நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

அறிவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மே 17, 2017

நீ அங்கு சுகமா?..



அடுத்தவர் விஷயத்துக்குள் தலையிடுவதே தவறு..

அதிலும் -
கடிதம் என்றால்!?..

பரவாயில்லை... நம்ம முருகேசன் தானே!..

1991... 

முருகேசனின் ஊர் தாமரைக் குளம்..
காவிரி ஆற்றை ஒட்டியுள்ள அழகான கிராமம்...

திருமணமாகி ஏழு மாதங்கள் தான்..
பாரம்பர்ய விவசாயம் மாடு கன்று - இவற்றை விட்டு விட்டு
இங்கே பாலை நிலத்தில் பாடுபடுவதற்கு என வந்து விட்டான்..

அப்போது அவன் மனைவி கனகவல்லி ஐந்து மாதம்...
பெண் குழந்தை பிறந்து மூன்று ஆண்டுகளாகப் போகின்றது..
இன்னும் ஊருக்குப் போக முடியவில்லை...

அன்பு மனைவியின் நினைவை விட -
செல்ல மகளின் நினைவு பாடாகப்படுத்துகின்றது...

மகள் பிறந்த ஒரு வருடம் கழித்து அவளுடைய படம் தபாலில் வந்திருந்தது...

ஓ!.. - என்று அழுகை.. ஆற்றாமை.. அவனை அடக்கமுடியவில்லை யாராலும்..

காலம் மெல்ல நகர்ந்தது..

இந்நிலையில் -
இங்கிருந்து ஒரு கடிதம் ஊருக்குச் செல்கின்றது..

அது - இது தான்... படித்துப் பாருங்கள்...

அன்புள்ள கனகவல்லிக்கு,

எல்லாரும் நலமா.. பாப்பா நன்றாக நடக்கின்றாளா.. ஓடுகிறாளா..
அதெல்லாம் பார்த்து விளையாட கொடுத்து வைக்கவில்லை..
போட்டோ எடுத்து அனுப்பவும்.. நான் அனுப்பிய பார்சல் கிடைத்ததா?..

அம்மாவுக்கு வாங்கிய தைலம் இங்கேயே இருக்கு.. அடுத்த மாதம்
அனுப்புகிறேன்.. அப்பாவை கவனித்துக் கொள்ளவும்.. தங்கச்சிகிட்ட
கொஞ்சம் ராசியா இருந்துக்க.. வேற வீட்டுக்குப் போறவ...

நேரா நேரத்துக்கு சாப்பிடவும்.. இங்கே இன்னும் குளிர் முடியலை.. வெயில் வந்தா கஷ்டம் தான்.. என்னைப் பத்தி கவலைப்படாம நல்லபடியா இருக்கவும்..

உன் தம்பிக்கு இங்கே ஒரு வேலை பார்த்திருக்கேன்.. உடம்பு வளைஞ்சு செய்றதா இருந்தா சொல்லு.. ரெண்டு மூனு வருஷம் இருந்து பார்க்கட்டும்.. நான் இங்கே வந்து பொங்கலோட மூனு வருஷம் ஆகப் போவுது.. 

படுத்தா கண்ணு மூட முடியலை.. எப்பவும் உன் நெனைப்பு தான்..

முத்து மாரியம்மன் கோயிலுக்கு உண்டியல் பணம் கொடுக்கவும்..
ரெண்டு மாசமா சம்பளம் வரலை.. வந்துடும்..

எங்க அம்மா கோபப்படாம நடந்துக்க.. நான் மறுபடியும் எழுதுறேன்.. 
இப்போ இங்கே ராத்திரி மூனு மணி.. பொழுது விடியப்போகுது.. வேலைக்கு போகணும்..

பொங்கல் நல்லபடியா கொண்டாடுங்க.. சந்தோஷமா இருக்கவும்..
எல்லாருக்கும் பொங்கல் வாழ்த்து சொல்லவும்..

இது உனக்கு...





இப்படிக்கு,
முருகேசன்..
10.12.1991..



இந்தக் கடிதம் அங்கே சென்று சேர்வதற்குள்
அங்கேயிருந்து ஒரு கடிதம் இங்கே வந்து கொண்டிருக்கின்றது...

