நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், நவம்பர் 29, 2017

செவிப்பூ

சூர்ப்ப கர்ணாய நம:
அகன்ற காதுகளை உடையவனே போற்றி!.. 

- என்பது ஸ்ரீ விநாயகருக்குரிய தோத்திரங்களுள் ஒன்று..

நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலங்கு குண்டலமும் ..

- என்பது கந்த சஷ்டி கவசத்தின் வரிகள்..

உமையாளிடம் ஞானப்பால் அருந்திய சம்பந்தப் பெருமான்
தனது முதல் திருப்பதிகத்தின் முதல் வரியிலேயே -

தோடுடைய செவியன்!.. 
- என்று இறைவனை அடையாளங்காட்டுகின்றார்..

இது ஈசன் உமையுடன் கூடிய அர்த்தநாரீஸ்வர திருக்கோலம்..

குறிப்பாக - குழை , தோடு என்னும் ஆபரணங்கள் மகளிர்க்கு உரியவை..

ஈசனை அடையாளங் காட்டும் போதெல்லாம்
சிவசக்தி ஐக்கிய வடிவமாகவே சான்றோர்கள் அடையாளங்காட்டுகின்றனர்...

காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்!.. 
- என்பது திருநாவுக்கரசர் திருவாக்கு..

குண்டலங் குழைதிகழ் குழைக் காதனே!.. -
- என,   சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும்
அம்மையப்பனின் திருக்கோலத்தைக் காட்டுகின்றார்..

குண்டலக் காதி!..  - என்று அம்பிகையைக் குறித்தருள்பவர் திருமூலர்..



கனங்குழை மாதர்!..  - என்பது திருக்குறள்...

நவதிருப்பதிகளுள் ஒன்றான தென் திருப்பேரையில் ஸ்ரீ ஹரிபரந்தாமனின் திருப்பெயர் - மகர நெடுங்குழைக் காதர்..
உடனுறையும் தாயாரின் திருப்பெயர் - குழைக்காது வல்லி..

அவ்வளவு ஏன்!..
அபிராமவல்லியைத் துதிக்கும் போது -

அம்மா!..
நின்னுடைய திருத்தன பாரங்களில் திகழும்
முத்து மாலைகளையும் (அணி தரளக் கொப்பும்)
செவிகளில் பேரழகுடன் ஒளிரும்
வயிரத் தோடுகளையும் (வயிரக் குழையும்)
என்னுடைய சிந்தனையிலே எழுதி வைத்தேன்!..

- என்று பாடுகின்ற அபிராமபட்டர் -

அன்று கயிலாயருக்கு இமவான் அளித்த கனங்குழையே!..

- என்று, அம்பிகையை கனங்குழை என்று குறிக்கின்றார்...

அதுமட்டுமா!..

மூங்கிலைப் போன்ற திருத்தோள்களில் திகழும் கொன்றை மாலையானது 
காதுகளில் உள்ள குழைகளைத் தழுவி நிற்கின்ற வண்ணம்
அம்பிகை திருக்காட்சி நல்குகின்றாள்!..

- என்று புகழ்ந்துரைக்கின்றார்.

அபிராமி அந்தாதியின் நூறாவது திருப்பாடல் 
மிகப் பெரிய தத்துவத்தினை உள்ளடக்கியது...

அந்த ஒரு திருப்பாடலுக்கே பல பதிவுகளைத் தரவேண்டும்..
அவற்றை வேறொரு இனியவேளையில் சிந்திக்கலாம்...


HaleBedu - Karnataka
இத்தகைய ஆபரணச் சிறப்புடன் குறிக்கப்படுவது - காது..

இளநங்கையர் தம் காதுகளில் அணியும் ஆபரணங்களுள்
தோடு, குழை, தொங்கல், தண்டட்டி - என்பன நாமறிந்தவை...

தண்டட்டி தான் - லோலாக்கு என்றும் பாம்படம் என்றும் சொல்லப்படுவது..

பெண்களுக்கான காதணிகள் என்று பதினாறு பெயர்களைத் தருகின்றது - விக்கி பீடியா..

இளங்காளையர் தம் காதுகளுக்கான ஆபரணங்கள் 
கடுக்கன், குண்டலம் - என்பன மட்டுமே...

