நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜனவரி 05, 2016

மார்கழித் தென்றல் - 20

குறளமுதம்

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்றை விடற்கு.. (0350)
***

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
திருப்பாடல் - 20

திவ்ய தேசம் - வடுவூர்
அபிமான திருத்தலம்



எம்பெருமான் - ஸ்ரீ கோதண்டராமன்

உற்சவர் - ஸ்ரீ கோதண்டராமன் 

ஸ்ரீ விமானம் - ஸ்ரீ புஷ்பக விமானம்..

ஸ்ரீ வைதேகி இளையபெருமாள்
ஆஞ்சநேயர் உடனாகிய திருக்கோலம் ..

கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்


ராவண வதம் முடிந்தது..
அயோத்தி மாநகருக்குத் திரும்பும் வேளை..

ஸ்ரீ ராமனையும் வைதேகியையும் வந்து தரிசித்த 
முனிவர்கள் தம்முடனேயே இருக்குமாறு
வேண்டிக் கொண்டனர்..

அதற்கு - மறுநாள் காலையில் 
விடை கூறுவதாக அருளினான்
சர்வலோக சரண்யன்..


அதன்படி பொழுது விடிந்ததும்  
தானே உகந்து - தன் திருமேனியை
தன்னை வந்து சந்தித்த முனிவர்களுக்கு 
ஸ்ரீராமன் அருளினான்..

அந்தத் திருமேனியின் வனப்பினில் மகிழ்ந்த
முனிவர் அன்பினொடு ஆராதித்துக் களித்தனர்..

முனிவர்களின் காலத்திற்குப் பின்
பூமிக்குள் அடைக்கலமாகின திருமேனிகள்..



நீண்ட நெடுங்காலத்திற்குப் பிறகு
தஞ்சையை ஆட்சி செய்த சரபோஜி மன்னரின்
கனவில் தோன்றி
ஹிரண்ய கர்ப்பமாக இருந்த விக்ரகங்களை
மீட்டெடுக்குமாறு அருளினான்
அவதார புருஷன்..

அதன்படி, தலைஞாயிறு எனும் கிராமத்தில் 
திரு விக்ரகங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டன..

தஞ்சையை நோக்கி வரும் வழியில்
வடுவூரில் தங்கியிருந்த வேளையில்
வடுவூர் மக்கள் வேண்டிக் கொண்டதன் பேரில்
ஸ்ரீ வேணுகோபாலன் திருக்கோயிலில்
பிரதிஷ்டை செய்யப்பட்டன..





அது முதற்கொண்டு
ஆராவமுதனாகிய எம்பெருமான்
ஸ்ரீ கோதண்டராமன் எனத் திருப்பெயர் கொண்டு
திருக்கோயிலில் மட்டுமல்லாமல்
ஆயிரமாயிரம் அன்பர்களின்
நெஞ்சங்களிலும்
கோலோச்சி வருகின்றான்..


ஆயுளில் ஒருமுறையேனும் 
அழகன் ஸ்ரீ ராமனை ஆராதித்து மகிழ்ந்து
கண் கொண்ட பயனைப் பெறவேண்டும்..

தஞ்சை மன்னார்குடி சாலையில் உள்ளது வடுவூர்..
தஞ்சையிலிருந்து நகரப் பேருந்துகளும் புறநகர் பேருந்துகளும்
வடுவூருக்கு இயங்குகின்றன..
***


முப்பத்து மூவர் அமரர்க்கும் முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்
செப்பம் உடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்
செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்!.. 

ஓம் ஹரி ஓம் 
***

சிவதரிசனம்
திருத்தலம் - திருஐயாறு


இறைவன் - ஸ்ரீ ஐயாறப்பன்
அம்பிகை - ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி
தீர்த்தம் - காவிரி
தலவிருட்சம் - வில்வம்

ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி
 முப்பத்திரண்டு அறங்களையும் இயற்றியதால் அம்பிகைக்கு
ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி எனும் திருப்பெயர்..


அப்பர் பெருமானுக்குத் திருக்கயிலாயத் திருக்காட்சி
அருளப் பெற்ற திருத்தலம்..
ஆதலின், தென்கயிலாயம் எனப் புகழப்படுகின்றது..

திருஐயாற்றுக்கு வடபாலுள்ள அந்தணக்குறிச்சியில் தான்
சிலாத முனிவருக்குத் திருமகனாக
நந்தியம்பெருமான் திருஅவதாரம் செய்தார்..

நந்தியைத் தம்முடைய மகனாக ஏற்றுக்கொண்டு
திருமழபாடியில் வியாக்ரபாத முனிவரின் திருமகளான
சுயம்பிரகாசினியைத் திருமணம்
செய்து வைத்தார் ஐயாறப்பர்..


பங்குனி புனர்பூசத்தில் நிகழும் திருமணத்திற்குப் பிறகு
சித்திரை மாத விசாகத்தன்று மணமக்களை பல்லக்கில்
அழைத்துக் கொண்டு ஏழூர்களை வலம் வந்தருளினார்..

