நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூலை 11, 2013

வரந்தரும் ஸ்ரீவராஹி

அன்னை. 

அவளிடமிருந்தே இந்த பிரபஞ்சம் தோன்றியது. அவளே அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி!.. 

உயிர்கள் உய்வடைய வேண்டுமென்று அவளே கருக்கொண்டாள்!. 

பின் அவளே அனைத்துமாக உருக்கொண்டாள்!.


''..பூத்தவளே!.. புவனம் பதிநான்கையும் பூத்த வண்ணம் காத்தவளே!..'' - என்பது அபிராமி பட்டரின் திருவாக்கு!...

தான் பெற்ற மகவு - கேளாமலேயே - பால் நினைந்தூட்டும் தாய் - எனச் சிறந்தவள்!.. 

அதனால் தான் மகாகவி பாரதியார் - ''..அம்பிகையைச் சரணடைந்தால் அதிக வரம் பெறலாம்!..'' என்றார்.

வானகமும் வையகமும் உய்வடையும் பொருட்டு அன்னை நிகழ்த்திய திருவிளையாடல்களும் - மேற்கொண்ட திருக்கோலங்களும் அனந்த கோடி!...

அவை - அவ்வப்போது அருளாளர்களால் கண்டு உணரப்பட்டு - மாயையில் சிக்கித் தவிக்கும் உயிர்க்குலம் நலம் பெறவேண்டும் என்ற பெருங் கருணையால் விளக்கப்படுவதுண்டு!... 

அம்பிகையை வழிபடும் முறைகளில் மிகச்சிறந்தது - நவராத்திரி என்பர் பெரியோர். அம்பிகையை ஆராதிக்க அனைத்து நாட்களும் சிறந்தவைகளே - எனினும் - அமாவாசை அடுத்து வரும் ஒன்பது நாட்களும் சிறப்பானவை என்று ஒரு திருக்குறிப்பு உண்டு.  

அந்த வகையில்  - ஆனி மாதத்தில் ஆஷாட நவராத்திரியும், புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும், தை மாதத்தில் சியாமளா நவராத்திரியும், பங்குனி மாதத்தில் வசந்த நவராத்திரியும் சிறப்பானதாக கருதப்படுகின்றன. 

நாம் எல்லோரும் கொண்டாடுவது புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரியைத் தான்.  இருப்பினும் பாரதத்தின் பல தலங்களில் இந்த விசேஷமான நவராத்திரி வைபவங்கள் அனுசரிக்கப்படுகின்றன.

இவற்றுள் முதலாவதாக இடம் பெறும் ஆஷாட நவராத்திரி - ஆனி மாதத்தின் அமாவாசையை அடுத்து வரும் நாட்களில் கொண்டாடப்படுவது. வளமைக்கும் செழிப்புக்கும் இந்த மாதமே தொடக்கம். உயிர்களின் பசிப் பிணிக்கு மருந்தாகும் வேளாண்மையின் தொடக்கம் இந்த மாதத்தில் தான்.

ஆடியில் புது வெள்ளம் பெருகி வந்து குளம் குட்டைகள் நிறைந்து வயலில் -  நீர் பாய்வதற்கு முன்  - கோடையில் காய்ந்து கிடந்த நிலங்களில் எரு விட்டு உழவு செய்து ஆயத்தப்படுத்திக் கொள்வது ஆனியில் தான்!.. 

வேளாண்மை செழித்து ஓங்குவதே ஒரு நாட்டின் மேன்மைக்கு அடையாளம்!..

ஆதியில் இருந்தே விவசாயம் தான் ஆதாரத்தொழிலாக விளங்குவது. எனவே தான் - ''..சுழன்றும் ஏர் பின்னது உலகம்!..'' - என்றார் வள்ளுவப்பெருமான்!..


இந்த ஏர் - தனைக் கையில் கொண்டு விளங்குபவள் - ஸ்ரீ வராஹி!.. 

