நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மார்ச் 27, 2016

வெற்றி நமதே..

கடந்த சில நாட்களாக அதிகப்படியான நேரத்திற்கு வேலை..

அதையெல்லாம் மனம் விரும்புவதேயில்லை..
எனினும் - செய்தாக வேண்டிய சூழ்நிலை..

உலகெங்கும் வேலை நேரம் எட்டு மணி என்றாலும் -
இந்தப் பாலை வெளியில் பத்து மணி நேரம் என்பது குறிப்பிடத்தக்கது..

வேலை!.. விரும்பி ஏற்றுக் கொண்ட ஒன்று!..

அவ்வப்போது முன்னுக்குப் பின் முரணாகவே இருக்கும்..

வேலைத் தளத்தின் நிகழ்வுகள்!?..

அவைதான் மனதில் ரணங்களை ஏற்படுத்துபவை..


அன்பின் திரு கில்லர்ஜி அவர்கள் -
இங்குள்ள வேலைச் சூழலைப் பற்றி சொல்லியிருந்த வார்த்தைகள் இதோ!...

முட்டாளாக இருப்பதை விட
முட்டாளாக நடிப்பது கொடுமை!..

வளைகுடா நாட்டில் -
பரந்து விரிந்து கிடக்கும் வறண்ட பாலை நிலத்தை விடவும்
மூடர்களால் நிறைந்த வேலைத்தளம் தான் கொடுமையான விஷயம்!..

சரி.. அதைப்பற்றி வேறொரு நாளைக்கு
வாய்ப்பு கிடைக்கும் போது பேசுவோம்!..

இன்று விடியற்காலையில் - வேலைத்தளத்திலிருந்து திரும்பியதும்
அன்பின் திரு. சே. குமார் அவர்களின் தளத்தினைக் கண்டேன்..

பிரதிலிபி எனும் வலைத்தளம் நிகழ்த்திய சிறுகதைப் போட்டியில்
வெற்றி வாய்ப்பு நழுவியதைப் பற்றி அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்..

அதிலிருந்து ஒரு பகுதி இதோ!..

வெற்றி நமதில்லை

பிரதிலிபி - கொண்டாடப்படாத காதல்கள் போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன.. 

வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு வாழ்த்துக்கள். 

இந்த முறையிலான தேர்வு சரியாக வருமா என்று தெரியவில்லை. கொடுக்கப்படும் மதிப்பெண்களை வைத்தும் வாசித்தவர்களை வைத்தும் தேர்ந்தெடுக்கும் முறை சரிதானா தெரியவில்லை. 

நானெல்லாம் யாருக்குமே ஓட்டுப் போட முடியவில்லை... 

அவர்களிடம் தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் பண்ணிக் கேட்டபோது உங்களுக்கு நீங்களே வாக்களிக்க முடியாது. மற்றவர்களுக்கு அளிப்பதில் பிரச்சினை இல்லை என்றார்கள்... 

ஆனாலும் முடியவில்லை.. 

அப்படித்தான் என் நண்பர்கள் சிலரும் எனக்கு வாக்களிக்க முடியவில்லை என்றார்கள். 

20 மதிப்பெண்கள் வாங்கிய இந்து என்பவர் முதல் பரிசை தட்டிச் சென்றிருக்கிறார். 

எனக்கு கிடைத்தது 13 மதிப்பெண்கள்.. எனது கதை அதிக மதிப்பெண்கள் வரிசையில் நாலாவது இடம் என்று நினைக்கிறேன். 

நிறைய நல்ல எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கு ஒரு மதிப்பெண் கூட கிடைக்கவில்லை என்பதும் சிலருடைய எழுத்து வாசிக்கப்படவே இல்லை என்பது மிகப்பெரிய வேதனை... 

இப்படிப்பட்ட முறையிலான போட்டித் தேர்வுகளில் நல்ல எழுத்துக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை.. 

