நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மார்ச் 08, 2016

பெண் என்ற பெருஞ்சீர்

அக்கா.. அக்கா...வ்!..

வாம்மா.. தாமரை!... வா.. வா!..

அக்காவுக்கு நல்வாழ்த்துகள்!..

உனக்கும் நல்வாழ்த்துகள்.. டா!..


அத்தான் பிள்ளைகள் எல்லாம் எப்படி.. இருக்காங்க?..

எல்லாரும் சௌக்கியம் தான்!.. உங்க அத்தை.. மாமா.. எல்லாரும் எப்படி?..

நல்லாருக்காங்க.. அக்கா!..  நீங்க எப்போ மாமாங்கத்துக்குப் போனீங்க?..

நாங்க எல்லாரும் கோயில்..ல கொடியேற்றம் ஆனதுமே போய்ட்டு தீர்த்தமாடிட்டு வந்துட்டோம்!..

இவங்க தான் தாமரை
சோலையப்பன் தெருவுல.. எங்க அத்தைக்கு சொந்தக்காரங்க இருக்காங்க.. அவங்க வீட்டில ரெண்டு நாள் தங்கியிருந்து எல்லா கோயிலுக்கும் போய்ட்டு வந்தோம்...

நல்ல கூட்டம்.. இல்லையா!..

அக்கா.. உங்களுக்கு இது எத்தனையாவது மாமாங்கம்?..

மூன்றாவது மகாமகம்..

அப்போ எனக்கு ஆறு வயசு.. இது இரண்டாவது மகாமகம்!..

நம்ம முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவங்களுக்கு அஞ்சாவது மாமாங்கம்!..

அக்கா.. நானும் பதிவுல படிச்சேன்!.. பெரியவங்களப் பார்க்கிறதே பெருமை!..

தாமரை.. இன்னிக்கு மகளிர் தினமாச்சே.. புதுசா என்ன சேதி இருக்கு?..

என்னக்கா.. இது அநியாயம்?.. டில்லியிலே சின்னப் பெண் ஒருத்திய பாழடிச்சுட்டு உயிரோட தீ வெச்சி கொளுத்தியிருக்கான் ஒரு படுபாவி!.. அவனைத் தேடிக் கண்டு பிடிச்சிருக்காங்களாம்.. இவனாலேயே அந்தப் பொண்ணு பள்ளிக்கூடம் போகாம இருந்திருக்கா.. கொஞ்ச நாளைக்கு முன்னால இந்தப் பிரச்னையினால இவனை உள்ள புடிச்சி போட்டுருக்காங்க.. இப்போ வெளியில வந்ததும் அந்தப் பயல் இந்த மாதிரி நாச வேலை செஞ்சிருக்கலாம்..ன்னு பேசிக்கிறாங்களாம்!..

இவனுக்கும் வாதாட வருவார்கள்.. வசதியானவனா இருந்த சம்பவம் நடந்த அன்னைக்கு ஊர்லயே இல்லை என்பார்கள்.. இல்லேன்னா கொடுக்கிற காசை வாங்கிக்கிட்டு கம்முன்னு கிட .. அப்படிம்பானுங்க!..

நம்ம நாடு அல்லவா!.. என்ன வேணாலும் நடக்கலாம்.. வழக்கு என்ன ஆகுமோ தெரியாது.. அப்படியே கொசு கடிச்ச மாதிரி ஏதாவது தண்டனை கிடைத்தாலும் - போற போக்கில கறவை மாடும் கன்னுக் குட்டியும் வாங்கிக்கச் சொல்லி காசு கொடுத்தாலும் கொடுப்பாங்க!..

அக்கா..  இவனுங்கள வெறி நாயை விட்டு கடிக்க வைக்க கூடாதா?  இல்லே.. தெரு நாய்க்கு மாதிரி நறுக்கி விட்டுறக் கூடாதா!..

