நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், நவம்பர் 27, 2017

கார்த்திகைத் திங்கள் 2

கார்த்திகையின் முதல் திங்கள் அன்று
திருஆலம் பொழில் சிவாலயத்தைத் தரிசனம் செய்தோம்..

கார்த்திகையின் இரண்டாம் திங்களாகிய இன்றும்
வழக்கம் போல சிவாலய தரிசனம்..

இன்றைய திருக்கோயில் -  திருக்காட்டுப்பள்ளி..

நாற்புறமும் நெல் வயல்களால் சூழப்பட்டுள்ள ஊர்...
தஞ்சை மாவட்டத்தின் அழகான ஊர்களுள் திருக்காட்டுப்பள்ளியும் ஒன்று..

திருத்தலங்களின் தொகுப்பின்படி -
காவிரியின் தென்கரைத் தலம் என சொல்லப்படுவது..

மயிலாடுதுறை - திருவெண்காட்டிற்கு அருகிலும்
திருக்காட்டுப்பள்ளி - என, ஒரு திருத்தலம்...

அதுவும் பதிகம் பெற்ற திருக்கோயில்..
அது காவிரியின் வடகரைத் தலம்..

அடியார்கள் திருப்பதிகத் திருத்தலங்களைக் குறிப்பிடும் வேளையில்
காவிரியின் வடகரையிலுள்ள திருத்தலத்தை கீழைத் திருக்காட்டுப்பள்ளி எனவும்
காவிரியின் தென்கரையிலுள்ள திருத்தலத்தை மேலைத் திருக்காட்டுப்பள்ளி எனவும்
வழங்குகின்றார்கள்..

என்றாலும் -
இவ்வூர்கள் இரண்டும் சாதாரணமாகத் திருக்காட்டுப்பள்ளி என்றே அறியப்படுகின்றன...

திருத்தலம்
திருக்காட்டுப்பள்ளி

நன்றி - உழவாரம் சிவனடியார்
நன்றி - உழவாரம் சிவனடியார்
இறைவன் - ஸ்ரீ ஆரண்யசுந்தரர், ஸ்ரீஅக்னீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ சௌந்தர்ய நாயகி 
தீர்த்தம் - காவிரி, அக்னி தீர்த்தம்
தலவிருட்சம் - வில்வம், வன்னி

நான்முகன், சூரியன் மற்றும் அக்னி தேவன் வழிபட்ட திருத்தலம்.. உரோமரிஷி இங்கே தவமிருந்து இறைதரிசனம் பெற்றுள்ளார்..

திருநாவுக்கரசு ஸ்வாமிகளும்
திருஞானசம்பந்தப் பெருமானும் திருப்பதிகங்கள் அருளியுள்ளனர்..

திருத்தலம் மிகப் பழைமையானது... ஆனால் கோயிலின் கட்டுமானம் சில நூற்றாண்டுகளுக்கு முந்தையதாகத் தெரிகின்றது..



நெடிதுயர்ந்து விளங்கும் ஐந்து நிலை ராஜகோபுரத்தை வணங்கியவாறு திருக்கோயிலினுள் நுழைகின்றோம்...


கொடிமரம்.. கொடிமர விநாயகர்..

தரிசனம் செய்தபடி ஸ்வாமி சந்நிதிக்குள் நுழையும் போதே
வடபுறமாக அம்பிகை சௌந்தர்யநாயகியின் சந்நிதி..

திருக்கோயிலின் தலைவாசலில் இருந்து -
நாலடி அளவுக்குத் தாழ்வாக இருக்கின்றது - கருவறை..

இதுவே ஆதியில் இருந்த அமைப்பாக இருக்கலாம்...


திருக்கோயிலின் அருகில் காவிரி ஆறு..

பின்னாளில் ஏற்பட்ட நீர்ப்பெருக்கினால் திருக்கோயிலின் கட்டுமானத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கக் கூடும் என யூகிக்க முடிகின்றது...

மூலத்தானத்தின் எதிரில் நந்தியம்பெருமான்..

கருவறையில் மின்னும் தீபங்களின் ஒளியில்
சிவமூர்த்தியைத் தரிசனம் செய்கின்றோம்..

உடலில் வெம்மையினால் நோய்கள் குறைவதற்கு வணங்க வேண்டிய திருத்தலம் என்று அறியப்படுகின்றது..

அதுமட்டுமல்ல -
உள்ளத்தில் விளையும் வெம்மை குறைவதற்கும்
ஈசன் எம்பெருமான் திருவருள் புரிகின்றார் - இங்கே!...


திருச்சுற்றில் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி..
விசேஷமான திருக்கோலம் என்று தகவல் குறிப்பு அருகில் உள்ளது..


