நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மார்ச் 14, 2016

மகாமக மங்கலம்

தென்னகத்தின் மாபெரும் திருவிழா - எதுவெனில்,
திருக்குடந்தையில் நடைபெறும் மகாமகப் பெருவிழா!..

பாரதத்தின் பெருந்திருவிழா ஆகிய கும்பமேளா..
புனித நதிகளான கங்கை யமுனை சங்கமத்தில் நடைபெறுவது.

அலகாபாத், ஹரித்வார், உஜ்ஜையினி மற்றும் நாசிக் எனும் திருத்தலங்களில் பல கட்டங்களாக நடைபெறுவது..



ஆனால் -

மகாமகப் பெருவிழாவோ - திருக்குளம் ஒன்றில் நிகழ்வது..

அதுவும் - ஏறக்குறைய ஆறு ஏக்கர் மட்டுமே பரப்பளவுடையது..

அந்தத் திருக்குளத்தைச் சுற்றியுள்ள தெருக்களோ குறுகலானவை..

பெருந்திருவிழா நிகழும் திருக்குடந்தை நகரமோ - நடுத்தரமானது..


ஆயினும்,

மகாமகத்தை முன்னிட்டு வந்து குவிந்த லட்சோப லட்சம் மக்களை வரவேற்று வழிப்படுத்தி நல்லபடியாக வழியனுப்பி வைத்த -

திருக்குடந்தை மாநகர மக்களின் நெஞ்சமோ - விசாலமானது!..

தாவிமுதல் காவிரி நல்யமுனை கங்கை
சரஸ்வதி பொற்றாமரை புட்கரணி தெண்ணீர்க்
கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த
குடந்தைக் கீழ்க் கோட்டத்து எம்கூத்தனாரே!..

என்று ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே -
அப்பர் ஸ்வாமிகளால் புகழ்ந்துரைக்கப் பெற்ற சிறப்பினையுடையது மகாமகம்..

மகாமகக் குளம் - நூறாண்டுகளுக்கு முன்..
பொற்றாமரைக் குளம் - நூறாண்டுகளுக்கு முன்
இன்று நாம் காணும் மகாமகக் குளமும் படித்துறையும் படித்துறைக் கோயில்களும் கோவிந்த தீக்ஷிதர் அவர்களால் உருவாக்கப்பட்டவை.. 

தஞ்சையை ஆட்சி செய்தவர்களாகிய -
சேவப்ப நாயக்கர் ( 1532 - 1580)
அவருடைய மகன் அச்சுதப்ப நாயக்கர் ( 1560 - 1614)
அவருடைய மகன் ரகுநாத நாயக்கர் ( 1600 - 1634)
எனும் மூன்று மன்னர்களிடமும் முதன்மை அமைச்சராகப் பணியாற்றிய
பெருமைக்குரியவர் கோவிந்த தீக்ஷிதர்..  

அரசர்கள் தீக்ஷிதருக்கு அளித்த பொன்னையும் பொருளையும் கொண்டு - 
இந்தத் திருப்பணியை அவர் மேற்கொண்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன..

குடந்தையிலுள்ள வேத பாட சாலையை நிறுவியவரும் இவரே..

இவர் பெயரால் - தஞ்சையில் ஐயன் குளம், ஐயன் கடைத்தெரு என்று விளங்கி வருகின்றன..

தஞ்சையை அடுத்துள்ள ஐயம்பேட்டையும்,
குடந்தை அடுத்துள்ள கோவிந்தபுரமும் இவர் பெயரால் அமைந்தவையே.. 

கும்பேஸ்வரர் கோயில் கொடியேற்றம்
நிகழாண்டில் -  மாசிமகத் திருவிழாவிற்காக - கடந்த பிப்ரவரி 13 (மாசி முதல் நாள்) அன்று திருக்கொடியேற்றம் நிகழ்ந்தது..

அன்று தொடங்கி - மாசி மாதத்தின் கடைசி நாளாகிய
நேற்று வரையிலும் ஐம்பது லட்சம் பேருக்கு மேல் -
மகாமகத் திருக்குளத்தில் நீராடியுள்ளதாக அறியப்பட்டுள்ளது..