அதெல்லாம் முடியாதுடா.. தங்கம்.. இது ஜனநாயக நாடு அல்லவா.. இவனுக்கு அதுக்கெல்லாம் உரிமை இருக்கு..ன்னு சொல்லிக்கிட்டு வேற யாராவது கிளம்பி வருவாங்கடா..

அப்ப என்ன தான் முடிவு.. இதுக்கெல்லாம்?..

மாறணும்.. எல்லாமே மாறணும்!.. இல்லேன்னா மாற்றணும்!.. அதுக்கு பெண்களே முன் வர்றதில்லே...

எப்படி..க்கா சொல்றீங்க?..

நேத்து சிவராத்திரி அல்லவா.. மகாராஷ்ட்ராவில நாசிக் நகரில் உள்ள திரயம்பகேஸ்வரர் கோயில் கருவறைக்கு உள்ளே போய் சாமி கும்பிட உரிமை வேண்டும் .. அப்படின்னு பெண்கள் அமைப்பு கூட்டங்கூடி போராடி இருக்கு.. அவங்க கேட்கிறாங்க காசியில விஸ்வநாதரை தொட்டு வணங்கற மாதிரி.. ன்னு!..

ஏங்க்கா!.. அதில என்ன தப்பு?..  நமக்கு அந்த உரிமை இல்லையா.. நாமும் கடவுளோட பிள்ளைகள் இல்லையா?..

இருக்கே.. காசியில இருக்கிற மாதிரி.. இன்னும் பல கோயில்கள்ல.. பெண்கள் தாங்களே சிவலிங்கத்தை நீராட்டி வழிபட உரிமை இருக்கே... அங்கே போய் சந்தோஷமா வழிபடலாமே..

ஏன்.. இங்கேயும் அந்த மாதிரி விட வேண்டியது தானே!..

காசியில விஸ்வநாதரைத் தொட்டு வணங்க ஒரு காரணம் இருக்குற மாதிரி.. திரியம்பகேஸ்வரை தொட்டு வணங்க விடாததற்கும் ஒரு காரணம் இருக்கும்!.. சமய வழிபாடுக்கு நம்பிக்கைகள் தான் அடிப்படை..

அப்போ.. நீங்க என்ன தான் சொல்ல வர்றீங்க?..

தாமரை.. ந்னு - நான் உன் தோளைத் தொடுவேன்.. எல்லாரும் பெண்கள் தான் .. அதுக்காக வேற ஒரு பெண்ணை நீ தொட விடுவாயா?..

அதெப்படி?..

இதெல்லாம் சிந்தித்து செயல்பட வேண்டிய விஷயம் தாமரை.. ஏன்.. இந்த பெண்கள் அமைப்பு எல்லாம் ஒன்னா கூடி பாலியல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையை உடனே நிறைவேற்றணும் ..ன்னு நாடு முழுக்க பெரிய போராட்டம் நடத்துனா என்ன?.. இதுவரைக்கும் இல்லையே!..

அவங்களுக்கு சபரிமலைக்கு போகணும்.. சிவலிங்கத்தைத் தொட்டுக் கும்பிடணும்.. இந்த மாதிரி விஷயம் தான் பெரிதாக இருக்கின்றது... சபரி மலைக்குப் போறவங்க வீட்டில இருக்கிற பருவப் பெண்களைக் கேட்டுப் பாரு.. நீங்களும் மலைக்குப் போறீங்களான்னு..

கேட்டா?..

ஐயையோ.. அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்.. அப்படி..ம்பாங்க!..

இந்த மாதிரி சொல்ல வெச்சிருக்கிறது தானே அடக்கு முறை.. ஆணாதிக்கம்!..

அடக்கு முறையாவது.. மடக்கு முறையாவது!.. நாளைக்கு ஐயப்ப சாமியே நேர்ல வந்து - வாங்க எல்லாரும் சபரிமலைக்கு! .. ந்னு கூப்பிட்டால் கூட இந்தப் பொண்ணுங்க சபரிமலைக் காட்டுக்குள்ள போக மாட்டாங்க!..

