நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மார்ச் 08, 2017

சின்னாத்தா..

பெண் புலியாக உறுமிக் கொண்டிருந்தாள் - அவள்..

எதிரில் அவளுடைய புருஷன்.. கைகள் கட்டப்பட்ட நிலையில்!..

கள்ளச் சாராயம் காய்ச்சி விற்றதற்காகப் பிடிபட்டவன்..

எங்க அப்பனும் ஆத்தாளும் இந்த ஆளை நல்லவன்..ன்னு நம்புனாங்க.. நானும் மனசார வாக்கப்பட்டேன்!.. ஏழு மாசமாச்சு நானும் ஒரு ஜீவனை வயித்தில சுமந்து.. அந்த சிசு நல்லா இருக்கணும்.. ஊர்ப்பாவம் எனக்கு வேண்டாம்.. இந்த ஆளை இழுத்துக்கிட்டு போயி ஜெயில்ல போடுங்க.. மனசு திருந்தி வந்தா வரட்டும்.. இல்லேன்னா?...

நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறினாள்..

கூடியிருந்த ஊர் மக்கள் பரிதாபப்பட்டனர்...

அங்கிருந்த பெண்களுள் ஒரு சிலர் ஓடி வந்து அவளுடைய கைகளைப் பற்றிக் கொண்டார்கள்..

வாயும் வயிறுமா இருக்கறவ.. இந்த மாதிரியெல்லாம் செய்யக்கூடாது...

ஐயா!.. இனி என்ன செய்யலாம்..ன்னு நீங்க தான் சொல்லவேணும்!..

இந்த ஒருதடவை பார்க்கலாம்!..

அந்த ஊரின் பெரிய தனக்காரர் மீசையை முறுக்கிக் கொண்டார்..

சரிங்க.. ஐயா!.. அப்படியே ஆகட்டும்!.. டேய்.. இனியாவது ஒழுங்கா இருக்கப் பாரு!..

அவனுடைய கைகளை அவிழ்த்து விட்டுப் போனார்கள்...

என்னைய மன்னிச்சிடுங்க ஐயா!..

சரி.. சரி.. இன்னையில இருந்து வடகரை தென்னந்தோப்புக்கு நீதான் காவல்.. மட்டை பாளை எல்லாம் உனக்குத் தான்.. கன்னல் விழக்கூடாது.. நூத்துக்கு பத்து காய் உன் கணக்கு!..

ஐயா!.. - விக்கித்து நின்றான்..

சாமீ!.. - ஓடி வந்து காலில் விழுந்தாள் அவனுடைய மனைவி...


தாளுண்ட நீரைத்
தலையாலே தரும் தென்னை
நூத்துக்குப் பத்து காய் என்றால் -
அந்தத் தென்னந்தோப்பில் இருநூறு மரங்களுக்கு மேல்!..

வருடத்துக்கு நான்கு வெட்டு..

நான்கு பக்கங்களிலும் குலை தள்ளி நிற்க -
மரத்துக்கு மரம் சராசரியாக எண்பது தேங்காய்கள்!..

அப்படியானால் இருநூறு மரங்களுக்கு?.. அடேங்கப்பா!...

சுந்தரம்!..

ஐயா!.. - காரியக்காரர் ஓடி வந்து நின்றார்..

தோப்புல இவங்களுக்கு நல்லதா வீடு கட்டிக் கொடுங்க!..

ஆகட்டுங்க!..


***

இதெல்லாம் நடந்தது அறுபது வருடங்களுக்கு முன்னால்!..

அக்கா தமிழ்ச்செல்வி அழகாக விவரிக்க -

அப்புறம் என்னக்கா.. நடந்தது!?.. - தாமரை ஆவலுடன் கேட்டாள்..

அவங்க ரெண்டு பேரும் நல்லபடியா தென்னந்தோப்பைப் பார்த்துக்கிட்டாங்க.. அவங்களுக்கு அழகான பெண்குழந்தை பிறந்தது...

அவங்க.. அவங்க.. ந்னு சொல்றீங்களே!.. பேரெல்லாம் இல்லையா?..

அந்த குழந்தைக்குப் பெயர் காவேரி.. காவேரியோட அப்பா பழனிவேலு.. அம்மா..

அம்மா பேரு!..

சின்னாத்தா!..

என்னக்கா.. சொந்தக்காரங்களைக் கூப்பிடற மாதிரி இருக்கு?...

சொந்தம் தான்!.. எங்களுக்குச் சொந்தம் தான்!..

