வேழமுடைத்து மலை நாடு மேதக்க
சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன்
தென்னாடு முத்துடைத்து தண்ணீர் வயல் தொண்டை
நன்னாடு சான்றோருடைத்து..
ஔவையாரின் திருவாக்கில் உதித்த அருந்தமிழ்ப் பாடல் இது. அவரது திருவாக்கின் படியே - சான்றோர்கள் பலரையும் தமிழகத்திற்கு அளித்த பெருமையை உடையது தொண்டை நாடு.
ஐயன் திருவள்ளுவர் வாழ்ந்ததாகக் கருதப்படும் திருமயிலை எனப்படும் மயிலாப்பூர் - தொண்டை நன்னாட்டின் திருத்தலங்களுள் ஒன்று என்பதே - ஔவையாரின் திருவாக்கிற்கு பெரும் சான்றாக விளங்குவதாகும்.
பெருஞ்சிறப்புடைய தொண்டை நாட்டில் - திருமயிலைக்குத் தென்மேற்கே விளங்குவது செல்வமலி குன்றத்தூர்.
இந்த குன்றத்தூரில் - சிறப்பு வாய்ந்த வேளாண்மரபில் சேக்கிழார் குடியில் சிவநெறியில் நின்று வாழ்ந்த வெள்ளியங்கிரி முதலியார் - அழகாம்பிகை தம்பதியர் தம் திருமக்கள் இருவர். மூத்தவர் - அருண்மொழித் தேவர். இளையவர் பாலறாவாயர்.
மூத்தவரான - அருண்மொழித்தேவர், தாம் பிறந்த குடிக்குப் பெருமை சேர்த்த காரணத்தால் - சேக்கிழார் என சிறப்பிக்கப்பட்டார்.
அருண்மொழித் தேவரின் கல்விச்சிறப்புகளையும் நன்னடத்தைகளையும் - அறிந்தான் சோழமன்னன்.
அநபாய சோழன் எனப்படும் இரண்டாம் குலோத்துங்க சக்ரவர்த்தி (1133 - 1150) அவரைத் தனது அமைச்சரவையில் தலைமை அமைச்சராக நியமித்து, உத்தம சோழ பல்லவன் என்ற விருதினை வழங்கி ஆட்சி நிர்வாக உரிமைகளை
அவருக்கு அளித்தான்.
அமைச்சராகப் பணியேற்ற அருண்மொழித்தேவர் திருக்குடந்தை மாநகரின் அருகில் உள்ள திருநாகேஸ்வரத்தில் தங்கினார். அங்கே விளங்கும் இறைவனிடம் பேரன்பு கொண்டு நாளும் வழிபட்டு - தமக்கு அளிக்கப்பட்ட பணியினை செவ்வனே செய்து வந்தார்.
திருநாகேஸ்வர பெருமான் மீது கொண்ட பற்றினால் - திருநாகேஸ்வரம் திருக்கோயிலைப் போலவே தம்முடைய ஊராகிய
குன்றத்தூரிலும் ஒரு திருக்கோயில் கட்டுவித்து
- அதற்கும் திருநாகேஸ்வரம் என்றே பெயர் சூட்டி - அங்கே அனைத்து வழிபாடுகளும் இனிதே நடைபெறச்
செய்தார்.
அச்சமயத்தில் - அரசனின் மனம் சமணர்களின் காப்பியமான - சீவக சிந்தாமணியில் லயித்திருந்ததைக் கண்டு - மனம் வருந்தினார்.
மன்னனிடத்தில் - சைவ சமய நூல்களைப் பற்றியும் சிவபெருமானுக்குத் தொண்டு செய்து முக்தி நலம் பெற்ற சிவனடியார்களின் வரலாறுகளைப் பற்றியும் எடுத்துக் கூறினார். அமைச்சரின் கூற்றுக்கு இணங்கிய மன்னன் சிவனடியார் வரலாறுகளை விரித்துரைக்குமாறு வேண்டிக் கொண்டான்.
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் - என, இறைவனே அடியெடுத்துக் கொடுக்க - சிவனடியார்களின் பெருமைகளைப் புகழ்ந்து - சுந்தரமூர்த்தி சுவாமிகள் போற்றியதான - திருத்தொண்டத் தொகை
எனும் திருப்பதிகத்தினை விரித்துரைத்தார்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய - தனியடியார் அறுபத்து மூவர். தொகையடியார் ஒன்பதுபேர்.
அடியார்களின் தன்மைகளைக் கேட்டு மகிழ்வுற்ற மன்னன் - இவ்வரலாற்றை பெருநூல் ஆக இயற்றித் தருமாறு - தனது முதலமைச்சரை வேண்டிக் கொண்டான்.
மன்னனின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அருண்மொழித் தேவர் - சுந்தரர் அருளிய திருத்தொண்டத் தொகையின் அடியொற்றி - இராஜராஜ சோழ மாமன்னனின் காலத்தில் -
தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் நிலவறையிலிருந்து தேவாரங்களை மீட்டெடுத்த நம்பியாண்டார் நம்பி அருளிய திருத்தொண்டர் திருஅந்தாதி எனும் நூலைத் துணையாகக் கொண்டார்.
