நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 12
வியாழக்கிழமை
குறளமுதம்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு..72
**
ஸ்ரீ கோதை நாச்சியார்
அருளிச் செய்த
திருப்பாவை
கனைத்து இளங்கற்று எருமை கன்றுக்கு இரங்கி நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய் பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித் தான் எழுந்திராய் ஈது என்ன பேருறக்கம் அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்..12
**
கன்றினை ஈன்றிருக்கும் எருமை , தனது இளங்கன்றை நினைத்துக் கொள்ள - அந்த நினைப்பினால் மடி சுரந்து வழிகின்றது.. அந்தப் பாலால் நனைந்து சேறாகும் தொழுவங்களை உடைய நற்செல்வனின் தங்கையே!
தலையில் பனி விழுவதையும் பொருட்படுத்தாமல் இந்த இளங்காலைப் பொழுதில் உன் வீட்டு வாசல் கதவைப் பற்றிக் கொண்டு, மனத்துக்கு இனியனான ஸ்ரீராமனைப் பாடிக் கொண்டிருக்கிறோம்..
தென்னிலங்கை இராவணனை வெற்றி கொண்ட ,
ஸ்ரீ ராமனின் புகழினைப் பாடக் கேட்டும் நீ வாயைத் திறக்கவில்லை!.. இனியாவது எழுந்திருப்பாய்!..
என்ன இது இப்படியான பெருந் தூக்கம்?..
ஏனைய இல்லத்தார்கள் அனைவரும்
உறக்கம் கலைந்து எழுந்து விட்டார்கள் என்பதை
அறிந்து கொள்வாயாக!..
**
திருப்பாசுரம்
அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள்ஊர்தி
உரைநூல் மறைஉறையும் கோயில் வரைநீர்
கருமம் அழிப்புஅளிப்பு கையதுவேல் நேமி
உருவம்எரி கார்மேனி ஒன்று.. 2086
-: பொய்கையாழ்வார் :-
**
சிவதரிசனம்
தேவாரம்
திருக்கடைக்காப்பு
மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சும் கீள்
உடையுங் கொண்ட உருவம் என்கொலோ..1/23/1
-; திருஞானசம்பந்தர் :-
**
போற்றித் திருத்தாண்டகம்
(திரு ஆரூர்)
கற்றவர்கள் உண்ணுங் கனியே போற்றி
கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி
அற்றவர்கட் காரமுதம் ஆனாய் போற்றி
அல்லலறுத் தடியேனை ஆண்டாய் போற்றி
மற்றொருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி
வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி..6/32/1
-: திருநாவுக்கரசர் :-
**
திருவாசகம்
உம்பர்கட் கரசே ஒழிவற நிறைந்த
யோகமே ஊற்றையேன் தனக்கு
வம்பெனப் பழுத்தென் குடிமுழு தாண்டு
வாழ்வற வாழ்வித்த மருந்தே
செம்பொருள் துணிவே சீருடைக் கழலே
செல்வமே சிவபெரு மானே
எம்பொருட்டு உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.. 1
-: மாணிக்கவாசகர் :-
**
தொகுப்பிற்குத் துணை
நாலாயிர திவ்யப்ரபந்தம்
பன்னிரு திருமுறை,
தருமபுரம் ஆதீனம்..
**
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
பால் சேற்றினால் சூழப்பட்ட தொழுவங்கள்... பள்ளி வயதில் எங்கள் நண்பர்களுக்குள் ஒரு பேச்சு நிகழும். அமெரிக்கா, ஸ்விஸ் போன்ற நாடுகளில் பசுக்கள் கனத்த முடியுடன் வலம்வரும். பால் தானாக நிறைந்து தெருவெங்கும் சிந்தும். அங்கெல்லாம் தெருவிலேயே ஐஸ் பாளங்கள் இருக்கும். சிந்தும் பால் ஐஸாகி பாளம் பாளமாக கிடைக்கும்...! ,மிகச் சுவையாக இருக்கும்!
பதிலளிநீக்குவிவரமான கருத்திற்கு மகிழ்ச்சி..
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கு
நன்றி ஸ்ரீராம்..
மார்கழி பதிவில் உள்ள பாடல்களை பாடி இறைவனை தரிசனம் செய்து கொண்டேன்.படங்கள் எல்லாம் அருமை.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ..