நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஏப்ரல் 12, 2014

மக்கள் கவிஞர்

மண்ணில் சில காலமே வாழ்ந்தாலும் தன்னிகரற்ற தனித்துவமான பாடல்களால் மங்காத பெரும் புகழுடன், 


மக்கள் கவிஞர் 
என -   மக்கள் மனங்களில் நிறைந்து விளங்குபவர். 
திரு. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள்.

பட்டுக்கோட்டையை அடுத்துள்ளது - நீர் வளமும் நிலவளமும் நிறையப் பெற்ற செங்கப்படுத்தான் காடு எனும் சிற்றூர்.  இந்த அழகிய கிராமம் தான்,

சொல் வளமும் பொருள் வளமும் கொண்ட  செந்தமிழ்க் கவி எனும் செல்வப் புதல்வனைப்  பெற்றெடுத்து (13 ஏப்ரல் 1930) பெருமை கொண்டது.

தாயார் - திருமதி. விசாலாட்சி அம்மாள்.  
தந்தையார் - திரு. அருணாசலம் பிள்ளை.

எளிய விவசாய குடும்பம். தொடக்கக் கல்விதான். ஆனாலும் -
அவருடைய பாடல்கள் சிறப்புற்று - காலத்தை வென்று நிற்கின்றன!.. 

காரணம் அவை - மண் வாசத்துடன் மனித நேயம் கொண்டு எழுந்ததனால்!..

தனது இளம் வயதிலேயே கவி புனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர், பட்டுக் கோட்டையார்.

திரைப்படத்திற்கென அவர் எழுதிய பாடல்கள்  குறைவுதான்!..   எனில் - அவை இருநூறு பாடல்கள் தான் என்று ஒரு குறிப்பு உள்ளது.

அவற்றில் பல காலத்தை வென்று நிற்பவை. 

ஓடிப்போ ஓடிப்போ கெண்டைக் குஞ்சே..
கரை ஓரத்தில் மேயாதே கெண்டைக் குஞ்சே!..
தூண்டிக்காரன் வரும்நேரம் கெண்டைக் குஞ்சே..
ரொம்பத் துள்ளிக் குதிக்காதே கெண்டைக் குஞ்சே!..
 
இது தான் கவிஞர் தம் மனதில் தோன்றிய முதற்பாடலாம்!..

இவருடைய வீட்டிலிருந்து வடக்கே உள்ள தாமரங்கோட்டை கிராமத்திற்குச்  செல்லும் வழியில் உள்ள ஏரிக்கரையில் - இனியதொரு மாலை வேளையில் உதித்தது இந்தப் பாடல்!..

இவருடைய பாடல்களின் சிறப்பு கருத்தாழத்துடன் கூடிய எளிமையான வரிகள். பாமரர்க்கும் அதன் உட்பொருள் புரிந்தது. 

இனிய தமிழ் மணம் கொண்டு கமழ்ந்த பாடல்கள் - பொழுதெல்லாம் உழைத்துக் களைத்த மக்களின் மனதை ஆதுரத்துடன்  தட்டிக் கொடுத்து அவர்களுக்கு நிஜங்களை நேர்ப்படுத்தி நியாயமாய்த் திகழ்ந்தன. 

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களைத் தனது குருவாகக் கொண்டவர். அவருடனே புதுச்சேரியில் தங்கி இருந்து - புரட்சிக் கவிஞரின் மாத வெளியீடான குயில் ஏட்டில் பணி புரிந்தவாறே - கவிதையின் நுட்பங்களைக் கற்றுக் கொண்டார்.

தனது வளர்ச்சிக்குத் துணை புரிந்த புரட்சிக் கவிஞர் அவர்களின் அன்பினை மறவாமல் - மனதில் கொண்டு -  கவிதை எழுதும் போது, அதன் தலைப்பில் - 


''வாழ்க பாரதிதாசன்''  - என எழுதுவதை வழக்கமாகக் கொண்டிந்தார் எனில், 

புரட்சிக் கவிஞரிடம் மக்கள் கவிஞர் கொண்டிருந்த - பற்றும் பாசமும் பக்தியும் விளங்குகின்றது.

