நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, பிப்ரவரி 08, 2015

திருமழபாடி குடமுழுக்கு

ஸ்ரீமார்க்கண்டேய மகரிஷிக்காக - ஈசன் மழுவேந்தி நடனமாடிய திருத்தலம். 

நந்திதேவருக்கும் சுயஸாம்பிகைதேவிக்கும் திருமணம் நிகழ்ந்த திருத்தலம்.

மூவாப் பெரும்பனை முளைத்திருக்கும் திருத்தலம். 


நீண்ட நெடுங்காலம் புருஷாமிருக மகரிஷி  இங்கு சிவதரிசனம் வேண்டித் தவமிருந்தார். 

அவர் பொருட்டு பிரம்மனின் சத்யலோகத்திலிருந்த லிங்கத்தை இத்தலத்தில் சிவபெருமான் எழுந்தருளுவித்தார்.

புருஷாமிருக மகரிஷி சிவதரிசனம் கண்டு மகிழ்ந்தார். அதன்பின் - 

இந்த லிங்கத்தை மீண்டும் பெயர்த்து எடுக்க பிரம்மன் முயன்றும் - முடிய வில்லை.  

"..இது வயிரத் தூணோ!.." - என்று பிரம்மன் வியந்து நின்றமையால்

இறைவர், வயிரத் தூண் நாதர் - வஜ்ரஸ்தம்பேஸ்வரர் - எனப் பெற்றார்.


ஆயினும் இன்று - மக்கள் வழங்கும் திருப்பெயர் - வைத்யநாதர்!.. 

திருஆலம்பொழில் எனும் தலத்தில் தங்கியிருந்த சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளை - "..மழபாடிக்கு வர மறந்தனையோ!.." - என அழைத்த பெருமான் - இவரே!..

அம்பிகை - பாலாம்பிகை, சுந்தராம்பிகை என இரண்டு திருக்கோலங்களில் சந்நிதி கொண்டு விளங்குகின்றனள்..

நந்திக் கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்!.. - என்பர்.

சிறப்பு மிகும் நந்திக் கல்யாணம் நிகழ்வது - திருமழபாடியில்!..

ஸ்ரீ நந்தியம்பெருமான் - சுயம்பிரகாஷிணி தேவி
திருவையாறு அந்தணக்குறிச்சியில் சிலாத முனிவருக்கு திருக்குமாரராக வெள்ளிப் பேழையுள் கிடைத்த நந்தியம் பெருமான் – 

வியாக்ரபாத முனிவரின் மகளான சுயம்பிரகாஷிணி எனும் சுயஸாம்பிகை தேவியின் திருக்கரம் பற்றியது திருமழபாடியில் தான்!.. 

திருஐயாற்றிலிருந்து ஸ்ரீஐயாறப்பரும் அறம் வளர்த்த நாயகியும் மணமகனாகிய நந்தியம்பெருமானுடன் திருமழபாடிக்கு எழுந்தருள - 

திருக்கல்யாண விழா, ஆண்டுதோறும் பங்குனி புனர்பூச நாளன்று மிகச் சிறப்பாய் நடைபெறுகிறது.

இதன் பின்னரே – திருஐயாற்றில் சித்திரையில் சப்தஸ்தானம் எனும் ஏழூர் திருவிழா!..

மார்க்கண்டேயருக்காக - ஈசன் மழு ஏந்தி நடமாடிய திருக்காட்சி வைகாசி விசாகத்தில் நடைபெறுகின்றது.

காவிரிக்கு வடகரைத்தலம். திருக்கோயிலின் வாசலில் கொள்ளிட நதி, தெற்கிலிருந்து வடக்கு நோக்கி உத்தரவாகினியாகச் செல்கிறது.

இத்தலத்தில் ஒரே கல்லில் வடிக்கப்பெற்ற சோமஸ்கந்தர், ரிஷப வாகன தக்ஷிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், கஜசம்ஹாரமூர்த்தி, சிவபூஜை செய்யும் புருஷாமிருக ரிஷி - ஆகிய திருமேனிகள் சிறப்புடையவை

இத்தகைய சிறப்புடைய திருமழபாடியில்
தை/25 ஆகிய இன்று வெகு சிறப்பாக 
மஹாகும்பாபிஷேகம் நிகழ்கின்றது.


கடந்த பிப்ரவரி ஐந்தாம் நாள் - 
அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக பூஜையுடன் பிரவேச பலி, வாஸ்து சாந்தி, மிருத்ஸங்க்ரஹணம், அங்குரார்ப்பணம், ரக்ஷா பந்தனம் நிகழ்ந்தன.

மறுநாள் - லக்ஷ்மி ஹோமம், பரிவார கலாகர்ஷணம், தீர்த்தம் எடுத்தல், யாகாக்னி வளர்த்தலுடன் மூர்த்திகளுக்கு அஷ்ட பந்தனம் சாத்தப்பட்டது. 

தொடர்ந்து - 

கும்ப அலங்காரம், கலாகர்ஷணத்துடன் யாகசாலைப் பிரவேசம் ஆகி - யாக சாலை வழிபாடுகளுடன் முதல் கால பூர்ணாஹூதியும் தீபாராதனையும் நிகழ்ந்தது.
  
தொடர்ந்து - நேற்று (பிப்/7)  சந்தி பூஜை, தம்பதி பூஜை, கன்யா பூஜை, லக்ஷ்மி பூஜையுடன்  பூர்ணாஹூதியும் தீபாராதனையும் நடந்து -  இரண்டாம் காலம் மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நிறைவேறின.

இன்று அதிகாலை ஐந்து மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கி - ஏழு மணியளவில் பரிவார சந்நிதிகளுக்கு கும்பாபிஷேகம் நிகழ்கின்றது.