முருகேசனின் மனைவி கனகவல்லி எழுதிய மடல்..
அந்தக் கடிதத்தையும் சற்றே காண்க!..

என்னங்க.. சௌக்கியமா இருக்கீங்களா..

நீங்க அனுப்புன பார்சல் கிடைத்தது.. பாப்பா கவுன் நல்லா இருக்கு..
உங்க அம்மாவுக்கு தைலம் அனுப்பலையா.. கோவமா இருக்காங்க..

நேரா நேரத்துக்கு சாப்புடுங்க.. ஏற்கனவே கறுப்பு.. அதனால வெயில்ல அலையாதீங்க.. எங்களப் பத்தி கவலைப்படாம நல்லபடியா வேலைய பாருங்க.. மாமா நல்லா இருக்காங்க.. கால் வலி தேவலாம்..

உங்க தங்கச்சிக்கு மூனு பவுன்ல வளையல் வேணுமாம்.. வாங்குறதா இருந்தா எனக்கும் ஒரு செட் சேர்த்து வாங்கவும்.. பின்னால பாப்பாவுக்கு உதவும்..

மூனு வருசம் ஆச்சு.. எப்போ வர்றீங்க.. நல்லபடியா நீங்க வந்ததும் முத்து மாரியம்மனுக்கு பொங்கல் வைக்கணும்..

உங்க அம்மா களத்து மேட்டுக்கு கூப்புடுறாங்க..நான் மறுபடிக்கு எழுதுறேன்..
பொங்கல் வாழ்த்துகள்.. சந்தோஷமா இருக்கவும்..

அன்புடன்....





இப்படிக்கு,
கனகவல்லி..


1996...

இப்போதெல்லாம் -
முருகேசன் அதிகமாகக் கடிதம் எழுதுவதில்லை.. 
காரணம் வீட்டுக்கருகில் அஞ்சலகம் வந்து விட்டது..
அஞ்சலகத்தில் தொலைபேசி இருக்கின்றது...

அஞ்சலகத்தில் கனகவல்லி காத்திருக்க 
சரியான நேரத்திற்கு முருகேசன் பேசுகின்றான்..



2001...

இப்போதெல்லாம் கனகவல்லி அதிகமாக
அஞ்சலகத்திற்குச் செல்வதில்லை...
காரணம் புது வீட்டில் தொலைபேசி வைத்தாயிற்று...

என்ன ஒரு இடைஞ்சல்... கொஞ்சம் சத்தமாகப் பேச வேண்டும்!..
அடுத்த தெருவுக்கெல்லாம் கேட்கும்... அவ்வளவு தான்!..


மூன்றாவது வீட்டு அஞ்சலை அக்கா வந்து விடுவார்கள்..

தம்பி தான் பணம் அனுப்பி இருக்கிறதாமே!..
கை மாத்தாக ஐயாயிரம் ரூபாய் கொடு...
அடுத்த மாதம் திருப்பிக் கொடுத்து விடுகின்றேன்!..

- என்று.. கனகவல்லிக்கு தர்ம சங்கடமாக இருக்கும்...

அதற்கு சில ஆண்டுகளில் - இது வந்து சேர்ந்தது..


கையில் எடுத்துக்கொண்டு கிணற்றடியில் நின்று பேசிக்கொள்வதற்கு வசதியாயிற்று..

எல்லாவற்றையும் விட -
முருகேசனின் மகள் சுந்தரிக்கு மிகவும் பிடித்திருந்தது..

2005...

இப்போதெல்லாம் வீட்டுத் தொலைபேசி முடங்கிப் போயிற்று..
அதனை யாரும் உபயோகிப்பதில்லை....

என்ன காரணமாம்!?...

இதோ இது தான் காரணம்...


இதையும் ஓரங்கட்டுவதற்கு இது வந்து சேர்ந்தது...


கனகவல்லியிடம் இதைக் கொடுப்பதேயில்லை - சுந்தரி...

2010...

இப்போதெல்லாம் சுந்தரி-
அப்பாவுடன் உரையாடுவது இதில் தான்..
முகம் பார்த்துப் பேசும் வசதி இருக்கின்றது...


ஆனால், மேசை முழுவதையும் ஆக்ரமித்துக் கொள்கின்றது..

