பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரம். (ஏப்ரல் - 8) செவ்வாய்க்கிழமை!..
ஸ்ரீராம நவமி!.. ஸ்ரீ கோதண்டராம தரிசனம்!..
தஞ்சை மாநகருக்குக் கிழக்கே 5 கி.மீ. தொலைவில் நாகை நெடுஞ்சாலையின் வடபுறம் உள்ளது சமுத்திரம் எனும் மாபெரும் ஏரி. தஞ்சை மாநகரின் கிழக்கு எல்லை கரம்பை. இங்குதான் ஏரியின் மேற்கு எல்லை. நீண்டு விரிந்திருக்கும் ஏரியின் கீழ்க்கரையில் புன்னை நல்லூர்.
இந்த ஏரி , பத்து - இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை - பெயருக்கு ஏற்றபடி சமுத்திரம் போலவே அலை எறிந்தபடி ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் . அந்த அழகைக் கண்ணாரக் கண்ட கண்கள் புண்ணியம் செய்தவை.
இன்று இந்த ஏரியின் நிலை சொல்லும் தரமன்று!.. இருப்பினும் ஏரிக்கரை இன்றும் பசுமையான
வயல்வெளிக்குத் தாயாகத் தான் விளங்குகின்றது.
தஞ்சை மாநகரைக் கடந்து கீழ்த்திசை நோக்கிப் பயணிக்கும் சாலையின் வடபுறம் ஏரிக்கரை. இருமருங்கிலும் புளி, புங்கை - என அடர்ந்து விளங்கும் பலவிதமான மரங்கள். இவற்றில் பாதிக்கும் மேலானவை அழித்து ஒழிக்கப் பட்டன - சாலை விரிவாக்கம் என்ற பெயரில்!..
எனினும், மிச்சம் மீதியுள்ள மரச்சோலைகளுக்கு இடையே காட்சி தருவது - புகழ் பெற்றதும் பிரார்த்தனைத் தலமுமான புன்னை நல்லூர்!..
இன்று - மாரியம்மன் கோயில் என வழங்கப்படும் கிராமம்.
சாலையிலிருந்தபடியே - கிழக்கு நோக்கிய விளங்கும் மூன்று திருக் கோயில்களைத் தரிசிக்கலாம்.
ஸ்ரீகோதண்ட ராமர் திருக்கோயில்.
அருள்மிகு கல்யாண சுந்தரி சமேத கைலாச நாதர் திருக்கோயில்.
ஸ்ரீமுத்து மாரியம்மன் திருக்கோயில்.
இவற்றுள் -
நெடுஞ்சாலையின் வடபுறமாக - மாரியம்மன் திருக்கோயிலும் சிவாலயமும்
அருகருகே அமைந்துள்ளன.
ஸ்ரீகோதண்ட ராமர் திருக்கோயில் - மட்டும், மாரியம்மன் திருக்கோயிலுக்குப் பின்னால் சற்றே உட்புறமாக அமைந்துள்ளது.
முன்னொரு காலத்தில் புன்னை வனமாக இருந்த தலம். அதனால் ஊர் புன்னை நல்லூர் என்று அழைக்கப்பட்டது.
அம்பிகை தான் உவந்து புற்று உருவாக எழுந்த திருத்தலம். அம்பிகைக்குத் திருக்கோயில் எழுப்பப் பட்ட பின்னர் ஊரின் பெயரும் மாரியம்மன் கோயில் என்றே ஆனது.
தஞ்சையம்பதியை - சோழர்களுக்கு பின் - நாயக்கர்களும் மராட்டியர்களும் சிறப்புற ஆட்சி செய்திருக்கின்றனர். அவ்வண்ணமாக,
கி.பி.1739 முதல் 1763 வரை தஞ்சையை ஆண்ட பிரதாப சிம்மன் என்ற மராட்டிய மன்னர் எழுப்பிய திருக்கோயில் தான் - ஸ்ரீகோதண்ட ராமர் திருக்கோயில்.
