நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூலை 08, 2016

முதல்வருக்கு வணக்கம்

அன்று ஆவணி மூலம்..

ஆதவன் அதிவிரைவாகக் கீழ்வானில் எழுந்தான்..

ஏன்?.. அவனுக்கு என்ன அவசரம்!..

ஆவணி மூலத்தன்று தான் - ஐயன் எம்பெருமான் குதிரைகளுடன் மாமதுரை நகருக்கு வருவதாக வாதவூரரிடம் வாக்களித்திருந்தான்..

வாதவூரர்!..

யாரவர்?..

வாதவூர் எனும் திருத்தலத்தில் பிறந்தவர். 
அதனால் - வாதவூரர் எனப் பெயர் கொண்டவர்..

மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று
ஆனை கட்டிப் போரடித்த அழகான தென்மதுரையை
ஆட்சி செய்த அரிமர்த்தன பாண்டியனின் அவை முதல்வர்..

அரசவையில் வீற்றிருந்த அமைச்சர்களுள் இளையவர்..
ஆனாலும் - கல்வி கேள்விகளில் மூத்தவர்..

அதனால் - அமைச்சருக்கெல்லாம் அமைச்சராக
அறிவு சால் முதலமைச்சராகத் திகழ்ந்தவர்..


சகலமும் அறிந்தவர்.. அதனாலேயே பாண்டியன் அவரிடம் பெரும் பொருளைக் கொடுத்து தனது குதிரைப் படைக்கென சிறந்த குதிரைகளை வாங்கி வருமாறு பணித்தான்..

ஆனால், அந்தப் பொருளைக் கொண்டு -
திருப்பெருந்துறையில் சிவாலயம் ஒன்றை எழுப்பிவிட்டார் - வாதவூரர்..

ஒரு குதிரைக் குட்டி கூட வாங்கவில்லை...
பாண்டியனிடம் விஷயத்தைச் சொல்லி விட்டனர் சிலர்..

நிலைமை சிக்கலாகி விட்டது..

தன் நிலையை இறைவனிடம் முறையிட்டு நின்றார் - வாதவூரர்..

அவருக்கு இரங்கிய ஈசன் - தானே ஆவணி மூலத்தன்று குதிரைகளுடன் வருவதாக அவரிடம் வாக்களித்தான்..

அப்படி - குதிரைகளுடன் ஈசன் வருகின்ற அழகைக் கண்ணாரக் காண வேண்டும் என்பதில் தான் ஆதவனுக்கு அவசரம்..

ஆனால் - அதை விட அவசரமாக -

மாட மாமதுரையில் பாண்டியன் மாளிகையின் காவல் மாடத்தின் உச்சியில் வடதிசையை நோக்கிக் காத்துக் கிடந்தார்கள் - காவலர்கள்..

அதோ.. அதோ!..

புழுதியைக் கிளப்பிக் கொண்டு நீண்ட நெடுவரிசையாய் - புரவிகள்!..

அரண்மனையின் வாயிற்கோபுர மணிகளும் முரசுகளும் ஒருசேர அதிர்ந்து முழங்கின..

அரிமர்த்தன பாண்டியன் - ஆவலுடன் உப்பரிகைக்கு ஏகினான்..

ஆனந்தக் கண்ணீரால் அவன் விழிகள் நனைந்தன..

பூரணக் கும்பங்கள் மங்கல ஆரத்திகளுடன் குதிரைகளை எதிர் கொண்டனர்..

கண்ணைக் கவர்ந்த குதிரைகளைக் கண்டு வியந்தனர்.. அயர்ந்தனர்...

அதனினும் மேலாக -

வண்ண மயமான குதிரைக் கூட்டத்தின் நடுவில் -
ஒளி மயமான குதிரையின் மீது வாட்டசாட்டமாக
அமர்ந்திருந்த காளை அவனைக் கண்டு வியர்த்து அடங்கினர்!..