அதற்கு மாறாக அதிக நண்பர்களை முகநூலில் வைத்திருப்பவர்களே வெல்ல முடியும்... 

பிரதிலிபி - இனி வரும் போட்டிகளில் இந்த முறையிலான தேர்வை மாற்றி அமைத்தால் நல்லது. 

ஒரு மதிப்பெண் கூட கிடைக்காத நல்ல எழுத்துக்காரர்கள் போட்டிகளை தவிர்க்க ஆரம்பித்து விடுவார்கள். 

நான் இங்கு சொல்ல விரும்புவது -

எனக்கு அங்கு கருத்திட்ட - மதிப்பெண்கள் அளித்த அனைத்து உறவுகளுக்கும்

மேலும், கதை ரொம்பப் பிடித்துப் போய் அதற்கென தனிப்பதிவு இட்ட அன்பின் ஐயா. துரை. செல்வராஜூ அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. 

அந்தக் கதையை விரைவில் இங்கு பகிர்கிறேன்.

* * *

அவருடைய வார்த்தைகளைக் கண்டு மிகவும் வருத்தமடைந்தேன்..

மதிப்பெண்கள் என்பது ஒரு புறம் இருக்கட்டும்...

எழுத்துக்கள் வாசிக்கப்படவில்லை எனும் போது -

நல்ல எழுத்துக்காரர்கள் போட்டிகளை தவிர்க்க ஆரம்பித்து விடுவார்கள்.

ஒரு சமயத்தில் எழுதுவதையும் தவிர்த்து விடுவார்கள்..

நாற்பது ஆண்டுகளுக்குப் பின் ஒரு நிதர்சனத்தினைக் கண்டு வியந்து நிற்கின்றேன்..


கதைகளும் கவிதைகளும் என்னுள் அரும்பியபோது - எனக்கு வயது பதினேழு..

எழுதிக் கொடுத்த திருமண வாழ்த்து மடல்கள் - எத்தனை எத்தனையோ!..

எனது ஆக்கங்களை அன்றிருந்த வாரஇதழ்களுக்கு அனுப்பி வைப்பதே பொழுது போக்கு!..

முழு நாளும் நூலகத்தினுள் தான் கழிந்தது..

எனது கதைகளும் கவிதைகளும் - வழக்கம் போலவே,
என் தந்தையின் காதுகளுக்குச் சென்றன..

உருப்படுற வேலையைப் பாருப்பா!..

என்றார் - நிதானமாக.. வேறொன்றும் சொல்லவில்லை..

ஆனால், எனது கதைகளும் கவிதைகளும் அவருடைய நெஞ்சினுள் மகிழ்ச்சியை விதைத்திருந்ததை அப்புறம் தான் தெரிந்து கொண்டேன்..

1950 களில் தஞ்சையில் நாடகக் குழு ஒன்றினை நடத்தியவர் - என் தந்தை..

அந்த காலகட்டத்தில் திரு M.R. ராதா, கலைஞர் கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோருடன் நட்புறவில் இருந்தவர்..

தஞ்சை ராமநாதன் செட்டியார் ஹாலில் பல நாடகங்களை நடத்தியவர்..

சரி.. விஷயத்திற்கு வருவோம்!..

நிறைய நல்ல எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கு ஒரு மதிப்பெண் கூட கிடைக்கவில்லை என்பதும் சிலருடைய எழுத்து வாசிக்கப்படவே இல்லை என்பது மிகப்பெரிய வேதனை... 

- என்பதான கருத்து வருத்தத்திற்குரியது..

அவரவருக்கும் அவர்களின் படைப்பின் மீது நம்பிக்கை இருக்கும்..

அதனைத் தகர்த்துக் கொண்டு வேறொன்று மேலேறிப் பயணிப்பதைத் தாங்கிக் கொள்வதென்பது இயல்பான விஷயமில்லை...

தமது எழுத்துக்கள் கவனிக்கப்படவே இல்லை எனும் போது ஏற்படும் வலி!..

