நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், அக்டோபர் 17, 2013

திருவேங்கடவன்

புண்ணிய புரட்டாசி மாதம் இன்றுடன் நிறைவடைகின்றது. 

உண்ணவும் உடுக்கவும் உறங்கவும் கொடுத்த எம்பெருமானே!..  உன் நினைவில் இனித்திருந்தோம்!..  உன் அருளில் திளைத்திருந்தோம்!.. இன்று போல் என்றும் விளங்க நல்லருள் புரிவாயாக!..


அன்று முதல் இன்று வரை - ஒவ்வொரு நாளும் - அன்பர்களின் வாழ்வில் வேங்கடவன் நிகழ்த்தும் அற்புதங்கள் எண்ணிலடங்கா!..  


தங்கத் தாம்பாளத்தில்  51 வட்டில் பால் மற்றும் சந்தனத்துடன் - ஸ்பெயினில் இருந்து வந்த குங்குமப்பூ,   நேபாளத்திலிருந்து வந்த கஸ்தூரி,  சீனாவில் இருந்து வந்த புனுகு,  பாரீஸில் இருந்து வந்த வாசனைத் திரவியங்கள்  - எல்லாம் கரைக்கப்படுகின்றன. 

இந்த மங்கள திரவியக் கலவையினால் தான்  - திருமலையில்  வேங்கடசப் பெருமானுக்கு  காலை 4.30 முதல் 5.30 வரை அபிஷேகம் நிகழ்கின்றது.  

வேங்கடவனுக்குச் சாத்தும் பச்சைக் கற்பூரமும் தனித் தன்மையுடன் கூடியது. வேங்கடவன் அணியும் பட்டு பீதாம்பரம் 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் உடையது. 

மேல் சாத்து வஸ்திரமாகிய இந்தப் பீதாம்பரம் - தேவஸ்தான அலுவலகத்தில் பணம் செலுத்தி விட்டு சுமார் மூன்றாண்டுகள் காத்திருந்தால்  - பின்னர் சாத்துப்படியாகும் . உள் சாத்து வஸ்திரம்  - அது தனி. அதற்கும் பலவருடங்களாகும்.  


வேங்கடவனுக்கு என ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து ரோஜா மலர்கள் வருகின்றன. 


பெருமான் அணியும் சாளக்ராம தங்க மாலையின் எடை 12 கிலோ. அருகிலிருக்கும் சூரிய கடாரியின் எடை 5 கிலோ. நகைகளின் மதிப்பு உத்தேசமாக ஆயிரங்கோடி ரூபாய்.  கைவசம் இருக்கும் நகைகளை அணிந்து அழகு பார்க்க காலமும் நேரமும் போதாது. சேகரிப்பில் வைத்துக் கொள்ள போதிய இடமும் இல்லை.

மடைப்பள்ளியில் - தினமும், லட்டு, பொங்கல், புளி சோறு, மற்றும் பல சித்ரான்னங்கள், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயசம், பலவகையான கேசரி - என தயாரிக்கப்பட்டு நிவேதனமாகின்றன.

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் - 

எம்பெருமான் உண்பது தயிர் சோறு!.. அதுவும் மண் சட்டியில் தான்!..

ஆம்!.. தினமும் - தயிர் சோற்றுடன் ஒரு மண் சட்டி மட்டுமே குலசேகரப் படியினைக் கடந்து கருவறைக்குள் சென்று நிவேதனமாகின்றது!.. 

மற்றெந்த உணவு வகைகளும் - கருவறைக்குள் செல்வதில்லை!..

காரணம்?..  எளியவர்க்கு எளியவனான எம்பெருமான் - ஏழைக் குயவர் ஒருவருக்கு அளித்த ஏற்றம்!..


மலையடிவாரத்தில் இருந்த அந்த சிற்றூரில் - பீமன் என்றொரு குயவர். எளிய வாழ்க்கை.  களிமண்ணைக் குழைத்துக் கையாள்வதைத் தவிர வேறெதுவும் தெரியாது!.. 

