இன்று நடிகர் திலகம் பத்மஸ்ரீ சிவாஜிகணேசன் அவர்களின் பிறந்தநாள்!..
தமிழ்த்தாய் உவகை கொண்ட நாட்களில் - திரு. சிவாஜி கணேசன் அவர்கள் பிறந்த நாளும் ஒன்று!..
என் தந்தையின் பால்ய நண்பர் - திரு.சிவாஜி கணேசன் அவர்கள்!.. அதுவே எனக்குப் பெருமை!..
தஞ்சை ராமநாதன் செட்டியார் ஹாலில் நாடகங்கள் பலவற்றை நடத்திய பெருமை உடையவர் என் தந்தை. ஹார்மோனியம், தபேலா, சாக்ஸபோன், புல்புல் தாரா - முதலிய இசைக்கருவிகளை இசைப்பதில் வல்லவர் என் தந்தை.
அவருக்கு - திரு. சிவாஜி அவர்களுடனும் திரு. M.R.ராதா, திரு.T.R.மகாலிங்கம், திரு.சக்திகிருஷ்ணசாமி, நகைச்சுவை நடிகர் திரு. தங்கவேல் ஆகியோருடனும் நல்ல பழக்கம் இருந்திருக்கின்றது.
திரு. M.R.ராதா அவர்கள் தஞ்சையில் ரத்தக்கண்ணீர் நாடகத்தை நடத்திய போது - அவருடன் பணியாற்றியதாக சொல்வார் என் தந்தை.
என் தந்தை இயங்கிய நாட்களை - சிறுபிள்ளைகளாகிய எங்களுடன் அடிக்கடி நினைவுகூரக் கேட்டிருக்கின்றோம்.
1955க்குப் பின் காலம் மாறிப்போக - காட்சிகளும் மாறி விட்டன.
1994-ல் என் தந்தை கடைசியாக விரும்பி பார்த்த திரைப்படம் - திருவிளையாடல்.
பழத்துக்காகக் கோபித்துக் கொண்டு நிற்கும் முருகனை - சாந்தப்படுத்தும் முயற்சியில் - ஒளவையார்,
ஆறுவது சினம் - கூறுவது தமிழ்
அறியாத சிறுவனா நீ!..
மாறுவது மனம் - சேருவது இனம்
தெரியாத முருகனா நீ!..
என்று கேட்கும் போது கண்களில் நீர் வழியக் கசிந்தவர் - என் தந்தை.
பின் - அதே வருடம் அவரது மரணச் செய்தி அறிந்து - குவைத்தில் இருந்து தாயகம் திரும்பும் போது விமானத்தில் ஒளிபரப்பப்பட்ட திரைப்படம் - தேவர் மகன்.
மழைச்சாரலில் நனைந்தபடி மகனுடன் கோபமும் ஆதங்கமுமாகப் பேசும் தந்தை!..

மகன் நடக்கும் போது சட்டென வழுக்கிவிட - பதறித் துடித்தபடி எழும் பாசமிகு தந்தை!..
அப்போது தாளாத சோகத்துடன் பீறிட்ட அழுகைக்கு - உரிய அன்பின் மகன் நான்!..
திரு. சிவாஜி அவர்களுடனாகிய நட்பினை - என்றும் பிள்ளைகளுடன் பேசிக் கொண்டிருப்பார் என் தந்தை!.. அவர் மூலமாகத்தான் நடிகர் திலகம் அவர்களின் நடிப்பில் ஈர்ப்பு ஏற்பட்டது எனக்கு!..

நடிகர் திலகம் அவர்கள் ஏற்று நடித்த பல்வேறு கதாபாத்திரங்களின் வாயிலாகத் தான் - அன்பு, பாசம், நட்பு, தேசபக்தி, தெய்வபக்தி - என பல்வேறு பண்புகள் துளிர்த்தன.
![]() | ||||
| ஹாலிவுட் நடிகர்களுடன் |
![]() |
| மக்கள் திலகத்துடன் |
![]() |
| சீர்காழி கோவிந்தராஜனுடன் |
![]() |
| தஞ்சை கோயிலுக்கு யானை வழங்கிய போது |
இந்தப் பதிவு ஒரு சிறு குறிப்புத்தான்!..
ஆயினும் சூட்சுமமாகத் திகழும் என் தந்தை மனம் மகிழ்வார்!..
நடிகர் திலகத்தின் பெயரும் புகழும்
நிலைத்து வாழ்க!..










