நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி

ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி!..


வெள்ளி, ஜூலை 12, 2013

மாணிக்கவாசகர்

இவர் பொருட்டல்லவோ - குதிரைச் சேவகனாக மாமதுரையின் மாட வீதிகளில்  வலம் வந்தான் - இறைவன்!..

இவர் பொருட்டல்லவோ - வைகை நதி பொங்கிப் பெருகி மதுரைக்குள் பாய்ந்தது!..


இவர் பொருட்டல்லவோ - விருப்பத்துடன் வந்தியம்மையின் கையால் பிட்டு உண்ண வந்தான் மாமதுரைச் சொக்கநாதன்!...

இவர் பொருட்டல்லவோ - உதிர்ந்த பிட்டுக்கு மண் சுமந்ததோடல்லாமல் மன்னனிடம் பிரம்படியும் பட்டான் - ஈசன்!..

இவர் பொருட்டல்லவோ -  பொங்கிப் பெருகி மதுரைக்குள் பாய்ந்த வைகை  ஒரு கூடைமண் கொண்டு அடங்கி ஒடுங்கி- '' நடந்தாய் வாழி!..''  என நடந்தது!..

இறைவனைக் குருவாகக் கொண்டு - அவன் தாள் மலர்களைத் தலைமேல் சூட்டிக் கொண்டு  தன்னிகரில்லா திருவாசகம் எனும் தேன் மழையினைப் பொழிந்தவர் மாணிக்கவாசகப் பெருமான்!..

தென்னகத்தில் தனிப்பெரும் புகழோடு விளங்கும்  தெய்வத்திரு மதுரையம்பதிக்கு அருகில் உள்ள திருவாதவூர் எனும் தலத்தில் தான் மாணிக்க வாசகரின் திரு அவதாரம் நிகழ்ந்தது.

தந்தையார் - சம்புபாத ச்ருதர். தாயார் - சிவஞானவதி .

சைவம் குன்றியிருந்த அக்காலத்தில்  இறைவன் திருவருளால் -  சைவம் மீண்டும் தழைத்து ஓங்கவும், வேத சிவாகம நெறிகள் சிறந்து விளங்கவும் தோன்றிய பெருமானின் இயற் பெயர் - திருவாதவூரர் என்பதாகும்.

பதினாறு வயதிற்குள் - திருவாதவூரர், அனைத்தும் கற்றுணர்ந்து ஞானச்சுடராக விளங்கினார். இவரைப் பற்றி அறிந்த பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியன் திருவாதவூரரை விரும்பியழைத்து தன் அமைச்சரவையின் தலைமை அமைச்சராக அமர்த்தி அரசவைக்கு அழகு சேர்த்து மகிழ்ந்தான். 

இதுவும் ஈசன் செயல் எனக் கொண்ட திருவாதவூர்  - மாமதுரையில்  வீற்றிருக்கும் சுந்தரேசப்பெருமானையும் அன்னை மீனாட்சியையும் நாளும் போற்றி வணங்கி - தம் பணியினைச் செம்மையுடன் செய்து வந்தார்.

திருவாதவூரரின் திறமையான நிர்வாகத்தினால் மன்னனும் மக்களும் மகிழ்ந்தனர். ஆனால் அவர் மனம் அதில் நிறைவடையவில்லை. அவருடைய நாட்டம் எல்லாம் - ''..பிறவிப் பெரும் பயனை அடைதற்குரிய வழி என்ன!..'' என்பதிலேயே இருந்தது.

அந்த சமயத்தில்  - குதிரைப் படைகளைப் பலப்படுத்த வேண்டும் என்று விரும்பிய மன்னன் , தலைமை அமைச்சராக விளங்கிய திருவாதவூரரிடம் -   

''..கருவூலத்திலிருந்து வேண்டும் அளவுக்குப் பொன்னும் பொருளும்  எடுத்துச் சென்று நல்ல குதிரைகளை வாங்கி வருக!..'' - என்று கூறி அவருடன் சில பணியாளர்களையும் அனுப்பி வைத்தான்.

அரசனின் ஆணையை ஏற்றுக் கொண்ட திருவாதவூரரும் அவ்வண்ணமே கீழைக் கடற்கரையை நோக்கிப் புறப்பட்டு  - திருப்பெருந்துறை எனும் தலத்தினை அடைந்தார்.

