நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஏப்ரல் 01, 2018

கடுவெளி தரிசனம்

கடுவெளி என்றால் பரவெளி...

எல்லையற்ற பிரபஞ்சம்.. அதுவே ஆகாயம் எனும் பெருவெளி...

அளப்பரிய ஞானத்தின் அடையாளம் - ஆகாயம்..

ஆகாயத்தில் தன் சிந்தையை நிறுத்தி தியானம் செய்து
ஈசன் எம்பெருமானின் தரிசனம் கண்டவர் - கடுவெளிச் சித்தர் பெருமான்...

பதினெட்டு சித்தர்களுள் குறிப்பிடத்தக்கவர் கடுவெளிச் சித்தர்...

அஷ்ட மா சித்திகளும் கைவரப் பெற்று
அவற்றின் மூலமாக மக்கட்பணியாற்றியவர்...

நல்லுரைகளை மக்களுக்கு வழங்கி ஞானவழியில் மக்களைச் செலுத்தியவர்...

இத்தகைய சிறப்புக்குரிய சித்தர் பெருமானின்
அவதாரத் திருத்தலமாகக் கொள்ளப்படுவது இத்தலம்....

சித்தர் பெருமான் காவிரியின் வடகரையில்
புன்னை வனத்தினில் திருத்தோற்றமுற்றார்....

தம்முள் விளையப் பெற்ற ஞானத்தினால் தவநிலையை மேற்கொண்டு
பல்லாண்டு காலம் தியானத்தில் இருந்து சிவதரிசனம் கண்டதனால்

ஏனைய சித்தர்களால் - கடுவெளிச் சித்தன்  - எனப் புகழப் பெற்றார்...


ஆதலின் அவர் தவமியற்றிய இத் திருத்தலமும்
கடுவெளி - எனத் திருப்பெயர் பெற்றது...

கடுவெளி எனும் திருத்தலத்தில் தரிசனம் நல்கிய எம்பெருமான்
ஸ்ரீ ஆகாசபுரீஸ்வரர் எனத் திருப்பெயருடன் திகழ்கின்றார்..

உடனுறையும் அம்பிகையின் திருப்பெயர் - ஸ்ரீ மங்களாம்பிகை...

தீர்த்தம் காவிரி.. தலவிருட்சம் வில்வம்.. ஆனாலும் திருக்கோயிலுக்குள் புன்னை மரமும் இருக்கின்றது...


திருஐயாற்றிலிருந்து மேற்காகச் செல்லும் திருக்காட்டுப்பள்ளி சாலையில்
ஐந்து கி.மீ தொலைவில் உள்ளது கடுவெளி கிராமம்..

பிரதான சாலையில் இருந்து - வடக்காகச் செல்லும் சிறு சாலையில்
சிறிது தூரம் நடந்தால் திருக்கோயிலை அடையலாம்..

திருத்தலங்கள் சிலவற்றுள் திருக்கோயிலுக்கு வெளியே
ஈசனின் சாந்நித்யத்தைக் கிரகித்தவாறு
விநாயகப் பெருமானோ அல்லது நந்தியம்பெருமானோ
ஈசனை நோக்கியவாறு வீற்றிருப்பது வழக்கம்...

இந்த வகையில் இத்திருக்கோயிலில் -
ராஜகோபுரத்துக்கு முன்பாகவே
நந்தியம்பெருமான் சிறு மண்டபத்தில் திகழ்கின்றார்...

இது ஒரு விசேஷமான அம்சம்...


ராஜ கோபுரத்தின் அருகில் காவல் நாயகமாக ஸ்ரீ முனீஸ்வரன்...

பெருமானை வணங்கி விளக்கேற்றி வைத்து விட்டு கோபுர தரிசனம் செய்தபடி ஆலயப் பிரவேசம்....

பழைமையான திருக்கோயில்...

திருக்கோயிலைச்சுற்றிலும் தென்னை மரங்கள்...

2013 ல் திருக்குடமுழுக்கு நிகழ்ந்திருக்கின்றது.. ஆயினும்
முன் மண்டபத்தைச் செப்பனிட்டுக்கொண்டிருக்கின்றார்கள்...

மிகப் பெரிய அளவிலான பலிபீடம்..
கொடி மரம் இல்லை..
சிறு மண்டபத்துள் நந்தியம்பெருமான்..
பிரதோஷ அபிஷேகம் நிகழ இருக்கின்றது...

அதற்குள்ளாக ஆலய தரிசனம்...