ஒருமுறை படத்தயாரிப்பாளர் ஒருவர்,  அவமதித்ததை அடுத்து -  கவிஞரின் மனதில்  கோபம் கொந்தளித்து -

கன்னல் தமிழ் - கனல் தமிழாய் வெளிப்பட்டது - இப்படி!..

தாயால் வளர்ந்தேன்
தமிழால் அறிவு பெற்றேன்
நாயே… நேற்றுன்னை
நடுத்தெருவில் சந்தித்தேன்
நீ யார் என்னை
நில்லென்று சொல்ல?..

மெல்லிசை மன்னர் திரு.M.S.விஸ்வநாதன் அவர்களிடம், முதன்முதலாக மக்கள் கவிஞரின் பாடல் அறிமுகப்படுத்தப்பட்டபோது - நேரம் இன்மையால் , அவர் நிராகரித்திருக்கின்றார்.

ஆனாலும் மறுநாளும் தொடர்ந்த வற்புறுத்தலினால் - அரைகுறை மனதுடன் பாடலின் பிரதியை வாங்கிப் படித்து விட்டு அசந்து போய்  -

''..இப்படி ஒரு கவிஞன் இருக்கானா?.. உடனே அவனை வரச் சொல்லுங்க!..''

என்று அழைத்து,  உடனே பாடலுக்கு டியூன் அமைத்ததாகவும் ,


''கவிதை எழுதி வந்தவன் கிட்ட என்ன இருக்குனு தெரியாம திருப்பி அனுப்பிய குற்றத்துக்காக அன்று இரவு பட்டினியாகக் கிடந்து தனது பிழைக்கு வருந்தியதாக'' - மெல்லிசை மன்னர் குறிப்பிடுகின்றார் எனில் - கவிஞரின் கவிதை வரிகளில் ஒளிரும் மகத்துவம் புரிகின்றது.

மெல்லிசை மன்னரை அசத்திய அந்தப் பாடலின் வரிகள்..

குட்டி ஆடு தப்பி வந்தா குள்ளநரிக்குச் சொந்தம்
குள்ளநரி மாட்டிக் கிட்டா கொறவனுக்குச் சொந்தம்
தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்
சட்டப்படி பார்க்கப் போனா எட்டடிதான் சொந்தம்!..

இதற்குப் பிறகு - 

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்..னு ஒரு பிள்ளையாண்டான் எழுதின பாட்டைக் கேட்டீங்களா?.. என்று கவிஞர் தஞ்சை ராமையாதாஸ், உடுமலை நாராயணகவியிடம் கேட்டார்.

நல்லாதானே எழுதுறான்.. என்ன சமாச்சாரம்?.. என்றார் உடுமலை.

சட்டப்படி பார்த்தா எட்டடி தான் சொந்தம்னு எழுதியிருக்கான். அதெப்படி?.. ஆடி அடங்கும் மனுஷனுக்கு ஆறடி நிலந்தானே சொந்தம்?.. - என்று தஞ்சை ராமையாதாஸ்  கேட்க,

இதிலென்ன ஐயா.. கஞ்சத்தனம் வேண்டியிருக்கு?. தாராளமா கூட ரெண்டடி இருக்கட்டுமே..ன்னு தான் அப்படி எழுதி இருக்கான். நல்லதுதானே!. உனக்கும் எனக்கும் ஆறடி பத்தாதே!.. என்றார் உடுமலை நாராயணகவி.

மக்கள் கவிஞரும் நல்ல உயரமானவரே!..

என் எதிர்ல வந்து நின்ன அந்த இளைஞன் பனை மர உசரத்துக்கு இருந்தான்!.. - என்று மெல்லிசை மன்னர் - கவிஞரை நினைவு கூர்கின்றார்.

மாடா ஒழைச்சவன் வாழ்க்கையிலே - பசி
வந்திடக் காரணம் என்ன மச்சான்?..

அவன் - தேடிய செல்வங்கள் வேற இடத்திலே
சேர்வதனால் வரும் தொல்லையடி!..

- என , உணர்வுகளைக் கொட்டி - உழைத்த மக்களைச் சிந்திக்கத் தூண்டியவர்.

