நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூன் 23, 2016

மண்ணில் வீழ்ந்த மகராஜ்

எந்த நேரத்தில் Mission Madukkarai Maharaj என்று பேர் வைத்து அந்த யானையைப் பிடித்தார்களோ?..

தெரியவில்லை...

மண்ணில் இவர்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்கவேண்டுமா!.. 

- என்று, மனம் வெதும்பிய யானை -
மகாராஜனைப் போல் மானத்துடன் தன்னுயிரைத் துறந்திருக்கின்றது...


மதுக்கரையில் பிடிக்கப்பட்ட யானை
கடந்த ஞாயிறன்று கோவை மதுக்கரை வனப்பகுதியில் பிடிக்கப்பட்ட காட்டு யானையை கும்கி எனும் அடிமை யானையாக மாற்றுவதற்காக - டாப்சிலிப் யானைகள் முகாமிற்கு வனத்துறையினர் கொண்டு சென்றதாக நாளிதழ் செய்திகளின் மூலமாக அறிந்து கொள்ளமுடிகின்றது..

யானை இறந்ததை விட - அந்த யானையை கும்கியாக மாற்றும் ஆசை பறி போனதற்கு வருந்துகின்றது வனத்துறை..

கடந்த ஆறு மாத காலத்தில் - இந்த யானை மற்றும் இதன் கூட்டாளிகளினால் பெரும் இடர்பாடுகள் நிகழ்ந்திருக்கின்றன..

யானையின் தாக்குதலினால் இரண்டு பேர் இறந்திருக்கின்றனர்..

எனவே - இந்த யானையை பிடிப்பதற்கு திட்டம் உருவானது..

அதன் பெயரே - மிஷன் மதுக்கரை மகராஜ்!..


திட்டத்தை செயல்படுத்த முனைந்தபோது -
அந்த யானையுடன் மேலும் இரு யானைகள் இருக்க - அவற்றுள் அந்த முரட்டு யானையை மட்டும் பிடிக்க முடிவு செய்து குறிவைக்கப்பட்டது..

ஞாயிறன்று அதிகாலை கோவை மதுக்கரை ராணுவ முகாம் அருகே காட்டுக்குள் இருந்த யானை வெளியே வரும் தருணத்திற்காக -

எழுபதிற்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் நான்கு கும்கி யானைகளுடன் காத்திருந்தது வனத்துறை..

கும்கி யானைகள் - யானை பிடிப்பதற்கெனெ பழக்கப்பட்டவை..

எதிர்பார்த்தபடி -  காட்டுக்குள்ளிருந்து யானை வெளியே வந்தது..

அப்போது நேரம் 4.15.. சற்றும் தாமதிக்காமல் -
யானையின் மீது துப்பாக்கி மூலமாக மயக்க மருந்து ஊசி செலுத்தப்பட்டது..

இளங்காலைப் பொழுதில் - இதனை எதிர்பாராத யானை அச்சமுற்றது..

பெருங்குரலெடுத்துப் பிளிறிக் கொண்டே ஓடிய யானை சற்று நேரத்தில் தள்ளாடியது..

அதற்காக காத்திருந்த வனத்துறையினர் - கும்கி யானைகளுடன் சென்று சுற்றி வளைத்து மடக்கினர்..





பிடிபட்ட யானை - ஐந்து மணி நேரம் கடுமையாகப் போராடியிருக்கின்றது -

தன்னை விடுவித்துக்கொள்வதற்காக - மடக்கிப் பிடித்த கும்கிகளான கலீம் மற்றும் விஜய் ஆகியோருடன் மோதியிருக்கின்றது..

ஆனாலும் பயனில்லை.. கயிறு மற்றும் இரும்பு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டது... கடும் முயற்சிக்குப் பின் லாரியில் ஏற்றப்பட்டது..

டாப்சிலிப் எனும் வனப்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டது - என்ற அளவில் அந்த வட்டார மக்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தை விவரித்தவாறே செய்திகள் முடிவடைந்திருந்தன..