குழந்தை பிறந்ததும் நல்லதொரு நாளில் -
உறவுகள் உடனிருக்க காதுகளுக்கு பொன் அணிவிப்பது நமது கலாச்சாரம்.. 

சமய சடங்குகள் சிலவற்றின் போது
தியான - உச்சாடன மந்திரங்களைக் காதினில் ஓதுவது மரபு...

எவராவது இடக்கு மடக்காகப் பேசும்போது -
எனக்கு ஏற்கனவே காது குத்தியாகி விட்டது!..  - என்று மடக்குவது வழக்கம்..

அன்பு மிகுந்த வேளைகளில் கணவனும் மனைவியும்
ரகசியம் பரிமாறிக் கொள்வதை - காது கடித்தல் என்றே குறிக்கின்றனர்..

இளங்காதலர்களிடம் இது - அதாவது,
உண்மையாகவே காதைக் கடித்தல் அதிகமாக உண்டு!..
- என்று அங்கும் இங்குமாக சில பட்சிகள் சொல்லுகின்றன!...

இத்தனை சிறப்புகளை உடைய காதுகள்
இன்றைய நாட்களில் எப்படிப் பராமரிக்கப்படுகின்றன!?..

இன்றைய நாட்களில் பராமரிக்கப்படுவது இருக்கட்டும்!..

அன்றைய நாட்களில்?...

எவ்விதமான புறத் தொந்தரவுகளும் இல்லாத அன்றைய காலகட்டத்தில்
மனிதனின் எல்லா அவயவங்களும் கூடுமானவரைக்கும் சரியாகவே இருந்தன...

குண்டூசி விழுந்தாலும் கேட்கும் அவருக்கு!..- என்றல்லாம் சொல்வார்கள்..

நிதானமான அனுபவபூர்வமான வைத்திய முறைகள் மக்களுக்குக் கிடைத்தன...

வீடுகளிலும் அஞ்சறைப் பெட்டிக்குள்ளேயே அருமருந்துகள் இருந்தன..

இருப்பினும் -
வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு!..
- என்ற சொல்வழக்கும் மக்களிடையே பிரசித்தம்..

நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய்
ஆமணக்கு எண்ணெய்..

இவை நான்கும் மக்கள் நலம் பேணின... அப்படியும் உடல் கோளாறு என்றால் வேம்பின் எண்ணெய் இவற்றோடு சேர்ந்து கொண்டது...

மழைக் காலம் தவிர்த்த மற்ற மாதங்களில்
வாரத்துக்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக் குளித்தனர்...

பள்ளி நாட்களில் - வெள்ளிக் கிழமைகளில்
எண்ணெய் குளித்த பெண் பிள்ளைகள் புத்தகங்களுடன் வரும் அழகே அழகு!..

பாவாடை தாவணியும் ஜிமிக்கி கம்மலும்!.. - ஆகா.. ஆகா!..

பிள்ளையார் கோயில் வாசலில்
இதற்காகவே விடலைகள் காத்துக் கிடப்பார்கள்...

அப்படி எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது
எண்ணெய்யை லேசாக சூடுபடுத்தி ஆறவைத்து
காதுகளில் சில சொட்டுகள் விடுவார்கள்..

இது நம்முடைய வைத்திய முறைகள் காட்டிய வழி..

காதில் வேறு ஏதும் பிரச்னை என்றால் -
மூலிகைச் சாறு சில சொட்டுகளை விடுவார்கள்..

அது என்ன மருந்து என்று கேட்டால் -
பேர் சொல்லாதது!.. - என்று சொல்லி விடுவார்கள்..

காலங்கள் மாறி வந்த சூழ்நிலையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உள்பட பல வழக்கங்கள் முற்றிலும் நின்றே போயின...

ஒரு சில இடங்களில் கையாண்ட முறையினால் தவறுகள் ஏற்பட்டிருக்கலாம்..

ஆனால் - முற்றிலும் தவறு என்று நிரூபணம் செய்வதற்கு முனைந்தது நவீன மருத்துவம்...

ஊடகங்களும் அதற்கு ஜால்ரா அடித்தன..

விளைவு - தெருவுக்கு நாலு மருந்தகங்கள்.. வீட்டுக்கு வீடு நோயாளிகள்...