இங்கே யோக குருவாக இரண்டு திருக்கரங்களுடன்
சின்முத்திரை காட்டிய வண்ணம்
ஜடாமுடியில் சூரிய சந்திரர்களுடன் மகர கண்டி
தரித்த திருக்கோலத்தில் திகழ்கின்றார்...


வடக்குத் திருக்கோட்டத்தில் ஸ்ரீ துர்காம்பிகை...
துன்பம் தீர்க்கும் அம்பிகையைத் தொழுது வணங்குகின்றோம்..

திருச்சுற்றில் வலமாக வந்து மீண்டும் அர்த்த மண்டபம்...

நவக்கிரக மண்டலத்தில்
சூரியனை நோக்கியவாறு ஏனைய மூர்த்திகள்..

வடபுறமாக நடராஜ சபை.. திருப்பள்ளியறை..
ஸ்ரீ காலபைரவரர்.. ஸ்வாமியைத் தரிசனம் செய்து கொள்கின்றோம்..

சற்றே நகர்ந்து வெளித்திருச்சுற்று,, பரந்து விளங்குகின்றது..


கன்னி மூலையில் ஸ்ரீ விநாயகர் சந்நிதி..
ஸ்ரீவள்ளி தெய்வானையுடன் கல்யாண முருகன்..

உரோம மகரிஷி




ஸ்ரீ பூதேவி ஸ்ரீ தேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் சந்நிதி..
உரோம மகரிஷி சிவ வழிபாடு செய்யும் திருக்கோலம்..
நந்தியும் உடனிருக்கின்றார்..

கஜலக்ஷ்மியும் சரஸ்வதியும் திருச்சுற்றில் விளங்குகின்றனர்..  

வடக்குத் திருச்சுற்றில் தென்னை மரங்களுடன்
தலவிருட்சமான வில்வமரம் விளங்குகின்றது..

வலம் வந்து வணங்கியபடி வெளியே வந்து
அம்பிகை ஸ்ரீ சௌந்தர்யநாயகியின் சந்நிதியில் தரிசனம் செய்கின்றோம்..

முன்மண்டபம் நிறைந்த தூண்களுடன் விளங்குகின்றது..

அம்பிகை சந்நிதி விமானம்



மூன்றாவது திருச்சுற்று விசாலமாக விளங்குகின்றது...

தீபங்களை ஏற்றுவதற்காக தனியாக மண்டபம் ஒன்றினை
பெரிய அளவில் அமைத்திருக்கின்றார்கள்..


தென்புறமாக கன்னி மூலையில் -
விநாயகர் சந்நிதியுடன் ஸ்ரீ ஐயப்பன் சந்நிதி...

படர்ந்திருக்கும் புல்வெளியில் நடந்தவாறு திருக்கோயிலை வலம் வந்து
கொடி மரத்தினருகில் வீழ்ந்து வணங்கி எழுகின்றோம்...

மாலை வேளை பூஜைகள் மங்கலகரமாக நிகழ்ந்தன.. உபயதாரர்கள்
பொங்கலும் புளியோதரையும் பாலும் பிரசாதமாக வழங்கினர்...

மனம் நிறைவான தரிசனம்..
மாலை வேளையில் கருமேகங்கள் திரண்டு நின்றன..

ஐயன் அக்னீஸ்வரனும் அம்பிகை சௌந்தர்ய நாயகியும்
அனைவருக்கும் அருள் பாலிக்க வேண்டிய வண்ணம்
திருக்கோயிலிலிருந்து புறப்பட்டோம்..

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து
திருக்காட்டுப்பள்ளிக்கு அடிக்கடி நகரப் பேருந்துகள் இயங்குகின்றன...

கல்லணைக்குச் செல்லும் புறநகர்ப் பேருந்துகளும்
திருக்காட்டுப்பள்ளி வழியாக செல்கின்றன...

பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்து
வடக்குப் புறமாக நோக்கினால் சற்று தூரத்தில் திருக்கோயில்...

திருக்காட்டுப்பள்ளியிலிருந்து கல்லணை 17 கி.மீ.,

வழியில் பஞ்ச ரங்கத் தலங்களுள் ஒன்றான அப்பாலரங்கம் திவ்யதேசம்..

திருப்பேர் நகர் என்பது பழைமையான திருப்பெயர்..
இன்றைக்குக் கோவிலடி எனப்படும் இத்திருவூரில்
அப்பக்குடத்தான் - என, பெருமாள் பள்ளி கொண்டிருக்கின்றார்...