ஏன்!?..

தாமரை.. நம்ம நாட்டுல..  காட்டுக்குள்ள எத்தனை எத்தனையோ கிராமங்கள்.. அங்கேயும் பெண்கள் இருக்காங்க.. அங்கேயும் அவங்க கும்பிடுகின்ற சாமியும் இருக்கு.. அவங்கள்..ல பத்து பேரை அழைச்சுக்கிட்டு வந்து சபரிமலை காட்டுக்குள்ள போங்க.. ந்ன்னாலும் அவங்க போக மாட்டாங்க!..

ஏங்க்கா!?..

அது தாம்மா.. ரத்தத்தில ஊறிப் போன பக்தி.. பாரம்பர்யம்!..

எத்தனையோ ஊர்கள்..ல முனீஸ்வரன்.. ஐயனார்.. காளியம்மன்..ன்னு ஊருக்கு வெளியே இருக்குற கோயிலுக்கு அந்த ஊரு பொண்ணுங்களே போக மாட்டாங்க.. 

அங்கே எல்லாம் இந்த அமைப்புங்க போயி போராட வேண்டியது தானே!.. வாங்கடி பொண்ணுங்களா... ந்னு கையைப் புடிச்சு அழைச்சிக்கிட்டு போக வேண்டியது தானே!..

என்னக்கா.. இப்படியும் இருக்குதா!..

ஏன்.. ஆடி மாசமும் தை மாசமும் செவ்வாய் பிள்ளையார்..ன்னு கும்புடுறோமே.. அந்த பூஜைக்கு ஆண்களையும் உள்ளே விடச் சொல்லி - இந்தப் பெண்கள் அமைப்பு போராடலாமே!.. அதுவும் போராட்டம் தானே!..

அக்கா!.. என்ன சொல்றீங்க.. நீங்க?!..

ஏம்மா.. அதிர்ச்சியா இருக்கா!.. நானே வாங்க..ன்னு சொன்னாலும் உங்க அத்தான் வரமாட்டார்.. அவரு..ன்னு இல்லை.. எந்த ஆண் பிள்ளையுமே வரமாட்டாங்க!..

என்னக்கா.. திடீர்..ன்னு இப்படி சொல்லிட்டீங்க!.. எனக்கு உடம்பெல்லாம் நடுங்குதுக்கா!..

இவங்க எல்லாம் ஒரு நாள் கூத்துக்கு மீசை எடுக்கறவங்க!.. ஆக்க பூர்வமான செயல்பாடுகள்..போராட்டங்கள்.. ல எல்லாம் ஈடுபடவே மாட்டாங்க!...



நாமே நமக்குக் காவலா மாறிடணும்.. மற்றதுகளை நம்பிப் பிரயோஜனம் ஏதும் இல்லை.. சின்னஞ்சிறு பெண் குழந்தைகள்.. ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரையும் பாதுகாக்கிற கேடயமா ஆகிடணும்...

இதெல்லாம் நடக்கக் கூடியதா அக்கா!..

ஏன் நடக்காது?.. ஏம்மா நடக்காது!?..

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன்..
மண்ணுக் குள்ளே சிலமூடர் நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்...

அப்படின்னு மகாகவி கர்ஜிக்கின்றாரே.. கேட்டதில்லையா?..

அக்கா!..

அது மட்டுமா!..

சேயிழைமார் நெஞ்ச மீது - நாம்
சீறும்புலியைக் காணும் போது
தீயதோர் நிலைமை இங்கேது?.. - நம்
தென்னாட்டில் அடிமை நில்லாது!..

அப்படின்னு பாவேந்தர் சங்க நாதம் எழுப்புகின்றாரே.. கேட்டதில்லையா?..

அக்கா.. அக்கா.. எங்கேயோ போய்ட்டீங்க.. அக்கா!...

