நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி!..


ஞாயிறு, ஜூலை 14, 2013

தில்லையில் திருவிழா

அம்பலத்தரசன். ஆடவல்லான். ஆனந்தக்கூத்தன்.

மூவரும் தேவரும் காணா முக்கண் முதல்வன்.

நால்வரும் பாடிய நற்றமிழின் நாயகன்.


பஞ்சவரில் பார்த்தனுக்கு அருள் செய்து, படைக்கலமாக பாசுபதம் வழங்கிய பரமன்.

தான் வீற்றிருக்கும் மாமலையினை மமதையுடன் பெயர்த்தெடுக்க முயன்ற ராவணனை - மன்னித்துப் பெருங்கருணையுடன் - பேரும், நாளும், வாளும் வழங்கிய வள்ளல்.

வியாக்ரபாத முனிவரின் மகன் உபமன்யு, பசித்து அழுதபோது  - தேவ லோகத்திலிருந்து காமதேனுவையோ நந்தினியையோ - பாலுக்காக அனுப்பாமல் பாற்கடலையே அனுப்பி வைத்த பரமதயாளன்.

ஞானசம்பந்தப் பெருமான்  - திருப்பதிகம் பாடும்போது  - தன்  கரங்களால் தாளமிட - ''..சம்பந்தனின் பிஞ்சுக்கரங்கள்  வலிக்குமே!..'' - என்று மனம் துடித்து வெண்கலத் தாளம் கூட இல்லை - பொற்றாளம் வழங்கி மகிழ்ந்த பெருமான்.

நாவுக்கரசர் - முதிர்ந்த வயதில்  - தலங்கள் தோறும் யாத்திரை செய்தபோது -  பசி மயக்கத்துடன் தளர்ந்த வேளையில்  - தயிர் சோறும் நீரும் சுமந்து வந்து,   பரிமாறி - களைப்பு  நீக்கிய கருணைக் கடல்.

சுந்தரர் - திருஒற்றியூரில் சங்கிலி நாச்சியாருக்குக் கொடுத்த வாக்கினை மீறியதால் - அவருடைய கண்களைப் பறித்தாலும் திருஆரூரில் அவர் பொருட்டு - பரவை நாச்சியாரின் இல்லம் தேடி நடந்து - இல்லறத்தை நல்லறமாக ஆக்கி வைத்த அருளாளன். 

மாணிக்கவாசகரின் பொருட்டு - காட்டு நரிகளைக் கவின்மிகு குதிரைகளாக ஆக்கியதோடு அல்லாமல் - அவற்றை ஓட்டிக் கொண்டு மாட மாமதுரையின் திருவீதிகளில் வலம் வந்து - மன்னன் அளித்த மாலை மரியாதைகளை ஏற்றுக் கொண்டு மறுநாளே - அவனிடம் பிரம்படி என்று ஏற்றருளிய சோமசுந்தரன்.

உலகுக்கெல்லாம் படியளக்கும் பரமசிவம். ஆனாலும் உதிர்ந்த பிட்டு உண்ண ஆசை கொண்டு - வந்தியம்மையின் அன்பின் முன் கையேந்தி நின்ற நிமலன்.

ஒன்றா!.. இரண்டா!.. சொல்லிக் கொண்டேயிருக்கலாம்!... 


இப்படியெல்லாம்  - அன்பர்களுடன் ஆடியவன்!.. அன்பர்களை ஆட்டி வைத்தவன்!.. அவர்தம் அல்லல் எல்லாம் ஓட்டி வைத்தவன்!..  ஆனந்தக் கோலாகலத் திருநடம் காட்டி வைத்தவன்!..

நம் பொருட்டு  - 13/7 அன்று தில்லைத் திருச்சிற்றம்பலம் எனும் சிதம்பரத்தில் ஆனித் தேரோட்டம் - நிகழ்ந்துள்ளது.

''.. நீ வரா விட்டால் என்ன!... நானே உன்னைத் தேடி வருகின்றேன்!..'' - என வாஞ்சையுடன் வள்ளல் பெருமான் தேரில் - திருவீதி எழுந்தருள - ஆயிரம் ஆயிரமாய் அன்பர்கள் ஐயனைக் கண்டு   இன்புற்றிருக்கின்றனர்.


5/7/2013 அன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கிய பெருவிழாவில் - ஒவ்வொரு நாள் காலையிலும் இரவிலும் ஐயனும் அம்பிகையும் ஆனிப் பொன்மஞ்சம் , சந்திர பிரபை, சூர்ய பிரபை, பூதம் , யானை , கயிலாயம் - என மகத்தான  வாகனங்களில் எழுந்தருளி -

விநாயகர், முருகன், சண்டிகேசர் - சூழ  -  திருவீதி வலம் கோலாகலமாக நிகழ்ந்துள்ளது.

ஒன்பதாம் நாள் -  ஆனித் தேரோட்டம். 

நடராஜப்பெருமான் - சிவகாமசுந்தரியுடன் திருத்தேரில் எழுந்தருளி நான்கு வீதிகளில் உலா வந்த பின்னர் இரவில் ராஜசபை எனும் ஆயிரங்கால் மண்டபத்தில் தங்குவார். 

பத்தாம் நாளாகிய உத்திரத்தன்று வைகறையில் ஆனித் திருமஞ்சன அபிஷேகம் விமரிசையாக நடைபெறும்.

