நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, பிப்ரவரி 23, 2014

பொன்மாலைப் பொழுது

கடந்த பிப்ரவரி 19. புதன்கிழமை.

மாலைப் பொழுது. நேரம் - 5.30 மணி.


''.. ஐயா வணக்கம்!.. நான் விஷ்ணு கம்ப்யூட்டர்ஸ் செல்வராஜூ பேசுகின்றேன். தங்களைச் சந்திக்க வேண்டும். தற்சமயம் தாங்கள் எங்கே இருக்கின்றீர்கள்!?.. வீட்டிலா... வெளியிலா!..''


அந்தப் பக்கம் - அன்புக்குரிய கரந்தை ஜெயக்குமார் அவர்கள்.

''..வணக்கம்.. நலமாக இருக்கின்றீர்களா!.. எப்பொழுது குவைத்தில் இருந்து வந்தீர்கள்!?..''

''..மகளின் திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் வந்தேன்.. எல்லாமே அவசரகதியில் நடந்ததால்  - தங்களுக்கெல்லாம் அழைப்பிதழ் கொடுக்க இயலாமல் போய்விட்டது. திருமண அழைப்பிதழை வலைப் பதிவில் கூட பதிவு செய்ய இயலவில்லை. என்னை மன்னித்து விடுங்கள்.. ஐயா!.. தங்களை நேரில் பார்த்து பதில் பேசாமல் என் மனம் ஆறாது.. சொல்லுங்கள்.. உடனே அங்கு...''

''..நம்ம..  முத்து நிலவன்  அவர்களைத் தெரியுமா!..''

''.. தெரியுமே!..''

''.. அவர்கள் இன்று தஞ்சைக்கு வருகின்றார்கள்!..''

''..அப்படியா!..''
நன்றி - கரந்தை ஜெயக்குமார்

''..சாமியப்பா கேம்பஸ்ல - புத்தகக் கண்காட்சி நடக்கின்றதல்லவா.. அங்கே சிறப்புரையாற்ற வருகின்றார்கள். நான் அவர்களை அழைத்து வரச் செல்கின்றேன்.. நீங்கள் அங்கே வந்து விடுங்கள்.. இடம் தெரியுமல்லவா?!..''

''.. தெரியும்.. இதோ...  வந்து விட்டேன்!..''

கரும்பு தின்னக் கூலியா!.. 

அடுத்த அரை மணிநேரத்தில் நான் - தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள சாமியப்பா கூட்டுறவு  மேலாண்மைப் பயிற்சி நிலைய வளாகத்தில் இருந்தேன். 

சாமியப்பா கூட்டுறவு  மேலாண்மைப் பயிற்சி நிலைய வளாகம்   - பரந்து விரிந்து விளங்குவது.

நன்றி - FB.,

அங்கே தான், Rotary Club Of Thanjavur Kings  அமைப்பினர் ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறப்புடன் நடத்தி வரும் - புத்தகக் கண்காட்சி,

புத்தகத் திருவிழாவாக - பிப்ரவரி 14 முதல் பிப்ரவரி 23 வரை தினமும் மாலை வேளையில் சிறப்புச் சொற்பொழிவுகளுடன் நடந்து கொண்டிருக்கின்றது. 

மாலை வேளையில் வண்ண வண்ண விளக்குகள் தோரணங்களாக ஒளிர  - 

அங்கே நூற்றுக் கணக்கானவர்கள். புத்தகங்களை வாங்குவதற்கும் நல்லோர் தம் சொற்பொழிவுகளைக் கேட்பதற்கும்!..

நீண்டு விளங்கிய அரங்கினுள் - இருபுறமும் தமிழகத்தின் புகழ் பெற்ற பதிப்பகங்களின் கடைகள்.  கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
 
வளாகத்தின் பரந்த வெளியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில், 


அப்போது தான் - நம் அனைவருடைய அன்புக்கும் மதிப்புக்கும் உரிய திரு. முத்து நிலவன்  அவர்கள் தனது சிறப்புரையைத் தொடங்கியிருந்தார்கள். 

அவர்களுடைய நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வது அதுவே முதன்முறை. 

மேடைக்கு எதிரில் - முதல் வரிசையில், அன்பின் திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்களும்,


முனைவர் ஜம்புலிங்கம்  - ஆகிய வலைத் தளங்களை  நடத்தி வரும் -


சித்தாந்த ரத்தினம் திரு. முனைவர் B. ஜம்புலிங்கம்  (கண்காணிப்பாளர், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சை) அவர்களும் அமர்ந்திருந்தனர்.

அங்கே - மடை திறந்த வெள்ளம் என  - ஐயா முத்து நிலவன் அவர்களின் செந்தமிழ்ப் பெருக்கு.