இல்லேம்மா.. கடக்க வேண்டிய தூரம் இன்னும் இருக்கும்மா.. டில்லியில இருந்து சான்பிராஸிஸ்கோ வரைக்கும் - பதிநாலாயிரத்து ஐநூறு கிலோ மீட்டர் தொலைவு - பதினேழு மணி நேரம் - இடை நில்லாமல் ஏர் இந்தியா விமானத்தை பெண்களே இயக்கி சாதனை செஞ்சிருக்காங்க.. அதுமாதிரி..

அது மாதிரி?..

அது மாதிரி எந்தத் தடையும் இல்லாம எதுக்கும் தயங்கி நிற்காம நாமும் நம்மைச் சேர்ந்தவங்களை நல்லபடியா வெற்றி முனைக்கு சேர்க்க வேண்டிய பொறுப்பு இருக்கு.. தாமரை!..

கண்கள் இரண்டில் ஒன்றைக் குத்தி
காட்சி கெடுத்திட லாமோ?..
பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம்
பேதைமை அற்றிடும் காணீர்!..

அப்படின்னு பாரதியார் சொல்றார்.. அவர் சொல்ற அறிவு..ங்கறது வெறும் ஏட்டுப் படிப்பு அல்ல.. அதுக்கும் மேலே!.. அந்த அறிவை வளர்த்துக் கொள்ள நாம் தலைப்பட்டு விட்டால் - தடைகள் எல்லாம் தானாகவே உடைந்து போகும்!..

அக்கா.. நீங்க உங்க தளத்தில மகளிர் தினத்துக்காக ஏதும் எழுதலையா!?..

இனிமே தான் எழுதணும் தாமரை.. இதோ பார்..
முனைவர் மகேஸ்வரி பாலசந்திரன் .. எழுதுன கவிதையைப் பார்..

யார் அக்கா.. இவங்க?..

கரந்தை தமிழ்ச் சங்க கல்வி நிலையத்தில் பணி.. தமிழார்வம் மிக்கவர்.. இது அவங்களோட பழங்கவிதையாம்.. காலத்துக்குப் பொருந்தி வருவதைப் பார்!..

பாரதியின் இலட்சியக் கனவே!..
முட்டிகளுக்குள் புதைத்துக் கொள்ளவா
உன் பட்டு முகம் படைக்கப்பட்டது?..

நெல்மணிக்குத் தப்பிய நீ
சொல்மணியாய் சுடர் விடத்தான்..
கோழிக் குழம்புக்குத் தப்பிய நீ
கோள்களின் போக்கிற்கு
புதுக்கவிதை விளக்கம் கூறத்தான்..
கள்ளிப் பாலுக்குத் தப்பிய நீ
காலங்களையே மாற்றி அமைக்கத்தான்..
அடுக்களைக்குள் ஆழ்ந்து போன நீ
அடிமைத் தளையைக் களையத்தான்!..

இப்படித்தான் பல கவிகள்
புரட்சிக் கவிகள் எழுதினேன்..
ஆனால், இன்றும்
நான் காண்பது என்னவோ?..

மெத்தப் படித்த அவள்
படித்தும் பதராக..
அடிமையாய்.. 
போகப் பொருளாய்..
காட்சிப் பதுமையாய்..
அடங்காப் பிடாரி என
அலங்கோலமாய்..
இன்னும்.. இன்னும்..

ஆணுக்குப் பெண் கீழானவளும் அல்ல
அவனுக்கு மேலானவளும் அல்ல..
அவள் வேறானவள்..

பாரதியே... 
பெண் முன்னேற்றம் 
உன்னெழுத்தின் சாதனைதான்..

ஆனாலும்,
நடக்கும் அநியாயம் கண்டு
கண் கலங்கியிருப்பாய்!..
இன்று நீ இருந்திருந்தால்!..

பெண்கள் தினமாம்..
கொண்டாட்டமாம்!..
மனம் வலிக்கின்றது.
பெண்ணாகப் பிறந்ததற்கு!..

மகத்துவம் மிக்க 
என் இனிய சமுதாயமே!..

