நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூன் 13, 2014

குரு பெயர்ச்சி

மஹா பிரளயம் முடிந்து மீண்டும் பல்லுயிர்களும் தழைக்குங்கால் - எம்பெருமானாகிய பரமேஸ்வரன் அம்பிகையுடன் உடனாகி நின்று - தம்முள்ளிருந்து - 

தாம் சிருஷ்டித்த நான்முகன், திருமால், ருத்ரன் எனும் மும்மூர்த்திகளுக்கும் - படைத்தல்,காத்தல்,அழித்தல் என பொறுப்புகளை வழங்கியருளினார். 

அச்சமயத்தில் - நான்முகன் மகரிஷிகளை படைத்தருளினார். 


அப்படி படைக்கப்பட்ட மகரிஷிகள்- பரமேஸ்வரனையும் பரமேஸ்வரியையும் வழிபட்டு நின்றனர்.  உலகம் உய்யும் பொருட்டு - அவர்களுக்கு வேதங்களும் வேத ஆகமங்களும் அருளப் பெற்றன. தாவர ஜங்கம சிருஷ்டி ரகசியங்களும் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டன. 

உயரிய ஞானத்தினை மனித குலத்திற்கு வழங்கும் பொறுப்பு அவர்களிடம் வழங்கப்பட்டது.  

அத்தகைய மகரிஷிகள் -  நாரதர், சனகர், வசிஷ்டர், அத்ரி, பிருகு, மனு, புலஸ்தியர், வியாசர், வாமதேவர், ரோமர், ஸ்யவனர், கஸ்யபர், பராசரர் -  என பலர். அவர்களுள் - பிரம்மாவின் புத்ர வழித் தோன்றலாகிய ஆங்கீரஸ மகரிஷியும் ஒருவர். 

ஆங்கீரஸ மகரிஷியின் மகனாகத் தோன்றியவர் - பிரகஸ்பதி.  

சகல வேதங்களையும் அறிந்திருந்தாலும் - வாழ்வில் உன்னத ஸ்தானத்தைப் பெற வேண்டு என எண்ணி, சிவபெருமானை சிந்தையில் கொண்டு - தவ நிலையில் நின்று கடும் விரதங்களை மேற்கொண்டு - விதிமுறை பிறழாத ஹோமங்கள் பலவற்றைச் செய்தார். 


இப்படி கடும் தவத்துடன் செய்த ஹோமங்களின் பயனாக, சிவபெருமான் பிரகஸ்பதியின் முன்தோன்றி - அவரை தேவ குரு என நியமித்தார். அத்துடன் - வியாழன் என கிரகங்களுள் ஒருவராகவும் வாழ்த்தினார். 

பிரகஸ்பதி - கிரக பதவியும் தேவர்களுக்கு குரு என்னும் பெருமையையும் பெற்ற  திருத்தலம் - தென்குடித் திட்டை!..

ஊழியிலும்  பெயராது - நிலை கொண்டு,  மேடாக திட்டு போல் விளங்கியதால் - திட்டை எனும் திருப்பெயர். வசிஷ்ட மகரிஷி அருந்ததி அம்மையாருடன் சிவபூஜை நிகழ்த்திய திருத்தலங்களுள் திட்டையும் ஒன்றாகும். 

ஸ்ரீகுருபகவான் - திட்டை
இத்தலத்தில் - ஈஸ்வரனிடம் வரங்களைப் பெற்ற பிரகஸ்பதி - கிரகங்களுள் சுப கிரகம் என்று விளங்கினார். 

தேவகுரு ஆகிய இவருடைய அருட் பார்வையே - ஒருவருக்கு கல்வியையும், கலைகளையும், ஞானத்தையும் அருளும். 

வாழ்வின் தேவைகளுள் ஒன்றாகிய பெருந்தனத்தையும் திருமண யோகத்தையும்  நன்மக்கள் பேற்றையும் அருள்பவர் இவரே!.. 

