நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூன் 12, 2017

இப்படியும் ஆகலாம்!..

-: அடுத்த வீட்டு ஆதங்கம் :- 

என்ன சாதனா!.. எதுக்குமே அடங்காத உங்க மாமியார் இப்போ பொட்டு..ன்னு அடங்கிட்டாங்களாமே!.. என்னடி மாயம் செஞ்சே?..

அதை ஏன் கேக்கிற சோதனா!.. பிளாஸ்டிக் அரிசி...ல கஞ்சி வெச்சி ஊத்துனேன்!.. ஒரே வேளை தான்!... சத்தமில்லாம அடங்கிட்டாங்க!..
* * *


-: தெரு விளம்பரம் :- 

எங்கும் கிடைப்பது காக்கா மார்க் பிளாஸ்டிக் அரிசி!..
எப்போதும் கிடைப்பது காக்கா மார்க் பிளாஸ்டிக் அரிசி!..

உன்னத சமையலுக்கு காக்கா மார்க் பிளாஸ்டிக் அரிசி!.. 
முழுக் குடும்பத்திற்கும் ஏற்றது காக்கா மார்க் பிளாஸ்டிக் அரிசி!..

இலவச டோர் டெலிவரி உண்டு.. அத்துடன்,
ஆம்புலன்ஸ் வசதியும் உண்டு...
* * *

-: அதிரடி விளம்பரம் :-

இதுவே தருணம் - மாறி விடுங்கள்... பிளாஸ்டிக் அரிசிக்கு!..
(அப்புறமாக - வீட்டிலிருந்து மருத்துவ மனைக்கு!.)
* * *

-: பக்கத்து வீட்டு கைமாற்று :-

ஒரு கிலோ பிளாஸ்டிக் அரிசி கொடுங்களேன்.. நாளைக்கு கூப்பன்..ல வாங்கித் தர்றேன்!..

அது இருக்கட்டும்.. நேத்து தெர்மகோல் ஊறுகாய் செஞ்சீங்களே.. அதில ஒரு கப் கொடுங்களேன்.. எங்க வீட்டுக்காரர் கேட்கிறார்!..
***

-: ஸ்வாமிகளிடம் கேளுங்கள் :-
தொலைபேசியில் சிறப்பு நிகழ்ச்சி (ச்சீ!..)

வழங்குபவர் - ஸ்வாமி தகிடு தத்தானந்தா.. 
உடன் வழங்குபவர் - கொஞ்சுமணி..

முதல் கேள்வி கேட்பவர் -
?.. கடைமடை கரிக்குச்சி..

பிளாஸ்டிக் அரிசியில பொங்கல் வைத்து சாமிக்கு படையல் செய்யலாமா?..

பதில் அளிப்பவர் -
!.. ஸ்வாமி தகிடு தத்தானந்தா.. 

செய்யலாம்.. செய்யலாம்.. நன்றாகச் செய்யலாம்!..
(ஏன்டா.. இதைச் செய்தாய்?.. - என்று, சாமி சண்டைக்கா வரப்போகின்றது!?..)

ஆகையால் - படையல் செய்து அனைவருக்கும் பிரசாதம் கொடுக்கலாம்...
(யாரையும் தப்பிக்க விடக்கூடாது!..)

அடுத்த கேள்வி கேட்பவர் -
?.. வறட்டேரி சுரைக்குடுக்கை..

கொஞ்சுமணி நீங்க கட்டழகு குறையாம இருக்கீங்களே!.. அது எப்படி..ங்?..

!.. திடுக்கிட்ட தகிடு தத்தானந்தாவிடமிருந்து பெரிதாக கூச்சல்....

ஏய்.. யார்...றா நீ!.. ஆன்மீக நேரத்தில உன்னை எவன்...டா உள்ளே விட்டது?..
யார்...கிட்ட வந்து எந்த மாதிரி.. கேள்வி... டா நீ கேட்கறே?.. 

சரிங்க... சாமீ!... பொங்க வைக்க நல்ல நேரம் சொல்லுங்களேங்?..

!.. தகிடு தத்தானந்த ஸ்வாமி.. (மனதுக்குள் கடுப்படித்தபடி -)
நீ பொங்க வெச்சதெல்லாம் போதும்.. முதல்...ல போனை கீழே வை!..


