நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஆகஸ்ட் 19, 2015

மனிதநேயம் மலர்க..

இன்று ஆகஸ்ட் 19.

சர்வதேச மனித நேய நாள்!..


அரம்போலுங் கூர்மையரேனும் மரம் போல்வர்
மக்கட் பண்பில்லாதவர்.. (997)

மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர் - அரம் போல் கூர்மையான அறிவுடையவராக இருந்தாலும் - ஓரறிவினை உடைய மரத்தைப் போன்றவரே ஆவார்..

மக்கட்பண்பு என்பது - எதிரியே ஆனாலும் இன்னலுக்கு ஆட்பட்டுத் தவிக்கும் போது - இன்முகங்காட்டி - அவரை அத்துன்பத்திலிருந்து மீட்டெடுப்பதாகும்..

அவ்வாறு - இடுக்கண் களைய முன்வராதவர்கள் - அரம் போன்ற கூரிய அறிவுடையவராக இருந்தாலும் - அஃறிணையான மரத்திற்கு ஒப்பானவர்..

அது சரி..

ஆனாலும் - மரம் தான் - பற்பல நன்மைகளை வழங்கி மக்களுக்கு வாழ்வில் பலவகையிலும் உறுதுணையாக விளங்குகின்றதே!..

அப்படியிருக்க - பலன் தரும் மரங்களைக் கூறுவாரோ - வள்ளுவர்!..

வள்ளுவப் பெருமானின் திருக்குறிப்பே வேறு!..

ஒதிய மரங்களைப் பார்த்திருக்கின்றீர்களா!..

ஒதிய மரங்கள் பெருத்திருந்தாலும்
உத்திரம் ஆகாது!..

- என்று கவியரசர் கூறினாரே..

அந்த ஒதிய மரத்தில் ஒரு வண்டு கூட துளையிட்டுக் குடியிருக்காது..

மேலைத் தேசத்திலிருந்து இறக்குமதியான - கருவை மரங்களைப் பார்த்திருக்கின்றீர்களா!..

அதிலும் - இப்படித்தான்!.. குருவிகள் கூட கருவை மர நிழலில் தங்காது.. கட்டுவிரியனும் சாரையும் தான் சுருண்டு கிடக்கும் அதன் இடுக்குகளில்!..

இப்படிப் பயனற்ற மரங்கள் சில உண்டு..

அவற்றுள் ஒன்று - இலவு!..

அன்னத்தின் தூவிக்கு அடுத்து - மிருதுவானது இலவம் பஞ்சு.. தலையணைக்கு மிகவும் ஏற்றது..

ஆனாலும் - இந்த இலவமரத்தில் கூடு கட்டி வாழ்ந்த குருவியைக் கண்டதுண்டா!..

கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில் இருந்த காய்களைக் கண்டு - மயங்கிய கிளி ஒன்று -

ஆகா!.. காயே இப்படி இருந்தால் - பழம் எப்படியிருக்கும்!..  - என ஏங்கிக் காத்திருந்தது..

ஆனால் - முதிர்ந்து உலர்ந்த காய்கள் - வெடித்துச் சிதறி காற்றில் கலந்தன..

கிளி அடைந்த வெறுப்புக்கும் வேதனைக்கும் அளவே இல்லை..

இலவு காத்த கிளி!.. - என்பது நினைவில் நிற்கும் பழமொழி அல்லவா!..

குறிப்பிடத்தக்க இன்னொரு மரம் - எட்டி..

எட்டி பழுத்திருந்தாலும் கூட ஒரு குருவியும் அருகில் நெருங்காது..

அதனால் தான் -

எட்டி பழுத்தென்ன?.. ஈயாதான் வாழ்ந்தென்ன?.. - என்றது தமிழ் கூறும் நல்லுலகு..

எனவே -

மக்கட்பண்பில்லாதவர் - இப்படிப் பயனற்ற மரங்களுள் ஒன்றாகத் தான் கருதப்படுவர்..


மக்கட்பண்பு என்பது எது?..

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்!.. 