நம் ஊர் மின்சாரம் திடீரென்று போய்த் தொலைந்து விட்டால்
வேறு கோளாறுகளும் வந்து சேர்ந்து கொள்கின்றன...

என்ன ஒரு பிரச்னை என்றால்.. 
அடிக்கடி இடைஞ்சலும் இடையூறும் கோடு கோடுகளாக அலைக்கழிக்கும்...

கூடவே செய்திகள் மற்றும் படங்களை அச்சிட்டுக் கொள்ளும் வசதியும் வந்தது..




இங்கேயிருந்து அங்கும்..
அங்கேயிருந்து இங்கும் - ஆனந்தம் அலை பாய்ந்த நாட்கள் அவை....

அதற்கடுத்த சில வருடங்களில் இது வந்து சேர்ந்தது..


அவ்வளவு தான்.. ஒரு பூனைக்குட்டி போல சுந்தரியுடன் ஒட்டிக்கொண்டது...

இது வந்த வேளை பழைய சமாச்சாரம் பரணிக்குப் போய்விட்டது.. 

2017...

இப்போதெல்லாம் கடிதம் எழுதுவதே மறந்து போயிற்று..
தொலைபேசியருகில் காத்துக் கிடந்த நாளெல்லாம் கனவாய்ப் போயிற்று...

ஹலோ!.. கொஞ்சம் சத்தமா பேசுங்க!.. சே.. ஒரே தலைவலி இதோடு!.. 

இந்த வார்த்தையெல்லாம் எங்கே போயிற்று?..
- என்று யாருக்கும் தெரியவில்லை..

கிணுங்.. கிணுங்!..

கைக்குள்ளேயே இது.. இதற்குள்ளேயே கை!..


விரல் நுனியால் வருடினால் -
எதிர்முனையில் பேத்தி - புன்னகையுடன்..

இன்னும் பல் முளைக்கவில்லை.. 
அரவணைத்துக் கொண்டிருப்பவள் - கனகவல்லி..
பொன் வண்ணக் கண்ணாடி அணிந்தவளாக.. 
அங்கொன்றும் இங்கொன்றுமாய் நரைமுடிகள்..

கனகவல்லி கேட்கின்றாள் - முருகேசனிடம்...

ஏன்.. இன்னும் குளிக்கலையா?.. 
முதல்ல சவரம் பண்ணுங்க..
நரைச்ச முடி.. பார்க்க நல்லா இல்லை!...

ஏன்... கனகு!.. 
அப்போ எல்லாம் உங்க முகத்தைப் பார்த்தே மூனு வருசம் ஆச்சு..ன்னு அன்பு மடல் எழுதுவே!.. இப்போ.. அந்த முகம் நல்லாவே இல்லே..ன்னு சொல்றே!..

நான் அப்படியா சொன்னேன்!.. என் ராசா முகம் எனக்கு என்னைக்கும் அழகு தான் பேரழகு தான்!.. நல்லா ஸ்மார்ட்டா இருங்க..ன்னு சொன்னேன்!..

ஏன்!.. இன்னொரு கல்யாணமா?..

ஆசை தான்!.. கிழவனுக்கு!.. - சிரிக்கின்றாள் கனகவல்லி...

ஏதும் புரியாமல் புன்னகைப் பூ ஆகின்றாள் - பேத்தி..
***


இன்று மே 17
உலகத் தொலைத் தொடர்பு மற்றும் 
தகவல் தொடர்பு தினம்

நாளுக்கு நாள் அறிவியல் தொழில் நுட்பம் 
முன்னேறிக் கொண்டிருக்கும் வேளையில் -
இதனுள் நன்மைகளும் தீமைகளும் விரவியே கிடக்கின்றன...


நல்லனவற்றை அள்ளிக்கொள்ளவும் 
அல்லாதனவற்றைப் புறந்தள்ளவும்
இன்றைய சமுதாயம் முன்நிற்கவேண்டும்..

உள்ளங்கைக்குள் உலகம் என்றானது...
அதனை ஆக்கித் தந்தது அறிவியல் தொலை நுட்பம்..

இதனை நல்வழியில் கொண்டு நடப்பது 
நம் ஒவ்வொருவருடைய கடமை..

வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்!.. 
***