அதைத்தான் திரு. குமார் அவர்கள் கூறுகின்றார்..

அதனை நிஜமாகவே உணர்ந்திருக்கின்றேன்..

ஆனந்த விகடனுக்கு - தஞ்சையைப் பற்றிய தகவல் தொகுப்பு ஒன்று கலையகம் எனும் பெயரில் அனுப்பி வைத்தேன்..

அதனை ஏற்றுக் கொண்டு வெளியிட்டதுடன்- அந்த வாரத்தின் இதழும் ரூ.30/- பரிசுத் தொகையும் வழங்கி மகிழ்வித்தனர்..

அதன்பின் - எனது படைப்புகளில் ஒன்று
வேறொரு இதழில் வேறொரு பெயரில் வெளியானது..

அதிர்ச்சி.. ஆச்சர்யம்..

அப்போது - 35 ஆண்டுகளுக்கு முன் - பேனாவினை மூடி வைத்தேன்..

கதை, கவிதை - அனைத்தையும் புறக்கணித்தேன்..

ஆனாலும், கற்பனையின் ஊற்றுக் கண்களைத் திறந்தே வைத்ததேன்!...

நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் சில கவிதைகள்..

எனது கற்பனைக் காட்டுக்குள் நானே வனவாசம் செய்தேன்..

காலங்கள் - காட்டுக் குதிரைகளாக ஓடிப் போயின..


2012 நவம்பர் மாதம் தஞ்சையம்பதி மலர்ந்தது..

எனக்கென தளத்தினை வடிவமைத்ததும் தான் சுதந்திரக் காற்று சுற்றிச் சூழ்ந்தது..

எனது தமிழ்.. எனது தளம்..
எனது எண்ணம்.. எனது எழுத்து!..

இவற்றின் மீது மேலாண்மை செய்திட இனி எவரும் இல்லை!..
என்ற எண்ணமே - இனித்திருந்தது நெஞ்சினில்!..

கவிதைகளுக்காகவும் கதைகளுக்காகவும் தான்
இந்தத் தளத்தினைத் தொடங்கினேன்...

நினைத்தது ஒன்று.. ஆனால் நடந்தது வேறொன்று!..

அவ்வப்போது - இயற்கை நலன்களைப் பற்றிய பதிவுகள் - என்றாலும்..
தேவாரம், திருத்தலம், திருக்கோயில் செய்திகளே பதிவுகளாகின்றன!..

வலைச்சரத்தில் முதன்முதலில் அம்பாளடியாள் அவர்கள் அறிமுகம் செய்தார்..

அதன்பின் - பலமுறை தஞ்சையம்பதி வலைச்சரத்தில் சிறப்பிக்கப்பெற்றது..

ஆயினும் வருவோரும் கருத்துரைப்போரும் குறைவு..

எனது தமிழும் எனது தளமும் 
இறையியலைக் கொண்டிலங்குவதால் 
குறையுடையதாகிப் போனதுவோ!..

அது நிறையே அன்றி - குறையானதும் அல்ல.. குறைவானதும் அல்ல!.

எனினும்,

மிகுந்த வருகையாளர்களைக் கொண்டிருக்குமேயானால் -
குமார் அவர்களுடைய சிறுகதையினை பிரதிலிபியில் வாசித்ததும்,
அதில் மனம் லயித்து அதற்காகவே ஒரு பதிவினை வழங்கி
நண்பர்கள் மத்தியில் அறிமுகம் செய்து - வாக்களிக்குமாறு
கேட்டுக் கொண்டது நிறைவேறியிருக்கும்..

பெரும்பான்மையான வாக்குகள் அந்தச் சிறுகதைக்குக் கிடைத்திருக்கும்..
நண்பர் குமார் அவர்களும் வெற்றிக் கனியை எட்டியிருப்பார்...

நூலிழை இடைவெளியில் தான் வெற்றி விலகிப் போயிருக்கின்றது..

இழப்பு - வெற்றிக்கேயன்றி - நமக்கு அல்ல!..