அருகில் இருக்கும் மலையின் பெயர் என்ன?.. அங்கே என்ன கோயில் இருக்கிறது!.. எல்லாரும் போய் வரும் அந்த கோயிலுக்கு   நாமும் போய் வந்தால் என்ன!.. என்று எதற்கும் ஆசைப்படாமல் - தானுண்டு.. தன் திரிகை உண்டு என நல்லதுக்கும் கெட்டதுக்கும் மட்பாண்டங்கள் செய்து கொடுத்ததில் காலமும் ஓடி - வயதும் முதிர்ந்து விட்டது.

மழை நாட்கள் மட்டுமே ஓய்வு!. மற்ற நாட்களில், திரிகை சக்கரத்தில் குழைந்த களிமண்ணை வைத்துச் சுழற்றி - விரல் நுனிகளால் வடிவமைத்து சூளையில் சுட்டெடுத்த மண் பாத்திரங்களோடு தான் வாழ்க்கை.  

இப்படியாகத் தன் குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தவர் முன் - அரசர் தொண்டைமான் பரிவாரங்களுடன் வந்து நின்றார். 

பீமய்யாவுக்கு அதிர்ச்சி. ஒன்றும் புரியவில்லை. இவரைக் கண்டதும் தொண்டைமானுக்கும் ஒன்றும் புரியவில்லை. காரணம் - வேங்கடவனின் சந்நிதியில் கண்ட வித்தியாசமான தங்கப்பூக்கள்!.. 

இத்தகைய பூக்களைச் சாற்றியவர் யார் என வேண்டி விரும்பிக் கேட்டால் - வேங்கடவனிடமிருந்து பதில் வருகின்றது - ''மலையடிவாரத்தில் வசிக்கும் பீமய்யா பதில் கூறுவார்!..'' - என்று. 

அரசரைக் கண்ட பீமய்யா கைகூப்பி நின்றார். 

மனம் கனிந்த மன்னவனும் கை கூப்பியவாறு - ''..ஐயா இதோ.. இந்த தங்கப் பூக்களைப் பாருங்கள்!.. நீங்கள் செய்ததா?..'' என்றார். 

''ஆமாம் .. நான் செய்தது மாதிரி தான் இருக்கின்றது. ஆனால் தங்கத்தில் செய்ய வில்லையே!.. களி மண்ணால் அல்லவா செய்தேன்!..''

''..என்ன களி மண்ணிலா!..'' - மன்னர் அதிர்ந்தார்.

''ஆமாங்க ராஜா!.. இந்த பானை வேலை எல்லாம் முடிஞ்சதும் மிச்சம் இருக்கிற மண்ணில, பெருமாளே.. கோவிந்தா.. ன்னு சொல்லிக்கிட்டே இந்த மாதிரி பூ செய்வேன். அடுத்த வேலை எவ்வளவோ இருக்கு!.. பானை சட்டியை காய வைக்கிறது பதமா எடுத்து சூளையில அடுக்கி மூட்டம் போடுறதுன்னு!.. அதுக்கு அப்புறம் சோறு தின்னுட்டு படுத்தா மறுநாளுதான்... பெருமாளே.. கோவிந்தா.. ன்னு மறுபடியும் சக்கரம் சுத்துது!..''

திகைப்பின் உச்சிக்குச் சென்ற மன்னர் கேட்டார். 

''..நீங்கள் சொல்லும் பெருமாள் எங்கே இருக்கின்றார் என்று தெரியுமா!....


''அதைத் தெரிஞ்சு என்ன செய்யப் போறோம் சாமீ!.. பெருமாள் இங்கேயும் இருக்கார்.. அங்கேயும் இருக்கார்.. எங்கேயும் இருக்கார்!.. செய்ற வேலைய ஒழுங்கா  செஞ்சா - நம்ம கூடவே இருப்பார்!..''