சிறந்த கல்வி, மதிநுட்பம், நிதியையும் நீதியையும் பரிபாலித்தல். தெளிந்த ஞானம், 

மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்றவை எல்லாம்  குருவின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. 

அவரது அருள் இருந்தால்தான் இந்த துறைகளில் பிரகாசிக்கலாம்.


யோகம் தரும்  குரு பார்வை:

நவக்கிரகங்களில் சுபக்கிரகம் எனப் போற்றக் கூடியவர் குரு ஆவார். 

குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி. குருவின் பார்வைக்கு அத்தனை மகத்துவம். இவரது பார்வை பல தோஷங்களை அகற்றிவிடும் வல்லமை கொண்டது. இவர் அமரும் வீட்டை விட பார்க்கும் வீட்டிற்குத்தான் யோகம் அதிகம்.  

குரு பார்வையில் 5,7,9 ஆகிய இடங்கள் சுபிட்சம் பெறும். 

நமது பாவங்களை (5,7,9) பார்வையினால்  விலக்கி அருள்கின்றார் என்பது ஆன்றோர் வாக்கு. 

தன் தவ வலிமையால் இந்திரன் முதலான தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் குருவாக விளங்கும் இவரே - அறிவு, ஞானம் இவற்றிற்கு மூல காரணம். 

தன பாக்கியம், புத்ர பாக்கியம் ஆகிய இரண்டு பெரும் பேறுகளுக்கும் அதிபதி குரு பகவான். ஜாதகத்தில் குரு பலமாக இருந்தால் இந்த இரு யோகமும் தங்குதடையின்றி அமையும்.

 
குரு இருக்கும் இடம்தான் சங்கடங்களுக்கு ஆளாகுமே தவிர, இவரது பார்வை மிகவும் சக்தி வாய்ந்தது. இவரது பார்வை பல தோஷங்களை அகற்றி சுபிட்சம் தரும் வல்லமை கொண்டது.

ஆன்மீக ஈடுபாட்டுடன் தர்ம காரியங்களைச் செய்தல், ஆதரவற்றோரை அரவணைத்து பாதுகாத்தல், கல்வி நிலையங்கள் அமைத்தல் - எனும் மனோநிலை  - குரு பகவான் அருளும் வரப்ரசாதம். 


சமூகத்தில் உயர்நிலையை அளிப்பதுடன் - நிதி மற்றும்  நீதித்துறையில் பணி புரியும் வாய்ப்பு, அரசு உயர்பதவிகள் போன்றவற்றை அளிக்கும் வல்லமை உடையவர் குரு பகவான்.

வியாழ நோக்கம்:

குரு பகவான் ஆசி இருந்தால் திருமணம் நடந்து விடும். அதை வியாழ நோக்கம் என்பார்கள். குரு பகவான் லக்கினத்தையோ அல்லது லக்கினத்திற்கு அடுத்துள்ள இரண்டாம் வீட்டையோ அல்லது சந்திர ராசியையோ அல்லது சந்திர ராசிக்கு அடுத்துள்ள இரண்டாம் வீட்டையோ கோச்சாரத்தில் சுற்றிவரும் போது, 5, 7, 9 ஆம் பார்வையாகப் பார்க்கும் நிலையை வியாழ நோக்கம் என்பார்கள்.


குருபகவானுக்கு உகந்தவை:
 
ரத்தினம் - புஷ்பராகம்  
உலோகம்  - பொன் 
மலர் - முல்லை
தானியம் -  கொண்டைக் கடலை
சுவை - இனிப்பு
நிறம் - மஞ்சள்
கிழமை - வியாழன்
எண் - மூன்று

வியாழக் கிழமைகளில் விரதம் இருந்து மாலையில் சிவன் கோயிலுக்குச் சென்று - 


அங்கு பஞ்ச மூர்த்திகளையும் வணங்கி நவக்கிரக மண்டலத்தில் திகழும் குரு பகவானைப் பணிந்து -

பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் கொண்டைக் கடலை சுண்டல் வழங்கலாம்.

குரு பரிகார தலங்கள் என்பன - திருச்செந்தூர், திட்டை, திருவலிதாயம். 


