2014

மார்கழிக் கோலம் 03

குறளமுதம்

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்காதெனின்.(019)


வானின்று அமுதம் எனும் மழைத் துளிகள் இவ்வுலகில் விழவில்லை எனில் தன் பொருட்டுச் செய்யும் தவமும் - 
தரணியில் உயிர்களின் பொருட்டுச் செய்யும் தானமும் சிறக்குமோ?.. 
தவமும் தானமும் அல்லவோ தலைசிறந்த ஞானம் எனப்படுவது.


சூடிக் கொடுத்த சுடர்க்கொடி 
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை - 03. 


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்குபெரும் செந்நெல் ஊடுகயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்!..

ஆலய தரிசனம்
திருமாலிருஞ்சோலை


மூலவர் - பரமஸ்வாமி
உற்சவர் - ஸ்ரீசுந்தரராஜப்பெருமாள், கள்ளழகர்
தாயார் - ஸ்ரீ சுந்தரவல்லி 
தீர்த்தம் - நூபுரகங்கை
தலவிருட்சம் - சந்தனமரம்.

மங்களாசாசனம்.
பெரியாழ்வார், ஆண்டாள், பேயாழ்வார், திருமங்கை ஆழ்வார்,
பூதத்தாழ்வார், நம்மாழ்வார்.

துங்க மலர்ப்பொழில்சூழ் திருமாலிருஞ்சோலைநின்ற
செங்கட் கருமுகிலின் திருவுருப் போல்மலர்மேல்
தொங்கிய வண்டினங்காள் தொகுபூஞ்சுனை காள்சுனையில்
தங்குசெந் தாமரைகாள் எனக்கோர்சரண் சாற்றுமினே!.(591)
ஆண்டாள் திருமொழி.

கோதை நாச்சியாரின் அபிமான தலம். 

இத்தலத்தில் ஆண்டாள் அமர்ந்த திருக்கோலத்தினள். 

கள்ளழகருக்குத்தான் அவள் நூறு தடாக்களில் வெண்ணெயும் அக்கார அடிசிலும் நேர்ந்து கொண்டாள். 

ஆனால் - பின்னாளில் உடையவர் ஸ்ரீராமானுஜர் அதனை நிறைவேற்றித் தந்தார். 

இதனால் ஸ்ரீராமானுஜர் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு எழுந்தருளியபோது திருமூலஸ்தானத்திலிருந்து கோதை நாச்சியார் வெளிப்பட்டு, வாரும் எம் அண்ணாவே!.. - என்று முகமன் கூறி வரவேற்றாள்!..

* * * 

சிவ தரிசனம்

மாணிக்கவாசகப்பெருமான் அருளிய 
திருவெம்பாவை
திருப்பாடல் 02



பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல்நாம்
பேசும்போது எப்போது இப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசீ இவையும் சிலவோ விளையாடி
ஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்புஆர் யாம் ஆரேலோர் எம்பாவாய்!..

திருக்கோயில்
திரு ஆலங்காடு


இறைவன்  - ஸ்ரீவடவாரண்யேஸ்வரர். 
அம்பிகை - ஸ்ரீவண்டார்குழலி.
தலவிருட்சம் - ஆலமரம்.
தீர்த்தம் - முக்தி தீர்த்தம்.

தலப் பெருமை.

கார்கோடகனும் முஞ்சிகேச முனிவரும் கண்டு மகிழும்படிக்கு -
அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன் காளியோடு நடனம் ஆடிய தலம்.

ஐயன் ஊர்த்துவ தாண்டவம் நிகழ்த்தியது -  இத்திருத்தலத்தில் தான்!..


இங்கேதான் ஐயனின் திருவடிக்கீழ் காரைக்கால் அம்மையார் முக்தி எய்தினர்.

அப்பர் , ஞானசம்பந்தர், சுந்தரர் - என மூவரும் தரிசித்து திருப்பதிகம் அருளிய திருத்தலம்.

ஐயன் நடமிடும் அம்பலங்கள் ஐந்தனுள் - ரத்ன சபை.

ஆதலின் இறைவனுக்கு ரத்ன சபாபதி எனும் திருப்பெயரும் உண்டு.


பழையனூர் வேளாளர்கள் எனும் எழுபது பேர் - நீலியின் பொருட்டு வணிகன் ஒருவனுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற - தீக்குழியிற் பாய்ந்து உயிர் நீத்தனர்.

அந்த இடம் திருக்கோயிலுக்கு சற்று தூரத்தில் உள்ளது.

தொண்டை நாட்டின் சீர்மிகும் திருத்தலங்களுள் ஒன்று.


கணையும் வரிசிலையும் எரியுங்கூடிக் கவர்ந்துண்ண

இணையில் எயின்மூன்றும் எரித்திட்டார் எம் இறைவனார்

பிணையுஞ் சிறுமறியுங் கலையுமெல்லாங் கங்குல்சேர்ந்

தணையும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே!..(1/45)

ஞானசம்பந்தர்.

கூடினார் உமைதன் னோடே குறிப்புடை வேடங் கொண்டு
சூடினார் கங்கை யாளைச் சுவறிடு சடையர் போலும்

பாடினார் சாம வேதம் பைம்பொழிற் பழனை மேயார்

ஆடினார் காளி காண ஆலங்காட் டடிக ளாரே!..(4/68)
திருநாவுக்கரசர்.



வண்டார் குழலி உமைநங்கை பங்கா கங்கை மணவாளா
விண்டார் புரங்கள் எரிசெய்த விடையாய் வேத நெறியானே 
பண்டாழ் வினைகள் பலதீர்க்கும் பரமா பழைய னூர்மேய 
அண்டா ஆலங் காடாஉன் அடியார்க் கடியேன் ஆவேனே!.. 
(7/52)
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்.

திருச்சிற்றம்பலம்!.
* * *

12 கருத்துகள்:

  1. மார்கழி திருநாள் பதிவு நாள்தோறும் தொடரட்டும்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் இனிய வரவு கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. திரு ஆலங்காடு சிறப்பை அறிந்தேன் ஐயா... நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி.

      நீக்கு
  3. திருமாலிருஞ்சோலை மூர்த்தி அழகா இருக்கிறது.
    கோதை நாச்சியார் வெளிப்பட்டு....ஶ்ரீ ராமானுஜரை வரறேற்றது..அஹா..அறியாத ஒன்று அறிந்து கொண்டடேன்

    காரைக்கால் அம்மையார் முக் தி அடைந்ததலம்
    திரு ஆலங்காடு ..பற்றி அறியத்தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்கள் இனிய வரவு கண்டு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  4. ஆலங்காடு தவிர பிற கோயில்களைப் பார்த்துள்ளேன். தங்களால் ஆலங்காடு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  5. எங்கள் குலதெய்வம் கள்ளழகர் பற்றியும் திருஆலங்காடு பற்றியும் அறியத் தந்தீர்கள் ஐயா....
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. அன்பின் குமார்..
    தங்கள் இனிய வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.

    பதிலளிநீக்கு
  7. அழகர் கோவில், திருஆலங்காடு கோவில் பற்றிய செய்திகள் படங்கள், பாடல்கள் அனைத்தும் அருமை. தினம் இப்படி தொகுத்து கொடுக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் வருகை கண்டு மகிழ்ச்சி..
      இனிய வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..