அது கிடக்கட்டும்.. காதைப் பற்றி ஏதோ சொல்ல வந்து விட்டு ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறீர்!...

- என, கவிப்புயல் கர்ர்ர்ர்ர்ர்.........ரிப்பது........... கர்ஜிப்பது கேட்கிறது!..

இதோ வந்து விட்டேன்....
ஏனென்றால் இந்தப் பதிவே கவிப்புயலுக்காகத் தான்!...

என்னது!.. கவிப்புயலுக்காகவா!?..

ஆமாம்.. கடைசியில் ஏனென்று சொல்லுகிறேன்!..


காதும் காது மடலும் அழகென்றால் அதை மேலும்
அழகு படுத்த பற்பல அணிகலன்களை அணிந்து கொண்டனர்...

அவையெல்லாம் புற அழகு என்றாலும் காதுகளின் உள் அழகு அபூர்வமானது..

காதினுள் இயற்கையாகவே மெழுகு (Ear Wax) சுரக்கின்றது...
அது காதினை சுத்தப்படுத்துவதற்காக - என்கின்றனர் - மருத்துவர்கள்..

காதுகளின் உள்ளே உள்ள மெழுகு - குறும்பி எனப்படும்..

காதுக்குள் சில துளி எண்ணெய் விடுவதால்
காதினுள் இருக்கும் மெழுகு சற்றே இளகி வரும்..

ஒவ்வொருவருடைய உடல் சூட்டுக்கும் ஏற்றார்போல
காதினுள்ளே உள்ள மெழுகின் தன்மை மாறுபடும்...

காதினுள் மெழுகு இளகி வெளியே வரும் போது
அதுவாகவே உலர்ந்து உதிர்ந்து விடும்..

காது மெழுகு எடுப்பதற்காகவே வழுவழுப்பாக வெள்ளியில்
மெல்லிய கம்பி ஒன்று பெரும்பாலான வீடுகளில் இருக்கும்...

அது முற்றிலும் பாதுகாப்பானது என்று சொல்லவில்லை...
அதை முறையாகப் பயன்படுத்தினால் பிரச்னை இல்லை...

இதில் ஏறுக்குமாறாக -
கோழிமுடி, ஈர்க்கு, ஆணி, பென்சில், காகிதம், கம்பி, கடப்பாரை -
இவற்றைக் காதில் விட்டுக் குடைந்து - தன் காதுக்குத் தானே வேட்டு வைத்துக் கொண்டவர் பலர்..

அபூர்வமாக - ஒருவருக்கொருவர் கைகலப்பில் காதை இழந்த கதைகளும் உள்ளன...

காலங்கள் மாறின..

கிரிக்கெட் கேட்கிறேன்!.. - என்று, காதருகில் பாக்கெட் ரேடியோவை வைத்துக் கொண்டதனால் காதை இழந்தவர்கள் பலர்..

காதுக்குள் மெழுகு - குறும்பி - இறுகிப் போவதால் ஏற்படும் நமைச்சலைத் தடுப்பதற்காக நாகரிக மக்களால் பஞ்சு குச்சியைக் கொண்டு காது குடையும் பழக்கமும் தொடங்கப்பட்டது..

குடிசைத் தொழில் என்ற பேரில் இந்த குச்சிகள் ( Swabs) லட்சக்கணக்கில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தன..

இவை ஆபத்தானவை என்று டாக்டர்கள் சொல்லியும் கேட்பாரில்லை...

பல வீடுகளில் மாதாந்திர மளிகை சாமான் பட்டியலில்
நிரந்தர இடம் பிடித்து விட்டன - காது குடையும் குச்சிகள்..

அடுத்து வந்த நாட்களில் நவீன நுண்ணலை பேசிகளின் வருகையினால் பாக்கெட் ரேடியோக்கள் தொலைந்தன..

நுண்ணலை பேசிகளின் பயன்பாடு மேலதிகமாகிவிட்ட காலகட்டத்தில் -
காதையும் கவனத்தையும் இழந்ததோடல்லாமல் வாழ்க்கையையே இழப்பவர்களையும் கண்டு கொண்டிருக்கின்றோம்..

காதுகளின் உட்புறம் மிக மிக மென்மையானவை..

