நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூன் 28, 2017

முதல்வர் வாழ்க!..

என்னை மன்னித்தருள வேண்டுகின்றேன்.. ஐயனே!..

கடலாடும் கொற்கையின் முத்துக்களாலும்
கவிபாடும் ஈழத்தின் மாணிக்கங்களாலும்
அலங்கரிக்கப்பட்ட மணிமுடி இதோ!..

செல்வமலி தென்னாட்டை செம்மையுடன்
நடாத்திய செங்கோல் - இதோ தங்களது திருவடிகளில்!..

ஆயினும் -

கொண்டல்களைக் குலவி வந்த
குளிர் நிலவின் தண்நிழலாய் வெண்கொற்றக் குடை!..
பகை வென்று புகழ் கொண்டு
பனிமலை தொட்டு வந்த நல்லோர் வீற்றிருந்த கொற்றத் தவிசு!..

இவையிரண்டும் -
அரங்கேறித் தமிழ் விளையாட
காற்றேறி மீன் விளையாடும்
கூடல் மாநகரின் மாபெரும் அரண்மனையில்!..

அனைத்தையும் ஏற்றுக் கொண்டு
இம்மாநிலத்தைத் தாங்கள் அரசாட்சி செய்திட வேண்டுகின்றேன்..

பெரியீர் தங்களுக்கு இச்சிறியேன் இழைத்த
அநீதிகளைப் பொறுத்தருளல் வேண்டும்!..

இனி இந்நாடு தங்களுடைமை..
நான் தங்களது பணியேற்கும் ஏவலன்..
தங்கள் ஆசிகளை வேண்டி நிற்கும் இரவலன்!..

கை கட்டி வாய் பொத்தி நின்றான் அரிமர்த்தன பாண்டியன்...

அவன் பின்னே - அவனது அரசு அலுவலர்களும் மற்றவர்களும்...

சற்று முன்னர் - சீறிச் சினந்து பொங்கிப் பெருகிப் பாய்ந்து கொண்டிருந்த வைகை நளினத்திலும் நளினமாக நெளிந்து கொண்டிருந்தது..



இதுவரை நடந்ததெல்லாம் கனவா!.. நினைவா?..
- எனத் திகைத்து நின்றிருந்தனர் பாண்டி நாட்டின் மக்கள்...

இன்று காலை வரை பிட்டு விற்றுக் கொண்டிருந்த 
பெருமாட்டி வந்தி - பெரும் புண்ணியத்திற்கு உரியவள்!.. -
என்பதை அறியாமற் போனோமே!..

எதன் பொருட்டு இத்தனை நாடகமும்!?..

எடுத்து ஆடும் திருவடியின் பேரழகை
வைகை மாநதியும் கண்டு மகிழட்டும் என்பதற்காகவோ!..

பாகம் பிரியாளின் பாகம் பிரிந்து வந்தது -
வந்தியம்மையின் கையால் வாங்கி 
உதிர்ந்த பிட்டு உண்பதற்காகவோ!...


எந்தை சொக்கநாதன் தலையில் சும்மாடு கட்டி வந்தது -
வந்தியம்மைக்கு வாழ்வளிப்பதற்காகவோ!...

கையில் கூடையுடன் மண் கொட்டும் தாங்கி, 
கூலியோ.. கூலி!.. - என்று கூவி வந்தது
வந்தியின் பிறவிக் கடன் தீர்ப்பதற்காகவோ!..

நாம் இவற்றையெல்லாம் அறியாதிருந்து விட்டோமே!..

மாமதுரையின் மக்கள் வருந்தினார்கள்...

பின்னும் இந்தத் திருவிளையாடல் எல்லாம் -

மக்களின் வரிப்பணம் கொண்டு குதிரைகளை வாங்குவது
கொடும் போர் நடாத்தி அப்பாவி மக்களை அழித்தொழிப்பதற்கா?..
இனியும் வேண்டாம்.. இந்தக் கொடுமை!..
இதிலிருந்து மாநிலத்தைக் காப்பது நமது கடமை!..

- என்று முனைந்து,

அருட்கோயில் எனும் அறக்கோயிலை அமைத்த
மாண்புமிகு முதல்வர் திருவாதவூரரைக் காப்பதற்காக அன்றோ!..

குதிரை வாங்குவதற்காகக் கொண்டு சென்ற 
பொருளைக் கொண்டு கோயில் ஒன்றைக் கட்டினார்!..

உண்மைதான்!..