ஸ்ரீ வராஹி  - வேளாண்மையின் ஆதாரம்!..  

ஸ்ரீ வராஹி - சப்த கன்னியருள் விளங்குபவள். தேவி புராணங்களில் சிறப்பாக வர்ணிக்கப்படுபவள். அளவற்ற சக்தியுடன் விளங்கும் ஸ்ரீவராஹி -  ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் தளபதியாகத் திகழ்பவள்.  

வேண்டுவோர்க்கு வேண்டியவற்றை அருளும் கருணை உடையவள்.

ஆகவேதான்  - விவசாயம் பல்கிப் பெருகி, நாடு நலம் பெற வேண்டும் - என ஆஷாட நவராத்திரி நாட்களில் ஸ்ரீ வராஹி - ஆராதிக்கப்படுகின்றாள்.

அதன்படியே - 

தென்னகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் சோழவளநாட்டின் தனிப்பெருந் தலைநகராக விளங்கும் தஞ்சை மாநகரில்  - ஈடு இணையின்றி கம்பீரமாக - வானளாவித் திகழும் ஸ்ரீராஜராஜேஸ்வரம் எனப்படும்  - ஸ்ரீ பிரகதீஸ்வரர் திருக்கோயிலில் அருளாட்சி புரியும் ஸ்ரீ வராஹி அன்னைக்கு சிறப்பான முறையில் ஆஷாட நவராத்திரி கொண்டாடப்படுகின்றது!..


தமிழகத்தில் சிவாலயங்கள் பலவற்றிலும் சப்தகன்னியர் திருமேனிகள் விளங்கினாலும்  - காசியம்பதிக்கு அடுத்து - தஞ்சையில் பெரிய கோயிலில் தான் அன்னை ஸ்ரீ வராஹி தனி சந்நிதியில் விளங்குகின்றனள்.  

ஸ்ரீ மஹாவிஷ்ணு வராக உருக் கொண்டு - இவ்வுலகை அசுரர்களிடம் இருந்து மீட்டபோது அவரிடம் விளங்கிய சக்தி - ஸ்ரீ வராஹி என்பது  திருக்குறிப்பு!..


நம் உடலில் இலங்கும் ஆறு ஆதார சக்கரங்களில் ஐந்தாவதாக நெற்றியில் விளங்கும் ஆக்ஞா சக்கரத்தின் அதிபதி - ஸ்ரீ வராஹி.

ஆஷாட நவராத்திரி நாட்களிலும் நடுநாயகமாகத் திகழும் ஐந்தாவது நாளாகிய பஞ்சமி  - மிகச் சிறப்பான நாள்.  வேளாண்மைக்கு உரியதான ஏர் மற்றும் தொழிலுக்கு உரியதான உலக்கை இரண்டும் ஸ்ரீ வராஹி அன்னையின் திருக்கரங்களில் விளங்குகின்றன!..  

தஞ்சை பெரிய கோயிலில் ஸ்ரீ வராஹி அம்மனுக்கு - ஆனி 23 (7/7) ஞாயிறு அன்று காலை மஹாகணபதி ஹோமத்துடன்  ஆஷாட நவராத்திரி விழா சிறப்பாகத் தொடங்கியுள்ளது. 

தினமும் காலையில் ஸ்ரீ வராஹி அன்னையின் மூல மந்திர ஹோமம்,  மஹா அபிஷேகமும் மாலையில் சிறப்பு அலங்காரமும் மகாதீப ஆராதனையும் நிகழ்வுறும்.  17/7/2013 வரை நிகழும் இத்திருவிழாவில் -


விழாவின் தொடக்க நாளான 7/7 அன்று இனிப்பு வகைகளாலும்,  8/7 அன்று மஞ்சள், 9/7 அன்று குங்குமம், 10/7 அன்று சந்தனம் - என அலங்கரிக்கப்பட்டு அழகுடன் திகழ்ந்தாள் அன்னை.