அவற்றுள் முக்கியமானது செவிப்பறை (Ear Drum)..

அது கிழிந்து போனால் அதன்பின் காது - கேட்காது...

பிறந்த குழந்தை காதுகளின் வழியாக சப்தத்தை உணர்வதால் தான்
பேசுவதற்கு ஆரம்பிக்கின்றன...

உடலில் கடைசியாகத் தூங்கி முதலில் விழிப்பவை காதுகளே!..


புறச்செவி, நடுச்செவி, உட்செவி என மூன்று அமைப்பாக இருக்கின்றது - காது..

காது மடலில் இருந்து செவிப்பறை வரை புறச் செவி..


வெளியுலகில் ஏற்படும் ஒலி செவிப்பறையை அடையும்போது
உட்செவியில் உள்ள மிக மெல்லிய எலும்புகளான
பட்டை எலும்பு, சுற்றெலும்பு, அங்கவடி எலும்பு ஆகியன அதிர்கின்றன..

இதனால் நடுச்செவியிலுள்ள திரவம் அசைகின்றது..
இதைத் தொடர்ந்து செவி நரம்பு தூண்டப்பட்டு மூளை ஒலியை உணர்கின்றது..

செவிப்பறை கிழிந்து போனால் -
செவித் திறன் முற்றிலுமாக பாதிப்படைகின்றது...

செவித் திறன் பாதிப்படைவதற்கு
முக்கியமாகக் குறிப்பிடப்படும் சில காரணிகள்...

சத்துக் குறைவு மற்றும் சுகாதார சீர்கேடுகள்..

பாக்டீரியா தொற்று, ஓயாத சளித் தொல்லை அதனால் காதின் உட்புறம் பாதிக்கப்பட்டு சீழ் பிடித்தல்.. தவிர மெழுகு அடைப்பு.. 

கையில் கிடைத்தவற்றைக் கொண்டு காதைத் தோண்டுவது..

முன்பு சொல்லப்பட்ட
கோழிமுடி, ஈர்க்கு, ஆணி, பென்சில், காகிதம், கம்பி, கடப்பாரை - வகையறாக்கள்..

அதீத ஒலி மாசு..

80 - 85 டெசிபல் தான் இயல்பான ஒலியளவு என்கின்றனர் மருத்துவர்கள்..
இதற்கு மேலான ஒலி அதிர்வுகளையே நாம் தினமும் உள்வாங்கிக் கொண்டிருக்கின்றோம் - 

காதுகளை விட்டுப் பிரியாத ஒலி பெருக்கிகளுடன்!..


காதுகளின் அருமை பெருமைகளை உணர்தல் வேண்டும்..
இன்றைய நாட்களில் காதுகளுக்கான அதிகப்பட்ச ஹிம்சை - ஒலி மாசு...

காணும் இடம் எங்கும் -
படித்திருந்தும் பயனிலராக Head Phone உடன் 
வயது வித்தியாசமின்றி அலைகின்றனர் மக்கள்...


அது ஆபத்தானது என்று சொல்லியும் உணர்வார்களில்லை..
தூக்கத்தில் கூட கழற்றிப் போடுவதில்லை!.. - என்றால் என்ன செய்வது?..

காதுகளைப் பேணுதல் வேண்டும்..


முதற்கட்டமாக HEAD PHONE களைக் கழற்றி எறிவது.. 


கண்டவற்றையும் காதினுள் நுழைத்துத் குடைவதைத் தவிர்ப்பது..
சத்துள்ள உணவுகளை உண்டு உடல் நலனைப் பேணிக் காப்பது..

பாரம்பர்யப் பாம்படம்
நான் இவற்றை எல்லாம் கடைப்பிடித்து வருகின்றேன்..

விமானப் பயணங்களின்போது வழங்கப்படும் HEAD PHONE களைக் கூட உபயோகிப்பதில்லை..

தூக்கம் அல்லது -
விமானத்தை வருடி விடும் மேகங்களை வேடிக்கை பார்ப்பது..

இருகாதுகளையும் கவனிக்காமல் விட்டால்
அவை இருக்கும்.. அவற்றால் பயன் இருக்காது...