ஆனாலும் - ஆய்ந்தறியாத மன்னன் அரிமர்த்தனன்
அடுத்துக் கடுத்திருந்தோர் தம் சொல்லுக்குச் செவி கொடுத்தனன்...

மனம் இலாதார் சொல்லிய சொல் கேட்டதனால் 
திருவாதவூரரை சுடுமணற் பரப்பில் நிறுத்திக் கடுமையாக ஒறுத்தனன்..

அவனையும் மீட்டு அவன் பிழைதனையும் பொறுத்து 
அறவழியில் சேர்ப்பதற்காக அன்றோ -
குதிரையாளாக ஐயன் வந்ததும் 
கூலியாளாக மண் சுமந்ததும்!..

மதுரையின் மக்கள் மனம் திருந்தினார்கள்!..

இத்தனை நடந்தும் -

சித்தம் எல்லாம் சிவமயமே!..

- என்றிருந்த, திருவாதவூரர் முன்பாக அரிமர்த்தனன் பணிந்து நின்றான்..

தாங்கள் முன்போலவே தங்களது புவியெலாம் காவல் பூண்டு 
குற்றம் துடைத்து ஆள்வது ஆக வேண்டும்!..

- என்று,  இரந்து நின்றான்..

ஐயனே!.. நாட்டின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டு
எம்மைச் சீரிய வழிதனில் நடாத்த வேண்டும்!..

- என்று மக்களும் பெருங்குரலெடுத்துக் கூவினார்கள்..

அதுவரையில் அமைதியாக இருந்த திருவாதவூரர் - திருவாய் மலர்ந்தார்..

அரிமர்த்தன பாண்டியனே!.. எமது நோக்கம் அதுவன்று!..

அங்கும் இங்கும் புரள்கின்ற அலைகளைக் கொண்ட ஆழி சூழ்ந்த உலகம் அனைத்தையும் ஆட்சி கொண்டு ஆயிரங்கண் கொண்ட இந்திரனைப் போல வீற்றிருப்பீராக..

நாயகனாகிய சோமசுந்தரப் பெருமான் அருளியபடியே நயந்து நின்று நல்லாட்சி செய்வீராக!..

நான் உம்மை அடைந்த தன்மையால் உலக நடை, வேத ஒழுக்கம் ஆகிய இரண்டும் நன்கு தெளியப் பெற்றது.. அங்ஙனம் தெளியப் பெற்றதால் மனத் தூய்மை உண்டாகியது.. அதனால் சிவபெருமானிடத்து அன்பு விளைந்தது..

மந்தரம், கயிலை, மேரு, பருப்பதம், வாரணாசி எனும் திருத்தலங்களில் எழுந்தருளியிருக்கும் ஞானத் திருவாகிய இறைவன் -

எம்மைப் போன்றோரின் மனம் புறத்தே செல்லாமல் திருத்தி அதில் வீற்றிருக்கின்றான்..

அவனே - தனது அருள்வெளியாகிய பொன்னம்பலம் என்னும் தில்லைத் திருத்தலத்திற்குப் போகும்படிக்குப் பணித்தான்..

தாமும் அதற்கு உடன்படக் கடவீராக!..

- என்று, இனிமையுடன் உரைத்தார்.. 

அதைக் கேட்ட மன்னனும் மக்களும் மனம் நெகிழ்ந்தனர்..

கண்ணீர்ப் பெருக்குடன் - 
திருவாதவூரராகிய மாணிக்கவாசகப் பெருமானுக்கு விடை கொடுத்தனர்...

அந்த அளவில் விடை பெற்றுக் கொண்ட மாணிக்கவாசகர் வடதிசை நோக்கித் தனது திருப்பயணத்தைத் தொடர்ந்தார்..

மாண்புமிகு முதல்வர் வாழ்க!..
திருவாதவூரர் திருத்தாள் வாழ்க!..
மாணிக்கவாசகப் பெருந்தகை வாழ்க.. வாழ்க!..

- எனும் முழக்கத்தால் விண்ணும் மண்ணும் அதிர்ந்தன...

சிராப்பள்ளி, ஐயாறு, ஆரூர், அண்ணாமலை முதலான
திருத்தலங்களைத் தரிசித்த வண்ணம் 
தில்லை மூதூரை வந்தடைந்தார் - மாணிக்க வாசகர்...

ஆங்கே பற்பல அற்புதங்கள் அவரால் நிகழ்ந்தது..

