நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், பிப்ரவரி 03, 2015

தைப்பூசத் திருநாள்

ஆதியில் திருக்கயிலாய மலையில் பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதருடன் முப்பத்து முக்கோடி தேவர்களும் கண்டு மகிழும் வண்ணம் - ஐயனும் அம்பிகையும் ஆனந்தத் திருநடனம் நிகழ்த்திய நாள் - தைப்பூச நன்னாள்!.. 


பஞ்சாட்சரனாகிய சிவபெருமானுக்கு உகந்த தைப் பூசத்திருநாள் -  சடாட்சரனாகிய முருகப் பெருமானுக்கும் உகந்து விளங்குகின்றது.

அமரர் பெருவாழ்வு பெறவேண்டுமாயின் சூர சம்ஹாரம் நிகழ்தல் வேண்டும்!..

சிக்கலிலே வேல் வாங்கி செந்தூரில் போர் முடித்தான்!.. - என்பது உலகுரை.

சூர சங்காரத்திற்கென முருகப்பெருமான் - வேல் வாங்கிய நாள் தைப்பூச நன்னாள்!.. 

தாமிரபரணிக் கரையில் தவமிருந்தாள் - அன்னை காந்திமதி.
அவள் - நெல்லையப்பரின் தரிசனம் பெற்ற நன்னாள் - தைப்பூசம்!.. 


எங்கள் குலதெய்வம் விளங்கும் உவரி அருள்மிகு சுயம்புலிங்க ஸ்வாமி திருக் கோயிலின் பெருந்தேர்த் திருவிழா நிகழ்வது - தைப்பூச நாளில்!..

ஜனவரி/26 அன்று கொடியேற்றத்துடன் - யானை, அன்னம், குதிரை, ரிஷபம் - என வாகனங்களிலும் வெட்டி வேர் சப்பரம், சட்டங்கால் சப்பரம் - என மனோன்மணி அம்பிகையுடன் திருவீதி எழுந்தருளிய ஸ்ரீசந்திரசேகரர் - திருத்தேர் காண்பது தைப்பூச நன்னாளில்!.. 

தைப் பூச தேரோட்டத்தின் மறுநாள் - உவரியில் தெப்போற்சவம்!..

கும்பகோணத்தை அடுத்த திருச்சேறையில் - ஹரிபரந்தாமனின் திவ்ய தரிசனம் வேண்டி - காவிரியாள் தவமிருந்தாள்.

அவளுக்கு - ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, மஹாலக்ஷ்மி, சாரநாயகி - எனும் பஞ்ச தேவியருடன் காட்சியளித்தது - தைப்பூச தினத்தில்!.. 

பாசம் ஒன்றில ராய்பல பத்தர்கள்
வாச நாண்மலர் கொண்டடி வைகலும்
ஈசன் எம்பெருமான் இடைமருதினிற்
பூச நாம்புகுதும் புனலாடவே!.. (5/14) 

- என அப்பர் பெருமான் திருவிடைமருதூரில் தைப்பூச நாளில் புனலாடியதைக் குறித்தருள்கின்றார்.

திருவிடை மருதூரில் - வரகுண பாண்டியனின் பிரம்மஹத்தி தோஷம் விலகியது - தைப்பூச நாளில்!.. 

திருமயிலையில் - நந்தவனத்தில் நாகம் தீண்டியதால் இறந்து போன பூம்பாவையை - ஞானசம்பந்தப் பெருமான் எழுப்பியது - தைப்பூச தினத்தில்!.. 

நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம்!.. - என குறிப்பிடுகின்றார்.

பூம்பாவையை எழுப்பும் போது - பெருமான் குறிப்பிடும் வைபவங்களுள் - தைப்பூச நன்னாளும் ஒன்று!..


மாமதுரை மீனாட்சி - பத்து நாள் விழாக் கொண்டு - சுந்தரேசப் பெருமானுடன் தெப்பத்தில் எழுந்தருள்வது தைப்பூச நன்னாளில்!.. 