இதுவே சப்தஸ்தானம் எனப்படும் பெருவிழா..



திருஐயாற்றில் இருந்து காலையில் புறப்பட்டு
திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி
திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் -
என -  பயணித்து மறுநாள் காலையில்
திருஐயாற்றுக்கு வந்து சேர்வர்..

ஐயாறப்பர், நந்தி தேவர் பல்லக்குகளுடன்
ஆயிரக்கணக்காக மக்களும் பயணிப்பர்..


சப்த ஸ்தான பல்லக்கு

புஷ்ய மண்டபப் படித்துறை
பித்ருக்களுக்கு நீர்க்கடன் செய்யும்
தலங்களுள் திருஐயாறு முதன்மையானது..

காசியம்பதிக்கு சமமான திருத்தலங்கள் 
ஆறனுள் திருவையாறும் ஒன்று..

ஏனைய தலங்கள்
திருவெண்காடு, மயிலாடுதுறை, திருவிடைமருதூர்,
சாயாவனம், ஸ்ரீ வாஞ்சியம்..

திருக்கோயிலின் தெற்கு வாயிலில் மேல்புறம் உள்ள
துவார பாலகர் சிவாம்சம் பெற்று
ஸ்ரீ ஆட்கொண்டார் எனத் திகழ்கின்றார்..

அதனால் - அவருக்கு முன்பாக
நந்தி பணிந்திருக்கின்றது.. 

திருப்பதிகம் அருளியோர்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,
சுந்தரர்.

மாணிக்கவாசகர் திருவாசகத்தில் திருஐயாற்றை
புகழ்ந்து போற்றுகின்றார்..
***

ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிச் செய்த
திருக்கடைக்காப்பு


கங்காளர் கயிலாய மலையாளர் கானப்பே ராளர்மங்கை
பங்காளர் திரிசூலப் படையாளர் விடையாளர் பயிலுங்கோயில்
கொங்காளப் பொழில்நுழைந்து கூர்வாயால் இறகுலர்த்திக் கூதல்நீக்கி
செங்கால்நன் வெண்குருகு பைங்கானல் இரைதேருந் திருவையாறே!.. (1/130)

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிச்செய்த
தேவாரம்

ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலாம் ஆனாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேச பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடிஎன்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலாம் ஆனாய் நீயே
திருஐயாறு அகலாத செம்பொற்சோதி!.. (6/38)
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த
திருவாசகம்

திருஅம்மானை
திருப்பாடல் 19 - 20


முன்னானை மூவர்க்கும் முற்றுமாய் முற்றுக்கும்
பின்னானைப் பிஞ்ஞகனைப் பேணு பெருந்துறையின்
மன்னானை வானவனை மாதியலும் பாதியனைத்
தென்னானைக் காவானைத் தென்பாண்டி நாட்டானை
என்னானை என்னப்பன் என்பார்கட் கின்னமுதை
அன்னானை அம்மானைப் பாடுதுங்காண் அம்மானாய்!..

பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான்
கொற்றக் குதிரையின்மேல் வந்தருளித் தன்னடியார்
குற்றம்ஹ்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச்
சுற்றறிய சுற்றத் தொடர்வறுப்பான் தொல்புகழே
பற்றியிப் பாசத்தைப் பற்றறநாம் பற்றுவான்
பற்றியபே ரானந்தம் பாடுதுங்காண் அம்மானாய்!..

இந்த அளவில் 
திருஅம்மானைத் திருப்பாடல்கள் 
நிறைவடைகின்றன..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்  
***

11 கருத்துகள்:

  1. ஸ்ரீ ராமரை தரிசனம் செய்து கண்படைத்த பயனை பெற்றேன். அவ்வளவு அழகாய் இருக்கிறார் பகிர்வுக்கு நன்றி.சப்தஸான திருவிழா கண்டு களித்தேன். படங்கள், பாடல்கள், குறள் அமுதம் அனைத்தும் அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. திருச்சியில் இருந்தபோது வடுவூர் போகப் பலமுறை திட்டமிட்டும் முடியாமல் போயிற்று. கொடுப்பினை இருக்கிறதா தெரியவில்லை.பதிவினைப் படித்து ரசித்தேன் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அன்பின் ஜி மார்கழித் தென்றலின் 20 ம் நாள் தேவாரப் பாடலுடன் நன்று.

    பதிலளிநீக்கு
  4. படங்கள் ஒவ்வொன்றும் வெகு அழகு. வடுவூர் போக ஆசை இருந்தாலும் செல்ல இயலவில்லை. செல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. வடுவூர் திருக்கோயில், திருவையாறு புஷ்பமண்டப படித்துறையைப் பார்த்ததும் மகிழ்ச்சி, நானும் ஏழு ஊர் சுற்றியுள்ளேன். அருமையான பல தகவல்கள், தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. பகிர்வு அருமை...
    படங்கள் அழகு...
    திவ்விய தரிசனம் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..