இப்படியாகிய சூழ்நிலையில் நம்ம ஏரியா தளத்தில் -
மதிப்புக்குரிய கவிப்புயல் வழங்கிய கருத்துரை ஒன்றிற்காகவே இந்தப் பதிவு..
  

யார் காதுகளிலாவது போட்டு விட வேண்டும்!.
- என்று, பல மாதங்களுக்கு முன்பாகத் தொகுத்து வைத்திருந்த பதிவு..

நல்ல வேளை..
கவிப்புயலின் கருத்துரையினால் 
கனவு நிறைவேறியது...
மனமார்ந்த நன்றி..

இன்னும் நிறைய சொல்லலாம்.. 
அவையெல்லாம் பின்னொரு வேளையில்!..
***

கேள்வி அறிவினை செவிச் செல்வம்!..
- என்றுரைக்கின்றார் வள்ளுவப்பெருமான்...

அத்தகைய செல்வத்திற்கு அடிப்படையானவை செவிகள்..

அச்செவிகளும் நல்லோர் தம் 
சொற்களால் துளைக்கப்படவேண்டுமே அன்றி
வேறொன்றால் அல்ல!..

கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி..(418)

வாழ்க நலம்..
***

17 கருத்துகள்:

  1. சம்பந்தப் பெருமானுக்கு, ஈசன் எடுத்துக்கொடுத்த வரிகளில்லையோ அது ("தோடுடைய செவியன்")

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஜி
    எவ்வளவு அறிவுப்பூர்வமான விடயங்கள் அருமை ஜி

    உடலில் கடைசியாகத் தூங்கி முதலில் விழிப்பவை காதுகளே...
    அருமை மிகவும் இரசித்தேன் ஜி

    ///கோழிமுடி, ஈர்க்கு, ஆணி, பென்சில், காகிதம், கம்பி, கடப்பாரை இவற்றைக் காதில் விட்டுக் குடைந்து தன் காதுக்கு தானே வேட்டு வைத்துக் கொண்டவர் பலர்///

    இதில் எனக்கு ஒரு சந்தேகம் கடப்பாரையை காதில் விட்டுக் குடைந்தவரை நான் பார்த்ததே இல்லை ஜி

    அழகிய படங்தளுடன் விளக்கியமைக்கு நன்றி ஜி

    இப்பொழுது ஜேம்ஸ் ஊரணி அதிபர் வருவார் அதற்குள் நான் ஜூட்

    பதிலளிநீக்கு
  3. அருமையான விளக்கங்களுடன் கூடிய பதிவு ..
    நான் இது வரை இயற் போன் ஹெட் போன் பயன்படுத்துவதில்லை :) ஏற்கனவே பஞ்சு குச்சியால் தஹிகம் அவதிப்பட்டு பெரிய சொந்த சோகக்கதை ஒன்றிருக்கு :(

    பதிலளிநீக்கு
  4. அடுத்தது வெள்ளிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்து பாவாடை தாவணி யூனிபார்மில் சென்ற கடைசி ஜெனரேஷன் எங்கள் பள்ளியில் எங்கள் வகுப்பு மாணவிகள்தான் ..92 முதல் எங்கள் ஸ்கூலில் சல்வார் கமீஸ் யூனிபார்ம் வந்து தொலைந்தது :(
    எங்கள் பள்ளி மட்டுமில்லை பல பள்ளிக்கூடங்கள் bus பிரயாணம் travel அது இது என சொல்லி சீருடையை மாற்றிவிட்டனர் :(
    தாவணி எத்த்னை அழகை தந்தது தெரியுமா !