சமயபுரத்தில் பூசத் திருவிழா கண்டருளுகின்றாள் - முத்துமாரியம்மன்.

தீர்த்தவாரிக்கு என கொள்ளிடக் கரைக்கு எழுந்தருளும் மாரியம்மனுக்கு -
ஸ்ரீரங்கத்திலிருந்து பட்டுச்சேலை, மாலை, குங்குமம் சந்தனம், தாம்பூலம் -என மங்கலப் பொருட்கள் யானை மீது சீதனமாக வரும் நாள் தைப்பூசத் திருநாள்!..

தஞ்சை - கரந்தை ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலில், ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும், வசிஷ்ட மகரிஷிக்கும் அருந்ததி அம்மைக்கும் என இரண்டு திருக்கல்யாண வைபவங்கள் நிகழ்வது - தைப்பூச நன்னாளில்!..

திரு ஏரகம் எனப்படும் சுவாமிமலையில் - கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் - நாளும் திருவீதி எழுந்தருளி - புனர்பூசத்தில் தேரோட்டம் கண்டு வெள்ளி மயில் வாகனத்தில் தேவியருடன் எழுந்தருள்வதும் காவிரியில் தீர்த்தவாரி கொடுப்பதும் தைப்பூசத் திருநாளில்!.. 
    
பழனியில் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் பாதயாத்திரையாக காவடியுடன் கூடும் நாள் - தைப்பூச நன்னாள்!.. 


திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று (2/2) இரவு சிம்ம லக்னத்தில் ஸ்ரீவள்ளி தெய்வானையுடன் திருமணம் கண்டு வெள்ளி ரதத்தில் வீதியுலா எழுந்தருளிய ஸ்ரீ முத்துக்குமரஸ்வாமி -

இன்று காலை தேவியருடன் சண்முக நதியில் தீர்த்தவாரி அருள்கின்றார்.

இன்று (3/2) பகல் 12 மணிக்குள் திருத்தேரேற்றமும் மாலை 4.30 மணியளவில் தைப்பூச திருத்தேரோட்டம் கோலாகலமாக நிகழ்கின்றது.

திருசெந்தூரில் - அதிகாலையில் விஸ்வரூப தரிசனம் உதய மார்த்தாண்ட பூஜைக்குப் பின் - அலைவாய் உகந்தபெருமானாக எழுந்தருளி - கடலாடி தீர்த்தவாரி காண்பதுவும், தைப்பூச மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை கொண்டு தங்க மயில் வாகனத்தில் வீதி வலம் வருவதும் தைப்பூச தினத்தில்!..

அறுபடைவீடுகளுள் முதலாவதான திருப்பரங்குன்றத்தின் அடிவாரத்தில் உள்ள தண்டாயுதபாணி திருக்கோயிலில் சிறப்பாக நிகழ்வது - தைப்பூசம்!. 

தைப் பூச நாளாகிய இன்று மதியம் 12 மணிக்கு மேளதாளம் முழங்க - மலைக் கோயிலில் இருந்து பால், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் - என பதினாறு வகையான பூஜைப் பொருட்கள் எடுத்து வரப்பட்டு மூலவருக்கு சிறப்பாக அபிஷேகம் நடைபெறுகின்றது.

பின் சந்தனக்காப்பு அலங்காரத்தில் மகாதீப ஆராதனை நிகழும்.

தொடர்ந்து இரவு ஏழு மணியளவில் அடிவாரத்தில் முத்துக்குமர ஸ்வாமி - தெய்வானை, மலைக்கோயில் சுப்ரமணிய ஸ்வாமி - தெய்வானை என இரண்டு மூர்த்திகள் வீதி உலா எழுந்தருள்வது தனிச் சிறப்பாகும்.


கடல் கடந்து -  இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ் - என பல நாடுகளில் தைப்பூசம் சிறப்பாக நடைபெறுகின்றது.

எனினும் - லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருக்க - தைப்பூசத் திருவிழா வெகு சிறப்பாக நிகழ்வது பழனியம்பதியில்!..