என்னக்கா?.. வீட்டில வேலை செய்ய வந்தவங்க..ன்னு சொன்னீங்க!..

ஆமாம்.. தாமரை!.. எங்க தாத்தா சொன்னதால வீட்டுக்கு வேலை செய்ய வந்தவங்க தான்!.. அதுக்கப்புறம் அவங்க எங்களோடயே ஒன்றாகிட்டாங்க!..

அப்ப அவங்களோட பேரு?..



தெரியாது.. எங்க தாத்தா - அவங்களை சின்னாத்தா..ன்னு கூப்பிட்டாங்களாம்.. அதுவே வழக்கமாகிப் போச்சு!.. எல்லாருக்கும் சின்னாத்தா.. தான்!..

ஆச்சர்யமா இருக்கே!..

விடியறதுக்கு முன்னால தொழுவத்தில சாணி அள்ளிட்டு பால் கறக்கிறது அவங்கதான்.. விடிஞ்சதும் கோழிக் கூட்டைத் திறந்து விட்டு கூட்டிப் பெருக்குறது அவங்கதான்.. கேணியில தண்ணி இழுத்து தொட்டியை நிரப்புறது அவங்க தான்!.. கொல்லையில அவரைக்காய் பீர்க்கங்காய்.. ன்னு பறிச்சிக்கிட்டு வந்து சமையல் கட்டுல முன்னுக்கு நிக்கிறதும் அவங்க தான்!..

ஏ.. அம்மாடி!..

எங்க ஆத்தா.. எவ்வளவு சொன்னாலும் இவங்க கேக்க மாட்டாங்களாம்... வீட்ல ரெண்டு மூனு வேலைக்காரங்க இருந்தாலும் எல்லா வேலையையும் உரிமையோட செய்வாங்களாம்!..

காவேரிக்கு எந்த உரிமையில அஞ்சு பவுன் சங்கிலி போட்டீங்க.. அந்த உரிமை எனக்கும் இருக்கு.. இந்த வீட்டுல எல்லா வேலையையும் நாந்தான் செய்வேன்.. என்னை யாரும் தடுக்கக்கூடாது!.. - ன்னு சொல்லிட்டாங்களாம்!...

எங்க அப்பா... அம்மா கல்யாணம் முடிஞ்சு மாலையும் கழுத்துமா நின்னப்போ ஆரத்தி எடுத்தவங்க இவங்க தானாம்!..

மகாகவி பாடின மாதிரி - இங்கு இவளை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்!.. - அப்படின்னு.. தாத்தா பாடுவாராம்!..

காவேரிக்கு கல்யாணம் செய்யணும்..ன்னு மயிலாடுதுறையில இருந்து மாப்பிள்ளை கொண்டாந்து -

பத்து பவுன் போட்டு சீர் வரிசையோட அனுப்பி வெச்சிருக்காங்க தாத்தா!..

அதோட இல்லாம அந்தத் தென்னந்தோப்புல அஞ்சு ஏக்கர் காவேரி பேர்.. ல எழுதிக் கொடுத்திருக்காங்க!..

தாத்தா காலமானப்போ - சின்னாத்தா அழுத அழுகையில மூனு நாள் காய்ச்சலா கிடந்துருக்காங்க!..

அந்தக் காலத்தில வீட்டில தானே பிரசவம் எல்லாம்!.. நான் பொறந்தப்ப என்னை பட்டுச் சேலைல தாங்கினவங்க இவங்க தானாம்!...

அக்காவின் கன்னங்களில் கண்ணீர்...

தோளினைத் தொட்டு ஆறுதல் படுத்தினாள் - தாமரை..

என்னக்கா.. சின்னப் புள்ளையாட்டம்!..

அது மட்டுமா.. எனக்குத் தலைக்கு ஊத்தி விட்டு மருந்து உரசிக் கொடுத்து சாம்பிராணிப் புகை போட்டு தூங்க வைக்கிறது எல்லாமே அவங்க தான்!..


வீட்டில யாரும் சளி ஜூரம்..ன்னு சொல்லிடக்கூடாது.. 
அங்கே இங்கே ஓடி பச்சிலைகளைக் கொண்டு வந்து கஷாயம் தான்...

தலை குளிக்க செம்பருத்திச் சாந்து.. 
மேலுக்குக் குளிக்க கஸ்தூரி மஞ்சள்.. பயத்தமாவு... 
முகத்துக்கு பூசிக்க மஞ்சக்கிழங்கு ... 