மகாகவி காளிதாஸ் எனும் திரைப்படத்தில் - கவியரசர் கண்ணதாசன்,

ஊருக்குக் கதை சொல்வோர்
உள்ளத்தை வதை செய்தால்
சீர் பெறும் கவி வாழுமா?..

- என்று கேட்டிருப்பார்...

தஞ்சையம்பதியின் பதிவு ஒன்றினைத்
தனது பெயரில் ஒருவர் வெளியிட்டிருந்தார் - சில வருடங்களுக்கு முன்!..

பதிவின் முத்திரைச் செய்திகள் - அங்குமிங்கும் சுற்றிக் கொண்டு
Facebook - வழியாக எனக்கே வருகின்றன..

அதைக் கண்டு வரும் சீற்றம் - ஒரு நிமிடம் தான்.. அதன்பின்,

காய்த்த மரம் தானே கல்லடி படும்!.. என, மனம் அமைதியாகி விடும்..


அவ்வாறு செய்தவர்கள் தான் ஒருசிலர் தான்.. எனினும்,
அதுவே என் எழுத்துக்களுக்கான வெற்றி எனக் கருதுகின்றேன்...

அன்பிற்குரிய நண்பர்கள் வற்புறுத்தியதால்தான் -
கடந்த வருடம் நடந்த சந்திப்பு விழாக் குழுவினர் நடத்திய போட்டியில் -
பொருள் பொதிந்த பதிவுகளுடன் கலந்து கொண்டேன்...

எழுத்துக்கள் - எண்ணங்கள் என்ற ஆவல் மட்டுமே மீதூறியிருந்தது...

அந்த வேளையில் கூட,
வெகுவான பார்வையாளர்கள் தளத்திற்கு வந்து கருத்துரைத்ததில்லை..

மிக சிரமமான சூழ்நிலை அப்போது..

தங்கியிருந்த அறையை முற்றாக ஒழித்துக் கொடுக்க வேண்டும்..
அந்த வாரத்தில் திட்டமிட்டபடி ஊருக்கும் பயணப்பட வேண்டும்..

நம்புவது கடினம்!..

தங்கியிருந்த அறையை விட்டு கிளம்புவதற்கு
முதல் நாள் வரை விழாவினைக் குறித்த பதிவுகள் தான்!..

இதெல்லாம் வெளியில் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை!..

இந்த சமயத்திலாவது இவர்களெல்லாம் எனது தளத்திற்கு வரவேண்டும்!..
- என விரும்பினேன்..

அந்த ஆவல்.. அது தான் நிறைவேறவில்லை!..

அதற்குக் காரணம் -

இதயப் பெருவெளியில் இணையாத காரணமாக இருக்கலாம்..

ஆனால் - இதற்கெல்லாம் கவலை கொள்ள நேரமில்லை..


இன்னொரு எழுத்தினை விளைவிக்கும் எழுத்தே - எழுத்து!..

இப்படி யாரும் சொல்லியிருக்கின்றார்களா?.. எனக்குத் தெரியாது..

ஆனாலும் - என் நெஞ்சகத்தினுள் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருப்பது..

அன்பின் குமார்!..

தங்கள் எழுத்து என்னுள் ஒன்றினைத் தோற்றுவித்தது..

அந்த வகையில் வெற்றி உங்களுடையதே!..

அதை விடுத்த எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்கவும்..

கவிச் செருக்கு!.. என்று இன்னொன்று உள்ளது..

நாமே வெல்வோம்!. - என்பது அது..

ஆனாலும், பிறர் கொண்ட நேற்றைய வெற்றிகள் எல்லாம் என்ன ஆயின?..

எவருக்கும் தெரியாது!..

ஒரு மதிப்பெண் கூட கிடைக்காத நல்ல எழுத்துக்காரர்கள் போட்டிகளை தவிர்க்க ஆரம்பித்து விடுவார்கள். 

- எனும் தங்களுடைய வரிகளுக்காகவே இந்தப் பதிவு!..