அங்கே   - திருவாதவூரரை ஆட்கொள்ள வேண்டுமென்று - சிவ கணங்கள் அடியார்களாகி சூழ்ந்திருக்க, 

குருந்த மரத்தின் கீழ் சிவபெருமான் - ஞானகுருநாதனாக வீற்றிருந்தார்.

அவரைக் கண்ட மாத்திரத்தில் திருவாதவூரரின் உண்ணத்தில் ஆனந்த வெள்ளம் பொங்கிப் பெருகியது. இவரே - நம் குருநாதர் என உணரப் பெற்ற மாத்திரத்தில் அவரது திருவடியில் வீழ்ந்து பணிந்தார். 

''..ஐயனே! என்னை ஆட்கொண்டருளுக!..''  - என வேண்டி நின்றார். 


வாதவூரரின் பக்குவ நிலையை அறிந்திருந்த குருநாதர் திருக்கண் நோக்கி , ஸ்பரிச தீட்சை செய்து திருவடிசூட்டித் திருஐந்தெழுத்து உபதேசம் அருளினார்.

திருவாதவூரர் - தம்மை ஆட்கொண்ட குருநாதரின் கருணையைக் குறித்துச் சொல் மாலை  பலவும் சூட்டினார். 

ஈசனின் திருவருள் நோக்கால், ஞானத்தின் வடிவாக விளங்கிய - வாதவூரர்.

திருவாதவூரருக்கு மாணிக்கவாசகன் என்ற பெயரைச்  சூட்டினார் பெருமான்.

குருநாதரிடம் முழுமையாகத் தன்னை ஒப்புவித்த மாணிக்க வாசகர்  - ''..குதிரை வாங்கக் கொணர்ந்த பொன்னையும் பொருளையும் என்ன செய்வது?..'' எனக் கேட்டார்.  

குருநாதரோ -  ''..அதைக் கொண்டு அறப்பணி செய்க!..''  - என அருளினார்.

அதன்படியே - திருப்பெருந்துறையில் நின்று விளங்குமாறு திருக்கோயிலைக் கட்டினார். திருமடங்கள், நந்தவனங்கள்  அமைத்தார்.  மாகேசுவர பூசை பல நிகழ்த்தினார். அரசன் குதிரை வாங்குவதற்குத் தம்மிடம் அளித்த பொருள்கள் அனைத்தையும் சிவப்பணிகளுக்கே செலவிட்டார். நாள்கள் பல சென்றன.

உடன் வந்தவர்கள் -  தாங்கள் எண்ணி வந்த செயலை நினைவூட்டினார். திருவாதவூரர் எதுவும் கேளாதவராய் இறைவழிபாட்டில் ஈடுபட்டிருந்தார்.  உடன் வந்த பணியாளர் மதுரை மாநகருக்கு திரும்பிச் சென்று பாண்டியனிடம் நிகழ்ந்தவற்றைத் தெரிவித்தனர்.   

செய்தியை அறிந்த பாண்டியன் சினந்து, ''அவரை அழைத்து வருக!..'' என ஆணையிட்டு ஓலை அனுப்பினான்.  பணியாளரும் திருப்பெருந்துறையை அடைந்து அரசன் அளித்தஓலையினை  அமைச்சர் பெருமானிடம் கொடுத்து அரசன் கட்டளையை அறிவித்து நின்றனர். 

அதைக் கேட்ட வாதவூரர் தம் குருநாதரிடம் சென்று நிகழ்ந்ததைக் கூறி  நின்றார். குருநாதர் புன்னகையுடன் - ''..அஞ்சற்க, ஆவணி மூலத்தன்று குதிரைகள் வரும் என்று மன்னனிடம் கூறுக!. அத்துடன்  இதனையும் மன்னனிடம் வழங்குக!..'' - என அருளி விலையுயர்ந்த மாணிக்கக்கல் ஒன்றினையும் வழங்கினார். 

வாதவூரரும் குருநாதரைப் பிரிய மனமில்லாதவராய்ப் பிரியா விடைபெற்று மதுரைக்குத் திரும்பினார். அரசவைக்கு வந்த பெருமான், இறைவன் அருளிய மாணிக்கத்தினை மன்னனிடம் கொடுத்து, ''..வருகின்ற ஆவணிமூல நாளில் குதிரைகள் மதுரை வந்தடையும்!..'' -என்று கூறினார். அரசனும் மனம் மகிழ்ந்து அமைச்சரை அன்புடன் மனந்தெளிந்து  அவரை மகிழ்வித்தான். 