தீர்த்தவாரி நாளாகிய மகாமகத்தன்று மட்டுமே ஐந்து லட்சம் பேர் நீராடினர் என்று கூறப்பட்டாலும்

மாசி மாதம் முழுதுமே நீராடலாம் என்று ஆன்றோர்கள் அறிவித்ததன் பேரில்
மகாமகத் திருவிழா முடிந்த பின்னும் -

தென்னகத்தின் பலபகுதிகளில் இருந்தும் மக்கள் திரண்டு வந்து புனித நீராடி இறைதரிசனம் செய்தபடி இருந்தனர்..

அந்த அளவில் மகாமகத் திருக்குளத்தில் புனித நீராடல் நேற்றுடன் நிறைவடைந்தது..

ஸ்ரீ சார்ங்கபாணி திருக்கோயில்
1956 ல் மகாமகம் நிகழ்ந்து முடிந்த சில மாதங்களில் பிறந்தவன் நான்..

நான் கண்ட முதல் மகாமகம் 1968..

சிறு வயது என்பதானால் யாரும் அழைத்துச் செல்லவில்லை.. ஆயினும்,

அப்போதே சில விவரக் குறிப்புகளைச் சேகரித்து வைத்திருந்தேன்..

அடிக்கடி வீடு மாற்றிய பிரச்னைகளினால் -
அந்த விவரக் குறிப்புகள் எங்கே போயின என்று தெரியவில்லை..

அடுத்த மகாமகம் - 1980..

குடந்தையை சுற்றிச் சுற்றி வந்து குதுகலித்த மகாமகம்..

குடந்தையின் பெரிய வர்த்தக நிறுவனங்கள் அத்தனையும் - மக்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்களை அன்பளிப்பாக வழங்கி மகிழ்ந்த காலம் அது..

A.R.R., சீவல் நிறுவனத்தினர் வழங்கிய வெற்றிலை சீவல் வைக்கும் பெட்டி பலகாலம் வரை இருந்தது..

1992 ல் மகாமகம் நிகழ்ந்த போது குவைத் நாட்டில்!..

அதன்பின் 2004 மகாமகத் திருவிழாவிற்கு
அங்கிருந்து விடுமுறையில் வந்து கலந்து கொண்டேன்..

நிகழாண்டின் மகாமகத் திருவிழாவிற்காகவே -
எல்லாம் வல்ல இறைவனின் பெருங்கருணையினால் -
குவைத்திலிருந்து விடுமுறையில் வந்தேன்..

மகாமகத் திருக்குளத்திலும் பொற்றாமரைக் குளத்திலும்
காவிரியின் சக்ரப் படித்துறையிலும் மகிழ்வுடன் நீராடி
இறை தரிசனம் செய்தேன்..

இந்த சிறு விடுப்பில் அடுத்தடுத்து மூன்று முறை தஞ்சையிலிருந்து
குடந்தைக்கு வந்து ஆலய தரிசனம் செய்து மகிழ்ந்தது - பெரும் பேறு..

2004 மகாமகத்தின் போது - Yashica MF 2 எனும் கேமரா கையில் இருந்தது..

அதைக் கொண்டு எடுத்த பல படங்களில் இரண்டு மட்டும் இங்கே!..

மகாமகம் - 2004
மகாமகத் திருக்குளம் - 2004
2004 மகாமகத்தின் போது திருக்குளத்தின் படித்துறை கோயில்களுக்கு ஒரே நிறம் தீட்டப்பட்டிருப்பதை மேலே உள்ள படத்தில் காணலாம்..

மகாமக நீராடல் - 2016



மகாமகத் திருக்குளம் - 2016
இந்த முறை படித்துறை கோயில்களுக்கு பல நிறங்கள் தீட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது..

Thanks - Kumbakonam Fb
மகாமக நிறைவு நாள்
நிகழ்ந்த மகாமகம் நவீன தொலைத் தொடர்பு வசதிகளினால் பலவகையிலும் சிறப்புடையதாக விளங்கியது..

பெரும்பாலான மக்களிடம் உயர்தரமான நுண்ணலை தொலைபேசிகள்..

மக்களுக்கு ஆகும் வகையில் - இணையத்திலும் சமூக வலைத் தளங்களிலும் பயனுள்ள தகவல்கள் பதிவு செய்யப்பட்டன..

சிறப்புமிகும் மகாமகப் பெருந்திருவிழாவினைப் பற்றி நமது தளத்தில் எட்டு பதிவுகள் வெளியாகின..

இதையெல்லாம் கடந்து மிக அதிகமான அளவில் -
குடந்தை மகாமகத்தினைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டவர்

மதிப்புக்குரிய முனைவர் பா. ஜம்புலிங்கம் அவர்கள்..