முன் மண்டபத்திலும் ஒரு நந்தி.. பலி பீடம்...
வணக்கத்துடன் கடந்த நிலையில் மகா மண்டபம்...

கருவறையின் வாசலில் நின்ற திருக்கோலத்தில்
நட்சத்திர விநாயகர்..


திருமூலத்தானத்தினுள் அமைதி தவழும் சந்நிதியில்
ஸ்ரீ ஆகாசபுரீஸ்வரர்...

மிக அருமையான தரிசனம்....

இப்பொன் நீ... இம் மணி நீ... இம்முத்து நீ...
இறைவன் நீ.. ஏறூர்ந்த செல்வன் நீயே!...

பிரபஞ்சத்தின் பெருந்தலைவனாகத் திகழும்
பெருமானின் சந்நிதியில் நிற்பதால் மனம் அமைதியில் ஆழ்கின்றது...

ஸ்வாமி சந்நிதியின் வடபுறமாக
ஸ்ரீமங்களாம்பிகையின் சந்நிதியும் இணைந்து விளங்குகின்றது..

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம் காப்பவளே..
எங்களையும் தாங்கியருள வேண்டுமம்மா!....

என்று, மனம் கசிகின்றது...


அம்பிகையின் சந்நிதிக்குக் கீழ்புறமாக ஸ்ரீ காலபைரவர்..
ஸ்ரீ காலபைரவர் தன்னுடன் நாய் இன்றி தனித்த மூர்த்தியாக
அருள்பாலிக்கின்றார்...


ஸ்ரீ பைரவருக்கு அருகில்
சங்கு சக்ரதாரியாக ஸ்ரீநிவாசப் பெருமாள்...

அம்பிகையின் சந்நிதிக்கு எதிரில் தென் புறமாக
சந்தனம் அரைக்கும் கல்... பெரிய கண்டாமணி..

அம்பிகையின் சந்நிதிக்கு நேரெதிரே வெளிப்புறத்தில்
அம்பிகையின் திருவாக்கிற்கு செவி கொடுத்த பாவனையில் நந்தீசன்...



மிகவும் அற்புதமான திருக்கோலம்...

சிவ தரிசனம் செய்தபின்  திருச்சுற்றில் நடக்கின்றோம்...

தெற்கு முகமாக ஸ்ரீ தக்ஷ்ணாமூர்த்தி...
நிருதி மூலையில் மகாகணபதி...



மேற்கு முகமாக அழகே உருவான லிங்கோத்பவர்..

அவருக்கு எதிர்புறமாக கிழக்கு நோக்கிய வண்ணம்
ஸ்ரீபால தண்டாயுதபாணி...

இத்திருக்கோயிலில் வள்ளி தெய்வானையுடன் கூடிய கல்யாண முருகனின் திருச்சந்நிதி கிடையாது...


ஸ்ரீபால தண்டாயுதபாணியாக அருள்பாலிக்கும் சந்நிதியே பிரதானம்...

அடுத்தாற்போல மகாலக்ஷ்மி சந்நிதி...

வடக்கு கோஷ்டத்தில் ஸ்ரீ நான்முகன்...
அடுத்து துன்பங்களைத் தொலைக்கும் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி...

கோஷ்டத்தை நோக்கியவாறு சண்டிகேசர்...

வடக்குத் திருச்சுற்றில்
அம்பிகையின் மூலத்தானத்திற்குப் பின்புறமாக
ஸ்ரீ கடுவெளிச் சித்தர் பெருமானின் திருச்சந்நிதி...

வலம் வந்து வணங்குவதற்கு ஏற்றார் போல அமைக்கப்பட்டுள்ளது...

ஸ்ரீ கடுவெளிச் சித்தர்
இவ்வூர் கடுவெளி என்றறியப்பட்ட நிலையில்
சித்தர் பெருமானின் தொடர்பு அறியப்படாமலேயே
வருடங்கள் பல கழிந்திருக்கின்றன...

திருப்பணிக்கு முன்னதாக திருக்கோயில் சீரமைக்கும்போது
மண்ணுக்குள்ளிருந்து சிலாவடிவம் வெளிப்பட்டிருக்கின்றது...

கடுவெளிச் சித்தர் பெருமானின் திரு வடிவம் இதுவே என்று
உய்த்துணரப்பட்டது..

அதன் பின் அந்தத் திருவடிவம் திருக்கோயிலுக்கு உள்ளேயே பிரதிஷ்டை செய்யப்பட்டது..

சமீபத்தில் தான் சித்தர் பெருமானுக்கு தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது...