தஞ்சை மன்னர் பிரதாப சிம்மன் - பிள்ளைப்பேறு இன்றி வருந்தி பல்வேறு வேள்விகளையும் நற்காரியங்களையும் தீர்த்த யாத்திரைகளையும் இயற்றினார். நல்ல நேரம் கூடி வந்த வேளையில் அவர் துயர் தீர்க்கும் முகமாக - தன் திருமுகம் காட்டி அருளினான் ஸ்ரீராமபிரான்.
மனம் மகிழ்ந்த மன்னர், தனக்கு -
பிள்ளை பேற்றை அளித்த ராமபிரானுக்கு நன்றிக் கடனாக - திருக்கோயில் ஒன்றை எழுப்பும் திருப்பணியில் இருந்தார்.
அந்த வேளையில் - தஞ்சை மன்னரின் நண்பரான நேபாள அரசர் - புண்ய நதியான கண்டகியில் கிடைத்த சாளக்கிராமங்களை பரிசளிக்க,
அந்தப் புனித சாளக்கிராமத்தினாலேயே திருமேனிகள் உருவாக்கப்பட்டன.
சாளக்ராம
மூர்த்திகள் - திரு மூலஸ்தானத்தில் விளங்குவது - மிக அபூர்வம்!..
நில மட்டத்திலிருந்து சற்று உயரமாக, ஐந்து நிலை
ராஜகோபுரத்துடன் விளங்குகின்றது திருக்கோயில்.
பன்னிரண்டு படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இவை பன்னிரு ராசிகளைக் குறிப்பன என்கின்றனர்.
ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே நுழைந்தவுடன் தென்புறத்தில் தும்பிக்கை ஆழ்வாராக - விநாயகப் பெருமான்!..
அடுத்து துவஜ ஸ்தம்பம். கொடி மரத்தை அடுத்து முன் மண்டபத்தில் கருடாழ்வார்
சந்நிதி.
எதிரே சௌந்தர்ய விமானம்.
திரு மூலஸ்தானத்தில் சாளக்ராம
மூர்த்திகள். வலக்கையில் சரமும்,
இடக்கையில் கோதண்டமும் திகழ - ஸ்ரீ கோதண்டராமன் என எழிலாகக்
விளங்குகின்றான் - ஐயன். வலப்புறம் சீதா தேவியும், இடப்புறம் இளைய
பெருமாளாகிய லக்ஷ்மணனும் அருள்பாலிக்கின்றனர்.
மூவரும் நின்ற கோலத்தில் திருக்காட்சி. திருவடியில் ஸ்ரீ
ஆஞ்சனேயர் அமர்ந்துள்ளார்.
புன்னை நல்லூர் - ஸ்ரீ கோதண்டராமன் |
உற்சவ மூர்த்திகள் - கோதண்டராமர், சீதை,
லக்ஷ்மணன், ஆஞ்சனேயர்.
அழகு எனில் அழகு.. பேரழகு!.. காணக் கண் கோடி வேண்டும்!..
எனினும் - ஐயனின் அருகில் - சுக்ரீவன்!.. நன்றியும் பக்தியும் கொண்டு எங்கும் இல்லாத அதிசயமாக இங்கே வணங்கிக்
கொண்டிருக்கிறார் என்றும் கூறப்படுகின்றது.
அரசனுக்கே உரிய அலங்காரங்கள் தென்படுவதால் - சுக்ரீவன் என - குறிக்கப்படுகின்றார் போலும்!..
கருவறையில் உள்ள மூல மூர்த்தங்கள் - புனித சாளக் கிராமத்தினால் வடிவமைக்கப்பட்டவை.
சிறியதொரு சாளக்கிராமக் கல்லை வைத்து வழிபட்டாலே நிறைந்த புண்ணியம் கிடைக்கும் என்பது சான்றோர் வாக்கு.