அதற்கு மேல் மன்னருக்குத்  தாள முடியவில்லை. ஆனந்தக் கண்ணீருடன் கட்டித் தழுவிக் கொண்டார். பீமய்யாவின் பாதங்களைத் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டார்.  அதிர்ந்தார் பீமய்யா.. 

''..மகாராஜா.. என்ன இது!.. நான் உங்க குடிமை!..''

''..இல்லை.. இல்லை.. நான் உங்கள் அடிமை!.. வேங்கடேசனுக்குச் செய்யும் தொண்டினால் நானே சிறந்தவன் என நினைத்திருந்த கர்வம் இன்றோடு தொலைந்தது. உங்களை மாதிரியான உத்தமர்களால் இந்த நாடு பாக்கியம் பெற்றது!..''

''என்ன சாமீ!.. ஏதேதோ பேசறீங்க.. எனக்கு ஒண்ணும் புரியலீங்க!.. ''


''ஐயா!.. அரசன் என்ற கர்வத்துடன் நான் அளித்த தங்கப் பூக்கள் மங்கிக் கிடக்கவும் உள்ளன்புடன் தாங்கள்  சமர்ப்பித்த களிமண் பூக்கள் பெருமாளின் திருவடிகளில் ஒளி வீசிப் பிரகாசிக்கவும் கண்டேன். விவரம் விளங்க என்று - அந்த வேங்கடேசப் பெருமான்  தான் என்னைத் தங்களிடம் அனுப்பினான்!..''. 

பெரியவர் பீமய்யாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்!.. 

''சொல்லுங்கள் .. என்ன வேண்டும்?.. இல்லை இல்லை.. இதோ இங்கிருந்து கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இனி உங்களுக்குத் தான். இப்போதே சாசனம் செய்து தருகிறேன். இந்தப் பல்லக்கு நிறைந்த பொன்னும் மணியும் வைரமும் உங்களுக்குத் தான்!..  இனி நீங்கள் நிம்மதியாக வாழலாம்!..''

மன்னர் பரவசத்துடன் சொன்னார்!.. பீமய்யாவின் முகத்தில் எந்த சலனமும் இல்லை!.. மன்னரைக் கூர்ந்து நோக்கினார். 

''சொல்லுங்கள்!.. வேறு என்ன வேண்டும்!..'' - மன்னர் பதற்றமானார். 


''..மகாராஜா!.. இந்த காணியும் கேணியும் பொன்னும் வைரமும்  நிம்மதி ஆகிடுமா!.. இதுதான் நிம்மதி..ன்னா, நேத்து நீங்க நிம்மதியா இருந்தீங்களா!.. இந்த களிமண்ணு தான் எனக்கு பொன்னு மணி வைரம்!.. இந்த களிமண்ணும் என் கண்ணும் கை விரலும் நல்லா இருக்கிறது தான் என்னோட நிம்மதி!.. உங்களோட அன்பும் பெருமாளோட ஆதரவும் எனக்குப் போதும்.  அதுவே பெரிய சொத்து!..''

இப்போது, திருமலையில்  ஆனந்த நிலையத்தில் - வேங்கடேசப் பெருமானின் திருவிழிகளில் ஆனந்தக் கண்ணீர்!.. 

அந்த அளவில் - நறுமணம் மிக்க பன்னீர் -  சாரலாய்ப் பொழிந்தது. 

தன் அன்பனின் அன்பினில் உருகிய வேங்கடவனும் ஒரு உறுதியை மேற்கொண்டான். 

அன்று முதற் கொண்டு திருமலையில் - மண் சட்டியில் தயிர் சோறு  நிவேதனம் பிரதானமாயிற்று. 


அரன்நாரணன் நாமம் ஆன்விடைபுள்ளூர்தி 
உரைநூல் மறையுறையும் கோயில் - வரைநீர் 
கருமம் அழிப்பளிப்பு கையது வேல் நேமி 
உருவமெரி கார்மேனி ஒன்று!..
(பேயாழ்வார் திருப்பாசுரம்)

இப்படி எளியவருக்கு எளியவனாகிய எம்பெருமான் - சிவராத்திரி அன்று க்ஷேத்ரபாலிகா எனும் உற்சவத்தில், வைரத்தில் விபூதிப் பட்டை தரித்து சிவபெருமானாக உலா வருகின்றான். வெள்ளிக் கிழமைகளில் வில்வ தள அர்ச்சனையை ஏற்று மகிழ்கின்றான். 


தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும் 
சூழ்அரவும் பொன்னாணும் தோன்றுமால் - சூழும் 
திரண்டருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு 
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து!..
(பேயாழ்வார் திருப்பாசுரம்)

திருவேங்கடவனை,  ஸ்ரீ தாளப்பாக்கம் அன்னமையா சிவாம்சத்துடனும் சக்தி ஸ்வரூபமாகவும் தரிசித்து கீர்த்தனைகள் பாடியுள்ளாராம். ஸ்ரீ தியாகையரும் ''..நீ - விஷ்ணுவா,  சிவனா, அம்பாளா..'' - எனக் கேட்டு துதித்ததாகவும் திருக் குறிப்புகள் உள்ளன. 

வேங்கடவன் -  நான்கு நாட்கள் அம்பாளாகவும் இரண்டு நாட்கள் விஷ்ணுவாகவும் ஒருநாள் ஈஸ்வரனாகவும் திகழ்வதாக ஐதீகம். வெள்ளிக் கிழமையில் - ஸ்வாமிக்கு பட்டு உடுத்துவது அம்பாளின் அம்சம் விளங்கவே!..


உடையவராகிய ஸ்ரீராமானுஜர் அளித்த சங்கு சக்ரங்களை ஏற்றுக் கொண்டு இன்னருள் புரியும் திருவேங்கடவன் - அருணகிரிநாதருக்கு திருமுருகனாகக் காட்சியருள -

வேந்த குமார குக சேந்த மயூர  வட 
வேங்கட மாமலையில் உறைவோனே! 
வேண்டியபோது அடியார் வேண்டிய போகமது
வேண்ட வெறாது உதவு பெருமாளே!.. 

- என்று போற்றி மகிழ்கின்றார். 

சீதாதேவியைத் தேடிக் கொண்டு, ஆஞ்சநேயருடன் தெற்கு நோக்கி வந்த வானரர்கள் திருப்பதி மலையை வணங்கி வலம் செய்ததுடன் பெருமானை வணங்கியவர்களின் திருவடிகளையும் வணங்கியதாக - கம்பர்  குறிக்கின்றார் எனில் வேங்கட மாமலையின் பெருமையைச் சொல்வதும் எளிதோ!. 

இதுவரையிலும் அளித்த தகவல்கள் - பல்வேறு தளங்களில் இருந்து திரட்டியவை. குற்றங்குறைகளைப் பொறுத்தருள்வானாக!.. இந்த அளவில் -  

எளியேனாகிய நானும்,  பெருமான் திருவடிகளைச் சிந்தித்திருந்தேன்!.. அவன் தன் திருநாமங்களை  வந்தித்திருந்தேன்!.. 


வலங்கொள் நேமி  மழை நிற வானவன் 
இலங்கு தாள் இணை தாங்கிய அம்மலை 
விலங்கும் வீடு உறுகின்றன மெய்ந்நெறி 
புலன்கொள் வார்கட்குஅனையது பொய்க்குமோ!..
(கம்பராமாயணம்)

ஸ்ரீவேங்கடேச சரணம் சரணம் ப்ரபத்யே!..
கோவிந்தோ!.. கோவிந்த!..
கோவிந்தோ!.. கோவிந்த!..
* * *

16 கருத்துகள்:

  1. மண் சட்டியில் தயிர் சோறு வரலாறு மிகவும் அருமை ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்!.. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!.. பெருமாளுக்கே மண்சட்டியில் நிவேதனம்!. அப்படியிருக்க - வெற்று மனிதர்களின் வேடிக்கை கூச்சல்களை எண்ணிப் பாருங்கள்!.. வேடிக்கையாக இல்லை!?..