வாடிய பயிரைக் கண்டு மனம் வாடித் தளர்ந்த வள்ளல் பெருமான் - சித்தி வளாகத் திருமாளிகையில் ஒளியாக நிறைந்ததும் - தைப்பூச நாளில் தான்!.. 

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடு தோறிரந்தும் பசியறாது அயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்தி நின்றோரென்
நேருறக் கண்டு உளந்துடித்தேன்
ஈடில்மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு
இளைத்தவர் தமைக் கண்டே இளைத்தேன்.. (62/133)
(ஆறாந்திருமுறை - 20. பிள்ளைப் பெருவிண்ணப்பம்)

1823 அக்டோபர் ஐந்தாம் நாள் சிதம்பரத்தை அடுத்துள்ள மருதூரில் ராமையா - சின்னம்மை தம்பதியர்க்கு ஐந்தாவது மகவாகத் தோன்றிய ஸ்வாமிகள் மானிடம் தழைக்க அறநெறிகள் காட்டியவர்.

அற்றோர்க்கும் அலந்தோருக்கும் அன்பு முகம் காட்டிய ஸ்வாமிகள் - வடலூரில் சத்திய தர்ம சாலையினை அமைத்து பசித்து வந்தோரின் பசிப்பிணி நீக்கியருளினார். தர்மசாலையின் ஒரு புறத்தில் '' சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை '' - எனும் ஒளித் திருக்கோயிலை எழுப்பினார்.

மக்களுக்கு அன்பினையும் அறத்தினையும் போதித்த ஸ்வாமிகள் - இறைவன் ஒளி வடிவானவன்!.. - என உரைத்து,

25.1.1872 (தை/13) தைப்பூச நாளன்று முதல் ஜோதி வழிபாட்டினை நிகழ்த்தினார்.

1874 ஜனவரி 30 (தை/19)  புனர்பூசமும் பூசமும் கூடிய நாளில் அன்பர்கள் அனைவருக்கும் அருளாசி வழங்கிய பின் - நள்ளிரவு 12 மணியளவில் சித்தி வளாகத் திருமாளிகையின் அறைக்குள் புகுந்தார்.

அவரது விருப்பப்படி - ஸ்வாமிகளின் சீடர்களாகிய கல்பட்டு ஐயாவும் தொழுவூர் வேலாயுதமும் அறையின் வெளிப்புறத்தைப் பூட்டினார்கள்.

ஸ்வாமிகள் - தாமாக தாளிட்டுக் கொண்டார்கள் எனவும் சொல்கின்றார்கள்.


மாதாந்திர பூச நாட்களில் இரவு 8 மணி முதல் 8.30 வரை ஆறு திரைகளை விலக்கி மூன்று முறை ஜோதி தரிசனம் நிகழ்கின்றது.

தைப்பூச நாளன்று ஏழு திரைகளையும் விலக்கி ஆறு முறை ஜோதி தரிசனம் நிகழ்கின்றது.

இன்று காலை 6 மணி, பகல் 10 மணி, மதியம் ஒரு மணி மாலை ஏழு மணி இரவு பத்து மணி நாளை (4/2) காலை 5.30 மணி என ஆறு கால ஜோதி தரிசனம்.

மறு நாள் வள்ளலார் ஸ்வாமிகள் ஜோதியாக நிறைந்த - திரு அறையின் உட்புறத்தை ஜன்னல் வழியாக தரிசிக்கலாம்.

ஸ்வாமிகள் உபதேசித்தவற்றுள் பசிப்பிணி தீர்த்தலும் கொல்லாமையும் தீய ஒழுக்கங்களில் இருந்து நீங்குதலும் தலையாயவை!..

சூர்யனும் சந்திரனும் நேர்கோட்டில் சந்திக்கும் நாள் - தை மாத முழுநிலவு நாள்.

கிழக்கே சந்திரனும் மேற்கே சூரியனும் இருக்கும் வேளையில் ஏற்படும் காந்த அதிர்வு அலைகளால் (Cosmic Energy)  நன்மை விளைகின்றன என்கின்றனர்.