மேலும் - திவ்ய தேசத் திருக்கோயில்களில் எழுந்தருளியுள்ள பெருமானுக்கு சாளக்கிராம மாலையை அணிவித்தும் வழிபடுகின்றார்கள். அப்படியிருக்க -
மூல மூர்த்தியே சாளக்கிராமம் எனும்போது இத்திருத்தலத்தின் பெருமை அளவிடற்கரியது.
திருக்கோயில் - மூன்று புறமும் உள் மண்டபத்துடன் கூடிய திருச்சுற்றுடன் விளங்குகின்றது.
திருச்சுற்றில், தென்புறம் - ஸ்ரீ சக்கரத்தாழ்வார் - ஸ்ரீயோக நரசிம்மர் விளங்கும் வடக்கு நோக்கிய
சந்நிதி!..
திருச்சுற்றின் மண்டபச் சுவர்கள் முழுவதும் வண்ண மயமான ராமாயணக் காட்சிகள்.
திருச்சுற்றின் வடபுறம் - விஷ்வக்ஸேனர், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், உடையவர், மகாதேசிகர் - ஒரே சந்நிதியில் விளங்குகின்றனர்.
இத்திருக்கோயிலின் தல விருட்சமான புன்னை மரம் பரந்து விரிந்து குளிர்ந்த நிழல் தருகின்றது. புன்னை மரத்தினடியில் ஸ்ரீராமர் பாதம் எனும் திருவடி
நிலை விளங்குகின்றது.
புன்னை மரத்தினை ஒட்டி உள்ள மண்டபத்துடன் கூடிய சந்நிதியில் தெற்கு முகமாக ஸ்ரீஜயவீர ஆஞ்சநேயர்!..
நின்ற திருக்கோலம். கம்பீரமாக விளங்குகின்றார். வலது கரத்தால் அபயம் அருளும் ஆஞ்சநேயரின் இடது கரத்தில் தாமரை மலர்.
சீதையின் இருப்பிடம் கண்டு அந்த நல்ல செய்தியை ராமனுக்குச்
சொல்ல, தாமரைப் பூவுடன் செல்வதாக ஐதீகம். ஆஞ்சநேயரின் மண்டப விதானத்தில் பன்னிரண்டு ராசிக் கட்டங்கள் உள்ளன. கீழே தளத்திலும் ராசிக் கட்டங்கள் உள்ளன.
பக்தர்கள் தங்கள் ராசிக்குக் கீழ் நின்றவாறு சொல்லின் செல்வனை வேண்டித் துதித்தால் - அல்லல்கள் அகலும் தொல்லைகள் தொலையும் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
பெரிய தேர் இருந்ததற்கு சாட்சியாக திருக்கோயிலுக்கு
வெளியே தேரடி மண்டபம். தேர் போய்ச் சேர்ந்த இடம் தெரியவில்லை. தற்போது மண்டபத்தின் மேல் தளத்தில் கல்விக்கும் ஞானத்திற்கும் அதிபதியான ஸ்ரீலக்ஷ்மி ஹயக்கிரீவருக்கு தனி சந்நிதி அமைத்துள்ளனர்.
குழந்தைகளும்,
மாணவர்களும் தேடி வருகின்றனர். நல்லருள் பெற்றுச் செல்கின்றனர்.
வியாழக் கிழமைகளில் மிகச் சிறப்பாக ஸ்ரீலக்ஷ்மி ஹயக்கிரீவருக்கு அபிஷேக ஆராதனைகள் நிகழ்கின்றன.
என் மகன் சிவஸ்ரீகாந்த் - பள்ளிப் பாடங்களில் பதற்றமாக இருந்த வேளையில் - அவனுக்குக் கை கொடுத்து கரையேற்றியவர் - இவரே!..
திருக்கோயிலின் தீர்த்தம் க்ஷீர புஷ்கரிணி. வைகானஸ ஆகம முறைப்படி
வழிபாடுகள் நடைபெறுகின்றன.