கண்ணைக் கவர்ந்த குதிரைகளைக் கண்டு எப்படி வியந்து அயர்ந்தனரோ -
அதை விட ஒருபடி மேலாக வியந்தனர்.. அயர்ந்தனர்.. 

இப்படியொரு அழகனை - சுந்தரனை - இதுவரைக்கும் கண்டதேயில்லை!.. -
இவன் எந்த நாட்டினன்?.. எந்த ஊரினன்?.. இவனே இத்தனை அழகென்றால் - இவனுடைய தாயும் தந்தையரும் எத்தன்மையரோ!.. இவன் தான் பரிமேல் அழகனோ!..

என, மனம் மயங்கித் தவித்தனர்..

அந்த வேளையில் கோட்டைக் கதவுகளைக் கடந்து குதிரைகள் நுழைந்தன,,

இந்தக் குதிரையைப் பார்ப்பதா!.. அந்தக் குதிரையைப் பார்ப்பதா!..

திக்குமுக்காடித் திளைத்தான் - அரிமர்த்தன பாண்டியன்..

அந்த விநாடியில் ஆணையிட்டான்..

முதலமைச்சர் வாதவூரைச் சிறையிலிருந்து விடுமின்!..

சிறையிலிருந்து மீண்ட வாதவூரருக்கு -
பொன்னும் பொருளும் பூந்துகிலும் கொடுத்து சிறப்பித்தான்..

பெரியீர்!.. பிறர் சொல் கேட்டு உம்மை ஒறுத்தேன்.. பொறுத்தருள்க!..

பாண்டிய நாட்டின் முதலமைச்சரைப் பணிந்து வணங்கினான் - அரசன்..

திரளான குதிரைகள்.. திகு... திகு... என தத்திக் கொண்டும் தாவிக்கொண்டும் இருந்தன..

அவற்றின் கயிறுகளைத் தம் கையினில் பற்றிக் கொண்டிருந்தனர் பல நூறு குதிரைச் சேவகர்கள்..

உங்களுள் தலைவன் யார்?.. - எனக் கேட்டான் பாண்டியன்..

பரிமேல் அழகராகிய இவர் தாம் - எங்கள் தலைவர்!..

சாய்ந்த கொண்டையும் திருமுடிச் சாத்தும் வாள்வயிரம்
வேய்ந்த கண்டியும் தொடிகளும் குழைகளும் வினையைக்
காய்ந்த புண்டர நுதலும் வெண்கலிங்கமும் காப்பும்
ஆய்ந்த தொண்டர்தம் அகம்பிரியாது அழகெறிப்ப..

- என்று எதிர்வந்த பரிமேல் அழகனைப் பாண்டிய மன்னன் எதிர்கொண்டு வணங்கி வரவேற்றான்..

மன்னனே!.. உனது பொருளினைக் கொண்டு வந்து எம்மிடம் கொடுத்து உனது அமைச்சராகிய வாதவூரர் கேட்டுக் கொண்டபடிக்கு இந்த அளவில் பரிகளைக் கொண்டு வந்துள்ளோம்.. இக்கணமே பெற்றுக் கொள்வாயாக!.. ஏனெனில் நாளைப் பொழுது என்பது யாருடைய கையிலும் இல்லை... எனவே இப்போதே கயிறு மாற்றிக் கொள்வாயாக!.. நாளை எப்படியாயினும் யாதொரு வழக்கிற்கும் இடமில்லை!.. 

அவ்வண்ணமே ஆகட்டும்.. அதற்கு முன் தாமே இந்தப் பரிகளின் தன்மையை விரித்துரைக்க வேண்டுகின்றேன்!..

மன்னன் கேட்டுக் கொண்டதற்கிணங்க - 
குதிரைச் சேவகனாக வந்த பரிமேல் அழகன் விவரிக்கலுற்றான்..

மன்னனே!... கவனமாகக் கேட்டுக் கொள்வாயாக!..