ஈசன் எம்பெருமானே அவரை ஆட்கொள்ள வந்து
திருக்கோவையார் பாடும்படிக்கு அருளினன்...

மாணிக்கவாசகரை - நாடி வந்த தில்லை வாழ் அந்தணர் 
திருக்கோவையாரின் பொருளை வேண்டி நின்றனர்...

அது கேட்ட மாணிக்கவாசகர் புன்னகைத்தார்...

மெல்ல எழுந்து - பொன்னம்பலத்தினை நோக்கி நடந்தார்..

அம்பலத்தரசன்!.. அவனே இதற்குப் பொருள்!.. 

- என்றவாறு ஆனந்த நடமிடும் ஐயனுடன் ஜோதியாகக் கலந்தார்..

மாசறு மணிபோற் பன்னாள் வாசகமாலை சாத்திப்
பூசனை செய்து பன்னாட் புண்ணிய மன்றுள் ஆடும்
ஈசனது அடிக்கீழ் எய்தி ஈறிலா அறிவா னந்தத்
தேசொடு கலந்து நின்றார் சிவனருள் விளக்க வந்தார்..
-: திருவிளையாடற்புராணம் :-



மாணிக்கவாசகப் பெருமான் அண்டப் பெருவெளியை விவரிக்கின்றார்..
கருப்பையினுள் உயிர்க்கும் உயிரணுவின் வளர்ச்சியை உரைக்கின்றார்..

புல் முதற்கொண்டு தேவர் வரையிலான பிறவிகளைத் தொகுக்கின்றார்...
மானுடர் வாழ்வாங்கு வாழ்வதற்கான வாழ்வியல் நெறியை வகுக்கின்றார்..

மாணிக்கவாசகர் தம் திருவாக்கு
திருவாசகம் என்று போற்றப்படுகின்றது..

பன்னிரு திருமுறைகளுள்
எட்டாவதாக இலங்குகின்றது..

திருவாசகத்திற்கு உருகாதார் 
ஒருவாசகத்திற்கும் உருகார்!.. 
- என்பது ஆன்றோர் வாக்கு


இன்று ஆனி மகம்.. 
மாணிக்கவாசகப் பெருமான் 
இறைவனுடன் கலந்த நாள்..

தென்னாடுடைய சிவனே போற்றி..
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!..

எனும் இத்திருமுழக்கம்
ஆலயங்கள் தோறும் முழங்கப்படுவது ..
இதனைத் தந்தவர் மாணிக்கவாசகப் பெருமான்..

மாணிக்கவாசகப் பெருமான் - ஆவுடையார்கோயில்
பெருமான் அருளிய வழிநின்று வையகம் சிறக்கட்டும்!..

பெரும்பகையும் அழியட்டும்.. பேரழிவும் ஒழியட்டும்!..
ஊர் கொண்ட நாடெல்லாம் சீர் கொண்டு பொலியட்டும்!..

மன்னவனும் திருந்தட்டும்..
மாநலமும் பெருகட்டும்!..
மன்னுயிரும் தழைக்கட்டும்..
மாநிலமும் செழிக்கட்டும்!...

மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்!.. 
*** 

10 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    மாணிக்கவாசகர் பக்திமாலை மழைபோல் பொழியத் தந்தீர்கள் நன்றி

    பதிலளிநீக்கு
  2. பெருமான் அருளிய வழி நின்று வையகம் சிறக்கட்டும்.!
    மாணிக்க வாசகர் திருவடி போற்றி போற்றி!

    அருமையான பதிவு. படங்கள் அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. அருமை ஐயா... தலைப்பைப் பார்த்து என்னமோ நினைத்தேன்...

    பதிலளிநீக்கு
  4. சில மாதங்களுக்கு முன் திருவாதவூர் சென்றுவந்தேன். உங்கள் பதிவைப் படித்ததும் அந்த நினைவு வந்தது.

    பதிலளிநீக்கு
  5. அழகு தமிழை ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  6. அதானே பார்த்தேன் ,எங்கே ரூட் மாறிட்டீங்களோன்னு:

    பதிலளிநீக்கு
  7. பதிவினைப் படிக்கும்போது, திரை அருட்செல்வர் A.P.நாகராஜன் அவர்களே வலைப்பக்கம் வந்து விட்டது போன்ற உணர்வு. ஆவுடையார் கோயில் படம் நினைவில் நின்றது. ”தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி”

    பதிலளிநீக்கு
  8. அருமை!!! தலைப்பை உங்களுக்கே உரிய விதத்தில் அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்...

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..