நாவல் மரங்கள் அடர்ந்து விளங்கும் அழகான வனம்!..
அம்பிகை - காவிரி நீரை சிவலிங்கமாகத் திரட்டி வழிபட்ட புண்ணிய தலம்!..
ஸ்ரீஜம்புகேஸ்வரம்!..
''ஓம்'' எனும் மந்த்ரத்தின் அதிர்வினை அன்றி, அந்த வனத்தினுள் வேறு எந்த ஒலியும் இல்லை.
உலர்ந்த இலைகளும் சருகுகளாய் - ஓசையின்றி உதிர - சின்னஞ்சிறு பறவைகள் கண்களால் பேசிக் களித்துக் கொண்டிருந்தன!..
நான்முகனின் தவத்திற்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என!..
அதோ.. அந்த நாவல் மரத்தின் கீழ் - சிவபூஜை செய்து கொண்டிருக்கும் நான்முகனின் பிழை தீரும் நேரமும் வந்தது!..
பெரும் ஜோதிப் பிழம்பு - தன்னை சுற்றிச் சூழ்வதை உணர்ந்த நான்முகன் மெல்ல கண் விழித்தார்.
அழகு பொங்கித் ததும்பும் பருவ வயதினராக, இளந்தம்பதியராக - சர்வேஸ்வரனும் தேவியும் புன்னகையுடன் தன் எதிரே திகழ்வதைக் கண்டு நான்முகனின் கண்கள் கசிந்தன!..
பெண்ணின் நல்லாளொடு தன் பொருட்டு - எழுந்தருளிய பெருமானைப் போற்றி வணங்கினார்.
''..என் பிழை பொறுத்தருளிய பெருமானே!.. இன்னும் என் மீது ஐயமா?.. திசைக்கு ஒன்றென முகம் இருந்தும் என் சிந்தை திருகலானது. அதனால் மனம் கருகலானது. அந்தப் பிழை தீர வேண்டும் என நான் இழைத்த தவம் கண்டு இரங்கி வந்த எம்பெருமானே!.. இன்னும் என் மீது சந்தேகமா?.. ''
''..பூங்கணை தொடுத்த மன்மதன் பொடியாகிப் போனதை அறிந்தும் பிழை புரிவேனா?..''
''..கருத்தழிந்த கண்களின் காமக் கசடறுத்து என்னைக் கரையேற்ற வந்த கருணைக் கடலே - இனியும் நான் காமுறுவேனா?..''
''..படைப்பவன் எப்படி இருக்க வேண்டும் என்ற நல்லறிவை எனக்குப் புகட்டிய ஞானமூர்த்தி!.. இனியும் பிழை செய்வேனோ!.. பிழை செய்தால் - நானும் நன்றாய் உய்வேனோ!..''
''..இனியும் என்னைச் சோதிக்காமல் - தேவனும் தேவியும் - திவ்ய மங்கள திருக்கோலத்தினைக் காட்டியருள்வீராக!..''
- என, அழுது தொழுது - அகம் கசிந்து நின்றார். அந்த அளவில் -
அம்பிகை ரூபமாக வந்த ஸ்வாமியும் ஐயனின் ரூபமாக வந்த அம்பிகையும் - நான்முகனின் மனம் குளிரும்படி திருக்காட்சி நல்கினர்.
திலோத்தமையின் அழகைக் கண்டு - இமைப்பொழுது நிலை மறந்த நான்முகனின் மனம் - வனாந்தரத்தில் வாடி வதங்கி தனித்துக் கிடந்த போது பக்குவம் அடைந்ததா!.. அல்லது மேலும் பாழ்பட்டுப் போனதா!.. என்பதை மற்றவர்கள் உணர்ந்து கொள்ளவே - ஐயனும் அம்பிகையும் இப்படி ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினர்.
''உள்ளத்தால் உள்ளலும் தீதே!..'' - என்பதை உணராத நான்முகனின் பிழை - உலகோர்க்குப் பாடமாக அமைந்தது.
அதன் பின் - ஈசனுக்கும் அம்பிகைக்கும் பெருந்திருவிழா ஒன்றினை நடத்தி - பிரம்மன் பேறு பெற்றார்.
