நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மே 06, 2020

சிவமே சரணம் 19

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்றைய பதிவில்
திருஞானசம்பந்தப்பெருமான்
அருளிச்செய்த திருப்பதிகம்

இரண்டாம் திருமுறை

திருப்பதிக எண் - 61

திருத்தலம் - திருவெண்காடு




இறைவன் - ஸ்ரீ ஸ்வேதாரண்யேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ பிரம்ம வித்யா நாயகி

தீர்த்தங்கள் - சூர்ய, சந்திர, அக்னி எனும் முக்குளங்கள்

தலவிருட்சங்கள் - ஆல், கொன்றை, வில்வம்


வேறெங்கும் காணக் கிடைக்காத 
வரப்ரசாத மூர்த்தியாக
ஸ்ரீ அகோரமூர்த்தி இங்கு விளங்குகின்றார்..

துர்வாச மகரிஷி கொடுத்த மாலையை இந்திரன்

அலட்சியம் செய்த காரணத்தால் தேவலோகம்
இருண்டு போக இந்திரன் பதவியிழந்தவன் ஆனான்..

வெள்ளை யானையாகிய ஐராவதமும் கறுத்துப் போனது.. 

சாம விமோசனத்துக்காக ஐராவதம் சிவபூஜை செய்த 
திருத்தலம் தான் திருவெண்காடு..

நவக்கிரக நாயகர்களுள் புதன்  
ஈசனை வழிபட்டு நலம் பெற்ற தலம்...

மயிலாடுதுறையில் இருந்து
அடிக்கடி பேருந்துகள் இயங்குகின்றன..


இத்திருப்பதிகம் நெடுகிலும் நோய்களும் வினைகளும்
அடியவர் தம்மை நலியாத வண்ணம் அருளிச் செய்துள்ளார்
ஞானசம்பந்தமூர்த்தி...

உண்டாய் நஞ்சை உமையோர் பங்கா என்றுஉள்கித்
தொண்டாய்த் திரியும் அடியார் தங்கள் துயரங்கள்
அண்டா வண்ணம் அறுப்பான் எந்தையூர் போலும்
வெண்டாமரை மேற்கரு வண்டுயாழ் செய்வெண்காடே.. 1

நாதன் நம்மையாள்வான் என்று நவின்றேத்திப்
பாதம் பன்னாள் மணியும் அடியார் தங்கள்மேல்
ஏதந் தீரஇருந்தான் வாழும் ஊர்போலும்
வேதத் தொலியாற் கிளி சொற்பயிலும் வெண்காடே.. 2

தண்முத் தரும்பத் தடமூன்று உடையான் தனைஉன்னிக்
கண்முத் தரும்பக் கழற் சேவடிகை தொழுவார்கள்
உண்முத் தரும்ப உவகை தருவான் ஊர்போலும்
வெண்முத் தருவிப் புனல்வந் தலைக்கும் வெண்காடே.. 3

ஸ்ரீ காளியம்மன் - திருவெண்காடு 
நரையார் வந்து நாளுங் குறுகி நணுகாமுன்
உரையால் வேறாஉள் குவார்கள் உள்ளத்தே
கரையா வண்ணங் கண்டான்மேவும் ஊர்போலும்
விரையார் கமலத் தன்ன மருவும் வெண்காடே.. 4

பிள்ளைப் பிறையும் புனலுஞ் சூடும் பெம்மானென்று
உள்ளத்து உள்ளித் தொழுவார் தங்கள் உறுநோய்கள்
தள்ளிப் போக அருளுந் தலைவன் ஊர் போலும்
வெள்ளைச் சுரிசங்கு உலவித் திரியும் வெண்காடே.. 5

ஒளிகொண் மேனி உடையாய் உம்பராளீ என்று
அளியராகி அழுதுற்று ஊறும் அடியார்கட்கு
எளியான் அமரர்க்கு அரியான் வாழும் ஊர்போலும்
வெளிய உருவத்து ஆனை வணங்கும் வெண்காடே.. 6