முப்பது பதிவுகளுக்கும் மேலான பதிவுகள்..


நன்றி - முனைவர் பா. ஜம்புலிங்கம்
குடந்தை மகாமகத்துடன் தொடர்புடைய பன்னிரு சிவாலயங்களுக்கும்
ஐந்து பெருமாள் திருக்கோயில்களுக்கும் தமது பதிவுகளின் வாயிலாக அழைத்துச் சென்றவர்..

அது மட்டுமல்லாமல் -

முந்தைய மகாமக ஆண்டுகளில் வெளியாகிய பல்வேறு தகவல்களையும் வழங்கியவர்..

இவற்றுள் - தாமாகச் சேகரித்து வைத்திருந்தவைகளும்
நமக்காகத் தேடியலைந்து கண்டறிந்து வழங்கியவைகளும் அடங்கும்..

சில பதிவுகள் - இந்து முதலான ஊடகங்களில் வெளியாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது..

பணிச்சுமைகளுக்கிடையேயும் அவர் தமது தளத்தில் வழங்கியுள்ள செய்திகள் அனைத்தும் தகவல் களஞ்சியங்களாக விளங்குகின்றன..

அவருடைய உழைப்பு மகத்தானது..


மகாமகத் திருவிழா நிறைவடைந்தது என்று அறிகின்றபோது ,
முனைவர் பா. ஜம்புலிங்கம் அவர்களின் தனித்தன்மையான உழைப்பும்
கண் முன்னே வந்து நிற்கின்றது..

மேலும் பல தகவல்களுடன் அவருடைய தளம் விளங்குகின்றது..

இதோ இணைப்பு!..

மகாமகம் - நினைவுப் பதிவுகள் 

தமிழ் கூறும் நல்லுலகிற்கு மேலும் பல தகவல்களைத்
தமது பதிவுகளின் வாயிலாக வழங்கிட வேண்டுமென
எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்தி
அவரது தளத்தினைச் சிறப்பிக்கின்றேன்..

வாழ்க நலம்..
* * *

16 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    பிரமிப்பான தகவல்களும், அரிய சரித்திர நிகழ்வுகளும் அறிந்தேன் புகைப்படங்கள் அழகோவியமாக காட்சி அளித்தன மிக்க நன்றி பகிர்வுக்கு.

    தொடர்ந்து தகவல் தந்து கொண்டு இருந்த முனைவர் திரு. பி. ஜம்புலிங்கம் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      உடன் வருகை.. மின்னல் வேகம்!..

      இனிய கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. கடந்த வருடம் இதற்காகத் திட்டமிட்டேன். எண்ணிலடங்கா முறைகள் கும்பகோணத்திற்கும் அருகிலுள்ள கோயில்களுக்கும் சென்றேன். நமது பண்பாட்டைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணமும், பல மகாமகங்கள் பேசுமளவுப் பதியவேண்டும் என்ற அவாவும் என்னை எழுதவைத்தன. இதற்கெல்லாம் அப்பால் இறையருளும், தங்களைப் போன்றோரின் அன்பும் நான் எழுத உதவி செய்தன. தங்களின் அன்பு என்னை நெகிழவைத்துவிட்டது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களுடைய தேடல்கள் அருமை..
      அரிய தகவல்கள் பலவும் அறிந்து கொள்ள முடிந்தது..

      நல்லதொரு பதிவினையும் தளத்தினையும்
      நமது தளத்தில் பதிவு செய்து சிறப்பித்தது மகிழ்ச்சி..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பழைய மகாமக படங்கள் மிக அருமை.திரு ஜம்புலிங்கம் ஐயா பதிவுகளையும்சிலவற்றைப் படித்தேன். அவர்கள் பணி சிறப்பானது.
    நானும் மாகமகம் நடப்பதற்கு முன்பு பார்த்து படங்கள் எடுத்து வந்தேன். அவை ஏனோ கணினியில் ஏற மறுக்கின்றன. முகநூலில் சிலவற்றை பகிர்ந்தேன்.
    சிறப்பான பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  5. அருமையான தொகுப்பு, புகைப்படங்கள் அனைத்தும் அழகு,, பழய புகைப்படங்கள்,, அழகோ அழகு,, நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. புகைப்படங்களுடன் சரித்திர பதிவு அருமை நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  7. நல்லதொரு அசைபோடும் பதிவு/ பல நாட்கள் நினைத்துப் பார்க்க வைக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. படங்களுடன் பகிர்வு அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..