ஆனால் - உடன் சென்றவர் சிலர் சொல்லியதன் பேரில் உண்மையினை உணர்ந்து கொண்ட மன்னன்  - குதிரை வாங்கக் கொடுத்த பொன் கொண்டு கோயில் கட்டிய  மாணிக்க வாசகரை வைகையாற்றின் சுடு மணலில் நிறுத்தி  தண்டித்தான்.

தன்னைக் காத்தருளுமாறு  வேண்டிய மாணிக்கவாசகருக்காக -   நரிகளைப் பரிகளாக்கிய ஈசன், அவற்றை எல்லாம் பாண்டியன் முன்னிலையில்  கொண்டு வந்து நிறுத்தினான். ஐயனின் திருவிளையாடல் அறியாத மன்னன் குதிரைகளைக் கொண்டு வந்து சேர்த்த வணிகனுக்கு பரிசுகள் வழங்கியதோடு திருவாதவூரரையும் சிறையில் இருந்து விடுவித்தான்.

ஆனால் - பரிதாபம்!... அன்றைய இரவில் - பரிகளாக வந்த நரிகள்  - தமது மெய் உருவினை அடைந்து ஊளையிட்டதோடல்லாமல் அரண்மனை லாயத்தில் கட்டிக் கிடந்த பழைய குதிரைகளைக் கடித்துக் குதறி விட்டு - காட்டுக்குள்  ஓடி மறைந்தன!... 

வெகுண்டெழுந்த மன்னன் தனது தலைமை அமைச்சரை, மிகக்கொடுமையாக சித்ரவதை செய்தான். 

அதன் பொருட்டு தான் - முதலில் சொல்லப்பட்ட சம்பவங்கள். 


இறைவன் நிகழ்த்திய திருவிளையாடலில், இறைவனுக்கு பிட்டு கொடுத்த வந்தியம்மை முக்தி பெற்று உய்ந்தனள்.

எல்லாவற்றையும் உணர்ந்து தெளிந்த மன்னன் மாணிக்க வாசகரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி  - ''..தன் பிழை பொறுத்து பாண்டிய நாட்டின் அரசு உரிமையை ஏற்று  வழி நடத்துக!..'' - என்று  வேண்டிக்  கொண்டான்

அதனை மறுத்தருளிய மாணிக்கவாசகர்  - தாம் கொண்ட நோக்கத்தினை வெளிப்படுத்தவே - அவரை அவர் போக்கிலேயே விடுத்தனன் அரிமர்த்தன பாண்டியன்.

இறையருளின் படி தலயாத்திரை மேற்கொண்ட மானிக்கவாசகர் உத்தரகோச மங்கை என்னும் திருத்தலத்தில் அஷ்ட மா சித்திகளையும் பெற்றனர்.

பின்னும் சோழ நாட்டின் பலதலங்களையும் தரிசித்து - திரு அண்ணாமலை திருக்கழுக்குன்றம் ஆகிய பதிகளில் இருந்து பல அருட் செயல்களை நிகழ்த்தி தில்லையம்பதியினை அடைந்தார். 


தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் வடக்கு திருவாசல் வழியாக பெருமான் , திருக்கோயிலுக்குள் சென்றதாக நம்பிக்கை.

தில்லையில் இருந்த காலத்தில் ஈழத்திலிருந்து வந்த புத்த சமயவாதிகளை வாதில் வென்று சைவ சமயத்தினை நிலை நாட்டினார். அவர்களுடன் வந்த  ஈழத்து மன்னன் தன் மகளுடன் பெருமானின் திருவடிகளைப் பணிந்து வணங்கி தன் மகளின் குறையினை முறையிட பிறவி ஊமையாய் இருந்த ஈழ இளவரசியின் பிறவிப் பிணியினை பஞ்சாட்சரம் ஓதுவித்து நீக்கியருளினார்.

எல்லாம் வல்லவனாகிய எம்பெருமான்  - அந்தணராக வந்து மாணிக்க வாசகர் பல சமயங்களிலும் பாடிய பாடல்களை முறையாகச் சொல்லும்படிக் கேட்டுக் கொண்டார். 

சுவாமிகளும் - தாம் பாடிய அனைத்தையும் மீண்டும் சொல்லியருளினார். வந்திருந்த அந்தணர் தம் திருக்கரத்தால் அவைகளை எழுதி - ''..பாவை பாடிய  திருவாயால்  கோவை பாடுக!..'' - என்று கேட்டுக்கொண்டார். 

