நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூன் 11, 2014

விசாகத் திருநாள்

இன்று வைகாசி விசாகம். முருகப்பெருமான் தோன்றிய திருநாள்.

இந்த இனிய நாளில் - திருமுருக தரிசனம்!..


தேவர்களும் முனிவர்களும் கூடி நின்று - மாயையின் மைந்தர்களாகிய - தாரகன் , சிங்கமுகன், சூரபத்மன் எனும் மூவரிடமிருந்தும் தம்மைக் காத்தருள வேண்டும் -  எனத் தொழுது நின்றபோது - 

கருணையே வடிவாகிய பரமேஸ்வரன் சதாசிவ திருக்கோலம் கொண்டார்.  

கீழ்த்திசை நோக்கிய தத்புருஷம், தென்திசை நோக்கிய அகோரம், மேல்திசை நோக்கிய சத்யோஜாதம், வடதிசை நோக்கிய வாமதேவம்,  நடுவில் திகழும் ஈசானம் - எனும் ஐந்து திருமுகங்களுடன் ஆறாவதாக பாதாளம் நோக்கிய அதோ முகம் கொண்டு விளங்கினார் - எம்பெருமான். 

அந்த ஆறு திருமுகங்களின் நெற்றிக் கண்களில் இருந்தும் ஜோதிப் பிழம்புகள் தோன்றின.


அவற்றை வாயுவும் அக்னியும் கங்கையில் சேர்ப்பித்தனர். கங்கா தேவி அந்த சுடர்களை நாணல்கள் சூழ்ந்து விளங்கிய பொய்கையில் இருந்த தாமரையில் சேர்த்தாள். 

தாமரை மலர்களைச் சேர்ந்த சுடர்களில் இருந்து ஆறு  குழந்தைகள் உதித்து எழுந்தனர். கார்த்திகைப் பெண்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டி, சீராட்டி வளர்த்தனர். 

இப்படி தீச்சுடர்களில் இருந்து திருமுருகன் உதித்தெழுந்த நாள் வைகாசி விசாகம். 

இதனால் - முருகனுக்கு விசாகன் எனும் திருப்பெயர்.  அக்னியில் தோன்றியதால் - அக்னிகர்ப்பன், கங்கை தாங்கியதால்  - காங்கேயன்,  சரம்  என்ற நாணல் புதர்கள் அடர்ந்த பொய்கையில் அவதரித்ததால் - சரவணன்,  

கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் - கார்த்திகேயன் ஆகிய திருநாமங்களால் முருகப் பெருமானை வணங்குகிறோம்.

முருகனை விசாகன் என -  திருச்செந்தூர் திருப்புகழில் அருணகிரியார் குறிப்பிடுகின்றார்.


யோக நிலையில் இருந்த சிவபிரானின் தவத்தைக் கலைக்க முயன்று - பெருமானின் நெற்றிக் கண் நெருப்பினால் மன்மதன் எரிந்தது மாசி மகத்தில்!.. 

பின்னர் உயிர்ப்பித்ததும் . அதன் பின்னர், சிவ - பார்வதி திருக்கல்யாணம்  நிகழ மன்மதனும் அனங்கனாக உயிர்ப்பிக்கப்பட்டான். இந்த வைபவம் நிகழ்வது - பங்குனி உத்திரத்தில் அல்லது  சித்திரையில்!..  

அதன் பின்னர் திருக்குமரன் உதயம் - வைகாசி - விசாகத்தில்!... 

சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து, சிவமே - முருகன் எனும் ஜோதியாகத் தோன்றி - அசுரர்களை அழித்து  உலகைக் காக்கின்றது என்பதே தாத்பர்யம்.

அருவமும் உருவும் ஆகி அனாதியாய்ப் பலவா யொன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள்பன் னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய!..
கந்தபுராணம்.

முருகனுக்குரிய எல்லாத் திருத்தலங்களிலும், குறிப்பாக திருச்செந்தூரில் விசாகப் பெருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.