அலைவரிசை தெளிவாக இல்லை!.. - என்று சொல்லி,
அத்துடன் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது..
* * *


-: சமையலறை :-
தண்ணீரைக் கொதிக்க வைப்பதில் இருந்து 
தலைமுடியில் சிக்கெடுப்பது வரை!..
தமிழச்சிகளுக்கான வார இதழ்...

இந்த வார ஸ்பெஷல் இணைப்பு..

பிரிய மனமில்லாத பிளாஸ்டிக் அரிசி..
முப்பது நாட்களுக்கும் முத்தான ரெசிபிகள்!...

வாசகியரின் கை வண்ணம்..
வாசனை கூட்டும் சுவை வண்ணம்!..

உங்கள் பிரதிக்கு உடனே முந்துங்கள்!..
* * *

-: முக்கிய கோரிக்கை :-

வெயில் மழை இவற்றால் பாதிக்கப்படாது..
பூச்சி பூஞ்சாணங்களால் சேதமடையாது..
தண்ணீரும் அதிகமாகத் தேவைப்படாது..

ஆகையால் -
பிளாஸ்டிக் அரிசி பயிரிட விரும்புவோர்க்கு 
சலுகை விலையில் ரசாயன உரங்கள் வழங்க வேண்டும்!..
* * * 


இந்த வாரம் எப்படி!?..
(உங்களுக்கா?.. எங்களுக்கா!..)


-: சங்கு சத்தம் :- 
ஆன்மீக (!) நாளிதழ் வழங்கும் 
ராசி பலன்

கணித்தவர்
சாமக் கோடாங்கி

குறிப்பாக பிளாஸ்டிக் அரிசியில் பொங்கல் வைத்து வழிபடுவதால்
பன்னிரண்டு ராசி அன்பர்களுக்குமான இந்த வார சுபயோக சுபபலன்கள்..

கன்னிப்பெண்களுக்கு - 
பிளாஸ்டிக் அரிசியை வறுத்து இடித்து சர்க்கரை கலந்து பொடித்து
வெள்ளைக் காக்காய்க்கு விருந்து வைக்கவும்..
சீக்கிரம் கல்யாண ஏற்பாடுகள் நடக்கும்...
(எதற்கும் உஷாராக இருப்பது நல்லது!)...

இல்லத்தரசிகளுக்கு - 
மாமியார் மாமனார் உள்ள வீடுகளில் இனி பிரச்னை இருக்காது..
அவர்களாகவே முதியோர் இல்லங்களுக்கு ஓடி (!) விடுவதற்கான
வாய்ப்புகள் நிறையவே தெரிகின்றன...

விரைவில் பலன் கிடைக்கவேண்டும் என்றால் -
கடுகைத் துளைத்து எடுத்து அதற்குள் கழுதைப் பால் நெய் விட்டு விளக்கேற்றவும்..
பிளாஸ்டிக் ரைஸ்ஸாய நமஹ!.. - என்ற மந்திரத்தையும் தவறாமல் சொல்லவும்...

உத்தியோகஸ்தர்களுக்கு -
விரும்பிய நாற்காலி விரைவில் கிடைக்கும்..
குறிப்பாக மேசைக்குக் கீழ் வருமானம் அதிகரிக்கும்..
உள்ளங்கை மேட்டிலிருந்து ஏழரையான் பார்ப்பதால்
காப்புக்கும் காவலுக்கும் வாய்ப்புகள் உள்ளன..

காக்காயைப் பிடித்து அதன் காலில் கொலுசு மாட்டி விட்டு,
ஏழரைக்கான பரிகார பூஜை அவசியம் செய்யவும்..

வியாபாரிகளுக்கு - 
சிறப்பாக - அரிசி மற்றும் மருந்து விற்பவர்களுக்கு
வளமான எதிர்காலம்.. பிரகாசமாகத் தெரிகின்றது...
மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்...
அதனால் பாதகம் ஏதும் இல்லை...
உங்களுக்கும் அவர்களுக்கும் -
ஒரு சில நாட்களில் பழகிப் போகும்..

அப்புறம் உங்கள் காட்டில் மழை தான்..
எதற்கும் குடை வாங்கி வைத்துக் கொள்ளவும்!..

திரைக் கலைஞர்களுக்கு - 
வாந்தியும் வயிற்றுக் கடுப்பும் - என்பது போன்ற,
புரட்சிகரமான தலைப்புகளில் படம் எடுப்பவர்களுக்கு நல்ல யோகம்..