இன்றும் திருஆனைக்காவில் - பிரம்மோத்சவ பெருந்திருவிழாவில் - ஐயனும் அம்பிகையும் - பிரம்ம தீர்த்தக் கரையினில் - பிரம்மனுக்கு காட்சி தரும் வேளையில் மேளதாளங்கள் இசைக்கப்படுவதில்லை.
மேலும் அம்பிகை - நித்ய கன்னியாக, ஈசனின் முன் அமர்ந்து போகத்திற்கும் யோகத்திற்கும் விளக்கம் கேட்ட தலம் ஆனதால் - இத்திருத்தலத்தில் திருக்கல்யாண வைபவம் கிடையாது.
திருஆனைக்கா - ஞான க்ஷேத்திரம் ஆனபடியால் தான் - யானை, சிலந்தி என - சிந்திப்போர் எவரானாலும் அவர் சிந்தையுள் ஜோதியாக - சிவம் திகழ்ந்தது.
தலவிருட்சம் நாவல் மரம். பிரம்ம தீர்த்தம் , இந்திர தீர்த்தம் , சம்பு தீர்த்தம் , ராம தீர்த்தம் , ஸ்ரீமத் தீர்த்தம், அகத்திய தீர்த்தம், அக்னி தீர்த்தம், சூர்ய தீர்த்தம், சோம தீர்த்தம் - என நவதீர்த்தங்கள். ஆடி மற்றும் தை மாதங்களில் - என இரண்டு முறை தெப்ப உற்சவம் நிகழ்கின்றது.
வைகாசியில் வசந்தவிழா. ஆடியில் ஆடிப்பூரமும் சூர்ய தீர்த்தத்தில் தெப்பத் திருவிழாவும் நிகழும். புரட்டாசியில் நவராத்திரி. தை மாதம் ராம தீர்த்தத்தில் தெப்பத் திருவிழாவும் பெளர்ணமியில் நவ தீர்த்தங்களில் தீர்த்தவாரியும் நிகழும். மாசியில் தேர்த் திருவிழா. பங்குனியில் பிரம்மோற்சவம்.
ஒரு முறை உறையூர் சோழ மன்னர் காவிரியில் நீராடும் போது - அவர் அணிந்திருந்த விலை உயர்ந்த ரத்ன மாலை கழுத்திலிருந்து நழுவி நீரில் விழுந்தது. அதிர்ச்சி அடைந்த மன்னர் - ''இஃது இறைவர்க்கு ஆகுக!..'' என்றார்.
இதன்பின் சில தினங்கள் கழித்து திருஆனைக்கா சென்றார் மன்னர். சந்நிதியில் சிவதரிசனம் செய்த போது மன்னருக்கு அதிர்ச்சியும் ஆனந்தமும் மேலிட்டது!..
ஏனெனில் - அன்று நீராடும் போது தவறி விழுந்த ரத்ன மாலையுடன் ஸ்ரீஜம்புகேஸ்வரன்!..
வேந்தன் நடந்தவற்றைக் கூறி விவரம் கேட்டார். சிவாச்சார்யர்கள் கூறினர் - ''..காவிரி நீரை அபிஷேகம் செய்த போது குடத்து நீருடன் - ஈசனின் திருமேனியில் விழுந்தது!..'' - என்பதை.
மன்னன் நீராடும் போது கழன்று விழுந்த ரத்ன மாலையினை திருமஞ்சன குடத்து நீரின் - மூலமாக ஈசன் ஏற்றுக் கொண்டருளியதை -
திருஞானசம்பந்தப் பெருமானும் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் தேவாரத்தில் பாடியருள்கின்றனர்.
வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு வார்சடைத்
தேனைக்காவில் இன்மொழித் தேவிபாகம் ஆயினான்
ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்
ஏனைக்காவல் வேண்டுவார்க்கு ஏதமேதும் இல்லையே!.. (3/53)
- என்பது திருஞானசம்பந்தர் தேவாரம்.
தாரமாகிய பொன்னித் தண்துறை ஆடிவிழுத்து
நீரில் நின்றடி போற்றி நின்மலா கொள்ளென ஆங்கே
ஆரங் கொண்ட எம் ஆனைக்காவுடை ஆதியை நாளும்
ஈரம் உள்ளவர் நாளும் எம்மையும் ஆளுடையாரே!.. (7/75)
-என்பது சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிய தேவாரம்.