இங்கிருக்கும் அழகிய குதிரைகள் திறம் மிக்கவை.. 
தீரம் மிக்கவை.. வலிமையான பிடரி மயிரினை உடையவை.. வளர்ப்பவனுக்கு வெற்றியையும் நல்லூழ் தனையும் கொடுப்பவை.. 

இமயப் பனிமலையிலிருந்தும் திருப்பருப்பதத்திலிருந்தும் வந்தவைகள்.. 

இன்னும் காம்போஜம், மந்தரம், காந்தாரம், வான்மீகம், சிந்து, பாஞ்சாலம், துளுவம், கலிங்கம், ஆரியம், கூர்ச்சரம், கேகயம், பல்லவம், சவ்வீரம், மராட்டியம், வாசந்திகம், காஷ்மீரம், மாளவம், காந்தாரம், சௌராஷ்டிரம், சாலி, குருஷேத்திரம் முதலான நாடுகளைச் சேர்ந்தவை..

இதோ.. இந்தக் குதிரைகள் சிறந்த லட்சணங்களுடன் விளங்குபவை...
யவனம், மக்கம், வனாயுசம் போன்ற தொலைதூர நாடுகளைச் சேர்ந்தவை.. 
பொருகடற் கலத்தின் வந்திழிந்த கோலநீர்ப் பவளக் குளம்புடையவை..

இன்னும் பற்பல நாடுகளைச் சேர்ந்த குதிரைகளையும் நினது அமைச்சர் வாதவூரன் கொடுத்த பொருளினால் கொணர்ந்திருக்கின்றனர்..

குதிரைச் சேவகன் உரைத்த மொழி கேட்டு மகிழ்ந்த மன்னன் மேலும் வினவினான்..

மிக்க மகிழ்ச்சி.. இத்துடன் குதிரைகளின் தன்மையையும் கூற வேண்டும்!.. 

வெள்ளை, சிவப்பு, பொன், கருப்பு எனும் நான்கு நிறங்கள் அவற்றுடன் வேறு விரவிய வண்ணங்கள் என - ஐந்து நிறமுடைய குதிரைகள் இங்கே வந்துள்ளன..

பெருமதிப்புடைய இக்குதிரைகளின் லட்சணங்களைக் கூறுகின்றேன்.. கேள்!..

முத்து, பால், சந்திரன், சங்கு, பனி - என விளங்கும் வெள்ளைக் குதிரை..
மாதுளம் பூவும் செம்பஞ்சுக் குழம்பும் போன்ற செந்நிறமுடைய செங்குதிரை..

கரிய மை,  கருங்குயில், கருவண்டு, கார்முகில் - என ஒளிர்பவை கருங்குதிரை..
எரிகின்ற அனலும் கோரோசனையும் போன்ற நிற்முடையவை பொன் நிறக் குதிரை...

இந்த நான்கு வண்ணங்களும் சேர்ந்து இலங்குபவை மிச்சிரம் எனப்படுபவை...

முகமும் மார்பும் உச்சியும் வாலும் நான்கு கால்களும் என எட்டு பகுதியிலும் வெண்மை கலந்திருப்பின் அதன் பெயர் அட்டமங்கலம்..

வால் மற்றும் கால்களில் மட்டும் வெண்மை கலந்திருப்பின் அதன் பெயர் பஞ்ச கல்யாணி..

அழகான கழுத்தில் வலம்புரிச் சுழியிருப்பின் அதனை தேவமணி என்பர்..

நெற்றி, மூக்கு, தலை, மார்பு எனும் நான்கு இடங்களில் இரண்டிரண்டு சுழிகளும் நெற்றி நடுவிலும் பிடரியிலும் ஒவ்வொரு சுழியும் இருப்பின் மகா லட்சணம் பொருந்தியது என்பர்..

அகமகிழ்ந்தான் - அரிமர்த்தனன்...

நல்லூழ் தரவல்லவை என்றுரைத்தீர்!.. அவைகளைப் பற்றியும் கூறவும்!..

குதிரைச் சேவகன் மேலும் உரைத்தான்..