என்று நீ
அவளை மனுசியாய்
பார்க்கப் போகின்றாய்?..

பெண்ணை
நல்ல தோழியாய்
நல்ல மனைவியாய்
நல்ல அகத்தவளாய்!..

இதுவே போதும் - அவள்
நலமுடன் வளமுடன் வாழ..

வாழ விடு..

வார்த்தையில் அல்ல..
வாழ்க்கையில்..
நிஜத்தில்!..

அருமையா எழுதியிருக்காங்க.. அக்கா!.. மனமார்ந்த பாராட்டுகள்!.. அப்போ நான் புறப்படுகின்றேன்!..

தாமரை..  அதுக்கு முன்னால இந்தாம்மா மோர்!..

ஜில்லுன்னு இருக்கு அக்கா!..
* * *


பெருஞ்சீர் என்று பெண்ணுக்கொரு பேர்..
அதை அழித்தால்
புவிக்கு இல்லை வேறொரு பேர்!..

அனைவருக்கும் மனமார்ந்த 
மகளிர் தின நல்வாழ்த்துகள்..

பெண்மை வெல்க..
என்றென்றும்!..
* * *

18 கருத்துகள்:

  1. அன்பின் ஜி உணர்ச்சிபூர்வமான உரையாடலில் அழகாக விளக்கிய விதம் அருமை ஓவியமும் அழகு முனைவரின் கவிதையும் அழகு வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அருமை...அருமை ஐயா நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அருமையான பகிர்வு.

    மகளிர் தின சிறப்புப் பகிர்வு மிக அருமை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அருமையான படைப்பு நண்பரே
    வாழ்த்துக்கள் மேலும் படைக்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. ஆஹா முதலில் என் நன்றிகள் பல,,,,,

    எல்லா முக்கிய நாட்களிலும் தங்கள் தளத்தில் அந்நாள் குறித்த பதிவுகளை எதிர்பார்ப்பது இப்போவெல்லாம் வழக்கமாகிவிட்டது.

    அருமையான தகவல்கள்,, நமக்கு நாமே பாதுகாப்பு கேடயமாக மாறவேண்டும். உண்மை உண்மை,,, பெண்ணின் பாதுகாப்பு என்பது ஆண்களிடம் மட்டும் அல்ல,,, தங்கள் கருத்துக்களை வணங்கி ஏற்கிறேன். நம்மில் ஊறிப்போன சில விடயங்கள் அவை தேவையில்லையெனினும் யாரையும் துன்புறுத்துவன இல்லையே,,,

    என் பதிவினை தங்கள் தளத்தில் பாராட்டி பதிந்தற்கு மிகவும் நன்றி,,, அதனினும் மகிழ்ச்சி கருத்துக்களை ஏற்றதற்கு,,,

    தாங்கள் தரும் ஊக்கங்களுக்கு என்றும் நன்றியுடையேன்.

    நன்றி நன்றி,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      சிறப்புடைய பதிவினை முன்னெடுத்து வைத்தேன்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. நல்ல பகிர்வு ஐயா...
    பெண்கள் முதலில் மாற வேண்டும்...
    சில இடங்களில் இப்படித்தான் அதில் மூக்கை நுழைப்போம் என்று திரிவதைவிட ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு போராடலாமே என்பது சரியே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. அருமையான பதிவு ஐயா. ஆக்கப்பூர்வமான போராட்டங்கள் இல்லை என்பதை அழகாகச் சுட்டிக் காட்டியுள்ளீர்கள். பெண்கள் தமக்குத் தாமே கேடயமாக மாற வேண்டும் மிக மிகச் சரியே. பெண்கள் தினம் என்பதெல்லாம் வெறும் விளம்பர தினம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      பெண்கள் தினம் என்பதை விளம்பரமாக ஆகிவிட்டார்கள்..
      அதை போராட்டம் நடத்துவோரும் கண்டு கொள்ளவில்லை..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..