சூர சேனைகளை வதம் செய்வதற்கு முன் - திருச்செந்தூரில் முருகப் பெருமானைத் தொழுது வணங்கி - அவருக்கு அசுரர்களின் பிறப்பினை எடுத்துரைத்தவர் - தேவகுரு ஆகிய வியாழ பகவான்!..  

சூர சேனைகள் அழிந்த பின்  -  சிவபூஜை செய்த முருகப் பெருமானைத் தேவர்களுக்கு குரு என்ற ஸ்தானத்தில் இருந்து  அனைவரும் தொழுது வணங்கிட வழி காட்டிவரும் - தேவகுரு ஆகிய வியாழ பகவானே!.


எனவே - குருவருள் பெற சிறந்த தலம் - திருச்செந்தூர்.
 
ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் - திட்டை.

அடுத்து,  தான் அனைத்து வரங்களையும் இறைவனிடம் பெற்ற, தென்குடி திட்டை தலத்தில்  - பஞ்ச மூர்த்திகளை வணங்கிடும் பக்தர்களுக்கு - எல்லா நலன்களையும் வழங்குகின்றார். 

அடுத்து திருவலிதாயம். இத்திருத்தலம் சென்னைப் பெருநகரில் - பாடி என வழங்கப்படுகின்றது. பரத்வாஜ மகரிஷி - வலியன் எனும் கருங்குருவியாகி சிவபூஜை செய்த திருத்தலம். ஸ்ரீராம லக்ஷ்மணர், ஆஞ்சநேயர், சூரியன், சந்திரன், இந்திரன், முதலானோர் வழிபட்டுப் பேறு பெற்ற திருத்தலத்தில் வியாழ பகவான் - சிவபூஜை செய்ததாக ஐதீகம்.

குரு வணங்கிய திருவலிதாயம் - குரு அருள் பெற சிறந்த திருத்தலம்.

வைணவத்தில் - நவக்கிரக வழிபாடு இல்லை. எனினும்  - திருநெல்வேலி மாவட்டத்தில் நம்மாழ்வார் தோன்றிய திருத்தலமான - திருக்குருகூர் எனும் ஆழ்வார் திருநகரியில் - பெருமாளே குரு அம்சமாகத் திகழ்வதாக ஐதீகம். 

எனவே, அதைச் சுற்றியுள்ள எட்டு தலங்களும் நவதிருப்பதி என போற்றப் படுகின்றன.

பிரகஸ்பதி பொன் போல் நிறமுடையவர்.  யானை வாகனம் உடையவர். மூவுலகங்களிலும் வணங்கப்படுபவர். உயர்ந்த ஞானத்திற்கு காரணமாகும் இவர் ஒவ்வொரு ராசியிலும் ஓராண்டு காலம் சஞ்சரிக்கின்றார். 

குருவின் அதிதேவதை - பிரம்மா. பிரதி அதிதேவதை - தேவேந்திரன்.

குரு பகவானின் மனைவி தாரை. மகன் கசன். இவனே, பல இன்னல்களுக்கு இடையில், அசுரகுரு சுக்ராச்சார்யரிடம் - ம்ருத்யு சஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுக் கொண்டு வந்தவன். 

வியாழன் சூரியனைச் சுற்றி வர பன்னிரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இது வியாழ வட்டம் எனப்படுகின்றது.  வியாழன் சிம்ம ராசியிலும் சூரியன் கும்ப ராசியிலும் இருக்க சந்திரன் நிறை நிலவாக மக நட்சத்திரத்துடன் கூடி வரும் நன்னாளே மகாமகம்.

வாக்கிய பஞ்சாங்கப்படி குரு பகவான் - இன்று ஜூன் 13 (வைகாசி/30) மாலை 5.57 மணிக்கு மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். திருக்கணித பஞ்சாங்கப்படி  - ஜூன்/19 வியாழன் - குருப்பெயர்ச்சி . 