மேலும் பல தகவல்களைச் சேகரிக்க - நாயன்மார்கள் வாழ்ந்த தலங்களுக்கே சென்றார். அரிய பலதகவல்களைத் திரட்டிக் கொண்டு - தில்லைத் திருச்சிற்றம்பலமாகிய - பொன்னம்பலத்தினுள் புகுந்து - தாம் திரட்டிய தகவல்களை நூலாகப் படைக்கும் பணிக்குத் துணையாக வருமாறு - அம்பலத்தாடும் ஆனந்தக் கூத்தனின் அடிமலர்களைப் பணிந்து நின்றார்.
அப்போது வானிலிருந்து - உலகெலாம் - என ஒலி கேட்டது. திருக்கோயிலில் திரண்டிருந்த அடியார் கூட்டம் அதைக் கேட்டு - ஆனந்தத்துடன் ஆர்ப்பரித்தது.
உலகெ லாம்உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.
அந்த அளவில் உலகெலாம் எனும் சொல்லை முதலாகக் கொண்டு - தொடங்கிய திருப்பணியை உலகெலாம் என நிறைவு செய்தார்.
சித்திரை மாதத்தின் திருஆதிரை நாளில் தொடங்கி, மறுஆண்டின் சித்திரை திருஆதிரை நாளில் - அம்பலத்தில் - ஆனந்தக் கூத்தன் முன்னிருக்க ,
அரசனும் மக்களும் ஆன்றோரும் சான்றோரும் நல்லோரும் வல்லோரும் கூடியிருக்க -
தில்லைப் பெருங்கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தமது நூலுக்கு - திருத்தொண்டர் புராணம் எனத் திருப்பெயர் சூட்டினார்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய
பெருமக்கள் மூவரை யும் போற்றி வணங்கி - தெய்வத் தமிழ்ப்
பெருங்காவியத்தை அரங்கேற்றினார்.
ஆனந்தக் கூத்தனின் பிரசாதமாகத் திருநீறு, திருமாலை, பரிவட்டம் - ஆகியவற்றை சேக்கிழாருக்கு அளித்து சிறப்பு செய்தனர்.
திருத்தொண்டர் புராணத்தையும் சேக்கிழாரையும் யானை மீது ஏற்றிய - சோழமன்னன், அவர்பின் அமர்ந்தவாறு, தன் கரங்களால் வெண்
சாமரம் வீசி பணி செய்தான். யானை நான்கு திருவீதிகளையும் வலம் வந்து கனகசபையின் முன்னே நின்றது. அடியவர் பலரும் சூழ்ந்து
நின்று சேக்கிழாரைப் போற்றினர்.
குலோத்துங்க சோழன்
சேக்கிழாருக்குத் தொண்டர்சீர் பரவுவார் எனத் திருப் பெயர் சூட்டி வணங்கினான்.
அன்பர்களும் தொண்டர்சீர் பரவுவாரைத் தொழுது போற்றினர்.
அநபாய
சோழன் திருத்தொண்டர் புராணத்தைச் செப்பேட்டில் எழுதச் செய்து - பதினொரு திருமுறைகளுடன் இதனையும் சேர்த்து பன்னிரண்டாம் திருமுறை எனச் சிறப்பித்தான்.
சான்றோர்களாகிய பெருமக்கள் திருத்தொண்டர் புராணத்தின் சிறப்பினை உணர்ந்து பெரியபுராணம் எனப் போற்றி மகிழ்ந்தனர்.
அதன்பின் - சேக்கிழாரின் மகத்துவத்தை உணர்ந்தவனாக - அவரைப் பணி கொள்ள விரும்பாது சேக்கிழாரின் இளவலாகிய பாலறாவாயரை அழைத்து
வரச்செய்து அவருக்குத் தொண்டைமான் என்ற பட்டம் அளித்து , தன் அமைச்சராக
நியமித்துக்கொண்டான்.
இரண்டாங் குலோத்துங்க சோழனின் மகன் இரண்டாம் இராஜராஜன் (1146 -1173) சேக்கிழார் துணையுடன் தஞ்சைப்
பெரியகோயிலின் அமைப்பில் - தாராசுரத்தில் எழுப்பிய ஐராவதேஸ்வரர் திருக்கோயிலில்,
நாயன்மார்களின் வரலாற்று முறை சிற்பங்களை அமைத்தான்.
அதன்பின் - தில்லை
மாநகரில் தங்கியிருந்த சேக்கிழார் பெருமான் -
சிவனோடும் சிவனடியாரோடும் கூடிக் களித்து - தவநிலையில் அமர்ந்து சிவஆனந்தப் பெருவெள்ளத்தில் திளைத்திருந்தார்.
காலங்கள் உருண்டோடின.
மூன்றாங் குலோத்துங்கனின் (1178 - 1218) ஆட்சியின் முற்பகுதி.