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை..
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை!..

- என்று வரைந்த கவியரசர்,

குழந்தையின் கோடுகள் ஓவியமா - இந்தக்
குருடன் வரைவது ஒரு காவியமா!..

- என அவையடக்கமும் கூறுவார்..

குழந்தையின் கை தீட்டிய கோடுகள் 
ஓவியம் ஆவதும் காவியம் ஆவதும்
யாருடைய கையில்!.. 

வாழ்க நலம் 
***

24 கருத்துகள்:

  1. என்னைப் பொறுத்தவரை பரிசுகளுக்காக எழுதுதல் தவிர்க்கப் படவவேண்டும் என்றே எண்ணுகின்றேன் ஐயா.
    பரிசுக்கு உரிய கதையினைத் தேர்ந்தெடுக்கும் விதம் போட்டி நடத்துபவர்களைப் பொறுத்து, மாறுபடலாம்
    எனவே
    எழுதுதல் என்பதை
    நண்பர்களுக்காக எழுதுவோம்
    நம் எழுததுக்களைப் படிக்கும் அன்பர்களுக்காக எழுதுவோம்
    நமது மன நிறைவிற்காக எழுதுவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      >>> நமது மன நிறைவிற்காக எழுதுவோம்..<<<

      சரியாகச் சொன்னீர்கள்.. அதுவே ஆறுதல்!..
      அதிக வேலைச் சுமையினால் உடன் பதிலளிக்க இயலவில்லை..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர்
    தோற்றம் நிலக்குப் பொறை.

    நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை.

    எனினும் போட்டிகள் நடத்தும் பத்திரிக்கைகள், வலைத்தளங்கள் தம்மை பிரபலப் படுத்திக் கொள்ளவே நடத்துகின்றனவோ என்ற ஐயமும் எழாமல் இல்லை.

    போட்டிகளில் முக்கியமாக, கவிதைப் போட்டிகளில் பங்கெடுப்பது ஒரு உற்சாகமான பொழுது போக்கு என்ற நோக்கிலே பங்கெடுத்தால் எதிர்மறை உணர்வுகள் தோன்ற வாய்ப்பு இல்லை.

    அண்டத்திலே ஆயிரக்கணக்கான, ஏன் கோடிக்கும் மேலான நக்ஷத்திரங்கள் நாம் காணும் நக்ஷத்திரங்களை விட ஒளி கொண்டவை. நம் கண்களிலே பட வில்லை என்பதால் அவை இல்லை என்று சொல்லி விட இயலுமா என்ன !!

    ஆக, ஊக்கமது கைவிடேல்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      போட்டிகளை நடத்தும் இதழ்கள் நம்மைக் கொண்டே - தம்மை பிரபலப்படுத்திக் கொள்கின்றனர் என்பது உண்மையே..

      >>>நம் கண்ணிலே படவில்லை என்பதற்காக நக்ஷத்திரங்கள் இல்லை எனச் சொல்லிவிட முடியுமா!..<<<

      தங்கள் கருத்து உற்சாகமளிக்கின்றது..

      அதிக வேலைச் சுமையினால் உடன் பதிலளிக்க இயலவில்லை..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. நமது எழுத்தும், சிந்தனையும் தொடரட்டும். நேர்மறை எண்ணங்களை என்றும் மனதில் கொண்டு தொடர்ந்து பயணிப்போம், வாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      >>> நேர்மறை எண்ணங்களை கைக் கொண்டு தொடர்ந்து பயணிப்போம்..<<<

      இனிய கருத்து.. மனதை ஆற்றுப்படுத்துகின்றது..