சென்னையில் சந்திரோதயம் - மாலை 5.45. சூரியாஸ்தமனம் -  6.10.
தஞ்சையில் சந்திரோதயம் - மாலை 5.52. சூரியாஸ்தமனம் -  6.18.
மதுரையில் சந்திரோதயம் - மாலை 5.57. சூரியாஸ்தமனம் -  6.23.
திண்டுக்கல் பழனியில் சந்திரோதயம் - மாலை 5.57. சூரியாஸ்தமனம் - 6.23.

தைப் பூசத்தன்று மாலையில் 25 நிமிடங்கள் அமிர்த கலைகள் பூரணமாகத் திகழ்கின்றன.

இந்த மங்கல வேளையில் தான் திருக்கோயில்கள் தோறும் கோலாகலமாக வைபவங்கள் நடைபெறுகின்றன.


அடித்துப் பிடித்துக் கொண்டு திருவிழா கூட்டத்தில் தான் 
இருக்க வேண்டும் என்பதில்லை!..

தை மாதத்தின் முழுநிலவு உதித்திருக்கும் வேளையில்
இறை சிந்தனையுடன் நம்மால் இருக்கக் கூடுமாயின் -

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்!.
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்!..

எனும் இவையெல்லாம் சித்திக்கக் கூடும்!..

நீருண்டு பொழிகின்ற காருண்டு விளைகின்ற
நிலனுண்டு பலனும் உண்டு
நிதியுண்டு துதியுண்டு மதியுண்டு கதிகொண்ட
நெறியுண்டு நிலையும் உண்டு

ஊருண்டு பேருண்டு மணியுண்டு பணியுண்டு
உடையுண்டு கொடையும் உண்டு
உண்டுண்டு மகிழவே உணவுண்டு சாந்தமுறும்
உளமுண்டு வளமும் உண்டு

தேருண்டு கரியுண்டு பரியுண்டு மற்றுள்ள
செல்வங்கள் யாவும் உண்டு
தேனுண்டு வண்டுறு கடம்பணியும் நின்பதத்
தியானம் உண்டாயில் அரசே

தாருண்ட சென்னையில் கந்தகோ ட்டத்துள்வளர்
தலமோங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே!.. 28/31.
(வள்ளலார் ஸ்வாமிகள் அருளிய தெய்வமணி மாலை)

அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி..
தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி!..
* * *  

26 கருத்துகள்:

  1. குடும்பத்துடன் எங்கள் பேரனுக்கு முடியெடுக்க கடந்த மாதம் உவரி சென்றுவந்தோம். தங்களுடைய பதிவு மூலமாக உவரி உள்ளிட்ட அனைத்துக்கோயில்களுக்கும் இந்நன்னாளில் செல்லும் பேறு பெற்றோம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் உவரி சென்று வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  2. இந்நன்நாளில் தங்களால் பல திருக்கோயில் தரிசனம் கண்டோம்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அருமை... அருமை...

    இன்றைய தினத்திற்கேற்ப சிறப்பான பகிர்வு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் இனிய வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. // ” உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
    உறவு கலவாமை வேண்டும்” //

    தைப்பூசம் பற்றி நீங்கள் என்ன சொல்லி இருக்கிறீர்கள் என்பதற்காகவே உங்கள் வலைப்பக்கம் வந்தேன். எதிர்பார்த்தது போலவே அதிக தகவல்கள். நன்றி. ”தைப் பூசத் திருநாளில் தமிழ் எடுத்து பாடுவோம்”

    (உடல்நலக் குறைவு. எனவே சில நாட்களாக வலையுலகில் அதிகம் தலை காட்ட இயலவில்லை. மீண்டும் வருவேன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      உடல் நலக்குறைவையும் கருத்தில் கொள்ளாது - நமது தளம் தேடி வந்து கருத்துரை வழங்கிய தங்களுக்கு அன்பின் வணக்கம். நன்றி.

      அம்பாள் அருகிருந்து நலம் காத்து அருள்வாளாக!..