மாமயிலோனாகிய திருமுருகனின் திருவடிகள் என் தலைமேல் பட்டதனால் - பிரம்மன் - தன் கைப்பட,  என் தலையில் எழுதிய எழுத்து அழிந்து விட்டது!.. - என்று அருணகிரியார் கூறுகிறார்.

சேல்பட்டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட்டழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்
வேல்பட்டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்பும் அவன்
கால்பட்டழிந்ததது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே!..
கந்தரலங்காரம்

சூரனின் சேனைகளை அழிக்க வந்த திருக்குமரன், திருச்செந்தூர் படைவீட்டில் வீரபாகு முதலான வீரர்களுடன் பூத சைன்யங்கள் சூழ அமர்ந்திருக்கிறான். 

திருச்செந்தூர்
முனிவர்கள் அனைவரும் அறுமுக வள்ளலை  வாழ்த்திய வண்ணம் அங்கு கூடியிருக்கின்றனர். அனைத்தும் அறிந்த ஆறுமுகப்பெருமான் - சூரனுடைய வரலாற்றினை உரைக்குமாறு கேட்க - 

தேவகுரு ஆகிய பிரகஸ்பதி - முருகனை வாழ்த்தி வணங்கிய பின் -  காசிப முனிவருக்கும் மாயைக்கும் அசுர புத்திரர்கள் தோன்றிய விதத்தை விவரிக்கின்றார்.

எனவே, திருச்செந்தூர் - குரு வணங்கிய தலம் ஆகின்றது.

சுவாமிமலை
வேதங்களின் பொருள் அறியாத நான்முகனின் தலையில் குட்டி - சிறையில் அடைத்த பின், முருகனே சகல ஜீவராசிகளையும் படைத்தருள்கின்றார்.

அப்போது, சிவபெருமான் - தன் மகனின்  செயலால் மகிழ்ந்தவராகி - பிரம்மன் அறியாத பிரணவத்தின் பொருளை நீ அறிவாயோ - என்று கேட்க, பிரணவத்தின் பொருளைத் தந்தைக்கு உணர்த்துகின்றான் - தனயன்.

எனவே, திருஏரகம் - பரமனுக்குக் குரு என ஆகிய தலம் ஆகின்றது.

பழனி
 பரமனின் மகன் என்று ஆன போதிலும், அண்டப் பிரபஞ்சம் அதிர படை நடத்தி அசுரர் தம் பகை வென்ற  வேலன் - வெற்றி வேலன் - என்று ஆன போதிலும்,

தவம் மேற்கொண்டு - தனி மலையில் தனித்து நின்று -  பற்றற்று பரமயோகி என கோவணத்துடன் தண்டு கொண்டு நின்றதனால் - 

அதிசயம் அனேகம் உற்ற பழனி - அவனிக்கு ஞானம் நல்கும் ஞான குரு தலம் என்றானது.

திருப்பரங்குன்றம்
இங்கு நான் பெற்ற வாழ்வும் வளமும் உன்னால் அன்றோ!.. - என தேவேந்திரன் - தான் வளர்த்த அன்பு மகள் - தெய்வானையை முருகனின் திருக்கரத்தினில் தாரை வார்த்துக் கொடுத்த திருப்பரங்குன்றமும், 

திருத்தணிகை
 வள்ளிக் கிழங்கினைக் கிள்ளி எடுத்திட்ட பள்ளத்திலே கிடந்து - வேடர் குலத் தலைவன் நம்பி ராஜனால் வளர்க்கப்பட்ட வள்ளி நாயகியின் அன்பு மனம் வேண்டி வேடனாகத் திரிந்தும் வேங்கை மரமாக விளைந்தும் விருத்தனாக நடந்தும் - ஆகும் வழி ஒன்றும் ஆகாததனால் - ஐங்கரத்துப் பிள்ளை ஆனையாக வந்து நிற்க - குறவர் குலக்கொடியைக் குறுஞ்சிரிப்புடன் அணைந்த திருத்தணிகையும், 

சோலைமலை
 குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் எனக் கும்பிட்டுத் தொழுவார் தம் - முறைகளைக் கேட்டுக் குறைகளைத் தீர்க்க என்று - அங்கிங்கெனாதபடி எங்கும் என்பதாக - கோயில் கொண்டு நின்ற சோலைமலை எனும் பழமுதிர்சோலையும்,

திருக்கல்யாண திருத்தலங்கள் ஆகின.