ஸ்ரீ துர்காம்பிகை - திருவெண்காடு 
கோள்வித் தனைய கூற்றந் தன்னைக் குறிப்பினான்
மாள்வித் தவனை மகிழ்ந்தங் கேத்த மாணிக்காய்
ஆள்வித்த மரர்உலகு அளிப்பான் ஊர்போலும்
வேள்விப் புகையால் வானம் இருள்கூர் வெண்காடே.. 7

வளையார் முன்கை மலையாள் வெருவ வரையூன்றி
முளையார் மதியஞ் சூடி என்று முப்போதும்
இளையாது ஏத்த இருந்தான் ஊர்போலும்
விளையார் கழனிப் பழனஞ் சூழ்ந்த வெண்காடே.. 8

கரியா னோடு கமல மலரான் காணாமை
எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் என்பார்கட்கு
உரியான் அமரர்க்கு அரியான் வாழும் ஊர்போலும்
விரியார் பொழிலின் வண்டு பாடும் வெண்காடே.. 9

ஸ்ரீ புதன் 
பாடும் அடியார் பலருங் கூடிப் பரிந்தேத்த
ஆடும் அரவம் அசைத்த பெருமான் அறிவின்றி
மூடம் உடைய சமண் சாக்கியர்கள் உணராத
வேடம் உடைய பெருமான் பதியாம் வெண்காடே.. 10

விடையார் கொடியான் மேவி உறையும் வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்
நடையார் இன்சொல் ஞானசம்பந்தன் தமிழ் வல்லார்க்கு
அடையா வினைகள் அமரலோகம் ஆள்வாரே.. 11
-: திருச்சிற்றம்பலம் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
ஃஃஃ



















8 கருத்துகள்:

  1. ஓம் சிவாய நம.

    கடினமாகும் இந் நாட்களைக் கடக்க சிவன் உதவப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு..

      இறைவனின் நல்லருளை நாடி நிற்போம்..
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. திருச்சிற்றம்பலம்

    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி...

      வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்...
      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  3. திருவெண்காடு அடிக்கடி போயிருக்கோம். அனைத்துப் படங்களும் அருமையாக வந்திருக்கின்றன. மீண்டும் நேரில் சென்றது போல் உணர்வு. கோமதி அரசு இன்னமும் பார்க்கவில்லை போலும்! இப்போதிருக்கும் மனோநிலையில் எப்போ இந்த ஊரடங்கெல்லாம் அடங்கும், இம்மாதிரிக் கோயில்களுக்குப் போகலாம் என ஆவல் அதிகமாக உள்ளது. நல்லதொரு தரிசனம் கிட்டியமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. நமச்சிவாய வாழ்க... நாதன் தாள் வாழ்க...

    தெரிந்தவர்களின் ஊர். இதுவரை சென்றதில்லை.

    நலமே விளையட்டும்.

    பதிலளிநீக்கு
  5. திருவெண்காடு என்றதும் கீதாசம்பசிவத்திற்கு என் நினைப்பு வந்தது மகிழ்ச்சி.

    திருவெண்காட்டில் இருந்த ஏழு வருடங்களும் மறக்க முடியாத நினைவுகள்.

    மாயவரம் வந்தும் அடிக்கடி போய் கொண்டு இருந்த ஊர்.
    சீர்காழியில் ஒரு திருமணம் அவர்களுக்கு திருவெண்காடு சொந்த ஊர் வைகாசியில் வைப்பதாக இருந்தார்கள் அந்தக் கல்யாணத்திற்கு போய் விட்டு திருவெண்காடு போக எண்ணம் இருந்தது.
    இறைவன் திரு உள்ளம் எப்படியோ அந்த திருமணத்தை தள்ளி வைக்கலாமா? என்று எண்ணுகிறார்கள்.

    ஸ்வேதாரண்யேஸ்வரர், பிரம்மவித்யா அம்பிகை, அகோர்மூர்த்தி , காளி, புதன் , துர்க்கை தரிசனம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. நன்றி.

    வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.


    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..