கதாநாயகனுக்கு கஞ்சிக்கு வழியில்லை.. முகத்தில் நாள்பட்ட தாடி.. ஆனாலும், ரேமாண்ட் கோட் மற்றும் நிக் ஷூ அணிந்து கொண்டு
நடுத்தெருவில் அலைகின்றான்.. அப்போது,

கோடீஸ்வரனின் மகளாகிய கதாநாயகி பிளாஸ்டிக் பிரியாணியை
பால்கனியில் நின்று கொண்டு, பக்..பக்.. - எனத் தின்கின்றாள்..
வறட்டு பிரியாணி ஆனதால், விக்.. விக்.. - என, விக்கிக் கொள்கிறது...

இந்த சத்தம் கேட்டதும் நாலு தெருவுக்கு அப்பால் நிற்கும் கதாநாயகன் மெட்ரோ ரயில் பாலத்தைத் தாண்டிக் கொண்டு வந்து குதிக்கின்றான்..

அவளுடைய கஷ்டத்தைக் கண்டு அவனுக்குக் கண்ணீர் வருகின்றது..
கண்ணீரை (!?) ஒரு குவளையில் பிடித்து அவளுக்குத் தருகின்றான்..

அதைக் குடித்ததும் - அவளுக்கு அவன் மீது காதல் வருகின்றது..
இதைக் கண்டு அவளுடைய அப்பனுக்கு கோபம் வருகின்றது...

ஆனாலும், அடுத்த காட்சியில் -
அண்டார்டிகா புல்வெளியில் (!?) ரோல்ஸ்ராய் கார் வருகின்றது..
அத்துடன், காது கிழியும்படிக்கு டூயட் பாட்டு ஒன்றும் வருகின்றது...

இப்படியான கதையமைப்பு இருந்தால் -  அப்பனின் உழைப்பு மகன் வழியாக உங்கள் கல்லாப்பெட்டியை நிறைக்கும்.. வெற்றி நிச்சயம்... சர்வ நிச்சயம்!..

விவசாயிகளுக்கு - 
கஷ்ட காலம் தான்... எப்போது விடியும்?... யாருக்கும் தெரியாது...
சுப கிரகங்கள் எல்லாம் ஊரை விட்டு ஓடிப் போய்விட்டபடியால் -
தற்போது ஒன்றும் சொல்வதற்கு இல்லை...

மாணவர்களுக்கு - 
அவ்வப்போது வயிற்றுப் போக்கு ஏற்படும்.. அதனால்,
பள்ளிக்கூட தொந்தரவில் இருந்து தற்காலிக விடுதலை கிடைக்கும்...
கூடவே - வாளியில் 15 லிட்டர் தண்ணீர் (கிடைத்தால்) கொண்டு செல்வது உத்தமம்..

வயோதிக அன்பர்களுக்கு -
இப்படியும் ஆகிப் போனதே... ராமா!.. - என்று,
கவலைப்படாமல் மூல மந்திர ஜபம் செய்து கொண்டிருக்கவும்..
செலவுக்கு பணத்தை தலைமாட்டில் வைத்திருப்பது நல்லது...

அனைவருக்குமான பொதுப் பலன்...
வண்டி வாகன வாய்ப்பு உண்டாகலாம்..
(ஆம்புலன்ஸ் அல்லது வேறு எதுவாகவும் இருக்கலாம்!..)

அனைவருக்குமான பரிகாரம்..
ஒன்றும் புரியவில்லை..
* * *

திடீரென வானிலிருந்து அசரீரி..
ஆடுகளுக்காக ஓநாய்கள் அழுவதுண்டோ!..


நன்மை விரும்புவோர் 
உண்மையான உழவர்களை ஆதரிப்பது நல்லது..

நீடித்த நலன் வேண்டுவோர் ஐந்து ஏக்கர் நிலம் வாங்கி
சொந்தமாக விவசாயம் மேற்கொள்வது நல்லது.. 
* * *


அலறியடித்துக் கொண்டு விழித்தால்
உடலெங்கும் வியர்த்திருந்தது..

சில நாட்களாக - 
பிளாஸ்டிக் அரிசி, இரசாயனப் பால்
இவற்றின் மகத்துவம் ஊடகங்களில்!..

மன உளைச்சல்.. 
என்ன செய்யலாம்?.. 
- என்றிருந்த வேளையில் தான்
இப்படியும் ஆகலாம்!.. - என்ற பதிவு..

இவற்றுக்கிடையே வாழ்ந்திட வேண்டும்..
வஞ்சகர் கொடுமை குலைந்திட வேண்டும்!.