அதனிடையே அமிழ்ந்தவாறு - அரங்கில் திரண்டிருந்த மக்களின் ஊடாக நானும் அமர்ந்து கொண்டேன்.

அன்றைய நாள் - பிப்ரவரி பத்தொன்பதாம் நாள். 

19.2.1855 - 28.4.1942

தமிழ் கூறும் நல்லுலகம் பெருமையுடன் கொண்டாடும் தமிழறிஞர் உ.வே.சா. அவர்களின் பிறந்த தினம்.  

ஓலைச் சுவடியில் அழியும் நிலையில் இருந்த தமிழ் இலக்கியங்களை மீட்டு பதிப்பித்து அளித்த உ.வே.சா. அவர்களுக்கு  நிகராக வேறு எவரும் இல்லை. 


தனது வாழ்நாளில் மூன்றாயிரத்துக்கும் அதிகமான ஓலைச் சுவடிகளைச் சேகரித்தார். தொண்ணூற்றுக்கும் அதிகமான புத்தகங்களை அச்சிட்டுப் பதிப்பு செய்தார்.

தமது தளராத உழைப்பினால் தமிழின் அருமை பெருமைகளை தமிழர் அறியும் படிக்குச் செய்தவர் - உ.வே.சா. அவர்கள்.

ஆதலால், அன்பின் திரு. முத்து நிலவன் அவர்கள் எடுத்துக் கொண்டிருந்த தலைப்பு -  

உ. வே.சா. அவர்களின் சமயம் கடந்த தமிழ்ப் பணிகள்!.. 

அடடா!.. 

எடுத்துக் கொண்ட தலைப்புக்கு ஏற்றதாக - 

எத்தனை எத்தனை விளக்கங்கள்!.. 

எத்தனை எத்தனை  சொல் நயங்கள்!.. 

அத்தனையும் அழகு!..

தமிழ்த் தாத்தா என அன்புடன் அழைக்கப்படும் - உ.வே.சா. அவர்களின் ஆசிரியராகிய மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களைப் பற்றி விவரித்த பாங்கு சிறப்புடையது!..

அதுவரையிலும் சிற்றிலக்கியங்களை மட்டுமே பயின்றிருந்த உ. வே. சா. அவர்கள் -

தனது நண்பர் சேலம் திரு. இராமசாமி முதலியார் - ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான - சீவக சிந்தாமணியைப் பற்றி அறிமுகம் செய்த பின்,

சமய வேறுபாட்டினால் புறக்கணிக்கப்பட்டிருந்த சமண காப்பியமாகிய - சீவக சிந்தாமணியின் சுவடிகளைத் தேடிப் புறப்பட்டதையும்

அரும்பாடுபட்டு, அந்த ஓலைச்சுவடிகளைக் கண்டுபிடித்து - பதிப்பித்து வெளியிட்டதையும் திரு. முத்து நிலவன்  அவர்கள் மெய்சிலிர்க்க விவரித்தார்.


முத்து நிலவன் ஐயா அவர்கள் - தனது சிறப்பான சொற்பெருக்கினால் அனைவரையும் கட்டிப் போட்டார் என்பதே உண்மை..

பலத்த கரகோஷங்களுக்கிடையே திரு. முத்து நிலவன் அவர்கள் தனது சிறப்புரையினை நிறைவு செய்தபோது,

இன்னும் கொஞ்ச நேரம் பேசியிருக்கலாமே!..  - என்று என் மனம் ஏங்கியது .

மேடையில் இருந்து திரு. முத்து நிலவன் அவர்கள் கீழே இறங்கியதும் நான் சென்று - 

அன்பின் திரு. ஜெயக்குமார் அவர்களை அணுகி எனது வணக்கத்தினைச் சொன்னேன். 

பாசப்பெருக்குடன் எனது கரங்களைப் பற்றிக் கொண்டார் திரு. ஜெயக்குமார் அவர்கள்.

அருகிருந்த முனைவர் திரு. ஜம்புலிங்கம் அவர்களிடம் என்னையும் ஒரு பொருட்டாக அறிமுகம் செய்து வைத்தார். 

அத்துடன் - அன்பின் திரு. முத்து நிலவன் அவர்களிடமும் -

''..தஞ்சையம்பதி எனும் அழகிய வலைத் தளத்தை நடத்துபவர்!..'' - என்று,

என்னை அறிமுகம் செய்து வைத்தபோது என் மனம் நெகிழ்ந்தது.


அன்பின் திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்களுடனும் 
அன்பின் திரு. ஜம்புலிங்கம் அவர்களுடனும் 
அன்பின் திரு. முத்து நிலவன் அவர்களுடனும் 
- நான் பேசிக் கொண்டிருந்த நேரம் பொன்னானது.

இரவுப் பொழுது.  நேரமும் ஆகி விட்டது. 