எட்டு மணியளவில் மஹாபூர்ணாஹூதி தீபாராதனை. 

தொடர்ந்து கடங்கள் புறப்பட்டு பத்து மணியளவில் ராஜகோபுரங்களுக்கும், 

திருமூலஸ்தானங்களுக்கும் மங்கலகரமாக மஹாகும்பாபிஷேகம்!..

மாலை நாலரை மணிக்கு மஹா அபிஷேகமும், ஏழு மணியளவில் திருக் கல்யாண வைபவமும் நிகழ்கின்றது.

அதன்பின் பஞ்சமூர்த்திகள் திருவீதி எழுந்தருளல்.

48 நாட்களுக்கு சிறப்பாக மண்டல பூஜைகள் தொடர்கின்றன.

அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர் - என அருளாளர் பாடிப்பரவிய திருத்தலம்.


இறைவன் - ஸ்ரீவைத்யநாதர்.
அம்பிகை - சுந்தராம்பிகை, பாலாம்பிகை.

தல விருட்சம் 
மூவாப் பனை எனும் பெருஞ்சிறப்பினை உடைய 
பழைமையான பனை மரம்.

தீர்த்தம் 
கொள்ளிடம், மற்றும் லக்ஷ்மி தீர்த்தம்.


சோழர்களால் திருப்பணி செய்யப்பட்ட பழைமையான திருத்தலம்.

மாசி மகத்தை அனுசரித்துப் பெருந்திருவிழா நடைபெறுகின்றது.

திருஐயாற்றில் நடைபெறும் சப்தஸ்தானம் எனும் ஏழூர்த் திருவிழாவுடன்  தொடர்புடைய திருமழபாடி, திருஐயாற்றுக்கு வடமேற்கே 6 கி.மீ. தூரத்தில் உள்ளது.

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருமானூர் வழியாக திருமழபாடிக்குப் பேருந்துகள் இயங்குகின்றன. 

திருச்சி, அரியலூர் ஆகிய இடங்களிருந்தும் பேருந்து வசதி உள்ளது.

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே!..(7/24) 
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்.

கங்கையார் சடையிடைக் கதிர்மதி அணிந்தவன்
வெங்கண்வா ளரவுடை வேதியன் தீதிலாச்
செங்கயற் கண்ணுமை யாளொடுஞ் சேர்விடம்
மங்கைமார் நடம்பயில் மாமழபாடியே!..(3/28)
திருஞானசம்பந்தர்.

பொன்னியலுந் திருமேனி உடையான் கண்டாய்
பூங்கொன்றைத் தாரொன்று அணிந்தான் கண்டாய்
மின்னியலும் வார்சடை எம்பெருமான் கண்டாய்
வேழத்தின் உரிவிரும்பிப் போர்த்தான் கண்டாய்
தன்னியல்பார் மற்றொருவர் இல்லான் கண்டாய்
தாங்கரிய சிவந்தானாய் நின்றான் கண்டாய்
மன்னிய மங்கையோர் கூறன் கண்டாய்
மழபாடி மன்னும் மணாளன் தானே!..(6/39) 
திருநாவுக்கரசர்..

சிவாய திருச்சிற்றம்பலம். 
* * * 

18 கருத்துகள்:

  1. திருமழப்பாடி அறிந்தேன் ஐயா
    அருகில் இருந்தும் இது நாள் வரை
    திருமழப்பாடி செல்லாதது வருத்தத்தை அளிக்கின்றது
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வரவேண்டும் என்பார்கள்..
      தங்கள் இனிய வருகைக்கு நன்றி..

      நீக்கு
  2. நந்திக் கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம் - என்பர்// இப்போது தான் இம்மொழியை அறிந்து கொண்டேன் ஐயா

    திருமழப்பாடி பற்றி தெரிந்து கொன்டேன் நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அறியாத ஆலயத்தின் சிறப்பை அறிந்தேன் ஐயா... நன்றி... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  4. சிவதரிசனம் அருமையாக ஆனது.
    தலவரலாறு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகை தந்து சிவதரிசனம் செய்ததற்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. தல வரலாறு அருமை ஐயா...
    குவைத்தில் இருந்து தாங்களின் சீரிய ஆன்மீகப் பணி ஆச்சர்யப்பட வைக்கிறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      நான் செய்ததென்று ஏதுமில்லை..
      கண்டதும் கேட்டதும் ஆகிய செய்திகளைப் பதிவில் தருகின்றேன்..
      தொடரும் நண்பர்களின் உற்சாகமும் எனக்கொரு துணை!..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. நேற்றுதான் ஜி நானும் நண்பர் சே. குமார் அவர்களும் தங்களைப்பற்றி பேசிக்கொண்டு இருந்தோம் அதில் ஒரு விசயத்தை நண்பர் உடைத்து விட்டார் தங்களுக்கு இறையருள் கிடைக்கட்டும் வாழ்த்துகள்.
    தெரியாத கோயில் விடயங்கள் அறியத்தந்தமைக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தாங்களும் அன்பின் குமார் அவர்களும் என்னைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தீர்கள் எனில் - நான் கொடுத்து வைத்தவன்!..

      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. நான் பல முறை சென்றுள்ள கோயில்களில் திருமழபாடியும் ஒன்று. நன்னாளைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி ஐயா!..

      நீக்கு
  8. தாங்கள் இங்கு தான் உள்ளீரோ. அருமையாக உள்ளது தங்களின் பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  9. அருமையான கோவில் என்று தெரிகிறது. இதுவரை கண்டதில்லை.... எப்போது காண்வேன் என்று ஈசனுக்கே வெளிச்சம்....

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களுக்கும் திருமழபாடி தரிசனம் கிட்டும்.
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..