யானை பிடிபட்ட சம்பவம் ஊடகங்களால் காணொளியாக்கப்பட்டு
யூ டியூப்பில் காணக் கிடைக்கின்றது..

அந்தக் காட்சியையும் சில தினங்களுக்கு முன்பாகக் கண்டேன்..

லாரியில் ஏற்றும்போது - கும்கி யானை முரட்டுத் தனமாக முட்டித் தள்ளுவதைக் கண்டு மனம் பதறியது...

யானைகள் ஊர்ப் பகுதிக்குள் வந்து செய்யும், அட்டகாசங்களையும் அவ்வப்போது ஊடகங்கள் வாயிலாக அறிந்திருப்பதால் -

எப்படியோ இந்த அளவில் ஓரளவுக்காவது பிரச்னை தீர்ந்தால் நல்லது என்றே இருந்தது...

ஆனாலும் -

பிடிபட்ட யானை லாரியில் ஏறுவதற்கு மறுத்து முரண்டு பிடிப்பதும்

அதற்கு இடம் கொடாமல் - கலீம் எனும் கும்கி பின்புறமாக பலமாக முட்டி மோதித் தள்ளி லாரிக்குள் திணிப்பதும்

அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் ஆரவாரக் கூச்சலுடன் ரசிப்பதும்

யானையின் சாதனை மற்றும் வேதனை இவற்றை மகிழ்ச்சியுடன் படம் பிடிப்பதும்

- மனதைக் குடைந்து கொண்டேயிருந்தன...

சம்பவ இடத்திலேயே - பிடிக்கப்பட்ட யானை கும்கியாகப் போகின்றது - என்பதை அறிந்த சமூக ஆர்வலர்கள் - பதறியிருக்கின்றனர்..

வனத்துறையினரின் திட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதாகவும் செய்திகள் கூறுகின்றன...

மக்கள் அடைந்த சிரமங்களைத் தீர்ப்பது என்ற நிலைப்பாடு மாறி -
வனத்துறையின் கும்கி யானைக்கான தேவைக்கானது - என்றாகியிருக்கின்றது...

பிடிக்கப்பட்ட அந்த யானை 20 வயதுடையது.. கம்பீரமாக திடகாத்திரமாக விளங்கியது.. பல ஆண்டுகளாக அந்தப் பகுதிக்கு வந்து போகும் பழக்கத்தை உடையது..

ஆனாலும் -
செலுத்தப்பட்ட மயக்க மருந்தின் வீரியம், கும்கிகளின் கொடூரத் தாக்குதல் இவற்றால் சோர்வடைந்த யானை - அன்றைய தினம் இரவும் பொழுதில் டாப்சிலி கொண்டு சேர்க்கப்பட்டது..

மறுநாள் - கட்டுக் கூண்டுக்குள் சற்றே மயக்கம் தெளிந்த நிலையில் -
மீண்டும் ரகளையைத் தொடங்கியிருக்கின்றது..

அடங்க மறுக்கும் யானைகளை - பட்டினி போட்டு தங்கள் வழிக்குக் கொண்டு வருவது தான் வழக்கமாம்...

ஆனாலும் - இந்த யானையின் கொட்டத்தை அடக்குவதற்காக மீண்டும் மீண்டும் துப்பாக்கி மூலம் மயக்க மருந்தினைச் செலுத்தியிருக்கின்றனர்..

அதன் விளைவாக - செவ்வாய்க் கிழமை மாலை 4.15 மணியளவில்
பிடிக்கப்பட்ட மகராஜ் மண்ணில் வீழ்ந்து தன்னுயிரைத் துறந்தது...

அளவுக்கு அதிகமான மயக்க மருந்து தான் யானையின் மரணத்திற்குக் காரணம் என்று சொல்கிறார்கள்..