      அதிக வேலைச் சுமையினால் உடன் பதிலளிக்க இயலவில்லை..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பிரதிலிபி நடத்திய போட்டி ஒன்றில் நானும் கலந்து கொண்டேன் திரு குமார் கூறியது போல் முகநூலில் நட்பு வட்டம் அதிகம் இருந்தால் அதிக பேரால் படிக்கப் படும் முகநூலில் அல்லாது பலருக்கும் நான் என் பதிவைப் படிக்கவேண்டி எழுதி இருந்தேன் அதாவது வெற்றிக்கு நானே வாசகர்களைக் கொண்டு வரவேண்டும் இது எனக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை என்பதால் அடுத்து வந்த போட்டிகளில் எழுதவில்லை. நான் என் படைப்புகளைப் பத்திரிக்கைகளுக்கும் அனுப்புவதில்லை. இருந்தும் நண்பர்களின் வேண்டுதலுக்கிணங்ககல்கியின் நான்கு வாரக் குறு நாவல் போட்டியில் கலந்து கொண்டுள்ளேன் முடிவு வெளியாகி விட்டதா என்றும் தெரியவில்லை. இங்கு வாரப்பத்திரிக்கைகள் கிடைப்பது கடினம் ஆத்ம திருப்திக்கு எழுதுகிறோம் உலகளாவிய வாசகர்கள் இருக்கிறார்கள் எல்லோரும் ரசிக்கிறார்கள் என்று தெரியாவிட்டாலும் வலை உலகில் ஓரளவு அறிந்தவனாகி இருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பினையா..

      >>> உலகளாவிய வாசகர்கள் இருக்கின்றார்கள்.. எல்லாரும் ரசிக்கின்றார்கள்..<<<

      அந்த மகிழ்ச்சி ஒன்றே போதும்!..

      அதிக வேலைச் சுமையினால் உடன் பதிலளிக்க இயலவில்லை..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. போட்டி முடிவுகளை
    தகுதியான நடுவர்களே
    தீர்மானிக்க வேண்டும்!
    கருத்துக் கணிப்பு
    வாசகர் கணிப்பு
    உரிய
    திறமையாளர்களை
    தெரிவு செய்ய
    இடம் தராமல் போகலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      >>> போட்டி முடிவுகளை தகுதியான நடுவர்களே
      தீர்மானிக்க வேண்டும்..<<<

      அதுவே நியாயம்!..

      அதிக வேலைச் சுமையினால் உடன் பதிலளிக்க இயலவில்லை..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அன்பின் ஜி
    எழுதுவது நமது திருப்திக்காக எழுதுகிறோம் இதில் தோல்வியைக் கண்டு துவண்டு காரியமில்லை எழுத்து சந்தோசமே அதை நான்குபேர் பாராட்டும் பொழுது மேலும் சந்தோசமே அதுவே வெற்றியானால் மேலும், மேலும் சந்தோஷமே என் கடன் எழுதிக் கிடப்பது என்பதே என்றாவது ஒருநாள் எனது எழுத்தும் உலகம் அறியப்படும் என்ற நம்பிக்கையில் விதைக்கின்றேன்
    அன்புடன் - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      >>> எழுதுவது நமது திருப்திக்காக..
      என்றாவது ஒருநாள் நமது எழுத்தும் உலகம் அறியப்படும்!..<<<

      சரியாகச் சொன்னீர்கள்!..

      அதிக வேலைச் சுமையினால் உடன் பதிலளிக்க இயலவில்லை..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. 2012 ல் உங்கள் தளம் மலர்ந்தது முதல்
    படிக்கத் தூண்டுது இப்பதிவு....
    எழுத்து நமதே வெற்றியும் நமதே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      >>> எழுத்தும் நமதே.. வெற்றியும் நமதே!..<<<

      அதுவே மகிழ்ச்சி!..

      அதிக வேலைச் சுமையினால் உடன் பதிலளிக்க இயலவில்லை..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. வெற்றி தோல்வியை பற்றி நினைக்காமல் எழுதிக் கொண்டு இருக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வதும் சரியே. நாம் எழுதுவது தேவகோட்டையார் சொல்வது போல் நம் ஆத்ம திருப்திக்கு என்பதும் சரியே.