- என்று இரக்கம் கொண்ட வள்ளலார் தோன்றிய மண் இது..


சிற்றுயிர் எனப்படும் சிறுபயிர் முதற்கொண்டு 
பேருயிர் எனப்படும் - சக மனிதன் வரை, அனைவரையும் ஒரு நோக்கில் காண்பது..

சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி கிளியே.. செம்மை மறந்தாரடி!..

- என்று மருகினார் மகாகவி..

இப்படியிருக்கும் கால கட்டத்தில் - முகமறியாத ஏழைகளுக்கு - யாதொரு பயனையும் எதிர்பாராமல் உதவி செய்வது என்றால்!..

கடந்த வாரத்தில் ஒரு நாள் - 

கோவைக்குச் செல்ல வேண்டி மாணவி வழி தவறி தன் தாயுடன் சென்னைக்கு வந்து விட - நிலைமையை உணர்ந்து விரைந்து செயல்பட்டு - தங்கள் கைச்செலவில் விமானத்தில் ஏற்றி - கோவைக்கு அனுப்பி வைத்து - அந்த ஏழைப்பெண்ணின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த நல்ல உள்ளங்களை நினைவு கூர வேண்டியது அவசியம்!..

கோவையிலுள்ள வேளாண் பல்கலையின் அண்ணா அரங்கிற்குச் செல்ல வேண்டியவர்கள் - சென்னை அண்ணா பல்கலைக் கழகத்திற்கு வந்து விட்டனர்.

தவறான வழிகாட்டுதலால் இப்படி நேர்ந்தது - என்பதை அறிந்த தாய்க்கும் மகளுக்கும் கண்ணீர் பெருக்கெடுத்தது.. 

நிலைமையை உணர்ந்து கொண்டன - அங்கே நடை பயிற்சி மேற்கொண்டிருந்த நல்ல உள்ளங்கள்!..

அவர்களுக்கு ஆறுதல் கூறி -  தேற்றிய பின் விரைந்து செயல்பட்டனர்.. 

கோவை வேளாண் கல்லூரியின் பதிவாளரைத் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினர்.. பதிவாளரும் நிலைமையைப் புரிந்து கொண்டார்.  

தாய்க்கும் மகளுக்கும் காலை உணவு வழங்கப்பட்டது.. 

சென்னை விமான நிலையத்திற்கு பயணச் சீட்டுகளுடன் அனுப்பி வைக்கப் பட்டனர். கோவை விமான நிலையத்திலிருந்து வேளாண் பல்கலைக்கு அழைத்துச் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன..

இவ்வளவும் செய்த நல்ல உள்ளங்கள், மேலும் - அவர்களது கைச்செலவுக்கும் பணம் கொடுத்துள்ளனர்..

சென்னையில் விமானம் புறப்பட்ட போது காலை 10.05.
கோவையில் தரையிறங்கியபோது காலை 11.40.

அங்கிருந்து பல்கலைக்குச் சென்றபோது பகல் - 12.15.

நேர்முகத்திற்காக குறிக்கப்பட்ட நேரம் - மதியம் 2.00.

நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு - B.Sc., ( Bio - Tec.,) பாடப் பிரிவினைத் தேர்ந்தெடுத்த மாணவி சுவேதாவின் விழிகள் ஆனந்தக் கண்ணீரில் தத்தளித்திருக்கின்றன..

மனிதநேயம் மரத்துப் போகவில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்..

மாணவி சுவேதாவிற்கு உதவி செய்த நல்ல உள்ளங்கள் - இதோ!..


இவர்களுடன் திரு, ஜெய்சங்கர் என்பவரும் பேருதவி செய்துள்ளார்.

சர்வதேச மனிதநேய நாள் - எதனால் விளைந்தது!?..

2003 ஆகஸ்ட் 19.  

ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில் Canal என்ற உணவு விடுதியினை - தற்கொலைப் படைப் பிரிவின் மனித வெடிகுண்டு தகர்த்தது.. 

அந்த விடுதியில் தான் ஐ. நா. சபையின் ஈராக்கிற்கான தலைமை அலுவலகம் இருந்தது.. 