இது தஞ்சை யாளி நகர் - என திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்விக்கப்பட்டதும் வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ளதுமான தஞ்சை மாமணிக் கோயிலைச் சார்ந்த விளங்குகின்றது.
வருடாந்திர மகோற்சவங்கள் சிறப்புற நிகழ்கின்றன. தற்சமயம் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு கருடசேவை முதலான விசேஷங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
புன்னை நல்லூரில் ஸ்ரீகோதண்டராமர் திருக்கோயிலை எழுப்பிய - ப்ரதாப சிம்மன் - தஞ்சை மாநகரில், ஸ்ரீவிஜயராமர் திருக்கோயிலையும், ஸ்ரீஆஞ்ச நேயருக்கு என, கொடி மரத்துடன் கூடிய தனிப் பெரும் கோயிலையும் (மூலை அனுமார் கோயில்) - எழுப்பியுள்ளார்.
ப்ரதாப சிம்மன் - நிர்மாணித்த
மற்றொரு திருக்கோயில் - நீடாமங்கலம் ஸ்ரீ சந்தான ராமஸ்வாமி திருக்கோயில்!..
அமைதியும், ஆனந்தமும் பொங்கித் ததும்பும் - திருக்கோயிலில்
ஸ்ரீகோதண்டராமனின் தரிசனத்தால் - குறைகள் அகல்கின்றன!..
ஐயனின் திருவடிகள் - அடைக்கலம் அருள்கின்றன!..
ராமாய ராம பத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாயா: பதயே நம:
கோதண்ட மண்டிதகரம் கமலாயதாக்ஷம்
ஸீதா ஸ மாஷ்ரிதபுஜம் ஜகதாம் ஷரண்யம்
ஆஜானுபாஹூ ம மரார்சித பாதபத்மம்
பீதாம்பரம் ரகுவரம் ஷரணம் ப்ரபத்யே:
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜயராம்!..
வணக்கம் ஐயா
பதிலளிநீக்குதங்களின் இந்த பதிவு புன்னைநல்லூர் மாரியம்மன் திருதலத்தை நேரில் சென்று வழிபட்ட அனுபவத்தைத் தருகிறது.
//மூன்று திருக் கோயில்களைத் தரிசிக்கலாம்.
ஸ்ரீகோதண்ட ராமர் திருக்கோயில்.
அருள்மிகு கல்யாண சுந்தரி சமேத கைலாச நாதர் திருக்கோயில்.
ஸ்ரீமுத்து மாரியம்மன் திருக்கோயில். // காணக் கொடுத்து வைக்க வேண்டும் ஐயா. நல்லதொரு பகிர்வு. பகிர்வுக்கு நன்றீங்க ஐயா..
அன்பின் பாண்டியன்..
நீக்குதங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..
ராமா! ராமா!
பதிலளிநீக்குராமநாமத்தை உச்சரிக்க வைத்துப் புண்ணியம் தேடித் தந்த உங்களுக்கு நன்றி.
அன்புடையீர்..
நீக்குஅனைத்துப் புண்ணியங்களும் அனைவருக்கும் ஆகட்டும்!..
தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..
ராம் ராம்...
பதிலளிநீக்குசிறப்பான பகிர்வு ஐயா... நன்றி...
வாழ்த்துக்கள் பல...
அன்பின் தனபாலன்..
நீக்குதங்களின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..
ராமபிரான் பற்றி கட்டுரை அழகிய படங்களுடன்...
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி ஐயா.
அன்பின் குமார்,
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..
மூல மூர்த்தியே சாளக்கிராமம் எனும்போது இத்திருத்தலத்தின் பெருமை அளவிடற்கரியது
பதிலளிநீக்குஅருமையான திருக்கோவில் பற்றி சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
அன்புடையீர்.
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
ஜெய் ஸ்ரீராம்.....
பதிலளிநீக்குராம நவமி அன்று சிறப்பான பகிர்வு. நன்றி.
அன்பின் வெங்கட்.
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..