நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், பிப்ரவரி 21, 2018

திருச்செந்தூரில்...

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரத்தில்
இரண்டு நாள் பயணமாக திருச்செந்தூர் உவரி மற்றும்
திருநெல்வேலி ஆகிய திருத்தலங்களுக்குச் சென்றிருந்தோம்...

அடுத்தடுத்த பதிவுகளினால் அங்கே எடுக்கப்பட்ட படங்களை வெளியிடுவதில் தாமதம் ஆகிவிட்டது...

இருந்தாலும்,
அன்பின் நண்பர்கள் அனைவரும்
நான் எடுத்த படங்களை ரசித்தே ஆக வேண்டும்...

திருச்செந்தூரில் இனிய உதயம்...


திருமிகு சீர்காழியார் அவர்கள் பாடிய -

காலை இளங்கதிரில் உந்தன் காட்சி தெரியுது - நீல
கடலலையில் மயில் எழுந்து நடனம் புரியுது!.. 

- எனும் இனிய பாடல் நினைவுக்கு வரும் என நம்புகின்றேன்...




திருச்செந்தூரின் கடலோரத்தில்
செந்தில் நாதன் அரசாங்கம்..
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்!..



அசுரரை வென்ற இடம்
இது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் வரும்
ஐப்பசித் திங்களிலும் 
அன்பர் திருநாள் காணுமிடம்!...



முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே..
முன்நின்று காக்கும் முதல்வனுக்கே!..
புகழ் மணக்கும் அவன் பெயர் சொன்னால்
பூச் சொரிந்தே மனம் பாடிவரும்!..



முன்பெல்லாம் கோயிலைச் சுற்றிலும் நிறைய மயில்களைக் காணலாம்...
இப்போது அவைகளை அதிகமாகக் காண முடியவில்லை...

முக்கியமாக
அவைகளுக்கு உணவுப் பிரச்னையாக இருக்கும் என நினைக்கிறேன்..

திருக்கோயிலைச் சுற்றிலும் கிராமத்து மக்கள்
பாரம்பர்ய உணவுகளை விற்றுக் கொண்டிருப்பார்கள்...

கோயிலுக்கு வரும் அன்பர்கள் தாமும் உண்டு
மயில்களுக்கும் இட்டு மகிழ்வார்கள்..

காலகாலமாக நடந்து வருவது இந்தப் பழக்கம்...

கோயிலை ஒழுங்கு செய்வதாகச் சொல்லிக் கொண்டு
யாரோ சிலர் - காலை உணவு விற்றுக் கொண்டிருந்த
ஏழை எளிய மக்களைத் தடுத்து விரட்டி விட்டனர்...

இப்போது புட்டு, பணியாரம், அதிரசம் போன்றவை அங்கே கிடைப்பதில்லை...

நாழிக் கிணற்றின் அருகில் தான்
பனங்கிழங்கும் பதநீரும் கிடைக்கின்றன...

மாறாக - பெரிய உணவகங்களில் எண்ணெய் பிசுக்குடன் செய்யப்படும்
சமோசா வகைகள் எல்லா இடத்திலும் தாராளமாக விற்கப்படுகின்றன..


இதோ நானும் வந்து விட்டேன்!.. என்று ஒரு காக்கை..
செந்தில் வேலன் நம்மையெல்லாம் காத்து நிற்க -
அவன் வீற்றிருக்கும் திருக்கோயிலுக்கான காவல் நாயகம் -
ஸ்ரீ சங்கிலி பூதத்தார் ஸ்வாமி..

மேலைத் திருவாசலுக்கு அருகில்
சிறு மண்டபத்தில் இவரைத் தரிசிக்கலாம்...

ஸ்ரீ சங்கிலி பூதத்தார் ஸ்வாமி
மேலைக் கோபுர வாசல்

கீழே மயில் அமர்ந்திருக்கும் இந்த மண்டபம் தான்
சில மாதங்களுக்கு முன் இடிந்து விழுந்தது..


வள்ளிக் குகையின் வாசலில் உள்ள சந்தன மலையில் கட்டப்பட்டுள்ள
நேர்ச்சை முடிச்சுகள்..


எத்தனையோ நூறாண்டுப் பழைமையுடையது வள்ளிக் குகை..

குறுகலான வழியில் சென்று முகவும் குனிந்து வாசலுக்குள் நுழைந்து
மூன்றடி பள்ளத்தில் இறங்கினால் - உள்ளே,

ஸ்ரீ வள்ளியம்மை தரிசனம் தருகின்றாள்...

அங்கிருக்கும் குருக்களோடு ஐந்து பேர் மட்டுமே நிற்கலாம்..

கடும் கோடையில் கூட குகையினுள் வெம்மை தெரியாது..

வள்ளிக் குகைக்குள் செல்வதற்கு
அறநிலையத்துறை கட்டணம் வசூல் செய்கின்றது....

வழக்கம் போல வள்ளிக் குகையின் உள்ளே சென்று தரிசனம் செய்து விட்டு
வெளியே வந்து குகையின் வாசலைப் படம் எடுக்க முயன்ற போது

கோயில் பணியாளர் தடித்த வார்த்தைகளுடன் ஓடி வந்தார்..