      நீக்கு
  2. வேங்கடவன் அம்பாளாகவும் ,விஷ்ணுவாகவும் ,ஈஸ்வரனாகவும்
    திகழ்வாரா ....!!!! மெய் சிலிர்க்க வைக்கும் அருமையான தகவல்களுடன் கூடிய
    சிறப்பான பகிர்வு அருமை !வாழ்த்துக்கள் ஐயா தங்களின் பகிர்வினைக் கண்டு
    உள்ளம் குளிர்ந்து .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் வருகையும் அழகான கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்!.. வேங்கடேசனின் அருள் எல்லாருக்கும் பூரணமாவதாக!..

      நீக்கு
  3. பெருமாள் இங்கேயும் இருக்கார்.. அங்கேயும் இருக்கார்.. எங்கேயும் இருக்கார்!.. செய்ற வேலைய ஒழுங்கா செஞ்சா - நம்ம கூடவே இருப்பார்!..''

    தங்கமாய் ஒளிரும் தத்துவ வரிகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் வருகையும் பாராட்டுரையும் கண்டு மகிழ்ந்தேன்!.. மிக்க நன்றி!..

      நீக்கு
  4. படங்களும், கதையும், விளக்கங்கள் யாவும் அருமையோ அருமை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    தொடரின் அடுத்த பகுதி - இன்றைய வெளியீடு - தங்கள் தகவலுக்காக மட்டுமே:

    http://gopu1949.blogspot.in/2013/10/66.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!. தங்களின் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  5. மண் சட்டியில் தயிர் சோறு பற்றி தெரியத் தந்தீர்கள் ஐயா...
    எம்பெருமான் அருள் எல்லாருக்கும் கிட்டட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின். குமார்.. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  6. திருமலையானின் திருவிளையாடலும் வாரத்தில் மூன்று அம்சங்களைத் தாங்குவதும்
    வரலாறுகளை இத்தனை சிறப்பாக தந்தீர்கள் ஐயா!...

    வாசிக்கும் போது ஆச்சரியத்தில் திறந்த மனமும் கண்களும் இன்னும் மூடவில்லை!..
    அற்புதம்!
    உங்களின் இந்தப் பணி சிறக்க வேங்கடவன் அருள் நிறையத் தரட்டும்!...

    வாழ்த்துக்கள் ஐயா!.. தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி!.. தங்களின் வருகையும் அழகான கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்..நன்றி!..

      நீக்கு
  7. அன்பு அய்யாவிற்கு
    திருமலையானின் திருவிளையாடல்களையும், மண்சட்டியில் தயிர்சாதம் முதலான அரிய தகவல்களையும் அழகாக பதிந்துள்ள விதம் பாராட்டிற்குரியது அய்யா. திருமலையானின் அருளை பெற்ற உணர்வு கிடைத்துள்ளது. நல்லதொரு பகிர்வுக்கு நன்றீங்க அய்யா. தொடர்ந்து இணைந்திருப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் பாண்டியன்.... தங்களது வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் மிக்க நன்றி!.. எல்லாம் ஈசன் செயல்!.. பெருமாளின் திருவருள் மழையில் எல்லாரும் இன்புற்றிருப்போமாக!..

      நீக்கு
  8. மண் சட்டியில் தயிர் சோறு மட்டுமே உண்பார் .வேங்கடவன் என்ற செய்தி அறிந்து கொண்டேன். அருமையான தெரியாத பல தகவல்கள் திருமலை வாசனைப் பற்றி.
    ஒரு விண்ணப்பம்.
    நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள " மண்ணு புகழ் கோசலை......"போன்ற அருமையான பாசுரங்கள் சில வற்றை பொருளுடன் பதிவிட்டால் ஆர்வத்துடன் படிக்க ஆசை.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்.... பெருமாளின் திருவருள் கூடிவரும் வேளையில் உங்கள் விருப்பம் நிறைவேறும். தங்களது வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் மிக்க நன்றி!.. எல்லாம் ஈசன் செயல்!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..