செழும்பயிரும் செந்தமிழும்

சின்னஞ்சிறு கண்மலர் 
செம்பவள வாய்மலர்
சிந்திடும் மலரே ஆராரோ!
 
வண்ணத் தமிழ்ச் சோலையே! 
மாணிக்க மாலையே!
ஆரிரோ!.. அன்பே ஆராரோ!..

- எனும் இனிமையில் உறங்காதார் யார்!..

விழித்துக் கொண்டோரெல்லாம்
பிழைத்துக் கொண்டார் - உன்போல்
குறட்டை விட்டோரெல்லாம்
கோட்டை விட்டார்!..

- எனும் விடியலில் விழிக்காதார் யார்!..

மனங்களில் மண்டி கிடக்கும் தள்ள வேண்டிய குறைகளையும்  கொள்ள வேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர்.

கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் 
கவைக்கு உதவாத வெறும் பேச்சு..
கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே
கருத வேண்டியதை மறந்தாச்சு ..


- என்று இருபுறத்தையும் இடித்துரைத்தவர்.

துன்பக் கடலைத் தாண்டும் போது தோணி யாவது கீதம்
அன்புக் குரலில் அமுதம் கலந்தே அருந்தத் தருவது கீதம்!..

என - அமுதத் தமிழினைப் பருகக் கொடுத்தாலும், அவருக்குள்ளும் நம்மீது சந்தேகம் இருந்திருக்கின்றது. அதனால் தான் - 

சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன் செய்யுறதைச் செஞ்சிடுங்க..
நல்லதுன்னாக் கேட்டுக்குங்க கெட்டதுன்னா விட்டுடுங்க!..

-  என்று நேரடியாகவே சொல்லி விட்டார். எனினும் , 

அது இருந்தா இது இல்லை
இது இருந்தா அது இல்லை
அதுவும் இதுவும் சேர்ந்திருந்தா
அவனுக்கிங்கே இடமில்லே!..

தனித்துவமான வரிகளால் - இன்றைக்கும்  என்றைக்கும் நிலைத்து நம்முடன் வாழ்பவர். 

அவர் பிறந்த மண்ணிற்கு அடுத்த தாமரங்கோட்டை கிராமத்தில் நானும் சில காலம் வாழ்ந்தேன் என்பதை நினைக்கும்போது பெருமையாகத் தான் இருக்கின்றது.  

மங்கல மனையறம் ஏற்ற வேளை
கவிஞரின் சகோதரரான  திரு.கணபதிசுந்தரம் அவர்களையும் சகோதரியார் திருமதி. வேதம்பாள் அவர்களையும், 

கவிஞரின் துணைவியார் திருமதி. கௌரவாம்பாள் அவர்களையும் அவரது அன்பு மகன் திரு. குமரவேல் அவர்களையும் நேரில் அறிவேன்.

அன்பிற்கும்  பாசத்திற்கும் உறைவிடமான - குடும்பம் அது!..

திரு.கணபதிசுந்தரம் அவர்கள் - சமயத்தில் என் தந்தையைத் தேடி வருவார் -  அந்த வேளைகளில், கவிஞரின் பாடல்களை இருவரும் இசையுடன் பாடி மகிழ்ந்ததெல்லாம் இன்னும் பசுமையாக நிழலாடுகின்றன.

என் மகனைத் தோளில் போட்டுக் கொண்டு, நான் பாடியது மக்கள் கவிஞரின்  பாடலைத்தான்!..

சின்னப் பயலே சின்னப் பயலே
சேதி கேளடா..  நான்
சொல்லப் போற..  வார்த்தையை நல்லா
எண்ணிப் பாரடா..  நீ எண்ணிப் பாரடா!..

ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அதுதாண்டா வளர்ச்சி..
உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே
நீதரும் மகிழ்ச்சி!..

நாளும் ஒவ்வொரு பாடம்கூறும்
காலம் தரும் பயிற்சி - உன்
நரம்போடுதான் பின்னி வளரணும்
தன்மான உணர்ச்சி!..

மனிதனாக வாழ்ந்திட வேணும்
மனதில் வையடா - தம்பி மனதில் வையடா
வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ
வலது கையடா  - நீ வலது கையடா!..