உடலெல்லாம் திருநீறு, ருத்ராட்சம் மற்றும் பூணூல்!..

கண்ணு தெரியலையா!.. எழுதிப் போட்டுருக்கு..ல்லே!...

கண்ணு நல்லாத் தெரியுது... 
அது இல்லேன்னா படம் எடுக்க முடியுமா?..
குகைக்குள் தானே எடுக்கக் கூடாது!..
நான் வெளியில் தானே எடுக்கிறேன்!..

இங்கா...ல எடுக்கவே கூடாது...லே!... - என்றபடி,
கேலக்ஸியை பறிக்க முயன்றார்..

அவரிடமிருந்து விலகிய நான் -

படம் எடுக்கக் கூடாது என்றீர்கள்... நான் எடுக்கவில்லை... 
அத்துடன் விட்டு விட வேண்டும்...
இந்த வேலையெல்லாம் செய்யக் கூடாது...
கோயிலில் இருப்பவருக்கு இவ்வளவு கோபம் ஏன்!?...

- என்றேன்...

வசைமாரி பொழிந்தார்... அவருக்கு என்ன பிரச்னையோ... பாவம்!..
பல கோயில்களில் இப்படிச் சில பேர் இருக்கின்றார்கள்...

திருச்செந்தில்நாதனின் தரிசனம் இனிதே நிகழ்ந்தது...
மகிழ்ச்சியுடன் அங்கிருந்து உவரிக்குப் புறப்பட்டோம்!..
***

நேற்று (20/2 ) திருச்செந்தூரில்
ஹேவிளம்பி ஆண்டிற்கான
மாசிப் பெருந்திருவிழா
திருக்கொடியேற்றம் நிகழ்ந்துள்ளது...

கீழுள்ள படங்கள்
முருகனடியார் திருக்கூட்டத்தினர்
Fb ல் வழங்கியவை..

அவர் தமக்கு 
மனமார்ந்த நன்றி..




பொன்னழகு மின்னி வரும் வண்ண மயில் கந்தா..
கண்மலரில் தண்ணருளைக் காட்டி வரும் கந்தா!..
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா.. முருகா.. வருவாய்.. அருள் தருவாய்..

முருகா!...
*** 

14 கருத்துகள்:

  1. முருகா சரணம்...

    தங்கள் படங்களையும் ...கொடியேற்ற விழா படங்களையும் கண்டு
    ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஜி
    அழகிய தரிசனம் தங்களது திறமையால் மகிழ்ச்சி.

    கோவில் பணியாளர்கள் அதை வேலையாக மட்டும் எண்ணாமல் தனது வாழ்வில் கிடைத்த பேறு என்று நினைக்க வேண்டும்.

    ஹும் அதெல்லாம் இனிமேல் எங்கும் காண இயலாது.

    தங்களது பதிவு எனது 1983-ஆம் ஆண்டின் பழனி கோவில் தரிசனத்தை நினைவூட்டி விட்டது.

    பதிலளிநீக்கு
  3. நாங்க முதல்முறை திருச்செந்தூர் போனப்போ வள்ளி குகைக்குக் காசெல்லாம் இல்லை. சும்மாப் போய்ப் பார்த்துட்டு வந்தோம். இரண்டாம் முறை போனப்போ தரிசனக் கட்டணம்! மூன்றாம் முறையும் அப்படியே!

    பதிலளிநீக்கு
  4. ஒவ்வொரு முறை திருச்செந்தூர் செல்லும்போதும் எங்களுக்கும் கோயில் ஊழியர்களுடன் வாக்குவாதம் வரும்! 1000 ரூ டிக்கெட்டுக்கு ஒரு குடும்பம்னு சொல்லி டிக்கெட் வாங்கினால் எங்களில் இருவரை மட்டும் உள்ளே விடுவேன்னு சொல்லி! போதும் போதுமென்று ஆகி விடும். பழனி அதற்கு மேல் மோசம். இதுக்காக நாகர்கோயில் கோயில்கள் பரவாயில்லை. திருவட்டாறு, சுசீந்திரம், கன்யாகுமரி, நாகராஜா கோயில் ஆகியவற்றில் நன்றாக தரிசனம்!பண வசூல் இல்லாத இடங்களில் மக்கள் தரிசனம் செய்துவிட்டு நகர்ந்து கொண்டே இருப்பார்கள். பணம் வசூல் பண்ணினால் தான் இவ்வளவு கொடுக்கிறோம், ஏன் உடனே போகணுமா, இன்னும் கொஞ்சம் நேரம்னு மனம் சொல்ல ஆரம்பிக்கிறது! :(

    பதிலளிநீக்கு
  5. இனிய படங்கள். "என் அப்பனே... எண்ணி எண்ணி... கந்தப்பனே கந்த காருண்யனே" என்று தரிசித்துக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  6. வள்ளிக்குகைக்குள் செல்லும்போது "வள்ளிக் கணவன் பேரை மெல்லச் சொல்லா தம்பி" என்று அதே சீர்காழி அவர்கள் குரல் ஒலிக்கவில்லையா?