எவருக்கும் - அங்கிருந்து - புத்தகத் திருவிழாவிலிருந்து பிரிவதற்கு மனம் இல்லை.

ஆயினும் என்ன செய்ய!?.. 

ஒருவருக்கொருவர் அன்பின் பரிமாற்றங்களுடன் விடை பெற்றுக் கொண்டோம்.

அன்பின் திரு.  முத்து நிலவன் அவர்கள் அன்பும் ஆதரவும் கொண்டு என்னிடம் உரையாடிய நிமிடங்கள் மறக்க இயலாதவை.

மனதிற்கு நெருக்கமான மகிழ்ச்சியான தருணங்கள் அவை. 

அனைவருக்கும் இத்தகைய 
பொன்மாலைப் பொழுதுகள் கிடைக்க வேண்டிக் கொள்கின்றேன்.

நல்லாரை காண்பதுவும் நன்றே; நலம் மிக்க 
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார் 
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு 
இணங்கி இருப்பதுவும் நன்றே!..

20 கருத்துகள்:

  1. இந்தப் பதிவர் சந்திப்பின் மகிழ்வை உங்கள் பதிவில் கண்டேன். நானும் உங்கள் மகிழ்ச்சியில் பங்கு கொள்கிறேன் சார். நன்றி பகிர்விற்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  2. வணக்கம்
    ஐயா..

    புத்தகத் திருவிழா பற்றி மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்... தங்களுக்கு அறிமுகம் இல்லாத உறவுகளின் நட்பு கிடைத்து தங்களுக்கு பெரும் மகிழ்சியாக உள்ளது தங்களின் மகிழ்ச்சியே எங்களின் மகிழ்ச்சி ஐயா...பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ரூபன் ..
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  3. நானும் அன்றைக்கு வருவதாக இருந்தது. சூழ்நிலை காரணமாக வர இயலாமல் போய்விட்டது. அந்த குறையை தங்கள் பதிவு போக்கி விட்டது. நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகை தந்து இனிய கருத்துரை வழங்கியமைக்கு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  4. இனிய சந்திப்பு... மிக்க மகிழ்ச்சி ஐயா... பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன் ..
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  5. மனதிற்கு நெருக்கமான மகிழ்ச்சியான தருணங்கள் -
    பொன்னான சந்திப்புக்கு வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  6. பதிவினைக் கண்டு மிகவும் மகிழ்ந்தேன் ஐயா.
    மிகுந்த மகிழ்ச்சியான தருணங்கள் அவை.
    மறக்கவியலாத தருணங்கள் அவை.
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகை தந்து நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி. மகிழ்ச்சி!..

      நீக்கு
  7. கரந்தை ஜெயக்குமாரை சந்திக்கப் போய் கூடவே தமிழ் அறிஞர்களையும் ஒரு பொன் மாலைப் பொழுதில் சந்திக்கக் கொடுத்த் வைட்திருந்தீர்கள். அருமை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா!..
      தங்களின் வருகையும் கருத்துரையும்
      இனிய வாழ்த்தும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  8. தஞ்சையில் புத்தகத் திருவிழாவில் திரு முத்துநிலவன் அவர்களின் உரையைக் கேட்க வந்தபோது நண்பர் திரு கரந்தை ஜெயக்குமார் மூலமாகத் தங்களின் நட்பு கிடைத்தது அறிந்து மகிழ்கின்றேன். வலைப்பூ நண்பர்களை திரு ஜெயக்குமார் அவர்கள் இணைக்கும் விதம் அருமை. சிறிது நேரமே நாம் அனைவரும் பேசியிருந்தாலும் அதிகமான செய்திகளைப் பேசினோம். பேருந்தைவிட்டு நாம் இறங்கியதும் நீங்கள் சென்ற பல மணி நேரம் கழித்தும் உங்களுடன் பேசியது மனதில் இருந்துகொண்டே இருந்தது. இன்னும் இருக்கிறது. நட்பினை எழுத்துவழி இணைப்போம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      நாம் சந்தித்த மறுநாள் - நான் தஞ்சையில் இருந்து புறப்பட்டு குவைத் வந்து சேர்ந்த பின்னும் - என் மனம் அன்று நிகழ்ந்த சந்திப்பினையே நினைத்துக் கொண்டிருக்கின்றது.
      தாங்கள் எனது தளத்திற்கு வருகை தந்து நினைவு கூர்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  9. முத்துநிலவன் ஐயா, ஜெயக்குமார் ஐயா ஆகியோருடனான உங்கள் சந்திப்பு எவ்வளவு உணர்வுப்பூர்வமானது என்பது தங்களது சந்தோஷப் பகிர்வில் தெரிகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தாங்கள் சொல்வது உண்மையே!..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி!..

      நீக்கு
  10. இனிமையான மாலைப்பொழுது....

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..