இன்று (14/7) ஆனி உத்திரம் - நடராஜப்பெருமானுக்கு -  திருமஞ்சனம்.

கோயில் - எனப்படும் திருச்சிற்றம்பலத்தின் ஆயிரங்கால் மண்டபத்தில் - யாகசாலை ஹோமபூஜைகளுடன்  - அற்புதமான மஹாபிஷேகம் நிகழ்வுறும். 

அனைத்து திரவியங்களாலும் அபிஷேகம் நிறைவுற்ற பின்னர் பலவிதமான மலர்களால் புஷ்பாஞ்சலியும்  -

அலங்கார மூர்த்தியாகத் திகழும் எம்பெருமானுக்கு அர்ச்சனைகளும் மஹா தீப ஆராதனையும் நிகழ்வுறும்.  


அன்பர்கள் இன்புறும் வண்ணம்  - திங்களன்று முத்துப்பல்லக்கில் வீதியுலா. அதன் பின் -

எம்பெருமானும் சிவகாமசுந்தரியும் - ஆனந்த நடனம் புரிந்தபடியே மீண்டும் சித்சபைக்கு எழுந்தருள்வர்.

சகல சிவாலயங்களிலும் - நடராஜர் சந்நிதியில் ஆனித் திருமஞ்சன வைபவம் விசேஷமாகக் கொண்டாடப்படும்.

சைவநெறிகளின்படி கோயில் என்றால் -  தில்லை திருச்சிற்றம்பலம் தான்!..

எல்லா சிவாலயங்களின் கலைகளும் இங்கே ஒருங்கிணைவதாக ஐதீகம்.

திருச்சிற்றம்பலம் தான்  - சித்சபை.  நடராஜப் பெருமானும் சிவகாமசுந்தரியும் வீற்றிருக்கும் கருவறை. பெருமானின் வலப்புறம் சிதம்பர ரகசியம். பொன் வேய்ந்திருப்பதால் பொன்னம்பலம் எனத் திருப்பெயர். 

எம்பெருமான் - நடராஜ மூர்த்தி என உருவம், சிதம்பர ரகசியம் என அருவம், ஸ்படிகலிங்கம் என அருவுருவம் - ஆகிய மூன்று நிலைகளில் இங்கே திகழ்கின்றனர். 


இந்த நல்ல நாளில் - அருளாளர்களாகிய நம் முன்னோர் - தம் திருவாக்கில் அருளியபடி ஆனந்தக்கூத்தனை- இதயக் கமலத்தில் தரிசித்து இன்புறுவோம்!. 


திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு

செல்வ நெடுமாடஞ் சென்று சேணோங்கிச்
செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பலமேய
செல்வன் கழலேத்துஞ் செல்வம் செல்வமே!..1/80/5.

திருநாவுக்கரசர் அருளிய தேவாரம்

குனித்தபுருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும் 
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்த பொற்பாதமுங் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்தமாநிலத்தே!..4/81/4.

சுந்தரர் அருளிய திருப்பாட்டு

மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே மனனே நீ வாழுநாளும்
தடுத்தாட்டித் தருமனார் தமர்செக்கிலிடும்போது தடுத்தாட்கொள்வான்
கடுத்தாடும் கரதலத்தில் தமருகமும் எரிஅகலும் கரிய பாம்பும்
பிடித்தாடிப் புலியூர்ச் சிற்றம்பலத்தெம் பெருமானைப் பெற்றாமன்றே!..7/90/1.

மாணிக்கவாசகர் அருளிய  திருவாசகம்

நல்கா தொழியான் நமக்கென்று உன் நாமம் பிதற்றி நயனநீர்
மல்கா வாழ்த்தா வாய் குழறா வணங்கா மனத்தால் நினைந்துருகிப்
பல்கால் உன்னைப் பாவித்துப் பரவி பொன்னம்பலம் என்றே
ஒல்கா நிற்கும் உயிர்க்கிரங்கி அருளாய் என்னை உடையானே!.. 8/21/10.

திருமூலர் அருளிய திருமந்திரம் 

தேவரோடாடித் திருஅம் பலத்தாடி 
மூவரோடாடி முனிகணத்தோடாடிப்
பாவினுள் ஆடிப் பராசத் தியில்ஆடிக்
கோவிலுள் ஆடிடும் கூத்தப் பிரானே!.. 9/14/9.

சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு 

பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னிய தில்லைதன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே!.. 9/29/9.வள்ளலார் அருளிய திருஅருட்பா

அருட்ஜோதி தெய்வம் எனை ஆண்டு கொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வம்
பொருட்சாரும் மறைகள் எல்லாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்த தெய்வம் உயர் நாதாந்த தெய்வம்
இருட்பாடு நீக்கி ஒளி ஈந்தருளும் தெய்வம்
எண்ணிய நான் எண்ணியவாறெனக் கருளும் தெய்வம்
தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
சித்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம்!

தென்னாடுடைய சிவனே போற்றி!..
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!..

சிவாய திருச்சிற்றம்பலம்!..

3 கருத்துகள்:

 1. சிறப்பான பகிர்வுக்கு நன்றி ஐயா...

  தொடர்க... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. அன்புடையீர்!... தங்களின் வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் மிக்க நன்றி!...

  பதிலளிநீக்கு
 3. உமா சுப்பு அவர்களை அன்புடன் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்!...

  பதிலளிநீக்கு