சிலந்தியும் ஆனைக்காவிற் திருநிழற்பந்தர் செய்து
உலந்தவண் இறந்தபோதே கோச்செங்கணானுமாகக்
கலந்தநீர்க் காவிரி சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்
குலந்தனில் பிறப்பித்திட்டார் குறுக்கை வீரட்டானாரே!.. (4/49)
- என்று, கோசெங்கட்சோழர் பிறந்த வரலாற்றினை அப்பர் ஸ்வாமிகள் குறுக்கை வீரட்டானத் திருப்பதிகத்தில் குறிப்பிடுகின்றார். தமது பக்தியால் சிவநேயச்செல்வராக உயர்ந்த கோச்செங்கட் சோழருக்கு இங்கு தனிச் சந்நிதி உள்ளது.
கெளரிசங்கர் எனப்படும் கல்யாணத் திருக்கோலத்தினை ஸ்தாபித்து அகத்திய மாமுனிவர் தமது துணைவியராகிய லோபாமுத்ரையுடன் வழிபட்டுள்ளார். அகத்தியர் தாம் வழிபட அமைத்ததே அகத்திய தீர்த்தம். திருச்சுற்றில் - அகத்தியர் லோபாமுத்ரை விளங்குகின்றர்.
ஸ்ரீ குபேரலிங்கம் |
வெளிப் பிரகாரத்தில் கிழக்கு கோபுர வாயிலுக்கு அருகில் விளங்கும் குபேர லிங்கம் நான்காம் பிரகாரத்தில் பசுபதீஸ்வர பஞ்சமுகலிங்கம், மூன்றாம் பிரகாரத்தில் ஏகபாத திரிமூர்த்தி,
இரண்டாம் பிரகாரத்தில் சிவகாமசுந்தரி, ஜுரஹர தேவர், பைரவர், கோசெங்கட்சோழர் முதல் பிரகாரத்தில் சுப்ரமண்யர், மஹாலக்ஷ்மி, ஹரிஹரசுதன், கல்யாணசுந்தரர், சஹஸ்ரலிங்கம் - என தரிசிக்க வேண்டிய திருமேனிகள்.
இறைவன் சித்தராக எழுந்து திருநீற்றினைக் கூலியாகக் கொடுத்து எழுப்பிய மதில் - திருக்கோயிலின் வெளிப்புறத்தில் திருநீறிட்டான் மதில் என விளங்குகின்றது. திருநீறிட்டான் மதிலைக் குறிப்பிட்டு,
ஆலைச்சாறு கொதித்து வயற்றலை
பாயச் சாலி தழைத்திர தித்த அமுதாகத்
தேவர்கள் மெச்சிய செய்ப்பதி - உறைவேலா
ஆழித்தேர் மறுகிற்பயில் மெய்த்திரு
நீறிட்டான்மதிள் சுற்றிய பொற்றிரு
ஆனைக்காவினில் அப்பர் ப்ரியப்படு பெருமாளே!..
- என்று ஆனைக்காவின் முருகனை அருணகிரிநாதர் போற்றுகின்றார்.
திருஆனைக்கா!..
திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் - என மூவராலும் திருப்பதிகங்கள் பெற்ற திருத்தலம். மாணிக்கவாசகரும் திருஅம்மானையில் திருஆனைக்கா அண்ணலைப் போற்றுகின்றார்.
ஆதிசங்கரர், ஐயடிகள் காடவர்கோன், கந்தபுராணம் அருளிய கச்சியப்பர், கவி காளமேகம் மற்றும் மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை - என இத்தலத்தைப் போற்றிய புண்ணியர் பலர்.
ஸ்ரீமூலஸ்தானம் |
வருண திசையான மேற்கு நோக்கிய திருக்கோயில். ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் கருவறை சற்று பள்ளமாக விளங்குகின்றது. கருவறையினுள் செல்ல தென்புறத்தில் - சிறு வாசல் ஒன்று உள்ளது. தலை வணங்கி குனிந்து தான் உள்ளே செல்ல முடியும்
சந்நிதியின் வாசல் நவ துவாரங்களை உடைய கல் சாளரத்தினால் அடைக்கப் பட்டுள்ளது. இந்த துவாரங்களின் வழியே தான் சிவ தரிசனம்!..