யானையின் எடைக்கு ஏற்ற அளவுதான் மயக்க மருந்து தான் செலுத்தப்பட வேண்டும் என்ற மருத்துவ விதிகள் எல்லாம் இருக்கின்றனவாம்..

மேலும் இதைப் போல் ஒரு சம்பவம் முன்பே நடந்திருக்கின்றது என்றும் அறியமுடிகின்றது..

பிடிக்கப்பட்ட யானை பரிதாபமாக உயிரிழந்தது - என்ற செய்தியை அறிந்து
அதிர்ச்சியுற்ற மனம் - இன்னும் பரிதவிக்கின்றது..

தங்கள் பகுதியில் வளைத்துப் பிடிக்கப்பட்ட யானை -
வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தபோது உயிரிழந்ததை அறிந்து
பதறிய மக்கள் - போஸ்டர் அடித்து அஞ்சலி செய்திருக்கின்றனர்..

அந்தப் பகுதியே மௌனமாகிக் கிடக்கின்றதாம்...

நன்றி - விகடன் 
இந்தப் பதிவு - 
இணையச்செய்திகளைக் கொண்டு தொகுக்கப்பட்டது..
தினமணி மற்றும் விகடன் தளங்களுக்கு நன்றி..
* * *

ஊடகங்கள் சொல்கின்றபடி -
மயக்க மருந்தா யானையைக் கொன்றது!?...

யானை - அது கொண்ட மானம் தான் அதைக் கொன்றிருக்க வேண்டும்..

இந்த வனமெல்லாம் நமக்கே சொந்தம் என்ற நினைப்பில் -
காலகாலமாக - சுற்றித் திரிந்திருந்த காட்டிற்குள்ளிருந்து
கதறக் கதற கட்டியிழுத்துச் செல்லப்பட்ட 
வேதனை தான் - யானையைக் கொன்றிருக்க வேண்டும்..

தன் இனத்தாலேயே - பின்புறமாகக் குத்தித் தாக்கப்பட்ட 
அவமானம் தான் - யானையைக் கொன்றிருக்க வேண்டும்...

தன்னைக் கண்டு அஞ்சி ஓடிய மனிதர்கள் எல்லாம்
தன்னுடைய கையறு நிலை கண்டு எள்ளி நகையாடி குதுகலித்த 
கேவலம் தான் - யானையைக் கொன்றிருக்க வேண்டும்..

இன்றும் பெரியோர்கள் சொல்வார்கள் - 

அவன் அந்த ஊர்க்காரன் அல்லவா!.. அப்படித்தான் இருப்பான்!..

அவள் குடிச்சதெல்லாம் காவேரித் தண்ணி!.. இப்படித்தான் பேசுவாள்!..

மண்ணும் நீரும் சிலவகையான குணாதிசயங்களை நிர்ணயிக்கவல்லவை..

மண்ணுக்கும் நீருக்கும் - இவற்றுடன் தொடர்புடைய உணவுக்கும் பல்வேறு சிறப்பியல்புகள் உள்ளன..

அந்த சிறப்பியல்புகள் - மனிதர்களுக்கு மட்டுமல்லாது
விலங்குகளுக்கும் பொருந்தி வரக்கூடுமோ!...

சற்றே சிந்தித்தால் - வரலாற்றில் ஓர் ஏடு கண் முன்னே வருகின்றது..

கணைக்கால் இரும்பொறை எனும் சேர மன்னன் -
சோழனுடன் போரிட்ட போது அவனால் சிறை பிடிக்கப்பட்டு குடவாயிற்கோட்டத்தில் காவலில் அடைக்கப்படுகின்றான்..

சிறையினுள் - கடும் தாகத்தில் தவித்து காவலாளியிடம் தண்ணீர் கேட்கிறான் - மன்னன்..

அடைபட்டுக் கிடப்பவன் ஆயினும் அவனும் ஒரு அரசன் என்ற உணர்வற்ற - காவலாளி தாமதமாக நீர் கொண்டு வந்து அலட்சியமாகத் தருகின்றான்...