இவை மட்டுமா!.. எங்கள் திருக்குமரனின் திருத்தலங்கள்!?..

இன்னும் எத்தனை எத்தனையோ - திருத்தலங்கள்!..

உச்சி மலைகளிலும் ஓடும் ஆற்றின் ஓரங்களிலும், 
செந்நெற் கழனிகளிலும் செங்கதலி வனங்களிலும்,
அலைதவழ் கரைகளிலும் அடர்மலைக் காடுகளிலும், 
அருஞ்சுனைக் கரைகளிலும் அதிரும் அருவி சாரல்களிலும் - 

சிவபெருமான் வழங்கிட - அகத்திய மாமுனிவர் கட்டிக் காத்த செஞ்சொல் தமிழ் மொழியினிலும்  - அமுத மயமாக - அருள் மயமாக,

ஐயன் - அறுமுகவேள் விளங்குகின்றனன். அதுமட்டுமா!..

மனமே முருகனின் மயில் வாகனம்!.. எப்போது?..

ஆணவ, மாயா, கன்மம் - எனும் மும்மலங்கள் அகன்ற போது!..

காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம் - எனும் அறு பகைவர்கள் அழிந்தொழிதலே - முருகனின் அறுபடைத் தத்துவம்.


அறுமுகனைச் சரண் அடைபவர்க்கு அவனே அனைத்தும் ஆகின்றான்.
அந்நிலையில் - அவனால் - ஆறு கொடுங்குணங்களும் அழிகின்றன.

மனம்  - ஞானம் எனும் மயிலாகின்றது.

வள்ளியுடனும்  தேவகுஞ்சரியுடனும், வடிவேல் தாங்கி  வந்து அமர்கின்றான்.

அந்நிலையை அனைவரும் எய்துதற்கு ஐயன் அருள் மழை பொழிக!..

விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள், முன்புசெய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும், பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!..
கந்தரலங்காரம்
* * *

16 கருத்துகள்:

  1. முருகனின் அறுபடைத் தத்துவம் அறிந்தேன்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அற்புதமான விளக்கங்கள் கூடிய பதிவு.

    அருமை.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகை தந்து கருத்துரைத்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அறுபடைவீட்டுக் கதையும் பதிவில் தெரிவித்தமைக்கு நன்றி நான் முருகன் குறித்து சில பாடல்கள் எழுதி உள்ளேன் படிக்க விருப்பமிருப்பின் சுட்டிகள் தருகிறேன் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      முருகனைப் பற்றி தாங்கள் எழுதிய பாடல்களைப் படிக்க ஆவலுடையவனாக இருக்கின்றேன். சுட்டிகளைத் தெரிவிக்கவும்.
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  4. , குரு வணங்கிய தலம் திருச்செந்தூர் பற்றியும்
    விசாகத்திருநாள் பற்றியும் அருமையான பகிர்வுகள்.பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு
  5. முருகனின் திருக்கோயில்களைப் பற்றிய பதிவு நன்றாக இருந்தது. வைகாசித் திருநாள் பற்றிய புதிய செய்திகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அனைவரும் போற்றும்வண்ணம் ஆறுமுகன் புகழ்பாடிய உங்களின் வாழ்வு என்றென்றும் ஏறுமுகமாக இருப்பதாக!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகை தந்து கருத்துரைத்து வாழ்த்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. அறுபடைத் தத்துவம் மிகவும் சிறப்பு...

    விளக்கங்கள் அருமை ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  8. அற்புதமான விளக்கம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..