அந்தத் தாக்குதலில் ஐ. நா. பணியாளர்கள் 21 பேருடன் Sergio Vieira de Mello - என்ற (High Commissioner for Human Rights) தலைமை அதிகாரியும் உயிரிழந்தார்..

நூற்றுக்கும் மேலானோர் படுகாயமடைந்தனர்.

Sergio Vieira de Mello
இந்த கொடூர சம்பவத்தின் விளைவாகத் தான் - 

மனித மனங்களை சக மனிதருக்கு உதவுமாறு தூண்டுவதற்காக -
சர்வதேச மனித நேய நாள்!.. - என, ஆகஸ்ட் 19 அறிவிக்கப்பட்டது..

2009 முதல் சர்வதேச மனித நேய நாள் (World Humanitarian Day) அனுசரிக்கப்படுகின்றது

இந்நாள் - இயற்கைப் பேரிடர், ஆங்காங்கே நிகழும் போர், கொள்ளை நோய்கள் - இவற்றால் பாதிக்கப்படுவோரைக் கருத்தில் கொள்ளும் நாளாகவும்,

இவ்வேளைகளில் - பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் தன்னார்வத்துடன் ஈடுபடுவோரையும், 

அப்படி - தன்னார்வம் கொண்டு ஈடுபடும் வேளையில் காயமடைந்தோரையும் உயிரிழந்தோரையும் நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் நாளாகவும் ஐ.நா. அறிவித்துள்ளது..

மீட்புப் பணிகளில் நமது வீரர்கள்






யாதொரு பலனையும் எதிர்பாராமல் - இத்தகைய பணிகளில் ஈடுபடுவோர் தமக்கு நெஞ்சார்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வது நம் கடமை..

துன்புற்றிருக்கும் சக மனிதனின் துயரத்தைக் களைவது - ஒவ்வொருவரின் கடமை - என்று இப்போது கூறப்பட்டாலும் -

யாதும் ஊரே!.. யாவரும் கேளிர்!.. - என்று பலநூறு வருடங்களுக்கு முன்னரே முழங்கியவர் - கணியன் பூங்குன்றனார்..

அந்த வழியில் வந்தவர்கள் நம் மக்கள்!..

அனைத்து மக்களையும் உறவினராகக் கருதி உவந்த வேளையிலும்,

பருந்தின் பசி தீர்வதற்காக - தன் தசையை அரிந்து கொடுத்து சிறு புறாவின் உயிர் காத்தவன் - வள்ளல் சிபி சக்ரவர்த்தி!.. 

புள்ளுறு புன்கண் தீர்த்தோன்!.. - என்று சிபி சக்ரவர்த்தியை சிலப்பதிகாரம் புகழ்கின்றது.

புல்லுயிராகிய - முல்லையையும் மதித்து அது தாவிப் படர்வதற்கு ஏதுவாக தனது தேரையே நிறுத்திய பெருமைக்கு உரியவன் - வள்ளல் பாரி!..

மழைச்சாரலில் ஆடிக் கொண்டிருந்த மயிலைக் கண்டு - அதற்கும் குளிருமே!.. என வருந்தி தனது மேலாடையைப் போர்த்திய பெருங்குணசீலன் - வள்ளல் பேகன்!..

எல்லாவற்றையும் விட - 

புலவரே!.. எனது தலையைக் கொண்டு சென்று என் தம்பியிடம் கொடுத்தீர் ஆகில் உமக்குப் பொன்னும் பொருளும் கிட்டும். அதனால் உமது வறுமையும் தீரும்.. எனவே, எனது தலையைக் கொய்து செல்வீராக!..

- என்று தனது தலையையே அளித்தவன் - வள்ளல் குமணன்!..

எப்படியாகிலும் புலவர் பெருந்தலைச் சாத்தனாரின் வறுமை தீர வேண்டும்!..

என்னே உதார குணம்!..