தன்மானத்தால் உந்தப்பட்ட இரும்பொறை தாங்கொணாத மனத்தினனாக -
தாமதிக்கப்பட்ட தண்ணீரையும் - தன்னுயிரையும் ஒருசேர துறக்கின்றான்..

அரசனின் அத்தகைய மாண்பு - அந்த யானைக்கும் இருந்திருக்குமோ!..

நமக்கு வேண்டியதெல்லாம் - உணவும் நீரும் தானே!..
அங்கே வனத்தில் கிடைத்தால் என்ன?..
இங்கே கொட்டடியில் கிடைத்தால் என்ன?..

- என்ற நினைப்புடன் அந்த யானையால் இருக்க முடியவில்லை..

நினைவில் காடுள்ள மிருகம் எளிதில் அடங்குவதில்லை!..

- என்று அறிந்திருக்கின்றேன்..

அந்த வார்த்தைகளை இப்போது தேடினேன்..

மலையாளக் கவிஞர் K.  சச்சிதானந்தன் என்பவருடையது என்றறிந்தேன்..

நூற்றுக்கு நூறு உண்மையான சொல் - யானையின் மனதைக் காட்டுகின்றது...


சென்ற திங்களன்று - மதுக்கரை அருகே நள்ளிரவுப் பொழுதில் (1.30)தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண் யானை ஒன்று - பெங்களூர் - கொச்சுவேளி விரைவு ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததும் மற்றொரு வேதனை..

2009 ல் இதே வழித் தடத்தில் இதே மாதிரி ரயிலில் அடிபட்டு நான்கு யானைகள் உயிரிழந்திருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது..

யானையின் வழித்தடம் முற்றாக ஆக்ரமிக்கப்பட்டிருக்கின்றது என்பது நிதர்சனம்..

கண்ணிருந்தும் கண்டு கொள்ள மறுக்கின்றது மனித சமுதாயம்..

இயற்கைச் சங்கிலியைக் காக்கும் பொறுப்பு தமக்கும் உண்டு என்பதை யானையும் மற்ற உயிரினங்களும் அறிந்தே இருக்கின்றன..

அதனை மறந்தவன் - மறுப்பவன் மனிதன் மட்டுமே!..

அன்றொரு நாள் நீர் வாழ் முதலையிடமிருந்து
யானைக்குக் கிடைத்த மோட்சம்

இன்று இந்த நாள் நிலம் வாழ் முதலைகளிடம் சிக்கி
உயிரிழந்த யானைகளுக்கும் கிடைக்கட்டும்...

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
*** 

15 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அன்புடையீர்..

      விலங்குகளும் இம்மண்ணில் காப்பாற்றப்பட வேண்டும்..
      தங்கள் வருகைக்கு நன்றி..

      நீக்கு
  2. மதுக்கரை மகாராஜ் செய்தியை நாளிதழ்களில் படித்தேன். அது தொந்தரவு செய்தது உண்மைதான். ஆனால் மரணமடைந்தது வேதனையே. நினைத்தது ஒன்று. நடந்தது ஒன்று.
    இன்று நிசும்பசூதனி கோயிலின் குடமுழுக்கு. கடந்த ஆண்டு நீங்கள் எழுதிய நிசும்பசூதனி பதிவினைப் படித்துவிட்டுக் கிளம்புகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      அந்த யானையினால் இடையூறு ஏற்பட்டது உண்மைதான்..
      ஆனால் அதற்குக் காரணம் எது?..
      யானையின் வழித்தட ஆக்ரமிப்பு!..
      வழித்தடத்தை வாழ்விடத்தை அழித்தவன் மனிதன் தானே!..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி...