முகம், முதுகு, வால் - இம்மூன்றிலும் வெண்மையுடைய குதிரை எப்போதும் தலைவனுக்கு வெற்றியைத் தேடித் தரும்..

முன்புறம் சூரியனைப் போல சிவந்தும் பின்புறம் சந்திரனைப் போல வெளுத்தும் விளங்கும் குதிரை பகல் போரில் வெற்றியை ஈட்டும்..


முன்புறம் சந்திரனைப் போல வெளுத்தும் பின்புறம் சூரியனைப் போல சிவந்தும் விளங்கும் குதிரை இரவுப் போரில் வெற்றியை ஈட்டும்..

பிடரியில் வெளுப்புடைய குதிரையினால் மகப்பேறு விளையும்..
மார்பில் வெளுப்புடைய குதிரையினால் மட்டற்ற மகிழ்ச்சி விளையும்..

கழுத்தில் வெளுப்புடைய குதிரையினால் தன விருத்தி ஏற்படும்..
முகத்தில் வெளுப்புடைய குதிரையினால் மகத்தான வெற்றி ஏற்படும்..

தாவுகின்ற வேகத்தால் காற்றைப் போலவும்
கம்பீரமாக நின்றதனால் மலையைப் போலவும்
கனைத்ததனால் யானையைஅழிக்கும் சிங்கத்தைப் போலவும்
மிதித்து நடிக்கும் கூத்தினால் அழகிய கூத்தனைப் போலவும் திகழ்பவை..

உயர்குடியிற் பிறந்த கற்புடை மகள் போலக் கவிழ்ந்த முகத்தையும் 
கருநெய்தல் எனும் கருங்குவளை மலர் போன்ற கண்களையும் கொண்டு
கார்முகில் போல சிறந்து விளங்கும் குதிரைக்கு மணமிகு மலர்களைச் சூட்டி
அகில் சந்தனக் குழம்பினைப் பூசி ஒலிமிகும் மணிகளால் அலங்கரித்தால் அளவிடமுடியாதபடிக்கு மகிழ்ச்சி அடையும்.. இதுவே உத்தமக் குதிரை..

உத்தமக் குதிரையின் உயரம் நூறு விரலளவு..
மத்திமக் குதிரையின் உயரம் எண்பத்து நான்கு விரலளவு..
அதமக் குதிரையின் உயரம் அறுபத்தொரு விரலளவு!..

- என்று கூறி மேலும் பல விஷயங்களையும் தெரிவித்தான் - குதிரைச் சேவகன்..

பெருமகிழ்ச்சியுற்ற பாண்டியன் - தூய வெண்ணிற பூந்துகிலைப் பரிசாக வழங்கினான்..

அதுவரையிலும் குதிரையின் மீது அமர்ந்திருந்த அழகன்
குதிரையினின்றும் இறங்கி அந்தப் பூந்துகிலைப் பெற்று
தனது திருமுடியில் கட்டிக் கொண்டான்..

பரிமேல் அழகன் குதிரையினின்று இறங்கியதைக் கண்டு மனம் பொறாத மற்ற குதிரை வீரர்கள் அப்படியே நடந்து மறைந்து போயினர்..

அதனை உணராத அரிமர்த்தன பாண்டியன் - அவர்களுக்காகவும் பற்பல வண்ணங்களில் பூந்துகிலை வழங்கினான்..

அவற்றையெல்லாம் - குதிரை வீரர்களின் பொருட்டு
தானே வாங்கிக் கொண்டான்...

நேரம் கூடி வந்த வேளையில் குதிரைகளுக்கு மங்கலம் செய்வித்தான் மன்னன்..

அந்த அளவில் கயிறு மாற்றிக் கொண்டு - பாண்டியன் அரண்மனையிலிருந்து தனது குதிரையுடன் பரிமேல் அழகன் -தன் இருப்பிடத்திற்கு ஏகினான்..

அனைத்தும் ஈசன் செயல்!.. என்று எண்ணி கைகூப்பினார் வாதவூரர்..