    குமார் கதையை உங்கள் தளத்தில் படிக்க ஆவல்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      >>> வெற்றி தோல்வியைப் பற்றி நினைக்காமல்
      நமது மன நிறைவிற்காக எழுதுவோம்..<<<

      நெஞ்சில் நிறைகின்ற வார்த்தை..

      அதிக வேலைச் சுமையினால் உடன் பதிலளிக்க இயலவில்லை..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. மனதில் உள்ளதை மறைக்காமல் பகிர்ந்துகொண்டிருக்கிறீர்கள். முகநூலில் அதிகப்படியான நட்பு வட்டம் உள்ளவர்கள் மட்டுமே இது போன்ற போட்டிகளில் வெல்வார்கள். நம்முடைய பதிவுகளுக்குப் பின்னூட்டங்கள் குறைவு என்பதால் மனம் தளர வேண்டாம். நாம் நம்முடைய ஆத்ம திருப்திக்காக எழுதுகிறோம். அவ்வளவு தான். விண்ணிலே கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் நாம் காணுகின்ற நட்சத்திரங்களை விட அதிகப்படியான ஒளி கொண்டவை. நாம் பார்க்கவில்லை என்பதால் அவையில்லை என்று ஆகிவிடுமா என சுப்பு தாத்தா மிக அருமையாகச் சொல்லியிருக்கிறார். நம்முடையதை எடுத்து வேறு பெயரில் வெளியிடும் எழுத்துத் திருட்டு காலங்காலமாக நடந்துகொண்டு தான் இருக்கின்றது. மனந்தளராமல் தொடர்ந்து எழுதிக்கொண்டிருங்கள். கவிதையும் கதையும் தொடர்ந்து எழுதுங்கள். நல்ல படைப்பெனில் அது கண்டிப்பாக காலங்கடந்து நிற்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      >>> பின்னூட்டங்கள் குறைவு என்று மனம் தளரவேண்டாம்..<<<

      ஊக்கமும் உற்சாகமும் தங்கள் வார்த்தைகளில்.. அதுவே சந்தோஷம்!..

      அதிக வேலைச் சுமையினால் உடன் பதிலளிக்க இயலவில்லை..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. ஆம் இது போன்ற சம்பவங்கள் மனதை சமயங்களில் பாதிக்கத் தான் செய்கிறது. ஜெய்குமார் சார் சொன்னது எனக்கு நேரிலும்,, நம் திருப்திக்காக எழுதுவோம் என்று, அது தான் ,,,

    ஆனால் எனக்கு சில சமயங்களில் மனம் வேதனைப்டும் ,,
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      >>> சில சம்பவங்கள் மனதை சமயங்களில் பாதிக்கின்றன..
      ஆனாலும் மன திருப்திக்காக தொடர்ந்து எழுதுவோம்..<<<

      அன்பின் ஆறுதல் மொழி!..

      அதிக வேலைச் சுமையினால் உடன் பதிலளிக்க இயலவில்லை..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. இதற்கு முன்னர் இரண்டு கருத்து இட்டேன் ஐயா... அது வரவில்லை போலும்... எங்கே போனதுன்னு தெரியலை....

    என்னைப் பொறுத்தவரை பரிசுக்காக எழுதுவதில்லை... எழுத நினைத்தால் எழுதுவேன்... எல்லாப் போட்டிகளுக்குமே இறுதிநாள் கடைசி நேரத்தில் எழுதி அனுப்புவதுதான் என் வாடிக்கை.

    நேசம் சுமந்த வானம்பாடியும் அப்படி எழுதிய கதைதான்... இறுதிநாள் இரவு எட்டு மணிக்கு மேல் ஆரம்பித்து பத்து மணிக்குள் சமையல் வேலை பார்த்தபடி கதை பயணித்த பாதையில் பயணித்து பத்தரை மணி ஆகுமுன் (நம்ம ஊரில் பனிரெண்டாகும்ல்ல) அனுப்பி வைத்தேன்.