11/7 அன்று தேங்காய் பூவினாலும், 12/7 மாதுளை முத்துக்களாலும், 13/7 நவ தானியங்களாலும், 14/7 வெண்ணெய் அலங்காரம் கொண்டும் திகழ்வாள்.

15/7 அன்று கனிகளாலும், 16/7 அன்று காய்களாலும் 17/7 அன்று புஷ்ப அலங்காரத்திலும் திருக்கோலங்கொள்ளும் ஸ்ரீ வராஹி - அன்று மாலை அலங்கார ரதத்தில் திருவீதி எழுந்தருள்கின்றனள்.

அன்னையின் ஆராதனையில் அன்னதான வைபவமும் இன்னிசை நிகழ்ச்சிகளும்  - குறிப்பிடத்தக்கவை.

அன்னை ஸ்ரீ வராஹி  - எதிர்ப்புகளை தகர்ப்பவள். வேளாண் தொழில்களில் மேன்மையை அருள்பவள். நம் வீட்டில் தான்ய வளமையைப் பொழிபவள். பில்லி, சூனியம் போன்ற கொடுவினைகளை அடியோடு அழிப்பவள்.


நம்மிடம் நேர்மை இருக்கும் பட்சத்தில் - நமக்கு உற்ற துணையாகி நல்வழி காட்டுபவள்.  

கடல் கடந்தும் வெற்றிகளைக் குவித்திட  - மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு உறுதுணையாக இருந்தவள் ஸ்ரீ வராஹி!..

தென்னகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் சோழவளநாட்டின் தனிப்பெருந் தலைநகர்  தஞ்சை மாநகரில்  - தண்ணருள் பொழிபவள் ஸ்ரீ வராஹி!..

சோழ வளநாடு, இப்புகழினை எய்தியதற்கு -   ஸ்ரீ வராஹி அம்மனின்  பெருந் துணையே காரணம்  என்பதை எளிதாக உணரலாம்.

பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்ச பாணி வஞ்சர் 
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிரவி நான்மறை சேர் திரு நாமங்கள் செப்புவரே!..(77) 

என்று  - அபிராம பட்டர் போற்றி வணங்குகின்றார்.

நியாயமான செலவுகளுக்காக வாங்கிய கடனை - திருப்பிக் கொடுக்க இயலாத சூழ்நிலையிலும், 

நம்பிக்கொடுத்த கடன் - எதிர்பார்த்தபடி திரும்பக் கிடைக்காத சூழ்நிலையிலும்,

அளப்பரிய அன்புடன்  - நமக்குக் கை கொடுப்பவள் ஸ்ரீ வராஹி. 

ஆஷாட நவராத்திரி நாட்களில்  - மாலை நேரத்தில்,

உங்க வீட்டின் - பூஜை அறையில் அல்லது வழிபடும் இடத்தில் -

நெல் அல்லது பச்சைப் பயிறு கொண்டு கோலமிட்டு,  நெய் விளக்கேற்றி வைத்து - அதிக இனிப்புடன் கூடிய (கேசரி, பாயாசம், ஜிலேபி போன்ற) பட்சணத்தினை நிவேதனம் செய்து ஸ்ரீ வராஹி அன்னையை வணங்குங்கள். உங்கள் இல்லத்திற்கு -

வரந்தரும் வராஹி வருவாள்!.. 
வளமும் நலமும் தருவாள்!..

4 கருத்துகள்:

  1. விளக்கங்கள், தகவல்கள் அனைத்தும் சிறப்பு... நன்றி ஐயா... தொடர வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  2. அன்பு நண்பர் அவர்களுக்கு!.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா12 ஜூலை, 2013 19:05

    தஞ்சை வராஹி அம்மனைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் மகிழ்ச்சி - எனக்கும் மகிழ்ச்சியே!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..