கருணையின் ஊற்றென விளங்கும் ஈசன் - காவிரி ஊற்றின் மத்தியில் சிவலிங்கம் எனத் திகழ்கின்றார்!..
கோடி கோடி - விளக்குகளாலும் விளக்க முடியாத, இயலாத - விரி பெருஞ்சுடர் என விளங்குகின்றது - சிவலிங்கம்!..
அன்பெனும் அகல் விளக்கினால் அறியப்படும் அப்பு லிங்கம்!..
சரணடைந்தார் நெஞ்சில் சந்தனமாய் மணக்கும் ஜம்பு லிங்கம்!..
காவிரியின் பெருமைகள் பேசப்படும் துலா மாதத்தில் -
காவிரி நீரின் மத்தியில் உறையும் கருணாசாகரம் ஆகிய
ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீஜம்புகேஸ்வர பெருமானை,
நாம் சிந்திக்கப் பெற்றது - நம் முன்னோர் செய்த தவப்பயன்!..
காவிரிசூழ் தென் ஆனைக்காவானைத் தேனைப் பாலைச்
செழுநீர்த் திரளைச் சென்றாடினேனே!..
என்று - அப்பர் பெருமான் நமக்கு வழிகாட்டும் வண்ணம்,
காவிரியில் நீராடிக் கரையேறுவோம்!..
சிவாய திருச்சிற்றம்பலம்!..
அன்பு என்னும் அகல் விளக்கினால் அறியப்படும் அப்பு லிங்கம்
பதிலளிநீக்குபடங்களும் செய்திகளும் அருமை ஐயா. நன்றி
அன்புடையீர்!.. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!
நீக்குஒவ்வொரு பிரகார விளக்கத்தோடு ஸ்ரீஜம்புகேஸ்வரம் பற்றிய தகவல்கள் அனைத்தும் சிறப்பு... நன்றி ஐயா... வாழ்த்துக்க்கள்...
பதிலளிநீக்குஅன்பின்.. தனபாலன்.. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி!..
நீக்குதிரு ஆனைக்கா பற்றிய படங்களும் விளக்கங்களும் அழகோ அழகு. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஅன்புடையீர்!.. வருகை தந்து கருத்துரையுடன் பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி!..
நீக்குசந்நிதியின் வாசல் நவ துவாரங்களை உடைய கல் சாளரத்தினால் அடைக்கப் பட்டுள்ளது. இந்த துவாரங்களின் வழியே தான் சிவ தரிசனம்!..
பதிலளிநீக்குஇந்த நவ துவாரங்கள் வழி சிவ தரிசனம் நவ நதிகளில் புண்ணியநீராடிய பலனைத் தரும் அற்புத தரிசனம். !
அன்புடையீர்!.. தாங்கள் வருகை தந்து அழகான கருத்துரை வழங்கியமை கண்டு மிக்க மகிழ்ச்சி!..
நீக்குஸ்ரீஜம்புகேஸ்வரம் பற்றிய தகவல்கள் அத்தனையும் மெய் சிலிர்க்க வைத்ததையா..
பதிலளிநீக்குபிரமிப்பிலிருந்து மீள வெகுநேரமாயிற்று! அழகிய படங்கள்!
சிறந்த பதிவும் பகிர்வும்!
மிக நன்றியும் வாழ்த்துக்களும் ஐயா!
அன்பின் சகோதரி!.. தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன். என்றும் இனிய நல்வாழ்த்துக்கள்!..
நீக்குஆலயம் சம்பந்தப்பட்ட செய்திகளை சொல்லிப் போகும் விதம் பாராட்டுக்குரியது.
பதிலளிநீக்குஅன்புடையீர்!.. வணக்கம். தங்களின் வருகையும் பாராட்டுரையும் கண்டு நெகிழ்ந்தேன். நன்றி ஐயா..
பதிலளிநீக்குதிருவானைக்காவல் கோவில் கதையுடன் படங்களும் அருமையாய் அமைந்துள்ளது.
பதிலளிநீக்குசிலந்திக்கும் யானைக்கும் அருளிய இறைவன் நம்மையும் அருள்வாராக!
அன்பிடையீர் - தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்.. நன்றி!..
நீக்குபடங்களுடன் தகவல் அருமை அண்ணா...
பதிலளிநீக்குஅன்பின் குமார்.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..
நீக்கு