தலைக்கு பொன்னாங்கண்ணித் தைலம் தடவி 
தளரத் தளர சடை போட்டு தாழம்பூ மடலை வெச்சி - 

நெத்திக்குச் சாந்தும் கண்ணுக்கு மையும் எழுதி விட்டாங்கன்னா -

தேவதையாட்டம் இருப்பேன்!.....

நாளுங்கிழமையும்...ன்னா மருதாணி வச்சி விடுவாங்க... பக்கத்துல உட்கார்ந்து சோறு ஊட்டி விடுவாங்க.. விடியற்காலை..ல எழுப்பி விட்டு கையைப் பாரு.. ராசாத்தி..ன்னு சிரிப்பாங்க..
அப்படியே மருதாணி வாசத்தோட ரத்தினச் சிவப்பா இருக்கும் விரல் எல்லாம்!.. 

தாமரை.. எனக்கு இன்னொரு தாய் தான் - சின்னாத்தா!...

எங்க வீட்டுல... அவங்களோட கால் படாத இடம்.. ன்னா - முன் வாசல் திண்ணை தான்!..

ஏங்..க்கா!..

அந்தத் திண்ணையில இருந்து தான் தாத்தா ஊர்ப் பஞ்சாயத்து எல்லாம் சொல்லுவாங்களாம்.. அவங்க புருசனை தண்டிக்க வேணாம்..ன்னு தீர்ப்பு சொன்னதும் அந்தத் திண்ணையில இருந்து தானாம்!..

ஆகா!..

எனக்கு இது தான் கோயிலு.. ந்னு சொல்லுவாங்க... அப்பேர்ப்பட்ட மகராசி!..

இதெல்லாம் எந்த வகையான நன்றிக்கடன் அக்கா!..



நான் பெரியவளானப்போ - பூச்சேலை பார்த்தவங்க சின்னாத்தா தான்!..

ஏழாம் நாள் தலைக்கு தண்ணி ஊத்தி கன்னத்தில சந்தனம் பூசி குங்குமப் பொட்டு வெச்சி ஆரத்தி எடுத்தப்போ அவங்க கண்ணுல ஆனந்தக் கண்ணீர்!..

எங்க ஆத்தாவையோ எங்க அம்மாவையோ நான் முதல்ல கும்பிடலை... சின்னாத்தா அவங்களைத் தான் முதல்ல விழுந்து கும்பிட்டேன்!..

மகராசியா இருக்கணும் என் ராசாத்தி!.. - ந்னு மனசார வாழ்த்துனாங்க!..

அக்கா.. உடம்பெல்லாம் சிலிர்க்குது!..

என் கல்யாணத்தப்போ அவங்களுக்கு ரொம்பவும் வயசாகி விட்டது.. தளர்ந்துட்டாங்க!... அவங்களைப் பூவைப் போல நாங்களும் பார்த்துக் கிட்டோம்..

தாலி கட்டி முடிஞ்சதும் நானும் அத்தானும் மாலையும் கழுத்துமா சின்னாத்தா கால்..ல விழுந்து கும்பிட்டப்ப..

அவங்களுக்கு கையெல்லாம் நடுங்குது.. பேசறதுக்கு வாய் வரலை...

சேலை முடிச்சில இருந்து ஒன்றரைப் பவுன்..ல மோதிரம்.. அது அத்தானுக்கு.. மடியில இருந்து காசுமாலை .. பன்னிரண்டு பவுன்... மருமகன்... கிட்ட சொல்லி ரகசியமா செஞ்சிருக்காங்க... எங்கழுத்துல போட்டு விட்டு அப்படியே கட்டிப் புடிச்சிக்கிடாங்க..

அஞ்சு நிமிஷம் வரைக்கும் நானும் அவங்களும் கண்ணீர்.. ல கரைஞ்சிக்கிட்டு இருந்தோம்!.. அப்போ அவங்க சொன்னது என்ன தெரியுமா?..

என்னக்கா?.. - கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டாள் - தாமரை..

உம் புள்ளையக் கொஞ்சிட்டுத் தான் நான் போகணும்.. இந்தக் கிழவிக்கு  வரங்கொடு!.. - அப்படினாங்க!...

காலம் குதிரைக் குட்டியாய் ஓடிப் போனது... ஒரு வாரத்துக்கு முன்னாலேயே என்னை ஆஸ்பத்திரியில சேர்த்தாச்சு.. என் ராசாத்திக்கு நான் பேறு பார்க்க முடியலையே..ன்னு அழுதிருக்காங்க!..