    பதிலளிநீக்கு
  5. இந்த காதில் ear bud போடும்போது சும்மா சுகமாத்தான் இருக்கும் :)
    அப்போ என் மகள் 10 மாத குழந்தை அவளுக்கு காதுகளை பிடித்து உறங்கும் பழக்கம் உண்டு இதனால் பிடிக்கும்போது அடிக்கடி என் காது திருகாணியை கழட்டி விட்ருவா :) சுத்தி திருக்கும் திருகாணி எப்போ லூசாச்சுன்னே தெரியாம குளிக்கும்போது நடக்கும்போது விழுந்து ஒரு ஏழெட்டு தொலைச்சிருக்கேன் :) ஒரு நாள் காதணியை கழட்டி படுக்க இவள் குட்டி விரல் காதுகுள்ளே போச்சா :) சுகமா இருக்குன்னு விட்டத்தில் கிட்டத்தட்ட காது போயிடுச்சின்னே நினைச்சேன் ..நீங்க சொன்ன மெழுகு இயற் பட் உபயத்தால் சுத்தமா இல்லாம போனதால் இவள் விறல் ஆழமா உள்ளே குத்தி ரத்தம் வந்து ஆவென கத்தவும் அவளுக்கு சந்தோஷத்தில் மீண்டும் ஆச்சர்யத்தில் விட்டு குடைந்தா ..
    அப்போ காது டாக்டர் சொன்னார் இன்னொருத்தரம் உன் காது இப்படி புண்ணாச்சுன்னா ஆபரேஷன்தான்னு :)
    ஆனாலும் நாலு மாசம் முன்னாடி கூட இதே காது பிரச்சினை அடிக்கடி பஞ்சு பயன்படுத்தலை தவிர்க்க முடியலை :)

    பதிலளிநீக்கு
  6. உபயோகமான தகவல்கள். நான் இயர் போன் உபயோகிப்பதில்லை. காது குடைவதில்லை. ஆனாலும் சில சமயம் குளிர் காலங்களில் கொஞ்சம் ஒரு காது அடைத்துக் கொள்ளும்.

    பதிலளிநீக்கு
  7. ஆஹா எங்கே துரை அண்ணன் சொன்னாரே ஏதோ அதிராவைப்பற்றிப் புகழ்ந்து 4 வார்த்தை கவிபாடப்போகிறாராக்கும் எனப் படிக்கிறேன்ன்.. படிக்கிறேன்ன்.. படிக்கிறேன்ன்ன்ன்.. மெஞ்ஞானத்தில் பதிவை ஆரம்பித்து.. விஞ்ஞானம் வரை சென்று அதிராவுக்கு ஆப்பு வச்சு முடிச்சிட்டார்ர் அவ்வ்வ்வ்வ்வ்வ்:)) ஹா ஹா ஹா:)).

    இவ்வளவு சமயம் சாஸ்திரம் தெரிஞ்ச துரை அண்ணனுக்கு.. விதிபற்றித் தெரியாமல் போச்சே:)).. நானும் ஒரு போஸ்ட் போடோணும் என இருக்கிறேன்ன் இருக்கிறேன்ன்ன்ன் இன்னும் போட்டபாடில்லை:)..

    அதாவது என்னதான் இயஃபோன் போடாமல் பாதுகாப்பாக இருந்தாலும்.. விதியில காது கேட்காது 70 வயது முதல்:).. என ஒருவருக்கு எழுதப்பட்டிருக்குமானால் அதை மாற்ற ஆரால முடியும் ஜொள்ளுங்கோ:))...

    ஹையோ அஞ்சுவுக்கு இது எத்தனை வயதில என எழுதப்பட்டிருக்கோ:) கடவுளே கல்லெடுக்காதீங்கோ :))

    பதிலளிநீக்கு
  8. மிக அருமையாக விளக்கம் கொடுத்திருக்கிறீங்க துரை அண்ணன் காதுபற்றி.. உண்மைதான் எதுவும் முன் எச்சரிக்கையாக இருப்பது நல்லதுதான், ஆனா அதுக்காக எப்பவும் இயஃபோன் பாவிப்பேன் என்பதும் தப்பு, இயஃபோன் கிட்டவே போகமாட்டேன் என்பதும் தப்பு.. ஒரு அந்தர அவசரத்துக்கு பாவிக்கலாம்.

    ஆனால் காதில் நல்லெண்ணெய் விடலாம் என்கிறீங்க, யூ ரியூப்பிலும் பார்த்தேன் ஒருவர், தீபாவளிக்கு காதைப் பிடித்துக் கொண்டு நல்லெண்ணெய் யைப் போத்திலோடு ஊத்துகிறார்.. எனக்கு உடம்பெல்லாம் கூசியது....

    ஊரில் ஒரு பழமொழி இருக்கு..
    “விட்டுக் கெட்டது காது, விடாமல் கெட்டது கண்”..