அடுத்து வந்ததொரு - வைகாசி பூச நாளில், சேக்கிழார் பெருமான் - ஆனந்தக் கூத்தனின் திருவடி நீழலில் ஒன்றி முக்திப் பேறெய்தினார்.
- தகவல் தொகுப்பில் துணை -
அடியார் வரலாறு,
பன்னிரு திருமுறை., ஸ்ரீ தருமபுர ஆதீன பதிப்பு.
இன்று (ஜுன்-2 ) வைகாசி மாதத்தின் - பூசம்.
சேக்கிழார் பெருமானின் குருபூஜை நாள்.
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்று ளார்அடி யாரவர் வான்புகழ்
நின்றது எங்கும் நிலவி உலகெலாம்.
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்று ளார்அடி யாரவர் வான்புகழ்
நின்றது எங்கும் நிலவி உலகெலாம்.
திருச்சிற்றம்பலம்.
* * *
சேக்கிழார் பெருமானைப் பற்றிய தகவல்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குஇங்கு சிட்னியில் ஜூன் 16ஆம் தேதி சிட்னி முருகன் கோவிலில் சேக்கிழார் விழா நடத்தப்பட உள்ளது. அதைப் பற்றிய பதிவை பிறகு எழுதுகிறேன்.
அன்பின் சொக்கன் அவர்களின் முதல் வருகை கண்டு மகிழ்ச்சி..
நீக்குசேக்கிழார் பெருமானைப் பற்றிய தகவல்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குஇங்கு சிட்னியில் ஜூன் 16ஆம் தேதி சிட்னி முருகன் கோவிலில் சேக்கிழார் விழா நடத்தப்பட உள்ளது. அதைப் பற்றிய பதிவை பிறகு எழுதுகிறேன்.
அன்புடையீர்..
நீக்குதங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
குலோத்துங்க சோழன் சேக்கிழாருக்குத் தொண்டர்சீர் பரவுவார் எனத் திருப் பெயர் சூட்டி வணங்கினான். // அருமையான ஆக்கம்..பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குகோவையிலும் சேக்கிழார் விழா நடைபெறுகிறது...
அன்புடையீர்..
நீக்குதாங்கள் வருகை தந்து பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி..
இன்றைய தின நாட்காட்டியில் சேக்கிழார் ஜயந்தி என்று கண்டேன் அவரைப் பற்றியஉங்கள் தொகுப்பில் பல செய்திகளைத் தெரிந்து கொண்டேன் நன்றி
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி..
சேக்கிழார் பெருமானைப் பற்றிய அரிய தகவல்களுக்கு நன்றி ஐயா...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குதங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
சேக்கிழார் பெருமான் பற்றி அறியாதன அறிந்தேன் ஐயா
பதிலளிநீக்குமிக்க நன்றி
அன்புடையீர்..
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி..
தொண்டர்சீர் பரவுவாரைப் பற்றித் தங்களது பதிவினைப் படிக்கும்போது கல்லும் கதை சொல்லும் தாராசுரம் கோயிலும் அங்குள்ள நாயன்மார்களின் சிற்பங்களும் மனதிற்கு வந்துவிட்டன. அந்த அரிய சிற்பங்கள் அமையக் காரணம் இப்பெருமகனாரின் எழுத்தே. நன்றி.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதாராசுரம் ஐராவதேஸ்வரர் திருக்கோயில் எத்தனை சிறப்பினை உடையதோ - அத்தனை சிறப்பினை உடையது பெரிய புராணமும்!..
தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் நன்றி ஐயா..
தங்களது பதிவினைப் படித்ததும் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் சிற்பங்கள் நினைவிற்கு வந்தன. அவ்வாறாக சிற்பங்கள் அமையக் காரணமாம் இப்பெருமானின் எழுத்தே என நினைக்கும்போது மனம் நிறைவடைகின்றது. நன்றி.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குசேக்கிழாரின் அரும்பணியின் காரணமாகவே - நமக்கு நாயன்மார்களின் வரலாறு கிடைத்தது. அவருடைய கை வண்ணத்தைக் கலைவண்ணமாக ஆக்கினான் இரண்டாம் ராஜராஜன்.
சேக்கிழார் பெருமானைப் பற்றிய - இந்த பதிவு குறுகிய நேரத்திற்குள் சமர்ப்பிக்கப்பட்டது. அவரைப் பற்றி மேலும் சொல்வதற்கு அவரே தனது நல்லாசிகளை அருள வேண்டும்.
தங்களைப் போன்ற நல்லோர்கள் வருகை தந்து என்னை ஊக்கப்படுத்துவதற்கு மிக்க மகிழ்ச்சி .. நன்றி..
அறியதொரு விசயத்தை சொன்ன ஐயா அவர்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குwww.killergee.blogspot.com
அன்புடையீர்..
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..
சேக்கிழார் பற்றிய பல தகவல்களை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.
பதிலளிநீக்குஅன்பின் வெங்கட்..
நீக்குதங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..