மாண்புறும் மனித நேயம்
இன்றைய காலகட்டத்தில் தமக்கென வாழ்வோர் மத்தியிலும் பிறர்க்கென வாழும் பெருந்தகையாளர்களையும் வையகம் காண்கின்றது. 

அத்தகைய பெருந்தகையாளர்களால் தான் வையகம் இன்புறுகின்றது..

அவர்களுள் நாமும் ஒருவராக விழைவோம்!..

சர்வதேச மனித நேய நாளில் 
எங்கெங்கும் மனிதம் மலர்க!..

பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்
நன்மை கடலிற் பெரிது..(103)

வாழ்க மனிதம்..
வளர்க மனித நேயம்!..  
* * * 

19 கருத்துகள்:

  1. அன்பின் ஜி அருமை விடயங்களோடு அழகான புகைப்படங்களோடும் தந்தமைக்கு எமது நன்றி மனிதநேய இந்த நன்நாளில் மதம் மறந்து மனிதநேயம் காப்போம் வாழ்க வளர்க...

    அன்பின் ஜி நமதி தேவகோட்டை நண்பர் திரு. ஜி. கணேசன் அவர்கள் தங்களது திருவாடானை பதிவைப் படித்து தங்களுக்கு வாழ்த்தும், நன்றியும் கூறச்சொன்னார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      நண்பர் தேவகோட்டை திரு கணேசன் அவர்களிடம் எனது வணக்கத்தையும் நன்றியையும் தெரிவிக்கவும்..

      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. மனித நேயம் பற்றிய தங்களின் பதிவு ஆழமானதாகவும், மனதில் பதியும்படியும் இருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள் செய்திக்கு மெருகூட்டின. மனித நேயம் காப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. ஆகா! மனிதநேயத்தைப் பற்றிய மிக அருமையான பதிவு! மாணவி சுவேதாவுக்கு உதவிய நல் இதயங்களுக்கு நன்றி! மனித நேய நாள் கொண்டாடப்படுவதின் பின்னணி அறிந்தேன். எட்டிக்காய் கசக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் சொன்ன பழமொழியையும் அறிவேன். ஆனால் இதுவரை அம்மரத்தையோ காயையோ பார்த்ததில்லை? அம்மரம் பற்றிக் கூடுதல் தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும். நல்லதொரு பதிவுக்கு மிகவும் நன்றி! படங்களும் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      எட்டி மரத்தின் பழங்கள உண்ணத் தகாதவையாக இருந்தாலும் இலைகள், விதைகள், பட்டை, வேர் ஆகிய அனைத்தும் நச்சுத் தன்மை உடையவை ஆயினும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன.

      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  4. மனித நேயத்தைக் கண்முன்னே காட்டும் படங்கள் அருமை அருமை
    மனிதம் இன்னும் மரிக்கவில்லை என்பதற்கான ஆதாரங்கள் இப்படங்கள்
    மனிதம் போற்றுவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. மனித நேயம் பற்றிய பதிவு மிக அருமை. மனித நேயத்தை காப்போம்.

    பதிலளிநீக்கு
  6. மனித நேயம் குறித்த கட்டுரை அருமை. சில நேரங்களில் நேயமிருந்தாலும் பிறருக்கு உதவும் நிலை இருப்பதில்லை என்பதும் தெரிந்து கொள்ள வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தாங்கள் கூறுவதும் உண்மையே.. சமயங்களில் உதவும் நிலை கைகூடுவதில்லை..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. அன்பின் ஐயா...
    அருமையான விஷயத்தை அழகிய படங்களோடு தந்திருக்கிறீர்கள்...
    வாழ்த்துக்கள்.
    மனித நேயம் போற்றுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. மனித நேயக்கட்டுரை மிக மிக அருமை ஐயா! மிக அழகான ஒரு விசயம் படங்கள் அருமை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  9. மனித நேயம் போற்றுவோம்....

    சிறப்பான பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. மனிதநேயம் பற்றிய கட்டுரை அருமையாக உள்ளது. நிஜத்தில் மனிதநேயம் மக்கள் மனதில் உருவாக வேண்டும். வாழ்த்துக்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..