தனியுடைமைக் கொடுமைகள் தீரத்
தொண்டு செய்யடா - நீ தொண்டு செய்யடா
தானா எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா - எல்லாம் பழைய பொய்யடா!..

வேப்பமர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதுன்னு
விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க - உன்
வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க

வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே - நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
வெம்பி விடாதே - நீ வெம்பி விடாதே!..

கவிஞரின் சகோதரியார் - எங்கள் வீட்டுக்கு வரும் போதெல்லாம் - மிகுந்த அன்பினோடு வருவார். என் தந்தையிடம் பேசிக் கொண்டிருப்பார்.

தம்பியோட.. பாட்டு ஒண்ணு வாசியுங்களேன்!.. - என்பார்.

என் தந்தையின் ஹார்மோனியத்தில் இருந்து கவிஞரின் பாடல் காற்றில் தவழும் போது அவருடைய பார்வை எங்கோ நிலைத்து இருக்கும்..

* * *
 மக்கள் கவிஞர் தமது பாடல்களில் வடித்துக் கொடுத்த 
சமுதாயக் கருத்துகள் இன்று வரை நிலைத்து நிற்கின்றன.

பஞ்சப் பரம்பரை வாழ்வதற்கு - இனி 
பண்ண வேண்டியது என்ன மச்சான்?..

தினம் - கஞ்சி கஞ்சி என்றால் பானை நெறையாது
சிந்தித்து முன்னேற வேணுமடி!..


கார் உள்ளவரை கடல்நீர் உள்ளவரை பட்டுக்கோட்டையார் வழங்கிய சமுதாயக் கருத்துக்கள் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை!..

மக்கள் கவிஞரைப் பற்றி அவரது மகன் திரு. குமரவேல் அவர்கள்
 வழங்கும் மேலதிகத் தகவல்கள் நிறைந்த தளம்
 http://www.pattukkottaiyar.com

 

 ஏப்ரல் பதின்மூன்று.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் பிறந்த நாள்!
 
தமிழ் கூறும் நல்லுலகில் அவரது பாடல்கள் 
என்றென்றும் தென்றலாய்த் தவழ்ந்திருக்கும்!..

10 கருத்துகள்:

  1. அவரின் பாடல் தொகுப்பு கணினியில் உண்டு (வரிகளுடன்)... என்று கேட்டாலும் மனதிற்கு இதம், புத்துணர்ச்சி, இன்னும் பல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      மனதிற்கு இதம் - புத்துணர்ச்சி.. - நியாயமான வார்த்தைகள்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  2. சிறப்பான அஞ்சலி. பல பாடல்கள் காலத்தினால் அழியாதவை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  3. எக்காலத்திற்கும் பொருந்தும் பாடல்களை நமக்களித்த மக்கள் கவிஞரை நினைவுகூர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. நாம் பெற்று வளர்க்கும் குழந்தைகளைத் தோளில் போட்டு பாடவேண்டிய வரிகள். பாட்டுக்குப் பாட்டு பாட்டுடன் நல்ல அறிவுரை. பட்டுக் கோட்டையாரின் பாடல்கள் காலத்துக்கு ஏற்றவைதான் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      காலத்தால் அழிக்க முடியாத பாடல் வரிகள் - அவை.
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  5. கொடுத்து வைத்தவர் ஐயா நீங்கள். பட்டுக்கோட்டையாரின் குடும்பத்துடன் பழகும் வாய்ப்பு, படிக்கப் படிக்க மனம் சிலிர்க்கிறது ஐயா.
    ///வேலையற்ற வீனர்களின் மூளையற்ற வார்த்தைகளை
    வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே- நீ
    வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பிவிடாதே///
    பட்டுக்கோட்டையாரால் மட்டுமே இவ்வாறு எழுத முடியும்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      மக்கள் கவிஞர் - தமிழ் மண்ணில் விளைந்த நல் முத்து!..
      எளிய வரிகளின் மூலமாக - பாமர நெஞ்சங்களையும் தொட்டு எழுப்பியவர். தமிழன்னையை அலங்கரித்ததில் அவருக்கும் பங்குண்டு..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..