    பதிலளிநீக்கு
  9. உண்மைதான் இய பட்ஸ் கூடாது. காது கடித்தால், ஒரு திரிச்சீலை போல எடுத்து அதில் ஆஃப்டர் சேஃப் அல்லது பேபி கொலோன் தொட்டு காதை குடையலாம்.. குணமாகிவிடும்.

    என் காதிலும் அப்பா அம்மா குத்தி விட்டதை விட ... கணவரைக் கேட்டு நானும் எக்ஸ்ட்டாவா ஒரு ஓட்டை போட்டிட்டனே:).. இனி ஆரும் எனக்குக் காது குத்திட முடியாதூஊஊஊஊஊ:))..

    பதிலளிநீக்கு
  10. மிக அருமையான தகவல்கள் தொகுத்து வழங்கியிருக்கிறீங்க... நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  11. பதிவு கவிப்புயலுக்கு என்றாலும் எல்லோருக்கும் பயனுள்ள பதிவு.
    தொகுத்த செய்திகளும், படங்களும் அருமை.
    அதிராவிற்கு வாழ்த்துக்கள்.
    உங்களுக்கும் சிறப்பு பதிவு கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. உங்கள் கனவு நிறைவேறியதால் எங்களுக்கு அருமையான ஆன்மிகம், அறிவியல், சமூகம் சார்ந்த அருமையான பதிவு கிடைத்தது. நன்றி. நான்காம் வகுப்பு படிக்கும் வரை நான் வெள்ளரிவிதை எனப்படுகின்ற தோடுகளை அணிந்தது இன்னும் நினைவில் உள்ளது.

    பதிலளிநீக்கு
  13. தற்கால காதணிகளுள் ஒன்றான ஹியரிங் எய்ட் பற்றிச் சொல்ல வில்லையே

    பதிலளிநீக்கு
  14. துளசிதரன்: மிக மிக நல்ல பதிவு ஐயா..நல்ல விளக்கங்கள். நானும் காதைக் குடைவதில்லை, இயர் ஃபோன் பயன்படுத்துவதில்லை. ஃபோன் பயன்பாடு கூட ரொம்பக் குறைவுதான்...

    கீதா: எனக்கு மூன்றாவது காது பயன்படுத்தும் நிலைமைதான். ஆனால் எனக்கு ஏற்பட்டது பரம்பரைச் சொத்து எனச் சொல்லப்படும் ஓட்டொஸ்கெலரோஸிஸ் - மிகச் சிறிய எலும்பாகிய ஸ்டேப்பஸ் அதிராமல் இருப்பது. நான் காது குடைந்தது இல்லை, இயர் ஃபோன் பயன்படுத்தியதும் இல்லை...காதில் மெலிதான அணிகலன் மாத்திரமே.பட்டாசு வெடித்தால் காதில் பஞ்சு வைத்துக் கொண்டுவிடுவேன் சிறு வயதிலுமே...அப்புறம் அலற விடும் பாடல்கள் இருந்தால் பேசவே மாட்டேன்...சைகையால் பேசுவேன் காதில் பஞ்சுடன்..என்றுதான் இருந்தேன்.... ஆனால் என் அம்மாவின் இந்தக் குறைபாடு எனக்கும் வந்துவிட்டது என் தம்பிக்கும்...இது முதலில் ஒரு காதில்தான் வரும் அப்புறம் அடுத்த காதிற்கும் மெதுவாக வந்துவிடுமாம். முதலில் சிறிய சத்தங்கள் கேட்காமல் போகும்....மிக மிக மெதுவாகவே இ ந்தக் குறைபாடு நீட்டிக்கும். எனக்கு முதலில் கொஞ்சம் தான் இருந்தது 36 வது வயதில். அப்புறம் மிக மிக மெதுவாகக் குறைந்து இப்போது இரண்டு காதிலும் 50 - 50 என்று கேட்கும் திறன் இல்லை...எனவே மூன்றாவது காது வைத்துக் கொண்டுள்ளேன்....இதுவரை ஓடிக் கொண்டிருக்கு....இறைவன் சித்தம்..

    நல்ல பதிவு...அழகான விளக்கங்களுடன்....

    பதிலளிநீக்கு
  15. அருமையான விளக்கங்களுடன் கூடிய பயனுள்ள பதிவு ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  16. மிக அறிவுப்பூர்வமான , அருமையான விளக்கங்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..