      மீண்டும் தங்கள் வருகையினை ஆவலுடன் எதிர்நோக்குகின்றேன்.

      நீக்கு
  5. தைபூசம் இன்று பல கோவில்களின் தரிசனம். இவ்வளவு தகவல்கள்...எப்படித்தான் இவ்வளவு அழக்காக தொகுத்துக் கொடுக்குறீங்கன்னு ஆச்சரியமாக இருக்கிறது. தொடருங்கள்,வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      அனைத்திற்கும் - குருவருளும் திருவருளும் தான்!..

      வலைச்சர ஆசிரியர் பொறுப்பில் இருந்தும் பணிச்சுமையைக் கருதாமல் தளத்திற்கு வருகை தந்து கருத்துரை வழங்கிய அன்பு கண்டு மகிழ்கின்றேன். வாழ்த்துரையில் நெகிழ்கின்றேன்.. நன்றி!..

      நீக்கு
  6. தைப்பூசத் திருநாளன்று
    வள்ளலார் பாடச்செய்தது
    தங்கள் கருணையே.

    நன்றி.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் இனிய வருகைக்கு மகிழ்ச்சி..
      கருத்துரைக்கு மிக்க நன்றி..

      நீக்கு
  7. நாளுக்கான பல இடத்து நிகழ்வுகளை ஒருங்கிணைத்து பதிவாக்கியது சிறப்பு. பலமுறை அவ்வழியே போயிருந்தாலும் வடலூர் செல்லாதது எங்கள் குறையே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன்.
      கருத்துரைக்கு நன்றி ஐயா..

      நீக்கு
  8. தங்களால் தைப்பூசத்திருவிழா கண்டேன் இன்று நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தாங்கள் வருகை தந்து தைப்பூசத் திருநாளைக் கண்டு களித்தமைக்கு மகிழ்ச்சி.. மிக்க நன்றி..

      நீக்கு
  9. இன்று தங்களை வலைச்சரத்தில் அறுமுகம் செய்து இருக்கிறேன் காணவாருங்கள்.
    http://blogintamil.blogspot.com/2015/02/1.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..

      தமது வலைச்சரத் தொகுப்பில் தஞ்சையம்பதியையும் தேர்வு செய்து அடையாளங்காட்டி அறிமுகம் செய்தமைக்கு மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      நீக்கு
  10. நல்வணக்கம்!
    திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
    "வலை - வழி - கைகுலுக்கல் - 1"

    இன்றைய வலைச் சரத்தின்
    சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
    வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!

    வாழ்த்துகளுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    http://youtu.be/KBsMu1m2xaE

    (எனது இன்றைய பதிவு
    ("கவி ஒளி" அருட்பெருஞ்சோதி வள்ளலார் / "தென்னகத்து தென்றல்" கண்டு இன்புற்று
    படித்தது கருத்திட வேண்டுகிறேன். நன்றி!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நம்பி..

      வலைச்சரத்தில் - அறிமுகத்தினை அறிவித்த தங்களுக்கும்,

      தமது தொகுப்பில் தஞ்சையம்பதியையும் தேர்வு செய்து அடையாளங்காட்டிய உமையாள் காயத்ரி அவர்களுக்கும்
      மனமார்ந்த நன்றி..

      நீக்கு
  11. தைப்பூச திருவிழா சிறப்பு பதிவு அருமை.
    படங்கள், செய்திகள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
      வாழ்த்துரைக்கு மிக்க நன்றி..

      நீக்கு
  12. தைபூசம் என்றால் என்ன என்று கேட்க சொல்லத் தெரியாமல் இருந்தது. இனி சொல்வேன்அது பற்றி. அதன் அருமை பெருமைகள் தந்ததவிய பதிவு அருமை தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்தையும் தெரிவிக்கிறேன்.
    வலைச்சச்சர அறிமுகதிற்கும் வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
      சொல்லியிருப்பவை அனைத்தும் ஆன்றோர்கள் அருளியவை..
      தங்கள் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  13. தைப்பூசம் மகிமைகள் கண்டு மகிழ்ச்சி......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..