      நீக்கு
  3. அன்விபின் ஜி விரிவான அலசல் யானையைக்குறித்த பல சான்றுகளுடன் அறியத்தந்தீர்கள் மனம் வேதனையாக இருக்கின்றது மனிதனின் பொருப்புணவற்ற செயலால் யானையின் மரணம் இது கண்டிக்கத்தக்கதே... இதுவும் கொலைக்குற்றம்தானே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      விலங்குகளுக்கு இம்மண்ணில் இடமில்லையா?..
      மனிதனுக்கு மட்டும் தான் பூமி என்பது துரோகம்!..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  4. செய்தி அறிந்த அன்றே மனம் கனத்தது...வேதனை ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      விலங்குகளின் வாழ்வுரிமையை அழித்த மனிதன் மட்டும் நிம்மதியாக வாழ்ந்து விடமுடியுமா?..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  5. முன்னெல்லாம் யானைகளைக் குழிவெட்டிச் சிறை பிடிப்பார்கள் பின் நிதானமாகப் பழக்குவார்கள் இப்போது உடன் ரிசல்ட் தேவையால் மயக்க ஊசியும் மருந்தும் யானைகளும் மனிதனைப் போல் சிந்திக்கலாம் என்பது நல்ல கற்பனை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      இப்போதெல்லாம் சிந்தித்து செயல்படுதல் என்பது இல்லை..
      எல்லாம் அவசரக் கோலம்..

      யானை மரத்தில் முட்டிக் கொண்டதனால் நெற்றியில் உள்காயம் ஏற்பட்டு அதனால் மாண்டு போனது என்று அறிவித்திருக்கின்றார்கள்..

      விலங்குகள் தான் சிந்திக்கின்றனவே!.. நாயை சில தடவை விரட்டினால் - மறுபடி திரும்பியே பார்க்காது..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  6. மதுக்கரை மகாராஜ் மரணம் மனதை கனக்க வைக்கிறது.
    நிதானமாய் யானையை பழக்கி இருக்கலாம். என்ன செய்வது?
    நிலவாழ் முதலைகள் அருமையாக சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      காட்டுக்குள் மனிதன் ஆக்ரமித்துக் கொண்டு - யானையிடம் இருந்து பாதுகாப்பு தாருங்கள் என்று கூக்குரலிடுவது காலத்தின் கோலம்..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  7. வேதனை...

    நல்ல பகிர்வு ஐயா... மனிதன் திருந்தட்டும்.

    பதிலளிநீக்கு
  8. யானைகளின் வழித்தடங்களை எல்லாம் மனிதன் தன் சுயநலத்திற்காக எடுத்துக் கொண்டுவிட்டு யானைகள் அட்டகாசம் செய்கின்றன என்று சொல்லி நடத்தும் நிகழ்வுகளை மனம் ஏனோ மறுக்கின்றது ஐயா. பரினாம வளர்ச்சியில் மனிதனுக்கு முன் வாழ்ந்தவைதான் இவை எல்லாம். அவர்களுக்கும் இப் பபூமியில் வாழும் உரிமை உண்டு. இறைவனால், இயற்கையால் படைக்கப்பட்ட எல்லா உயிர்களுக்கும் இந்தப் பூமி சொந்தமே. ஆனால் மனிதன் பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில் இருப்பதால் எல்லாம் தனக்கே உரியது என்ற இறுமாப்புடன் இருக்கிறான்.

    இதைப் படித்தோம். இதனை இன்னும் நன்றாக புத்திசாலித்தனமாகக் கையாண்டிருக்கலாமோ என்றும் தோன்றுகிறது. அவசர யுகத்தில் இப்படித்தான்.

    ஆம் எடைக்கு ஏற்ற அளவுதான் மயக்க மருந்து கொடுக்க வேண்டும். இங்கு அதிகமாகியிருப்பதாகவே தோன்றுகின்றது.

    வேதனை அடைந்தது மனம்.

    நீங்கள் மிக அழகாகத் தொகுத்திருக்கின்றீர்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  9. வேதனையான நிகழ்வு. இன்னும் எத்தனை உயிர்களை அழிக்கப்போகிறோம்....

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..