அவங்களோட அழுகையப் பார்த்துட்டு ஆஸ்பத்திரிக்கு அழைச்சிக்கிட்டு வந்திருக்காங்க... வயித்துல புள்ளை உருண்டிருக்கு.. புரண்டிருக்கு...ன்னு லேடி டாக்டர் ஏதேதோ சொன்னதும் மாமா அத்தை எல்லாரும் பயந்துட்டாங்க..

சின்னாத்தா தான் விடாப்பிடியா உள்ளே வந்து - என் வயித்தை இப்படியும் அப்படியுமா தடவி விட்டாங்க.. அஞ்சாவது நிமிஷம் தாயும் சேயுமா ஆயிட்டோம்.. லேடி டாக்டரைத் தவிர எல்லாருக்கும் சந்தோஷம்!..

அந்தத் தள்ளாத வயசு..லயும் புள்ளைக்குக் கால் கழுவி குளிப்பாட்டி -
துணி மாத்தி.. அடாடா!...

தாமரை அப்படியெல்லாம் இன்னொரு ஜீவன் கிடைக்கவே கிடைக்காது!..

அக்கா.. பிரமிப்பா இருக்குது.. அக்கா!...

அதுக்கப்புறம் மூனு வருஷம்... ஒரு மத்தியான வேளை.. அந்த உயிர்க்குருவி பறந்து போயிடுச்சு... ஒரு நோய் இல்லை.. நொடி இல்லை..

ஊரே திரண்டு வந்திருந்தது.. உயிர் இருக்கிற வரைக்கும் எந்தத் திண்ணையை கோயில்..ன்னு சொன்னாங்களோ அந்தத் திண்ணையில தான் மாலை மரியாதையோட கிடத்தி வெச்சிருந்தோம்!..

மறுநாள் நடு முற்றத்தில குருத்து ஓலை பந்தல் போட்டு எல்லாம் நல்லபடியா எல்லாம் செஞ்சு அனுப்பி வைத்தோம்..

அக்கா தங்கை இருவர் கண்களிலும் தாரை தாரையாய் நீர்..

தாத்தா கட்டிக் கொடுத்த வீட்டை அப்பா ஓட்டு வீடா மாற்றிக் கொடுத்தாங்க.. ஒரு சமயம் அந்த வீட்டை காவேரிக்கு கொடுத்துட்டு எங்க வீட்டிலேயே இருந்துக்குங்க.. ன்னு சொன்னோம்!..

அதுக்கு சின்னாத்தா என்ன சொன்னாங்க தெரியுமா!..

..... ..... .....!..

அது என் சாமி எனக்குக் கொடுத்தது.. என்னைய மாதிரி ஏழை பாழைகளுக்கு ஆகட்டும்.. அப்படின்னு சொல்லிட்டாங்க!..

எத்தனை நல்ல மனசு அவங்களுக்கு!..

அவங்க இஷ்டப்படியே செய்தோம்.. 
அவங்க இருந்த வீட்டில தான் இப்போ பொது நூலகம் இருக்கு!..

ஊர்ச் சொத்துக்கு ஆசைப்படுகிற இந்தக் காலத்தில
தனக்குக் கொடையாய்க் கிடைத்த சொத்தையும்
ஊருக்கே கொடுத்த உத்தமி சின்னாத்தா!..

அவங்க புருஷனை அன்பால திருத்துனாங்க எங்க தாத்தா..
அந்த அன்புக்காக எங்க குடும்பத்துக்கே தன்னைத் தியாகம் செஞ்சிட்டாங்க!..

அப்படிப்பட்ட உத்தமிகளோட நாமும் வாழ்ந்தோம்..ங்கறது தான் சந்தோஷம்!..

இனிமேல் இவங்களை மாதிரி நல்லவங்கள்...லாம் பிறப்பார்களா.. அக்கா?..

வேலைக்காரியா வந்து
வில்லங்கமாகிப் போகிற இந்த கால கட்டத்தில்
இப்படியான தியாக தீபங்கள்.. இன்னும் இருக்காங்க!...

அப்படிப்பட்ட தியாக தீபங்களோட வெளிச்சத்தில தான்
உலகம் சுத்திக்கிட்டு இருக்கு!...

எல்லா இடத்திலயும் எல்லா விஷயத்திலயும்
பெண்ணுக்குப் பெண்ணே எதிரியாகிடுறாங்க!..

