நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜூலை 18, 2017

திருப்பாதாளீச்சரம்

ஒரு சமயம் நான்முகனுக்கு திருப்பாற்கடலில் இருந்து அமுத மயமான நான்கு மாங்கனிகள் கிடைத்தன..

அவற்றை என்ன செய்வதென்று யோசித்தார்..

முடிவில் -

நான்கு மாங்கனிகளில் இரண்டினை ஆனைமுகனுக்கும் அறுமுகனுக்கும் வழங்கி மகிழ்ந்தார்..

மீதமுள்ள இரண்டு பழங்களையும் காஞ்சி மற்றும் திருப்பாதாளீஸ்வரம் ஆகிய தலங்களில் செய்த சிவபூஜையில் சமர்ப்பித்து வணங்கினார்...


அதனால்,

திருப்பாதாளீஸ்வரம் எனும் தலத்தில் ஈசன் எம்பெருமானுக்கு மாங்கனி நிவேதனம் செய்வதனால் தீராத வல்வினைகள் எல்லாம் தீர்கின்றன என்பது ஆன்றோர் வாக்கு..

இத்தலத்தில் அம்பிகைக்கு அமிர்த நாயகி என்பது திருப்பெயர்..

இங்கே சிவபூஜை செய்வதற்கு நாட்டம் கொண்ட ஆதிசேஷன் -
தனஞ்சயன் எனும் முனிவராக தவமிருந்து வழிபட்டபோது -

அவரது தவத்திற்கு இரங்கிய எம்பெருமான் -
பாதாளத்திலிருந்து பூமியைத் துளைத்துக் கொண்டு வெளிப்பட்டார்..

அதனால் -
திருப்பாதாளீஸ்வரம் என்பது திருப்பெயர்..

ஆனாலும்,
இன்றைக்கு இத்தலம் பாமணி என்றழைக்கப்படுகின்றது..

இத்திருத்தலம் எங்கே இருக்கின்றது?..

மன்னார்குடியில் இருந்து வடக்காக 2 கி.மீ., தொலைவில்..

திருப்பாதாளீச்சுரம்
- பாமணி -


இறைவன் - ஸ்ரீ நாகநாதர், திருப்பாதாளீஸ்வரர்,
அம்பிகை - ஸ்ரீ அமிர்த நாயகி..
தீர்த்தம் - நாக தீர்த்தம்
தல விருட்சம் - மா மரம்..

சுகல முனிவர் என்பவர் இத்திருவூரில் இருந்து தவம் புரிந்த வேளையில் அவருடைய பசு - மேய்ச்சல் நிலத்தில் ஒரு புற்றினைக் கண்டது..

உள்ளுணர்வினால் புற்று சிவலிங்க வடிவமாக இருப்பதைக் கண்டு தினமும் புற்றின் மீது பால் சொரியலாயிற்று..இதன் பிறகு பசுவின் மடியில் பால் குறைவதைக் கண்ட முனிவர் பசுவின் நடவடிக்கைகளைக் கவனித்தார்..

அப்பசு மேயும் பொழுது புற்றில் பால் பொழிவதையும் கண்டார்...

எல்லாவற்றையும் கடந்த முனிவர்..
ஆனாலும் ஆய்ந்து அறியாமல் சினங்கொண்டு -
புற்றினுள் பாலைச் சொரிந்த பசுவைப் பிரம்பால் அடித்து விட்டார்..

இதனால் மிகுந்த வேதனையடைந்த பசு -
புற்றின் மேல் மோதி தனது ஆற்றாமையைக் காட்டியது...

அங்கிருந்த குளத்தில் வீழ்ந்து தன்னுயிரைத் தியாகம் செய்தது..

அவ்வேளையில் - ஈசன் எம்பெருமான் விடை வாகனராக
அந்தப் பசுவிற்குக் காட்சி நல்கி மோட்சமளித்தார்..

பசு வழங்கும் கொடையாக
என்றென்றும் எப்போதும் பால், தயிர் மோர், வெண்ணெய், நெய் - எனும் ஐந்தையும் மங்களப் பொருட்களாக தேவரும் மனிதரும் போற்றி மகிழ்வர் என வரமளித்தார்..

மேலும் - அந்தப் பசுவின் வம்சமாக
மகிஷம், நந்தா, பத்ரா, சுமனா, சுபத்ரா -
எனும் இனங்கள் பல்கிப் பெருகவும் வரமளித்தார்..


பொதுவாக சுயம்பு லிங்கங்கள் புற்றுருவானவை..
நித்ய அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை..
விசேஷ காலம் எனில் கவசம் சாத்தி திருமுழுக்கு செய்விக்கப்படும்..