ஆனால், அன்றிரவே -
அந்தக் குதிரைகள் அனைத்தும் நிஜ வடிவம் பெற்றன..

பரிகள் அனைத்தும் நரிகளாகி நின்றன..

லாயத்தில் கட்டப்பட்டிருந்த பழைய குதிரைகளைக் கடித்து வைத்து விட்டு காட்டை நோக்கி ஊளையிட்டவாறு ஓடிப் போயின!..

பாண்டிய மண்டலம் அதிர்ந்து நின்றது..

இப்படி நடக்கவும் கூடுமோ!.. மெய்யாகவே வாதவூரர் பொய் புகன்றார்!..

வசை மாரி பொழிந்தனர் மக்கள்..

சீற்றம் கொண்ட பாண்டியன் வைகையின் சுடுமணலில் நிறுத்தி வாதவூரரைக் கடுமையாகத் தண்டித்தான்..

எந்தாய் அனைத்து உலகும் ஈன்றாய் எத்தேவர்க்கும்
தந்தாய் செழுங்குவளைத் தாராய் பெருந்துறையில்
வந்தாய் மதுரைத் திருஆலவாய் உறையும்
சிந்தாமணியே சிறியேற்கு இரங்காயோ!..

- என்று மனம் வருந்தி வந்தித்தார் - வாதவூரர்...


அது கேட்டு வைகை நதி வெள்ளங்கொண்டு வந்தது...
வைகையதன் கரையடைக்க மாமதுரை திரண்டது..
வாழ்மனைக்கு ஒருவர்என வரவேண்டும் என்றது
வந்தி எனும் கிழவிக்கும் அரச ஆணை வந்தது..

யாருமற்ற என்றனக்கு ஆர் வரக்கூடும்?..
வந்தியவள் முதுவிழியில் கண்ணீரும் வந்தது..

ஏழையவள் நிலைகண்டு சொக்க
லிங்க சுந்தரம் எழுந்து வந்தது..
உண்ணுதற்கு தருக.. கரையடைக்கலாகும்.. 
என்று சொல்லி நின்றது..

உதிர்ந்த பிட்டு அத்தனையும் உனக்காக என்றது
வந்தியவள் கரம் நீண்டு வாஞ்சையுடன் தந்தது..

நீரடைக்க சென்றவன் ஆடினான்.. பாடினான்..
அங்கும் இங்கும் ஓடினான்.. ஓய்வு எனத் தூங்கினான்...

நிலைகண்ட பாண்டியன் கோபங்கொண்டு சீறினான்
பிடிகொண்ட பிரம்பெடுத்து வேகமாக வீசினான்!..

ஆளவன் தான் அந்தநொடி அங்கிருந்து மறைந்தான்..
அண்டமதில் பட்ட அடி மன்னவனும் உறைந்தான்!..

அந்த அளவில் வைகையின் வெள்ளம் அடங்கியது..
பிட்டமுது அளித்த வந்தியம்மை சிவகதி அடைந்தாள்..

நடந்ததெல்லாம் திருவிளையாடல் என அரிமர்த்தனன் நல்லறிவு பெற்றான்...
அமைச்சர் வாதவூரரின் அடிமலர்த்தாளில் தலைவைத்து ஆசிபெற்றான்..

தம் பொருட்டு அல்லவோ - குதிரைச் சேவகனாக வந்ததனன்
தம் பொருட்டு அல்லவோ - வந்தியம்மைக்கு ஆளாக வந்தனன்!..

அறியாமற் பிழைதனைச் செய்தனம்.. அடியனை ஆளாக ஏற்றருள்க..
அன்புடன் முதல்வருக்கு வணக்கம்.. அருள் கொண்டு பொறுத்தருள்க..

இனி என்றும் இந்நாடு உம்முடையது.. நான் உமது அடிமை!..

என்று பணிந்து நின்றான் -  அரிமர்த்தன பாண்டியன்..