    பதிலளிநீக்கு
  7. நாளை கிருத்திகை போல... "திருச்செந்தூரில் போர்புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன் திருத்தணி கோவில் கொண்டானாம்..." என்று அங்கு செல்லலாம்.

    பதிலளிநீக்கு
  8. அருமையான திருச்செந்தூர் ஆலய தரிசனம். அத்துடன் அடிக்கடி கேட்ட பாடல்கள். அருமை.

    பூவிலிருக்கும் தேனுக்கு அருகில் இருப்பதால், காம்பும் இனிக்கவேண்டும் என்று நினைக்கமுடியுமா? அப்படிப்பட்ட நிலை வருவதற்கு மனம் பக்தியில் கனியவேண்டும், எல்லோரிடமும் இறையைப் பார்க்கும் எண்ணம் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. துளசி: படங்கள் எல்லாம் மிகவும் அருமை ஐயா. முருகன் பாடல்கள் முன்பு கேட்டதுண்டு...திருச்செந்தூர் தமிழ்நாட்டில் இருந்தவ்ரை சென்றதுண்டு. கேரளம் சென்ற பின் பழனிக்குச் சென்றதுண்டு. அதன் பின் திருச்செந்தூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது தங்கள் பதிவைப் பார்த்ததும் ஆவல் வந்துவிட்டது..

    கீதா: வாவ்!!! துரை அண்ணா முதல் அந்தக் கடல் படங்கள் மனதை அப்படியே மயக்கிவிட்டது!!!! அடுத்து கீழே வந்தால் ஆஹா...ஆஹா எனக்குப் பிடித்த கோயில் திருச்செந்தூர்...ஆனால் நான் சென்று பல வருடங்கள் ஆகிவிட்டது. அப்போ எல்லாம் வள்ளி குகைக்குக் காசு வாங்கியதாக நினைவில்லை. மயில்கள் இல்லாமல் ஆகி வருவது மிகவும் வேதனை...அற நிலையத்துறையின் பல செயல்கள் ஊழல்கள் நிறைந்ததாக இருக்கு..என்ன சொல்ல.

    அந்த ஆளின் சினம்...ம் என்ன சொல்ல கோயிலில் இருந்தும், நெற்றியில் பட்டை, கழுத்தில் ருத்ராட்சம் எல்லாம் இருந்தும் மனதில் முருகன் இல்லையே அப்புறம் என்ன விட்டுத் தள்ளுங்கள். இது பல கோயில்களிலும் இப்படித்தான் நடக்கிறது அண்ணா...எனக்கும் இப்படியான அனுபவம் உண்டு...தடித்த வார்த்தைகள் வெளிப்படும் கெட்ட வார்த்தைகள் உட்பட...

    கோயில் பெரிய தாழ் படம் மற்றும் தன் கீழே இருக்கும் அந்தப் படமும் அட்டகாசம்...ரசித்தேன் முருகனை

    பதிலளிநீக்கு
  10. அழகான படங்கள், பாடல்கள் மிகவும் பிடித்த பாடல்கள்.
    எப்போது போனாலும் மயில் தரிசனம் கிடைக்கும் கோவில்.
    முருகன் அருகில் பஞ்ச லிங்கம் பார்க்கவும் காசு உண்டே!
    வள்ளி குகைக்கு முன்பு காசு வாங்கவில்லை இப்போது வாங்குவது வியப்பைத் தருகிறது.

    திருச்செந்தூர் மக்களுக்கு கோவிலுக்குள் போக டிக்கட் கிடையாது வரிசையில் நிற்காமல் சொல்லி விட்டு போகலாம்.

    மாசி திருவிழா கொடியேற்ற படம் அருமை.


    பதிலளிநீக்கு
  11. ஸ்ரீராம் சொன்ன பாடல்களும் மிகவும் பிடித்த பாடல்கள்.
    சூழமங்கலம் சகோதரிகள் பாடிய திருச்செந்தூர் பாடல்களும் மிக அருமையாக இருக்கும். திருச்செந்தூரில் தென்றல் அடித்தால் கதிர்காமத்தில் மணி ஒலிக்கும் என்ற பாடல் பிடித்த பாடல்.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் ஐயா!

    முருகன் என்றாலே அழகுதானே! காட்சிகள் அத்தனையும் மிகச் சிறப்பாக இருக்கிறது.
    சூரியோதயக் காட்சி எனக்குச் சென்ற வருடம் காசியில் கங்கைக் கரையில் அதிகாலைச் சூரிய தரிசனத்தை நினைவு படுத்தியது.

    திருச்செந்தூரானைச் சென்று தரிசிக்கப் பெருவிருப்பம் இருக்கிறது. "அவனருளாலே அவன் தாள் வணங்கி"... காத்திருக்கிறேன் அவனருளுக்காய்.

    அருமையான படங்களும் தகவல்களும் ஐயா! முருகனருள் எல்லோருக்கும் கிட்டட்டும்!
    நன்றியுடன் நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. நேரில் பார்த்த திருப்தியை தந்துவிட்டது!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..