ஆனால் -
இத்திருத்தலத்தில் - சிவலிங்கத் திருமேனிக்கு வழக்கமான அபிஷேகங்கள்     கவசம் சாத்தப்படாமல் நிகழ்வுறுகின்றன..

அபிஷேக வேளையில் பசு முட்டியதால் ஏற்பட்ட பிளவினை சிவலிங்கத்தின் திருமேனியில் காணலாம்...

கடந்த ஞாயிறன்று (16/7) இத்திருத்தலத்தில் தரிசனம் செய்யும் பேறு பெற்றேன்..

இதற்கு முன் பலமுறை இங்கே சென்றிருக்கின்றேன்..

ராகு கேது மற்றும் கால சர்ப்ப  தோஷ நிவிர்த்திக்கான பரிகார தலம் என்பதால் ஞாயிற்றுக் கிழமை மாலை  (4.30 - 6.00) ராகு காலத்தில் சிறப்பு அபிஷேகங்கள் நிகழ்வுறுகின்றன..

மகா மண்டபத்தினுள் தென்புறமாக அமைந்துள்ள ஆதிசேஷனுக்கு
சிறப்பு அபிஷேகங்களும் வழிபாடுகளும் நிகழ்கின்றன...

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சிலா ரூபத்தின் முன்பாக நடைபெற்ற பரிகார பூஜைகள் - தற்போது முன் மண்டபத்தில் ஆதிசேஷனின் உற்சவ பஞ்சலோக திருமேனிக்கு நடைபெறுகின்றன..

திருக்கோயிலின் எதிரில் நாக தீர்த்தம்..

ராஜகோபுரம் இல்லை..தோரண வாயிலாக விளங்குகின்றது..

திருக்கோயிலில் தென்புறமாக சிறு கோயிலில் ஸ்ரீ காளியம்மன் குடி கொண்டு அருள் பாலிக்கின்றனள்..

திருக்கோயிலின் உள்ளே நுழைந்ததும் தென்புறமாக தல விருட்சமாகிய மாமரம்..

கொடி மரம்.. விமானத்துடன் கூடிய நந்தி மண்டபம்..

வட புறம் ஸ்ரீ அமிர்த நாயகி அம்பிகையின் சந்நிதி..
தனியாக திருச்சுற்றுடன் விளங்குகின்றது..

இந்த சுற்று மண்டபத்தின் சுவர்களில் தான்
தல புராண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன..

அம்பிகையை வலம் வந்து வணங்கிய பின் திருக்கோயில் தரிசனம்..

திருமூலத்தானத்தினுள் கருணையே வடிவாக எம்பெருமான்...
வெள்ளிக்கவசம் திருமேனியை அலங்கரிக்கின்றது...

பாசப் பழிகளைக் களையும் பரமன் சூழொளி விளக்கில் ஒளிர்கின்றான்..

பார்க்கப் பார்க்க பரவசம் மேலிடுகின்றது.. உள்ளம் புத்துணர்வு பெறுகின்றது..

சந்நிதியின் வலப்புறம் சோமாஸ்கந்த திருமேனி..
இடப்புறம் - சிவகாம சுந்தரியுடன் நடராஜப் பெருமான்...

தெற்குப் புறமாக ஒரு வாசலும் இருக்கின்றது..

இந்த வாசலின் அருகில் தான் ஆதிசேஷனின் திருமேனி...
எந்த வினையானாலும் வந்த வழி ஏகிட வேண்டும்.. - என, வேண்டிக் கொள்கின்றோம்..

திரும்பவும் அதிகார நந்திவை வலம் வந்தால்  -  தெற்குப் பிரகாரம்..

திருக்கோட்டத்தில்  அழகான நர்த்தன விநாயகர்..

அடுத்து சிங்கங்கள் தாங்குகின்ற மண்டபத்தில் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி..

கன்னி மூலையில் க்ஷேத்ர விநாயகர்..

அடுத்ததாக - திருமாளிகைப் பத்தியில் -
வள்ளி தெய்வயானையுடன் ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி..

எதிரில் திருக்கோட்டத்தில் அண்ணாமலையார்..

முருகன் சந்நிதியை அடுத்து ஸ்ரீ மஹாலக்ஷ்மி சந்நிதி..
இங்கே ஸ்ரீ காளியும் ஸ்ரீ சரஸ்வதியும் ஒருங்கே உறைகின்றனர்..

திருக்கோயிலின் வாயு மூலையில் துளசி மாடம்...


வடக்குப் பிரகாரத்தின் திருக்கோட்டத்தில் ஸ்ரீ நான்முகன் ஸ்ரீ துர்கை..
ஸ்ரீ சண்டேசர் சந்நிதி..

திருமதிலின்  ஓரமாக அமிர்த கூபம் எனும் கிணறு..