இவற்றோடு - நட்சத்திரக் கோயில்கள் வரிசையில்
பூராட நட்சத்திரத்திற்கான திருக்கோயில் என்றும் அறியப்பட்டுள்ளது...

மாதந்தோறும் பூராட நட்சத்திரத்தின் போது
ஸ்ரீ ஆகாசபுரீஸ்வர ஸ்வாமியையும் மங்களாம்பிகையையும்
சித்தர் பெருமானையும் வழிபடுதற்குத் திரளான அன்பர்கள் வருகின்றனர்...

இத்திருக்கோயிலில் -
ஸ்ரீ நடராஜ சபை கிடையாது... என்ன காரணம் என்று தெரிய வில்லை..

ஆனாலும் -

பரவெளியாகிய கடுவெளியில் நின்று ஆடிய வண்ணம்
சித்தருக்குத் திருக்காட்சி அருளப் பெற்றதால்
திருமூலத்தானமே நடராஜ சபை ஆகின்றது...

மேலும் -
இத்திருக்கோயிலில் நவக்கிரக மண்டலம் கிடையாது...

தனியான பிரதிஷ்டை என்ற வகையிலும் சூரியன் சந்திரன் சனைச்சரன் - என எந்த மூர்த்தியும் பிரதிஷ்டை செய்யப்படவில்லை என்பது சிறப்பு...

ஆயினும்
காலத்தால் பழைமையான இத்திருக்கோயில் பலவகையான இடர்பாடுகளைச் சந்தித்திருப்பதாகத் தெரிகின்றது...

புராதனமான மண்டபங்கள் சேதமடைந்த நிலையில் அப்புறப்படுத்தப்பட்டு விட்டதாக சொல்கிறார்கள்...

இத்திருக்கோயிலில் சப்த கன்னியர் திருமேனிகள் இருந்திருக்கின்றன...

ஏதோ ஒரு வகையில் பின்னமடைந்த சிலைகள் அப்புறப்படுத்தப்பட்டிருக்கின்றன...

ஆனால் திரும்பவும் புதிய விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்படவில்லை...



பின்னமான சிலைகள் திருச்சுற்றின் வடபுறமாக கிடத்தப்பட்டுள்ளன...

காண்பதற்கு மிகவும் வருத்தமாக உள்ளது...

கால சூழ்நிலைகள் மாற்றம் ஏற்பட்டு சப்த கன்னியர் திருமேனிகள் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் என்பது விருப்பம்...

எளியேனால் எடுக்கப்பட்ட படங்கள் - இப்பதிவில்...

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருவையாறு வழியாகத் திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் பேருந்துகள் கடுவெளி வழியாகச் செல்கின்றன..


பிரதோஷ தரிசனம்
வைதாரைக் கூட வையாதே - இந்த
வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே
வெய்ய வினைகள் செய்யாதே - கல்லை
வீணிற் பறவைகள் மீதில் எய்யாதே
வேம்பினை உலகில் ஊட்டாதே - உந்தன்
வீராப்பு தன்னை விளங்க நாட்டாதே
நீர்மேற் குமிழியிக் காயம் - இது
நில்லாது போய்விடும் நீயறி மாயம்
பார்மீதின் மெத்தவும் நேயம் - சற்றும்
பற்றா திருந்திடப் பண்ணும் உபாயம்..

என்பது கடுவெளிச் சித்தர் பெருமானின் அருள் வாக்குகளுள் ஒன்றாகும்...

இந்த காலகட்டத்துக்குத் தேவையான திருவாக்கு இதுவாகும்...

ஸ்ரீ கடுவெளிச் சித்தர் திருவடிகள் போற்றி..
ஸ்ரீ ஆகாசபுரீஸ்வரர் திருவடிகள் போற்றி.. போற்றி!...

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ

19 கருத்துகள்:

  1. கடுவெளிச் சித்தர் பற்றிய விவரம் அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
  2. தஞ்சாவூரில் இருக்கும் மங்களாம்பிகா ஹோட்டல் காரர்கள் இந்த ஊரைச் சேர்ந்தவர்களாக இருப்பார்களோ...

    பதிலளிநீக்கு
  3. ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒவ்வொரு பரிகாரஸ்தலம் இருக்கிறதா?

    பதிலளிநீக்கு
  4. இத்தனை வருடங்கள் கழித்து சித்தர் திருமேனி சிலாரூபம் வெளிப்பட்டிருப்பது விசேஷம்தான், எத்தனை வருடங்கள் பழமையான கோவில் இது?