அதன்படியே மாணிக்கவாசகர்  திருக்கோவை  அருளிச் செய்தார்.  அந்தணர் அதையும் தம் திருக்கரத்தால் எழுதி முடித்து மறையவும் - அந்தணனாக வந்து தன்னை ஆட்கொண்டவர் சிவபிரானே என்பதை அறிந்து ஆனந்தக் கண்ணீர் வடித்து  வணங்கிப் போற்றினார்.  

விடியற்காலையில் பொன்னம்பலத்தின் வாசற்படியினில்  -

திருச்சிற்றம்பலமுடையான் திருச்சாத்து எனும் திருக்குறிப்புடன் ஓலை சுவடிகளைக் காணப் பெற்ற  தில்லைவாழ் அந்தணர்கள் , வியந்து -

மாணிக்கவாசகப் பெருமானை அணுகி - ''..இதன் பொருளை விளக்க வேண்டும்!..'' எனக் கேட்டுக் கொண்டனர். சுவாமிகள் தன் குடிலிலிருந்து  திருக்கோயிலுக்கு வந்தார். 


''..தில்லைச்சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ள பெருமானே - இதன் பொருள்!..'' - என்றருளியபடி அம்பலத்தில் ஆடும் ஆனந்தக்கூத்தனுடன் இரண்டறக் கலந்தார்.

மாணிக்கவாசகர் சிவசாயுஜ்யம் பெற்ற நாள்  - ஆனி மகம்!..

இன்று தில்லையில் - மாணிக்கவாசக சுவாமிகளின் குருபூஜை!.

சிவாலயங்கள் தோறும் மாணிக்க வாசகப் பெருமானைப் போற்றி வணங்கித் தொழுகின்றனர் - இறையன்பர்கள்.
நம சிவாய வாழ்க!.. நாதன் தாள் வாழ்க!..
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!...

தென்னாடுடைய சிவனே போற்றி!.. 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!..

எனும் மாணிக்க வரிகள் அவர் அருளியவை. திருவாசகத்தில் பிரபஞ்ச ரகசியங்களைத் விவரிப்பதுடன் மானுட கருவறையில் கரு உருவாகும் விதத்தினையும் தெள்ளத் தெளிவாக   விளக்குகின்றார். 


மகாஞானியாகிய மாணிக்க வாசகர் முதல் மந்திரியாக இருந்து வழி நடாத்திய நாட்டில் நாம் பிறந்திருக்கின்றோம் என்பது நமக்கெல்லாம் பெருமை. 

''.அம்மையே அப்பா.. ஒப்பிலாமணியே!.. அன்பினில் விளைந்த ஆரமுதே!..'' -  என இறைவனை விளித்தவர்.

இறைவனை எப்படிப் பற்றிக் கொள்வது ?... இதோ இப்படித்தான்!..

இம்மையே உன்னை சிக்கெனப் பிடித்தேன்!
எங்கெழுந்தருளுவது இனியே!...

ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள்  போற்றி!.. 
திருச்சிற்றம்பலம்!..

10 கருத்துகள்:

 1. மாணிக்க வாசகரின் சிறப்பு தகவல்கள் அனைத்தும் அருமை ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உன்மையில் தாங்கள் அளித்த யோசனை பயனுள்ளது. மிக்க நன்றி!. இதுவரை எனக்கு இந்த மாதிரி ஒரு பிரச்னை உள்ளதே இப்போது தாங்கள் சொல்லித் தான் தெரியும். சரி செய்து விடுகின்றேன்!..

   நீக்கு
 2. சின்ன வேண்டுகோள் :

  Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை Publish செய்ய முடிந்தது...)

  (Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')

  நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்கள் அளித்த தகவலின்படி சரி செய்து விட்டேன். நன்றி!..

   நீக்கு
 3. பெயரில்லா12 ஜூலை, 2013 16:15

  விரிவான தகவல்கள். அருமை.

  பதிலளிநீக்கு
 4. நன்றி.. நண்பரே!.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

  பதிலளிநீக்கு
 5. Nice presentation. Please continue for other 62 nayanmars also. Thanks
  N.Paramasivam

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திரு. பரமசிவம் அவர்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி.. எல்லாம் வல்ல சிவம் எல்லாவற்றுக்கும் துணை செய்வதாக!...

   நீக்கு
 6. மாணிக்க வாசகர் படிக்கப் படிக்க மனம் இனிக்கும் பதிவு அய்யா, நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்!... தங்களின் மேலான கருத்துரை என்னை மேலும் ஊக்குவிப்பதாக உள்ளது. நன்றி.. ஐயா!..

   நீக்கு