ஈசான்யத்தில் மேற்கு முகமாக ஸ்ரீ பைரவ மூர்த்தி...

ஞாயிறன்று தேய்பிறை அஷ்டமி ஆனபடியால் ஸ்ரீ வயிரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றிருந்தன..

அருகில் நவக்கிரக மேடை..

அப்பர் சுந்தரர் ஞானசம்பந்தர் மாணிக்க வாசகருடன் சந்திரன்..
அந்தப் பக்கமாக சூரியன்...

மீளவும் - ஸ்ரீ நாகநாதர் தரிசனம்..
சொல்லொணாத அமைதி மனதில் ததும்புகின்றது..

மிகவும் சுத்தமாக பராமரிக்கப்படுகின்றது - திருக்கோயில்..

கடந்த ஏப்ரல் 2/ 2017 அன்று திருக்குடமுழுக்கு நடைபெற்றிருக்கின்றது..

திருஞான சம்பந்தப்பெருமான் இத்தலத்திற்கு திருப்பதிகம் அருளியுள்ளார்..

திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் தம் திருவாக்கில் வைப்புத் தலமாக விளங்குகின்றது..

திருக்கோயிலில் எடுக்கப்பட்ட படங்களுள் ஒரு சில படங்கள் மட்டுமே இன்றைய பதிவில்...

அடுத்தொரு பதிவு மேலும் சில தகவல்களுடன் தொடரும்..

திருப்பாதாளீச்சுரம் எனும் பாமணி மிகச் சிறிய கிராமம்..
கோயிலின் அருகில் தேநீர்க்கடைகள் கூடக் கிடையாது..

அர்ச்சனைப் பொருள்கள் கோயில் வளாகத்தில் கிடைக்கின்றன..

மன்னார்குடி  நகரப் பேருந்து நிலையத்திலிருந்து மணிக்கு  ஒரு முறை பேருந்துகள் இயங்குகின்றன..

விருப்பம் எனில் ஆட்டோவில் செல்லலாம்..

திருக்கோயிலிலிருந்து வெளியே வந்து பேருந்திற்காகக் காத்திருக்கும்போது
மீண்டும் இத்திருக்கோயிலுக்கு வரும் நாளை எண்ணுகின்றது - மனம்..


அங்கமும் நான்மறையும்  அருள்செய்து அழகார்ந்த அஞ்சொல்
மங்கையோர் கூறுடையான் மறையோன் உறைகோயில்
செங்கயல் நின்றுகளுஞ் செறுவில் திகழ்கின்ற சோதிப்
பங்கயம் நின்றலரும் வயல் சூழ்ந்த பாதாளே!.. (1/108)
- திருஞானசம்பந்தர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * *

19 கருத்துகள்:

 1. எத்தனை கோவில்கள் தரிசனம் பாக்கி இருக்கிறது. அதற்கொரு நல் வாய்ப்பும் வேளையும் வரவேண்டும்.

  கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் கற்பகத்திருவே என்பதுபோல் கடும் கோடையான குவைத்திலிருந்து தமிழகம் சென்ற உவ்களுக்குக் கோவில் தரிசனம் அமைகிறது.

  பாதாளீசுவர்ர் பதிவுக்கு நன்றி. தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்கள் மனம் போல பற்பல திருக்கோயில்களைத் தரிசனம் செய்யும் நல் வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. திருப்பாதாளீச்சுரம் பற்றிய சிறப்புகளை அறிந்தேன் ஐயா... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. அன்பின் ஜி
  தங்களது தல யாத்திரைகள் மேலும் தொடரட்டும் அருள் எங்களுக்கும் கிட்டட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. அறிந்து கொண்டேன். சிறப்பான கோவில்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. பாமணி சென்றேன் ஐயா ஒரு புத்தர் சிலையைத் தேடி. ஆனால் இங்கு செல்ல நேரமில்லை. தங்களின் பதிவு அங்கு என்னை செல்ல வைக்கிறது. விரைவில் செல்வேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. கிடைத்தநேரம் கோவில்களுக்குச் சென்றுவர உதவுகிறது மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   கிடைத்த நேரம் கோயிலகளுக்குச் சென்றுவர உதவுகின்றது..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. பல வருடங்களுக்கு முன்பு பார்த்த கோவில்.
  மீண்டும் உங்கள் பதிவின் மூலம் தரிசனம்.
  அருமையான படங்கள், விரிவான தகவல்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. திருப்பாதாளீஸ்வரம்....
  அருமையான கோவிலையும், தலவரலாரையும் அறிந்துக் கொண்டேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 10. திருப்பாதாளீஸ்வரம் பற்றித் தெரிந்து கொண்டோம்....மிக்க நன்றி

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..