திட்டை ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலில் குரு பெயர்ச்சி விழா சிறப்பாக நடை பெறுகின்றது.

ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலில் சுவாமி சந்நிதிக்கும் அம்பாள் சந்நிதிக்கும் நடுவில் தெற்கு முகமாக சந்நிதி கொண்டுள்ளார் - குருபகவான். 

வேறெங்கும் காணக் கிடைக்காத அற்புத சந்நிதி அமைப்பு இது. 

மூலஸ்தானம் சந்திரகாந்தக் கற்களால் அமைக்கப் பட்டுள்ளதால் - 

காற்றில் உள்ள ஈரம் உறிஞ்சப்பட்டு ஒரு நாழிகைக்கு ஒருதுளி என - சிவலிங்கத்தின் மீது அபிஷேகம் ஆகின்றது. 

தென்குடித் திட்டை - தஞ்சை மாநகரை அடுத்து ஆறு கி.மீ தொலைவிலுள்ள திருத்தலம்.  தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருக்கருகாவூர் செல்லும் நகரப் பேருந்துகளும் பட்டீஸ்வரம் வழியாக கும்பகோணம் செல்லும் புறநகர் பேருந்துகளும் திட்டை வழியாகச்செல்லுகின்றன. 

ரயில் வசதியும் உண்டு. மயிலாடுதுறை மார்க்கத்தில் தஞ்சையை அடுத்துள்ள நிலையம். அனைத்து பாசஞ்சர் ரயில்களும் நின்று செல்கின்றன. 

நாளிதழ்களில் வெளியிடப்படும் பலன்கள் - கோச்சார பலன்களை அனுசரித்து வெளியிடப்படுபவைகளே!.. சூரியனின் சஞ்சாரத்தினால் அவை எப்போது வேண்டுமானாலும் மாறலாம்.

பெயர்ச்சி அடைவது பிரகஸ்பதி என வழங்கப்படும் குரு பகவானே!..  நவக்கிரக மண்டலத்தில் ஒருவராக விளங்கும் வியாழ மூர்த்தியே!.. 

பற்பல வார, நாளிதழ்கள் - ஆலமர் செல்வனாக   தக்ஷிணாமூர்த்தி விளங்கும் சிவபெருமானின்  திருக்கோலத்தினை குரு எனப் பிரசுரித்து - மக்களின் மதியை மயக்குகின்றன. பெருவாரியான மக்களும் ஊறவைத்த கடலையினை சரமாகக் கோர்த்து ஸ்ரீதக்ஷிணாமூர்த்திக்கு சூட்டுகின்றார்கள். 

கடலையை சுண்டலாக செய்து நிவேதனம் செய்தலே - முறையானது.

பரிகார பூஜை செய்யவேண்டியது - நவக்கிரக பீடத்தின்  குரு பகவானுக்கே!..

குரு பெயர்ந்து நன்மை தரும் இடத்தில் அமையலாம். அப்படி நல்ல நிலையில் அமையா விட்டாலும்  கூட, வீண் கவலை கொள்ள வேண்டாம்.  

குல தெய்வத்தை மறவாமல் கும்பிட்டுங்கள். ஆலய தரிசனம் செய்யுங்கள். 

பரிகாரங்கள் பூஜைகள் - என உடலையும் மனதையும் வருத்திக் கொள்ளாமல் - ஏழை எளியவர்களின் துயர் தீர ஏதேனும்செய்யுங்கள். வீட்டின் அருகில் மரம் இருந்தால் மனம் உவந்து - தினமும் ஒரு குடம் தண்ணீர் ஊற்றுங்கள்.

நல்லருள் நிச்சயம் கிடைக்கும்.