சிவாலயங்களும் திவ்யதேசங்களுமாக
காவிரியாள் பசுமையில் திளைத்துக் கொண்டிருக்கின்றாள்..
***
நன்றி - உழவாரம்
வேதனார் வெண்மழு ஏந்தினார் அங்கமுன்
ஓதினார் உமையொரு கூறனார் ஒண்குழைக் 
காதினார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
நாதனார் திருவடி நாளும்நின் றேத்துமே..(3/29)

செங்கண்மால் திகழ்தரு மலருறை திசைமுகன்
தங்கையால் தொழுதெழத் தழலுரு வாயினான்
கங்கையார் சடையினான் கருதுகாட் டுப்பள்ளி
அங்கையால் தொழுமவர்க்கு அல்லல் ஒன்றில்லையே..(3/29)
-: திருஞானசம்பந்தர் :-

அடும்பும் கொன்றையும்வன்னியும் மத்தமுந்
துடும்புல் செய்சடைத் தூமணிச் சோதியான்
கடம்பன் தாதை கருதுங்காட் டுப்பள்ளி
உடம்பினார்க்கோர் உறுதுணை ஆகுமே..(5/84)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * * 

15 கருத்துகள்:

  1. உரோமரிஷி.... புதியதாய்க் கேள்விப்படுகிறேன். உங்களுடனேயே சுற்றி தரிசனம் செய்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      உரோம ரிஷி பதினெண் சித்தர்களுள் ஒருவர்..

      தஞ்சையில் அதிஷ்டானம் உள்ளது..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. திருக்காட்டுப்பள்ளி. முதன்முதல் என் தமக்கையார் இந்த ஊரில்தான் குடித்தனம் தொடங்கினார். கொண்டுவிட பெரியவர்களுடன் நானும் வந்திருந்தேன் மூத்த சகோதரரோடு. அங்கிருந்த ராஜம் காபியில் என் சித்தப்பா பணி புரிந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      திருக்காட்டுப்பள்ளி மிகவும் வளமையான ஊர்..
      தங்கள் மீள்வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. இரு திருக்காட்டுப்பள்ளியும், அப்பாலரங்கமும் சென்றுள்ளோம்.இன்று உங்கள் பதிவு மூலமாகச் சென்றோம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களது கோயில் சுற்றுலாவில் நானும் ஒருமுறை கலந்து கொள்ள வேண்டும்.. பார்க்கலாம்.. காலம் கூடி வரட்டும்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அருமையான தரிசனம் இனிய காலைப்பொழுதில்!

    துளசி: நான் திருக்காட்டுப்பள்ளிக்கு ஒரே ஒரு முறை சென்றிருக்கிறேன் என்ற நினைவு. பல வருடங்களுக்கு முன் (20 வருடங்களுக்கு முன்) தஞ்சையைச் சுற்றி உள்ள சிவத்தலங்களுக்கு நடந்தே சென்றேன். அப்போது சென்ற நினைவு...மீண்டும் செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. பார்ப்போம்..இறைவன் அருள் புரிய வேண்டும்.

    கீதா: நல்ல இனிய தரிசனம். படங்கள் எல்லாம் அழகு! நான் சென்றதில்லை. என்றாலும் உங்கள் பதிவுகள் மூலம் பல கோயில்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிகிறது. உரோமரிஷி புதியதாய் இருக்கிறாரே! இதுவரை கேட்டதில்லை...சகோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..
      உரோம ரிஷி பதினெண் சித்தர்களுள் ஒருவர்..
      காகபுஜண்ட மகரிஷியின் சீடர்

      தஞ்சையில் இவரது அதிஷ்டானம் உள்ளது..

      தங்கள் வருகையும் மேலதிக செய்திகளும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. திருக்காட்டுப்பள்ளி. கேட்டிருக்கிறேன் சிறுவயதினில் . சென்றதில்லை. உங்கள் பக்கங்கள் மூலம் தரிசனம் இப்போது நிகழ்ந்திருக்கிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஏகாந்தன் ..

      தங்களுக்கு நல்வரவு..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அன்பின் ஜி தங்களுடன் நானும் தரிசித்தேன் தொடர்கிறேன் வாழ்க நலம்,

    பதிலளிநீக்கு
  7. குவைத்தில் இருந்து கொண்டே திருக்காட்டுப்பள்ளி தரிசனம் செய்தது அழகு

    பதிலளிநீக்கு
  8. திருக்காட்டுப்பள்ளி சிவனை தரித்தேன்அருமையான விளக்கங்களுடன்

    பதிலளிநீக்கு
  9. மிக அருமையான படங்கள்.. அழகிய பதிவு. சில கோயில் படம் பார்க்கும்போது எங்கள் ஊர்க்கோயில் போல நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  10. திருக்காட்டுப்பள்ளியை மீண்டும் தரிசனம் செய்தேன்.
    படங்கள் எல்லாம் நேரில் பார்த்த மகிழ்ச்சியை தந்தது.
    நேர வித்தியாசம், வார இறுதியில் வெளியில் செல்வது, விருந்தினர் வருகை என்று பதிவுகளை படிக்க முடியவில்லை, நேரம் கிடைக்கும் போது வந்து படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..