அரசனுக்கு ஆசி அளித்த வாதவூரர் ஆகிய மாணிக்கவாசகப் பெருமான் -
தில்லைப் பெரும்பதியை நோக்கி தனது பயணத்தைத் தொடர்ந்தார்..

பற்பல திருத்தலங்களையும் தரிசித்தவாறு தில்லையை அடைந்த
மாணிக்கவாசகர் - ஆங்கேயே பலகாலம் தங்கி இன்புற்றார்..

அரியொடு பிரமற்கு அளவறி யொண்ணான்
நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்

- என்றும்

மதுரைப் பெருநன் மாநகர் இருந்து
குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும்
ஆங்கது தன்னில் அடியவட் காகப்
பாங்காய் மண்சுமந் தருளிய பரிசும்

- என்றும் குறித்தருளும் மாணிக்கவாசகர் - தில்லையம்பலவனின் ஆணையை ஏற்று திருக்கோவையார் எனும் நூலை வழங்கியருளினார்..

தில்லைவாழ் அந்தணர்கள் - அதன் பொருள் யாது?.. - என வினவி நிற்க,

எம்பெருமானே அதன் பொருள்!.. - என, விடையளித்து

தில்லையம்பலத்தினுள் புகுந்து பெருமானுடன் இரண்டறக் கலந்தார்..

அந்த நாள் - ஆனி மகம்!..

இந்நாள் - தில்லையிலும் திருப்பெருந்துறையிலும் பெருவிழாவாக நிகழ்கின்றது..

தில்லையில் எம்பெருமான் திருவீதி எழுந்தருளும் வேளையில்
திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகப் பெருமான் - சிவ ரூபமாக
பத்து நாட்களும் திருவீதி எழுந்தருள்கின்றார்...

திருப்பெருந்துறையில் கடந்த ஜூன் 30 முதல் ஆனிப்பெருவிழா நிகழ்கின்றது..
தில்லையில் இம்மாதம் முதல் தேதி முதல் ஆனித்திருவிழா நிகழ்கின்றது..

இந்தப் பதிவில் - இடம் பெற்றுள்ள குதிரைகளைப் பற்றிய விவரங்கள் -பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணத்திலிருந்து பெறப்பட்டவை...

மக்கம் என்று குறிக்கப்படும் நாடு
இஸ்லாமியர்களின் புனித நகரான மெக்கா விளங்கும் சவூதி அரேபியா..

வனாயுசம் எனப்படுவது பாரசீகம் எனக் கருதப்படுகின்றது....

கீழுள்ள படங்கள் - திருப்பெருந்துறையில் நிகழும் திருக்காட்சிகள்..

வழங்கியோர் -உழவாரம் - திருப்பணிக் குழுவினர்..
அவர் தமக்கு மனமார்ந்த நன்றி...





நாடெல்லாம் உய்வதற்கென திருவாசகம் எனும் ஞானத் தேனை 
வழங்கியவர் - மாணிக்கவாசகப் பெருமான்..
பாண்டியன் அரசவையில் முதலமைச்சராகத் திகழ்ந்தவர்..

அவருக்காகத்தான் - இறைவன் குருந்தின் கீழ் குருவாக வந்தனன்..
அவருக்காகத்தான் - இறைவன் குதிரைச் சேவகனாக வந்தனன்!..
அவருக்காகத்தான் - இறைவன் வந்தியம்மைக்கு ஆளாக வந்தனன்..
அவருக்காகத்தான் - இறைவன் மண்சுமந்து பிரம்படியும் கொண்டனன்!..

இன்று ஆனி மகம்..

முத்துத் தமிழில் திருவாசகத் தேன் அருளிய
முன்னவருக்கு வணக்கம் .. முதல்வருக்கு வணக்கம்..