குரு தியான ஸ்லோகம்.
ஓம் தேவாநாஞ்ச ரிஷீநாஞ்ச குரும் காஞ்சந ஸந்நிபம்
புத்திபூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்

குரு - காயத்ரி.
விருஷப த்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய 
தீமஹி தந்நோ: குரு ப்ரசோதயாத்:

சிவாய திருச்சிற்றம்பலம்.
* * *
குரு காயத்ரி
ஓம் வ்ருஷ பத்வஜாய வித்மஹே
க்ருணி அஸ்தாய தீமஹி
தன்னோ குரு ப்ரசோதயாத்

- See more at: http://swayamvaraparvathi.org/tag/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF/#sthash.tLYBaxDT.dpuf
குரு காயத்ரி
ஓம் வ்ருஷ பத்வஜாய வித்மஹே
க்ருணி அஸ்தாய தீமஹி
தன்னோ குரு ப்ரசோதயாத்

- See more at: http://swayamvaraparvathi.org/tag/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF/#sthash.tLYBaxDT.dpuf
குரு காயத்ரி
ஓம் வ்ருஷ பத்வஜாய வித்மஹே
க்ருணி அஸ்தாய தீமஹி
தன்னோ குரு ப்ரசோதயாத்

- See more at: http://swayamvaraparvathi.org/tag/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF/#sthash.tLYBaxDT.dpuf

16 கருத்துகள்:

  1. குரு பெயர்ச்சி அறிந்தேன் ஐயா
    கடல் கடந்து சென்றபோதிலும்
    ஆன்மீகத்தையே சார்ந்து நிற்கும்
    தங்கள் மனது கண்டு மகிழ்ந்தேன் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  2. உள்ளங்கனி நெல்லிக்கனி போல,
    உலகத்தோருக்கு, பதிவு உலகத்தோருக்குப்
    பல நல்ல ஆன்மீகக் கருத்துக்களை
    பவ்யத்துடனே பகிர்ந்தளித்த
    பாங்கினை நினைத்துப் பார்ப்பின்
    ஆங்கு நுமக்கும் நும் குடும்பத்தாருக்கும்
    ஆலமரத்தின் அடியில் அமர்ந்து
    அருள் புரியும் குருவின் பார்வை
    அமோகமாக இருக்கிறது . அதுவும்
    அந்த குருவின் அருளே.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
      தாங்கள் வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றி ஐயா..

      நீக்கு
  3. மீனத்திலிருந்து கடகம் ஐந்தாவது வீடு. மீனத்தின் ஆட்சிப்பொறுப்பு
    குரு . தனது வீட்டில் இருந்து ஐந்தாவது இடமான கடகத்திற்கு சென்று அங்கிருந்து ஒன்பதாம் பார்வையாக தனது வீட்டை பார்க்கிறார்.

    ( சிக்காகோ விலிருந்து லஸ் சர்ச் வீட்டையும் பார்த்து கொண்டு இருப்பீர்கள் இல்லையா, அது ,போலத்தான் இன் எ லைட்டர் வீன் )

    இது குரு சந்திர யோகம் எனப்படும்.
    புத்திர பௌத்ராதிகள் சிறந்த பலனைப் பெறுவார்கள்.

    தனம் தான்யம் பஹு புத்திர லாபம்
    சகலமும் வரும்.

    க்ஷேமமாய் இருக்க வாழ்த்துக்கள்.



    சுப்பு தாத்த.
    www.menakasury.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் அன்பான நல் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா..

      நீக்கு
  4. அருமையான பகிர்வு ஐயா!

    அனைவருக்கும் யாவும் நலமாக அமைந்திட
    எம் பெருமானை வேண்டிடுவோம்!

    பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  5. முழுமையான விளக்கங்கள் ஐயா... மிக்க மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..

      நீக்கு
  6. எல்லோருக்கும் எல்லா நலனும் பெற்று சிறப்புடன் வாழ இறைவன் அருள் புரியட்டும் ஐயா.
    Killergee
    www.killergee.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      பிறந்த நாள் வாழ்த்து கூறியமைக்கு நன்றி.
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  7. குரு பற்றி தெரிந்து கொண்டேன் பயன் உள்ள பதிவு நன்றி ! வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  8. குருப்பெயர்ச்சி சமயத்தில் சிறப்பான விளக்கங்கள் மற்றும் தகவல்கள்.

    பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி..நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..