வா.. வா.. தோழா.. வயல்வெளிக்கு!..
வாழ்வை அளிப்போம் தலைமுறைக்கு!..
* * *

11 கருத்துகள்:

  1. கணினியில் வருகிறேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி
      பதிவை பலமுறை படித்து இரசித்து சிரித்துக்கொண்டு இருக்கிறேன்.

      தொடக்கம் முதல் இறுதிவரை சிரிப்பு
      இதனைக்குறித்து நானும் எழுதவேண்டும் என்று நினைத்த பல விடயங்கள் தங்களது பாணியில் அருமை.

      இப்படி ரசிக்கும்படியும் தொடர்ந்து எழுதுங்கள் ஜி
      திறமைகளை பூட்டி வைத்து பயன் என்ன ? தொடர்ந்து வரட்டும்
      வாழ்க நலம்

      நீக்கு
  2. அதுக்குதான் நமக்கு நாமே திட்டம் போல் அரை ஏக்கர் நிலம் ஒரு இலட்சமாம் வாங்கி நாமே இயற்கை விவசாயம் செய்து பண்ணையார் ஆகலாம் வாருங்கள் என்று நிறைய விளம்பரம் வர ஆரம்பித்து விட்டது.

    யாரை ந்ம்புவது இந்தக் காலத்தில் என்று இருக்கிறது.
    நல்ல நகைச்சுவையுடன் பகிர்வு அற்புதம்.

    பதிலளிநீக்கு
  3. விவசாய்ம் செய்ய குறைந்த செலவில் மின்சாரம் பெற்று தருகிறோம், அனுபவ்மிக்க ஆட்களை நியமித்து தருகிறோம். நீங்களும் பண்ணையார் ஆகலாம் திட்டத்தில் சேர்ந்து பலன் அடையுங்கள் என்று விளம்பரம் வருகிறது.

    பதிலளிநீக்கு
  4. நகைச்சுவையாக இருந்தாலும் மனதில் வருத்தம் தான் மேலிடுகிறது...

    பதிலளிநீக்கு
  5. அருமையான தகவல் நண்பரே

    பதிலளிநீக்கு
  6. இப்படியும் அரிசி வந்து விட்டதா என்னும் சந்தேகம் எழுந்தது ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  7. பிளாஸ்டிக் அரிசி ஸ்பெஷல் பதிவு! சுவையாகத்தான் இருக்கிறது. இது சம்பந்தமாக நான் படித்த ஜோக் ஒன்றைச் சொல்கிறேன். "பிளாஸ்டிக் அரிசி கொண்டுவந்தது போல பிளாஸ்டிக் ரவாவும் கொண்டு வாங்கப்பா...- இப்படிக்கு ரவா உப்புமாவால் அவதிப்படுவோர் சங்கம்"

    ஆனால் பிளாஸ்டிக் அரிசி என்பது யாரோ கிளப்பி விட்ட புரளி என்பதாகத்தான் அறிகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹ் ஆம் ஸ்ரீராம் நானும் இதனை வாட்சப்பில் வாசித்தேன்..

      கீதா

      நீக்கு
  8. தாங்கள் கனவில் கண்டுள்ள கற்பனையை நினைத்தாலே உடலெல்லாம் நடுங்குகிறது. இன்னும் என்னென்ன கொடுமைகளை நாம் சந்திக்க வேண்டியிருக்குமோ. நினைத்தாலே மனதுக்குக் கஷ்டமாகத்தான் உள்ளது.

    நன்றாக யோசித்து நிறைய நகைச்சுவை கலந்து சொல்லியுள்ளீர்கள்.

    இதுபோலெல்லாம் உண்மையில் நடக்காமல் விழிப்புணர்வு கொள்வோம்.

    பதிலளிநீக்கு
  9. ஹஹஹ்ஹ ஐயா சிரித்து முடிலை...நல்ல கற்பனை!!! ஆனால் யதார்த்தம் வேதனையானது இல்லையா...மனம் பல சமயங்களில் சஞ்சலப்படுகிறது. வழக்கமாக வாங்கும் அரிசிக் கடையில் கூட....இதில் ப்ளாஸ்டிக் அரிசி கலந்திருக்காதே என்று பல முறை கேட்டு அவரை எரிச்சல் பட வைத்துத்தான் வாங்குவதாக இருக்கிறது....என்ன செய்ய...

    துளசி, கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..