மணிவாசகப் பெருமான் திருவடி வாழ்க..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.. 
* * *

20 கருத்துகள்:

  1. அருமையான தகவல்கள்.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அன்பின் ஜி அற்புதமான விடயங்கள் தங்களது நடையில் அருமை ஜி
    தலைப்பு என்னை அழைத்து வந்தது... இங்கே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. திருவிளையாடல் புராணத்தில் படித்து இருந்தாலும் உங்கள் பாணியில் அழகாய் சொன்னீர்கள்.
    என் கணவர் மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் திருவிளையாட்ல் புராணத்தை ஒரு ஆண்டு சொன்னார்கள். அப்படி இரண்டு மூன்று முறை சொல்லி இருக்கிறார்கள்.
    போன ஆண்டு பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சியை ஆவணி மூலவீதியில் நேரடியாக நடத்தி காட்டியதை பார்த்தேன் மதுரையில்.
    பகிர்வுக்கு நன்றி.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      பாடல் பெற்ற திருத்தலங்கள் அனைத்தையும் தரிசித்த புண்ணியர்..
      அவர்களைச் சந்திக்கவும் அவருடைய விரிவுரைகளைக் கேட்கவும் ஆவலாகின்றது..

      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் மீள்வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. குதிரைகளின் லட்சணம் கேட்பது புதிது. உங்கள் பாணியில் தெரிந்த கதைகள் என்றாலும் வாசித்தறிவது ஒரு சுகானுபவம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தங்கள் அன்பின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. நல்ல தகவல்கள் ஐயா .. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. வழக்கம்போல பக்தி மணம் கமழும் பதிவு. இறைவனிடம் எங்களை அணுக்கமாக்கிறது உங்களது பதிவுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்புக்கு மகிழ்ச்சி..

      வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு
  9. //இறைவன் குருந்தின் கீழ் ருவாக வந்தனன்.// எங்கே எப்பொழுது என்று விளங்கவில்லையே. அதற்குப் பின் குதிரை சேவகன், வ்ந்திக்காக் பிரம்படி பட்டது ....புரிகிறது. தவறாக எண்ண வேண்டாம். அறிந்து கொள்ள ஆவல்....
    நரிதனை பரியாக்கி பரிதனை நரியாக்கிய திருவிளையாடல் கதையை அழகாய் விவரித்திருக்கிறீர்கள் . வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      குதிரை வாங்குவதற்கென்று கீழைக் கடற்கரைக்கு வந்த வாதவூரரை திருப்பெருந்துறையில் ஈசன் தடுத்தாட்கொள்கின்றான்..

      சிவபக்தியில் திளைத்திருந்த வாதவூர் தன் மனம் நாடியபடியே குரு வந்தருளியதாக உணர்கின்றார்..

      குரு வடிவாக வந்த ஈசன் குருந்த மரத்தின் கீழிருந்து உபதேசிக்கின்றார்..

      சிவஞானம் எய்திய வாதவூரர் அப்போது பாடியதே -
      நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க!.. - எனும் சிவபுராணம்..

      பதிவினில் வ்ளக்கமாகச் சொல்லாதது என் பிழையே.. பொறுத்தருள்க..

      தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
    2. நான் தெரிந்து கொள்வதற்காக மட்டுமே கேட்டேன். ஆங்கிலத்தில் ஆன்மீகப் பதிவு நான் எழுதி வருவது உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்க்றேன். அதில் இக்கதை எழுத ஏதுவாக உங்கள் பதிவு இருந்ததனால் , சந்தேகம் நிவர்த்தி செய்து கொள்ள மட்டுமே கேட்கப்பட்ட கேள்வி அது.

      பிழை என்று எதையும் சொல்கிற அளவு நான் பெரியவள் இல்லை. தவறாயிருந்தால் மன்னிக்கவும்.

      நீக்கு
    3. அன்புடையீர்..

      தங்களுடைய அரும்பணியினை அறிவேன்..
      இருந்தாலும் நானும் சற்று விவரமாக எழுதியிருக்க வேண்டும்..

      தங்கள் பணி சிறக்க எம்பெருமானை வேண்டிக் கொள்கின்றேன்..

      அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..