    பதிலளிநீக்கு
  5. படங்களுடன் தரிசனம் செய்வித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. அன்பின் ஸ்ரீராம்...
    இத்தலம் மிக மிகப் பழைமையானது என்றறியப்படுகின்றது...

    ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் பரிகார தலம் இருப்பதாக கடுவெளி கோயிலில் எழுதி வைத்துள்ளனர்...

    அவற்றை எல்லாம் பிறகு தருகிறேன்...

    நெட் இணைப்பு மிகவும் சிரமமாக உள்ளது.. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  7. அன்பின் ஜி
    எவ்வளவு விரிவான விடயங்கள்.
    படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  8. கடுவெளிச் சித்தரின் பாடல்களைக் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது ஐயா

    பதிலளிநீக்கு
  9. கடுவெளிச் சித்தர் இடுகை - அருமை. அவரின் பாடலையும் ரசித்தேன். இறைவன் இறைவி தரிசனம் எப்போதும்போல் நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  10. கடுவெளிச் சித்தர் பற்றிய உங்கள் இடுகை சிறப்பு. திருக்காட்டுப்பள்ளி வழியே திருவையாறு வரை சென்றிருந்தாலும், இந்தத் தலம் பற்றி அறிந்ததில்லை. ஒவ்வொரு வருடமும் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகே இருக்கும் நேமம் செல்வது வழக்கம். அடுத்த முறை செல்லும் போது கடுவெளியும் செல்ல வேண்டும் எனத் தோன்றுகிறது. பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  11. எத்தனை விடயங்கள்!!! கடுவெளி என்பதன் பொருளும் அறிய முடிந்தது. கடுவெளிச் சித்தரைப் பற்றியும் அறிய முடிந்தது. ஆகாசபுரீஸ்வரர்!கோயிலின் சிறப்புகள் மற்றும் விவரணம் வழக்கம் போல் அருமை. படங்களும் ரொம்ப அழகாக இருக்கின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. இந்த ஊரின் வழியே எத்தனையோ தடவை பஸ்சில் பயணம் செய்து இருக்கிறேன். கடுவெளிச் சித்தரின் பாடல்களையும் படித்து இருக்கிறேன். ஆனால், கடுவெளிச் சித்தரின் ஊர்தான் இது என்பதனை, இன்றுதான் உங்கள் பதிவின் மூலம் விவரம் தெரிந்து கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  13. நான் பார்த்திராத, பார்க்க விரும்பிய கோயிலுக்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி. விரைவில் இக்கோயிலுக்குச் செல்வேன்.

    பதிலளிநீக்கு
  14. தளத்திற்கு வருகை தந்து கருத்துரைத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த மகிழ்ச்சி... நன்றி

    பதிலளிநீக்கு
  15. கடுவெளி தரிசனம் கிடைக்கப் பெற்றேன்.. வேட்டி உடுத்த நந்தி அழகு.

    விக்கிரங்கள் உடைந்து தரையில் வீசியிருப்பது பார்க்க ஒரு மாதிரி இருக்கு.

    பதிலளிநீக்கு
  16. கடுவெளி சித்தர் பற்றியும் திருக்கோவில் பற்றியும் அறியத்தந்தீர்கள் ஐயா...
    அருமை...
    படங்களில் கோவில் தரிசனம் காண முடிந்தது.

    பதிலளிநீக்கு
  17. கடுவெளி சித்தர் கோவில் பார்த்த நினைவு இல்லை.
    இன்று உங்கள் தலத்தில் தரிசனம் செய்தேன்.
    மேலதிருக்காட்டுபள்ளி என்று நினைக்கிறேன்.

    நன்றி.
    வாழ்த்துக்கள்.
    குடும்பத்துடன் இருப்பது மகிழ்ச்சியான விஷயம், அவர்களோடு கோவில் உலா சென்று வருவது மேலும் மகிழ்ச்சிதான்.

    பதிலளிநீக்கு
  18. குட்டிக்குஞ்சுலுவோட நக்ஷத்திரத்துக்கு உள்ள ஊரா இது? திருவையாறு வழியாவே பலமுறை போயும் இப்படி ஓர் ஊர் இருப்பது தெரியலை!
    எங்க புக்ககமான கருவிலியிலும் ராஜகோபுரத்துக்கு முன்னாலேயே நந்தி அமைந்துள்ளது. ஆனால் ராஜகோபுரம் கட்டப்பட்டதே கடந்த பதினைந்து ஆண்டுகளுக்குள் தான்!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..