    ஜெயக்குமார் ஐயா சொல்வது போல் நானும் பரிசு பெறணும் என்றெல்லாம் எண்ணி எழுதுவதில்லை... எனக்கு ஒரு கதையோ கட்டுரையோ கூடுதலாக கிடைக்கும் என்பதாலேயே எழுதுவேன்.

    எனது ஆதங்கம் எல்லாம் சிலரின் பதிவுகள் படிக்கப்படாமலே முடிவுகள் எடுக்கப்பட்டுவிட்டது குறித்துதான்.... தினம் 5 என முகநூலில் பகிர்வதாக அட்டவணை எல்லாம் அனுப்பினார்கள். ஆனாலும் எனது கதை எல்லாம் பகிரப்பட்டதா தெரியவில்லை.

    எனக்கு 13 மதிப்பெண்கள்... கருத்துக்கள்... 70 பேருக்கு மேல் முகநூல் விருப்பம் என கிடைத்திருந்தது. பலருக்கு மதிப்பெண் இல்லை... கருத்து இல்லை... பார்வையும் குறைவு... பின்னர் எப்படி அவர்கள் எல்லாம் திரும்ப எழுதுவார்கள் என்பதே என் வருத்தம்.

    தாங்கள் விரிவாகப் பகிர்ந்திருக்கிறீர்கள்... அருமையான பகிர்வு.

    பதிவுத் திருட்டை நான் சுத்தமாக வெறுக்கிறேன்... நாம் கஷ்டப்பட்டு எழுதியதை எவனோ ஒருவன் தான் எழுதியது போல பதிவதும்... பத்திரிக்கைக்கு அனுப்புவதும் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்லவே... அதனாலேயே நான் கதைகளை பெரும்பாலும் தளத்தில் பதிவதில்லை.

    நல்ல பகிர்வு ஐயா... என் பதிவின் ஊடாக தாங்கள் பகிரும் இரண்டாவது பதிவு இது... ரொம்ப சந்தோஷம்...

    நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..

      >>> பலருக்கு மதிப்பெண்கள் இல்லை..
      கருத்தும் இல்லை.. பார்வையும் குறைவு..<<<

      இந்த வேதனைதான் இந்தப் பதிவிற்கு அடிப்படை..
      தங்களுடைய வருத்தமும் என் வருத்தமே..

      நண்பர்கள் பலரும் அன்பு கொண்டு ஆதரவாகக் கருத்துரைத்துள்ளனர் .. அதுவே ஆறுதல்!..

      அதிக வேலைச் சுமையினால் உடன் பதிலளிக்க இயலவில்லை..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. மிக் அமிக அருமையான பதிவு ஐயா!! கருத்துகள் அனைத்தும் நாங்கள் ப்ரதிலிபி தேர்வு முறை பற்றி என்ன நினைத்தோமோ அதே. குமாரின் அனைத்துக் கருத்துகள் உட்பட. இது கிட்டத்தட்ட மத்திய அரசு வழங்கும் விருதுகளுக்கு லாபியிங்க் செய்வது போலத்தான் ....இந்த முறை ஏற்புடையது இல்லை...நிச்சயமாக ஏற்புடையது இல்லை இந்த முறை.

    தங்கள் அனுபவங்கள் போன்றே எங்களுக்கும். பதிவுகள் திருடுவது மிகவும் மோசமான ஒன்று. பிரதிலிபியில் பல கதைகள் படிக்கப்படவில்லை. ஏன் எங்களுக்குமே பலரது படைப்புகளை வாசிக்க இயலவில்லை.

    அருமையான பதிவு ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      >>> இந்த முறை ஏற்புடையது அல்ல..<<<

      சரியாகச் சொன்னீர்கள்.. அவர்களைக் கேட்டால் எங்களது தளத்திற்கான வரைமுறைகள் என்பார்கள்..

      தங்களது கருத்துரை மனதிற்கு ஆறுதல்!..

      அதிக வேலைச் சுமையினால் உடன் பதிலளிக்க இயலவில்லை..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..