அப்படிப்பட்டவங்களுக்கு மத்தியில -
சின்னாத்தா மாதிரியானவங்க தான் குன்றிலிட்ட விளக்கு!..

அந்த விளக்கிற்கு அன்பு தான் ஆதாரம்..

தாமரை!.. இன்றைக்கு மகளிர் தினம்.. 
அன்புக்கு மறுபெயர் பெண்மை.. 
அதுதான் மறுக்க முடியாத உண்மை...

இதைப் புரிந்து கொள்ள இயலாத நிலையில்

ஆண்களும் பெண்களுமாக ஆயிரமாயிரம் பேர்..

உண்மைதான் அக்கா!..
***




சின்னாத்தா!.. 
இவர்களைப் போல இன்னும் 
எத்தனை எத்தனையோ மாதரசிகள்!..

அவர்களுக்கெல்லாம் இந்தப் பதிவு சமர்ப்பணம்..

பெண்மை வாழ்க..
என்றென்றும் வாழ்க!..

ஓம் சக்தி ஓம்.. 
*** 

23 கருத்துகள்:

  1. இப்படிப்பட்ட தியாக தீபங்களாக வாழும் அனைவருக்கும் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      மகளிர் தின நல்வாழ்த்துகள்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. படிக்கும்போதே சிலிர்த்து விட்டது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. தியாக தீபம் சின்னாத்தா கதை மனதை நெகிழ வைத்துவிட்டது.
    மகளிர் தின சிறப்பு பதிவு அருமை.
    நன்றி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      மகளிர் தின நல்வாழ்த்துகள்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அருமை அக்கா...
    தீயாக தீபம் சின்னாத்தா மாதிரியான பெண்களுக்கு மனமார்ந்த மகளிர் தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..

      மகளிர் தின நல்வாழ்த்துகள்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. உங்களது எழுத்துக்களில் பக்தி மட்டுமல்ல ஐயா, உணர்வின் அருமையான வெளிப்பாடு

    பதிலளிநீக்கு
  6. மகளிர் தினக் கதையா உண்மைச் சம்பவமா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      உண்மை நிகழ்வுடன் சற்றே கற்பனையும் கலந்திருக்கின்றது..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. சின்னாத்தா !மனதை கொள்ளை கொண்டார் ..பெண்கள் அன்பால் அனைவர்மனத்திலும் இடம் பிடிக்கலாம் என்பதற்கு சின்னாத்தா சாட்சி .அருமையான கதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      மகளிர் தின நல்வாழ்த்துகள்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. அருமை, வாழ்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      முதல் வரவு தங்களுடையது..
      தங்களுக்கு அன்பின் நல்வரவு..

      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. பெண்மைவாழ்க வாழ்க எனப் போற்றுவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      மகளிர் தின நல்வாழ்த்துகள்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. இப்படியும் சின்னாத்தாக்கள் இருந்திருக்கிறார்களா என்று வியப்படைய வைக்கிறது.

    நிச்சயம் இருப்பார்கள். விளம்பரப்படுத்திக் கொள்ளாமல்.

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      மகளிர் தின நல்வாழ்த்துகள்..

      அன்பில் நிறைந்த சின்னாத்தாக்கள் தம்மை வெளிக்காட்டிக் கொள்வதில்லை தான்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. தாமதமான வருகைக்கு வருந்துகிறேன். உண்மை நிகழ்வுடன் கற்பனையும் கலந்து சுவைபட கொடுத்த சின்னாத்தா கதை நெகிழ வைத்தது. எல்லாக் காலத்திலேயும் சின்னாத்தா மாதிரியான தியாக தீபங்கள் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களுடைய அன்பின் வருகையே எனக்கு ஊக்கமளிக்கின்றது..

      எல்லாக் காலங்களிலும் சின்னாத்தா எனும் தீபங்கள் ஒளிர்ந்து கொண்டு தான் இருக்கின்றன..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. சின்னாத்தா ஆஹா! எப்படிப்பட்ட பெண்மணி!! மெய்சிலிர்க்க வைத்தார்,,உங்கள் அழகான தமிழில் நடையில் பெண்ணின் பெருமை சொல்லும் பதிவு அருமை!! இப்போதும் எங்கேனும் இது போன்ற சின்னாத்தாக்கள் இருப்பார்கள் தான் இல்லையா!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      எல்லாக் காலங்களிலும் சின்னாத்தா போன்ற மகராசிகள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.. நமக்குத் தான் தெரியவில்லை..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..